COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, November 04, 2010

காதல் முக்கோணம்: முதன்முதலில் கண்டுபிடித்தது இந்தியரோ?



இந்த தமிழ்நாடு மேப்பில, சேலத்திலிருந்து தென் ஆற்காடு போவணும்னா, சேலம்->திருச்சி->தென் ஆற்காடுன்னா, நேரம் ஆயிடுமே! நீங்க சேலத்திலிருந்து நேராப் போவீங்களா, இல்ல சுத்தி வளைச்சுட்டுப் போவீங்களா?




சரி, பிதோகரஸ் தியரின்னு தான் நீங்க இதைப் பள்ளிக்கூடத்திலிருந்து படிச்சிருப்பீங்க.
இன்றைக்கு, மகாகனம் பொருந்திய, ஸ்ரீமான் ஸ்டீஃபன் ஹாகிங்ஸ், இந்த கோட்பாட்டை பிதோகரஸ் கண்டுபிடிக்கலை, பாபிலோனில் கி.மு. 570வில் அறியப்பட்டிருந்ததுன்னு சொல்றாரு! பிரபஞ்சத்தப் பற்றி இன்னும் இவருடைய இன்றைய அதிசயத் தகவல்களுக்கு இங்கே க்ளிக்கவும்.

யோவ், போதாயனர் அதுக்கு முந்தைய காலத்தவர்! இந்தியாவில் முக்கோணக் கோட்பாடு அப்பவே அறியப்பட்டிருந்தது!!! எனவே இந்த முக்கோணக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் இந்தியர் தான்!

இந்த முக்கோணத்தில் காதல் எங்க வந்ததுன்றீங்களா?  இல்லயின்னா, பதிவைப் படிக்க வந்திருப்பீங்களா? ;-)

கணிதத்தின் மேல் எனக்குக் காதல்! அதுனால தான் இப்படித் தலைப்பு:-)

போதாயனர் பற்றி இங்கே எழுதியிருக்கேன். அந்தப் பதிவின் பின்னூட்டங்களையும் விடாம படிச்சிடுங்க.  அந்தப் பின்னூட்டங்களில், போதாயனர் பற்றி என்னை விடவும் அறிவாளிங்க செய்தி கொடுத்திருக்காங்க.

Friday, October 15, 2010

(சவால் சிறுகதை) சவாலுக்கு அப்புறம்!

டிஸ்கி:
1. இந்த பதிவு நேற்றைய, இன்றைய, நாளைய எந்த பதிவரையும் குறிப்பதல்ல.
2. நான் ஒரு ஐயோ பாவம். என்னைப் பற்றி இங்கே கூறப் பட்டிருக்கும் எதுவும் உண்மையோ பொய்யோ அல்ல.

சுமாராக மூன்று வருடங்களாக காமினி "காதல் மட்டுமே" என்ற ப்ளாகில் அவள் காதலன் சிவமைந்தனோடு தமிழ்ப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறாள்.  சிவமைந்தன் "வாழ்க்கை வெல்வதற்கே"னு தனியா ப்ளாக் வைச்சிருக்காரு (இல்லைங்க, "அந்த சிவா" இல்ல இவர், இந்த விளக்கம் மட்டும் நான் போடலைன்னா, இதுக்கே "அந்த சிவா" மூணு பதிவு போட்டுருவாரே!).

இரண்டு வருடங்களாக "யாமறிவோம் பரம்"னு ஒரு ப்ளாகர் வந்து காமினியின் பதிவுகளில் அடிக்கடி பின்னூட்டம் போட்டிருக்காரு, பார்த்திருப்பீங்க.  இவங்க ப்ரொஃபைல்ல்லாம் பாத்தீங்கன்னா, "ஐடி படிப்பு / தொழில், சென்னை" ன்னு போட்டிருக்கும்.  காமினி ஃபாலோ பண்றது சிவமைந்தன் மற்றும் பரந்தாமன் இவங்க பதிவுகள் மட்டுமே. என்னையெல்லாம் தெரிஞ்ச மாதிரி பதிவுலகத்தில காட்டிக்கக் கூட மாட்டாள்:-(

பதிவுலகப் பிரபலம் பரந்தாமன் ("யாமறிவோம் பரம்" பதிவு வெச்சிருக்காரே, அவர் தான்!) இவங்க கூட இமெயிலில் சிலபல கும்மி அடிப்பது உங்களுக்குத் தெரியாது.  வருடத்துக்கு சில முறை இந்தியா செல்லும் நான், முடிந்த போதெல்லாம் இவங்களைச் சந்திச்சிட்டு தான் வருவேன்.

