COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tuesday, November 20, 2007

2007-இன் இந்த 50 பெண்களை கவனிங்க!

11/19/07-இன் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இலிருந்து 50 தலைவியர் - பொட்டு வைத்த வட்ட முகம்!


50 பெண்களில் முதலாவதாக - வெல்பாயிண்ட்-இன் பெண் மு.நி.இ. ஆகியிருக்கும் அஞ்சலா ப்ரேலி (Angela Braly) இன் எதிர்பார்ப்புகள், பின்புலம், எல்லாம் எழுதியிருக்கிறார்கள். இரண்டாவதாக - சென்னை தந்த தங்கப் புதல்வி இந்திரா நூயி பற்றி தமிழில் எல்லாரும் நல்லா எழுதியாச்சு! அவங்க "நான் ஒரு தாய் முதலில், தலைமை நிர்வாக அதிகாரி அடுத்ததாக, அடுத்தே மனைவி" யிலிருந்து, அவர் குடியுரிமை வரை எல்லாத்தையும் ஊடகங்களும், பதிவர்களும் கிழிச்சாச்சு. ஏன், ஆ.வி.ல, (என் அருமைப்) பாடகி அருணா சாய்ராமுடைய உறவு முறை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள். முக்கியமாக, இந்திரா நூயியின் பணி, பெப்ஸிகோவின் பானக / தின் பண்டங்களின் portfolio சிறப்பாக வைத்திருத்தல், பெப்ஸிகோவினால் சுற்றுப்புற மாசு கெடாதிருத்தல் (கரிச்சுவடு?) இவற்றோடு, இப்போதைக்கு வளர்ந்து வரும் அதன் நிகர வருமானத்தை வளர்ச்சி கெடாமல் கண்காணித்தல் இவை தாம் என்று சொல்கிறார்கள். ஈயம் விற்பவர்கள் கவனிக்க: இந்திரா நூயியின் தாயார் இந்திராவின் சிறு வயதில் இந்திராவுக்கும் அவர் சகோதரி (இவரும் நியுயார்க்கில் வசிக்கிறார்)க்கும் தினம் மாலை போட்டி வைப்பார் (தெரியாதவர்கள் கூகிளாண்டவரை வேண்டுக). அவருக்கு நியுயார்க்கிலேயே இப்போது வசிக்கும் ஒரு சகோதரர் உண்டே? அவர் போட்டியில் கிடையாதா?

அடுத்து இன்னொரு பொட்டு வைத்த வட்ட முகம். (நான் அமெரிக்கா வந்த புதிதில் - ஆச்சு ஒரு மாமாங்கம் - எத்தினி தபா அது என்னா, மச்சமா, ஏன் எல்லாரும் வக்கிறதில்ல - சொல்லி அலுத்துப் போயி பொட்டு வைக்கிறதே விட்டாச்ச்! யோசிச்சுப் பாத்தேன், சாம்பல் திருநாள் - Ash Wednesday - அன்று கத்தோலிக்கர் அல்லாது எல்லா கிறிஸ்துவரும் சாம்பல் இட்டுக் கொள்வதில்லை; எல்லா யூதரும் தொப்பி அணிந்து கொள்வதில்ல; எல்லா இந்துக்களும் - ஆண்களும் சேர்த்து - பொட்டு வைத்துக் கொள்வதில்லை - நான் மட்டும் ஏன் என்று. என் வாழ்வின் பல நிலைகளில் அதுவும் ஒன்று. இப்போ, பளிச்சென்று பெரிய பொட்டு:-))). வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இருப்பதிலேயே கண்ணைக் கவர்ந்தது மனிஷா கிரோத்ரா (Manisha Girotra) வின் புகைப்படம். இந்த பெண்களில் 43வது இடத்தைப் பிடித்தவர், 38 வயதான மனிஷா. UBS-இன் நிர்வாக இயக்குனர், டெல்லி / லண்டன் பொருளாதாரப் பள்ளிகளில் படித்தவர். இவரின் எதிர்பார்ப்பு ஸ்டாண்டர்ட் சார்டர்டிடமிருந்து UBS வாங்கியுள்ள / UBS-இன் சொந்த wealth managementஐ வளப்படுத்தல். இவரின் வருத்தம் - மும்பையில் பெண்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவராயினும் அப்பெண்ணின் கணவர் நல்ல சம்பளமுள்ள வேலை/உயர்வு கிடைத்ததும், பெண் தம் பணியைத் துறந்து வீட்டோடு இருந்து விடுகிறார் என்பது தான். "எவ்வளவோ சொல்லியும் பெண்களின் இந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை. இதில் என் வெற்றி விகிதம் 0! அதனால் முயற்சியை விட்டு விடுவதாயில்லை".

You go girl(s)!

Monday, November 19, 2007

மிகப் பீழை....

யாருமே இல்லியா?

திருமணமான அவள் தன்னுடைய பழைய புகைப்படத்தை வாங்கிக் கொள்வதற்காக இன்றைக்கு யாரோவான அவனைச் சந்திக்க வந்தாள். அவனையும் அவளையும் ஆறேழு நாய்கள் காரில் தூக்கிப் போய் துவம்சம் செய்தன. அவனுக்கு அடி. அவள் அவள் என்பதால் வன்கொடுமை. இதனால் அவளுக்கு தண்டனை. இதைப் பற்றி அவள் ஊடகங்களிடம் பேசியதால் இப்போது அவளுக்கு 200 கசையடியாக தண்டனை உயர்த்தப் பட்டிருக்கிறது.

எதைச் சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். தெரியாதவர்கள் தலையை அதே பொந்தில் நுழைத்துக் கொள்ளலாம்.

இதற்குக் காரணங்கள் பல சொல்கிறார்கள். திருமணமானவள் தனக்குச் சொந்தமில்லாத ஒருவனைச் சந்திக்க வந்தது; ஊடகங்களிடம் பேசியது; அதைத் தவிர ஈனப் பிறவிகள் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் - இவளும் அவனும் ஷியா. இவளுடைய வழக்குரைஞரும் ஷியாவாம்....

மக்களுக்காக வந்தது அன்புமார்க்கம். நம்மூரில் சாதிச் சங்கங்கள் போல், அவர்களூரில் அன்புமார்க்கம் மறந்து போனார்களா? அய்யோ!

Friday, November 09, 2007

நட்பில் ஒரு கண்ணாமூச்சி....

அறுந்து போன கம்பிகளின் நாதமாய்
நம்முள்ளே மௌனம் மீட்டும் ஓசை.....
உள்ளின் வேகத்தைக் காட்ட அறியாமல்
நுரையாய்த் தெளித்து கரையும் வார்த்தைகள்...
நேற்றைய மழையில் நனைந்து போன
காய்ந்த-சருகின் அவலமாய்ப் போன உறவு...
கட்டிய கூட்டின் மேல் அடித்த காற்றைச்
சொல்லிக் கரையும் குருவியாய் நெஞ்சம்.
இதில் யாரைச் சொல்ல?

புள்ளியால் தான் வருவது கோலமென்றால்,
நூலால் தான் இழைவது கம்பளமென்றால்,
எத்தனை புள்ளிகளை அழித்துத் திரும்பிப் போடுவேன்?
எத்தனை நூல்களைக் கலைக்க வேண்டும்!?

சிலந்தி வலையாய் நம்மைச் சுற்றிப் போட்டுக் கொண்டு,
அதிலேயே விட்டில்களாய் நாமே!
கடலினலை ஓயாதென அறிந்தும் இந்த விளையாட்டு...

Saturday, September 22, 2007

போதாயனர் பற்றிய தேடல்...

அடுத்த பதிவு போட தயாராகலாம் என்று கொஞ்சம் வலைகளை மேய்ந்து கொண்டிருந்தேன்.

போதாயன முனிவர் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று தொடங்கினேன். கி.மு 8ம் நூற்றாண்டுஇல் வாழ்ந்த கணித மேதை. அவருடைய வாழ்க்கை கி.மு 4ம் நூற்றாண்டு என்றும் கூறுகிறார்கள். அதாவது மகாபாரதம் கி.மு 5வது நூற்றாண்டு அதுக்கப்புறம் நம்மாளு வாழ்ந்தார்; மகாபாரதம் / கீதை பிரம்ம சூத்திரம் பற்றிய போதாயனரின் உரைகளை வைத்து ராமானுஜர் அவருடைய உரைகளை (பாஷ்யம்) எழுதினார் என்றும் சொல்கிறார்கள். அத்துடன் மகாபாரதப் போரில், கண்ணன் சுதர்சன சக்க‌ரத்தை வீசியதை கால விஞ்ஞானிகள் கணக்கு எடுத்துக் கொள்வதாகவும், நம் ஆள் சின்சியர் சிகாமணியாக அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தந்தை சொல்லியிருக்கிறார் (என்று நினைக்கிறேன்).