இந்தியாவின் எலக்ட்ரானிக் சூப்பர் ஸ்டாராக விளங்கப் போவதாக பரந்தாமனின் பெயர் "இந்தியன் ஈஈ டைம்ஸ்"இல் வந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம், அவருடைய பதிவுகளில் வந்திருந்தது. அவருடைய செமிகன்டெக்டர் ஓஇஎம் செய்யும் கம்பெனி விரைவில் பப்ளிக் கம்பெனி ஆனால், உலகத்தின் செமிகன்டெக்டர் இன்டஸ்ட்ரியின் பூமத்திய ரேகை இந்தியாவுக்கு இடம்பெயரலாம்...

பரந்தாமன் பற்றி உங்களுக்கு இன்னும் ஒன்று தெரியாமல் இருக்கலாம். பரந்தாமனின் பின்னூட்டங்கள் வந்தால், ஒரு காலத்தில் நானும் ரொம்ப புளகாங்கிதப் பட்டு அண்ணேன்னு சொல்லிட்டிருந்தது உண்டு. ஏதோ சந்தேகத்தில், அவர் பின்னூட்ட வரலாறு பார்த்த போது தான் தெரிந்தது பரந்தாமன் ஐரோப்பிய, தென் அமெரிக்க ஐபி அட்ரஸ்லிருந்து என் பதிவுகளுக்குச் சில சமயம் பின்னூட்டம் வந்திச்சு. "அண்ணே, சென்னையில நேத்தைக்கு ஒரே மழையாம்ல?"ன்னு பொடி வச்சு நான் பதில் பின்னூட்டம் போடுவேன்.  அவரும் சளைக்காம, "தங்கச்சி, பேய்மழையம்மா!  நீர்வழிகளில் என் கண்வரிகளும் சிலரின் முகவரிகளும் கலைந்து போயின"ன்னு பதில் போடுவாரு....

சரி, பதிவுலகத்தையே கலக்கிட்டிருக்கும் கதையைச் சொல்லாம, எங்கியோ போறேனே.

காமினியும் நானும் அப்பப்ப இமெயில் எழுதிக்குவோம். "அக்கா, நான் பி.ஈ. படிச்சு முடிச்சவுடனே, அமெரிக்கா வந்திரணும். சிவாவுக்கு அங்கேயே கட்டாயம் வேலை கிடைக்கும்"னு சொல்லிட்டிருப்பா.  சிவமைந்தன் நெட்வொர்க் எஞ்சினியரிங் லீட்; CCNA பாஸ் பண்ணியிருக்கார். ரெண்டு வருஷமா சென்னையிலியே ஒரு சின்ன ஸ்டார்ட்‍அப் கம்பெனியில் வேலை செஞ்சிட்டிருக்காரு. அப்பப்ப பெங்களூரு, டெல்லின்னு பறந்திட்டிருந்தாலும், காமினியோட காதலும் சிவமைந்தனின் தமிழ்ச்சேவையும் தொடர்ந்திட்டிருக்கே.

அப்ப தான் திடீர்னு, காமினி கிட்ட இருந்து ஃபோன் வந்திச்சு. நாங்க எப்பவும் ஃபோன்ல பேசிக்கறது இல்லை, ரெண்டு பேரும் ஃபோன் நம்பர் வச்சிட்டிருந்தாலும், ஃபோன்ல பேசி கிழிக்க மாட்டோம், எல்லாம் சாட் தான். அதுனால, காமினி ஃபோன்னதும் டக்னு எடுத்தேன். "க்கா! ழிழா ழிழ்ழழி..." அது கட்டாயம் காமினி குரல் தான்னு தெரியும். திரும்பி ஃபோன் செய்தேன், அவள் எடுக்கலை.  இமெயில், சாட்னு எதிலியும் அவள் இல்லை. அவங்க பதிவுல "ஹே, என்னடி கத்திரிக்கா என்ன  விலை!"ன்னு பின்னூட்டம் கூட போட்டிருந்தேன். பின்னூட்டம் பப்ளிஷ் கூட ஆகலை. அவங்க குடும்ப அட்ரஸ், ஃபோன் நம்பர் தெரியாது.  சரி, நவம்பர்ல என் கம்பெனி ப்ராஜக்ட் விஷயமா இந்தியா கிளம்பணும்னு போட்டிருந்த ப்ளானை கொஞ்சம் மாத்தி, இதோ இந்தியா கிளம்பியாச்சு.  அவங்க பின்னூட்டம் டைரக்டா பப்ளிஷ் பண்ற இமெயிலுக்கு இன்னும் ஒரு ஜோக்கை அனுப்பிச்சேன். 