என் தேடல், போதாயனருடைய (முக்கோண/சதுர பரப்பளவு காணும் சூத்திரம் பற்றி இன்னும் விரிவாக அறிய. பிதாகோரஸ் கோட்பாடு (Pythagorean theorem) என்று நாம் கற்றுக் கொண்டதை இவர் அதற்கும் முன் கண்டுபிடித்தவர் என்பார்கள். (இதற்கும் நான் அடுத்து போட இருந்த பதிவுக்கும் தொடர்பு விரைவில் எனக்கு குடுகுடுப்பாண்டி வந்து சொல்லுவார்; கு.கு.பா சொன்னாருன்னா, நானும் உங்களுக்கு சொல்கிறேன்).

முதல்ல கிடச்சது இது. தமிழர் (டி.எல். சுபாஷ் சந்திர போஸ், பெயரை எழுதிய வகையிலே தமிழர் என்றே தோன்றுகிறது) இன்னொரு (ஜாக் ஆன்ட்ரூஸ்) வருடன் செய்த ஆராய்ச்சி (போல் இருக்கிறது). தமிழ் / ஹரப்பா / பொலிவியா வில் கிடைக்கப் பெற்ற கோல வடிவங்களின் ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

பை (வட்டத்தின் பை!) ‍ pi - பற்றிய அவருடைய கண்டுபிடிப்பு பற்றியும் வலைந்திருக்கிறார்கள். இதற்கும் முக்கோண / சதுர பரப்பளவுக்கும் தொடர்பு உண்டு. விரும்புபவர்கள் முதல் உரலில் இடித்துப் பார்க்கவும்.

அதற்கும் மேல இன்னும் தேடினால், ‍கூகிளாண்டவர் நூலகத்தில் ‍ அவருடைய முக்கோண / சதுர பரப்பளவு / நீளம் பற்றிய கோட்பாடு கிடைக்கப் பெற்றது இன்னும்.

சரி சரினு பதிவு செய்தாகி விட்டது.

தேடல் இன்னும் தொடரும்.

பிற்சேர்க்கை:
தேடல் தொடரும் என்று சொல்லி ஒரு வருடம் கூட :-) ஆகவில்லை. (பார்க்க பின்னூட்டம்). குமரன் திருத்தியதை கூகிளாண்டவரிடம் முறையிட்டதில், இன்னும் செய்திகள் தந்திருக்கிறார். தம் எழுத்துக்களில், மகாபாரதம்/கீதை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்த குறிப்பைப் பற்றிய "வரலாறு" கூட இன்னமும் பெரும் அறிஞர்களின் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
1. கோழி/முட்டை எது முந்தி: http://www.dvaita.org/madhva/brahma_suutra.html
2. எந்த ஊர் கோழி: http://en.wikipedia.org/wiki/Baudhayana_Shrauta_Sutra#BSS_18:44_controversy

Wednesday, September 19, 2007

புலி வருது (அ) பாரதியின் தீர்க்க தரிசனம்

புதன்கிழமை செப். 19, 2007 தேதியிட்ட "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்" இல் முன் பக்கக் கட்டச் செய்தி:

"ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் உலகத்தின் ஏதாவதொரு மொழி இறந்து போகிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்; ஆஸ்திரேலியாவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ள மொழிகளுக்கே தற்போது அழிவதற்கான அதிக அபாயம்".

அதாவது, மாதத்துக்கு இரண்டு மொழிகள் வழக்கொழிந்து போகின்றன. நாம வரிசையிலே எத்தனயாவது?

வருத்தத்துடன், இது என் மூன்றாவது பதிவு. அதுக்கும் வருத்தம் தான்னு நாளைக்கு ஜர்னலில் தலைப்புச் செய்தி வரலாம்.