இந்தியா வந்தவுடனே, பரந்தாமன் சாரைக் கூப்பிட்டேன். அவரு தான் சொன்னாரு, 'காமினியும் சிவாவும் மாமல்லபுரம் சேந்து போயிருக்காங்க, ஒரு ஆக்சிடென்ட்ல ரெண்டு பேரும்  மாட்டிகிட்டாங்க. காமினி ஹாஸ்பிடல்ல இருக்காங்க, சிவாவுக்கு அவ்வளவு காயம் படலை. ஆனாலும் சிவாவும் காமினியை கவனிச்சிட்டு ஹாஸ்பிடல்ல இருக்காரு"ன்னுட்டு. நேரா ஆஸ்பத்திரி போனேன்.

நல்ல வேளை "விசிட்டர் அவர்ஸ்"ல தான் போனேன். சிவா டாக்டர் கிட்ட பேசிட்டிருந்தார்.  முதுகும் முகமும் உயர்த்தி வைக்கப் பட்டு, படுத்துக் கொண்டு காமினி முகத்தில் ஸீத்ரு மாஸ்க் சிறியதாக இருந்தது,  கைகளில் வயர் பிணைக்கப் பட்டிருந்தது.   ஆனால், காமினி முகத்தில் என்னைப் பார்த்ததும் மாற்றம் தெரிந்தது. அவள் கண்களில் பயம் தெளிவாகத் தெரிந்தது. உள்ளே போகாமல் தயங்கினேன். என்னைப் பார்த்த சிவா அவசரமாக வெளியே வந்தார். டாக்டரிடமும் சிவாவிடமும் நான் பேசத் தொடங்கிய போது தான் உள்ளே அது நிகழ்ந்தது.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். 

டாக்டரும் சிவாவும் காமினி இருந்த அறைக்கு முதுகைக் காட்டிப் படுத்திருந்தமையால் அவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை(ன்னு நினைச்சேன்).  நான் முகத்தில் மாற்றம் ஏதும் காட்டாமல் பேசிக் கொண்டிருந்தேன்.  பரந்தாமன் தயாராக வெளியே காருடன் இருந்தார்.  அவர்கள் கிளம்பியதும், எனக்கு டெக்ஸ்ட் அனுப்புவார்கள், நான் தப்பிப்பதாக ப்ளான்.  மயிலாப்பூரில் நான் தங்கும் ஹோட்டலுக்கு வந்த காமினியும் பரந்தாமனும் என் அறைக்குப் போய் காத்திருப்பார்கள் என்றும் ப்ளான்.  நடந்தது.

ஆனால், என் பின்னாலேயே சிவா தொடர்ந்து வருவது தெரியாமல் போய் விட்டது.  உட்லண்ட்ஸின் மாடிப்படிகளில் இருந்து வெளி வந்து என் அறைக் கதவைத் திறக்கும் போது திடீரென்று சிவா என்னையும் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான். வந்தவன், "ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.  "எல்லாம் ஆளாளுக்கு ப்ளான் போட்டு தான் வந்திருக்கீங்க. இதுல காமினியும் உடந்தைன்றது தான்... சே!" என்றான்.

எனக்கு வந்த கோபத்தில் அறைந்திருப்பேன், எங்கியாவது அந்த நாதாரி சுட்டுத் தொலைத்து விட்டால்?

என்றாலும், க்ளாசட்டிலும் பாத்ரூமிலும் ஒளிந்திருந்த போலிஸ் வெளிவந்ததும், காமினியின் நெற்றிப் பொட்டில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டியே பயமுறுத்தி சிவா வெளியேறத் தொடங்கியதும், நான் பாய்ந்து துப்பாக்கியைத் தட்டி விட்டதும்....,  சிவா சுட்டதும், என் தோளில் துப்பாக்கி ரவை கொதித்ததும், ஓரு சில விநாடிகளுக்குள் நடந்து முடிந்தது.  பரந்தாமனின் சென்னை போலீஸ் தொடர்புகள் மூலமாக எல்லாம் சீக்கிரம் முடிந்தன.  சிவாவை போலிஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டது.  வெறும் தோளின் மேல்பாகத்தில் பட்டுக் கொண்டு போன ரவையையும் காயத்தையும் சுத்தம் செய்து, உடனடியாக டாக்டர் கிட்ட முதலுதவி செய்து கொண்டோம் (இல்லை, உட்லண்ட்ஸ்க்கு பக்கத்தில் "வேற" டாக்டர்:-). 

காமினி மெதுவாக, அவள் சல்வாரின் பாக்கட் (இப்ப அப்படியும் தைத்துக் கொடுக்கறாங்க டோய்!) டிலிருந்து டயமண்ட் செமிகண்டக்டர் சிப் ப்ரோடோடைப்பை வெளியே எடுத்தாள்.   “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

ஹிஹி, நான் யாரென்று பொதுவாக பதிவுலகத்தில் சொல்லுவதில்லையே! சென்னை ஐஐடியில் படித்த மாணவி, என் பிஹெச்டியை பெர்க்லியில் முடித்து அங்கேயே சிலபல கம்பெனிகளைத் தொடங்கி, ஏராளமாக பணம் சம்பாதித்து,  எலக்டிரிக் காருக்கான கன்ட்ரோல் மாட்யூலின் மாஸ் ப்ரொடக்ஷனுக்கான ஆராய்ச்சியில் இருக்கிறேன்.  "அதிக மின்சக்தியை தாங்கக் கூடிய செயற்கை வைரத்தால் செய்த மைக்ரோசிப் மூலமாக இந்த கன்ட்ரோல் மாட்யூலை"ச் செய்ய, பரந்தாமன் சாரின் உதவியை நாடிய போது, சிவமைந்தனுக்கு அது தெரிய வந்தது.

சிவாவிடம் இந்த TOR பற்றிக் கற்றுக் கொண்ட பரந்தாமன், என்னை முட்டாளாக்குவதாக நினைத்துக் கொண்டு ப்ராக்ஸி ஐபி வழி பின்னூட்டம் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.  பரந்தாமனின் சிஸ்டத்தில் TOR மட்டுமல்லாமல், கீபோர்டு லாகர் முதற்கொண்டு இன்ஸ்டால் செய்திருக்கிறான் சிவா!

அந்த சமயத்தில் தான், சிவா என் கம்பெனி நெட்வொர்க்கில் ஹாக் செய்ததை கவனித்தேன்.  சிவாவின் தவறான வழிகளைப் பற்றி, காமினியிடமும் பரந்தாமனிடமும் பேசினேன்.  சிவாவின் இமெயில்களை, காமினி பெற்றுத் தந்தாள்:‍-)  அதிலிருந்து, இந்த செயற்கை வைர ஆராய்ச்சியில் எங்கள் முன்னேற்றம் பற்றி சிவா அமெரிக்க டெக்ஸாஸைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு விவரம் அளித்தது தெரிய வந்தது.

(அவனுக்கு ஜப்பானின் ட்ஸுகுபா / Tsukuba தொழில் நுட்ப ஆராய்ச்சித் தொழிலகத்தில் செய்த ஆராய்ச்சித் தாள்கள் என்று நான் பொய்யாய் ஒரு எலிப்பொறி வைத்ததில் மாட்டி, அவன் அந்த ஆராய்ச்சித் தொழிலகத்தின் நெட்வொர்க்கில் நுழைந்ததும் பழங்கதை.  அவன் அந்த நெட்வொர்க்கில் நுழைந்தது எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா?  உங்கள் தொழில் நுட்பப்பதிவுகளில் கார்கி, லீலா என்றெல்லாம் பெயர்களில், ஜப்பான் / ஐரோப்பிய ஐபி அட்ரஸில் வந்து பின்னூட்டம் இடுவது யார் என்று நினைக்கிறீர்கள்? ;-)


ஹிஹி

Saturday, October 02, 2010

எந்திரன்: சிறுகுறிப்பு

ரஜினி ரசிகர்கள், அல்லாதோர் இரண்டு வகையினருக்கும் விமர்சனம் இருக்கு இங்க!

ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்.

தலைவருக்கு வில்லன் வேஷம் என்றால் அடித்து தூள் கிளப்பிடுவார். இந்தப் படத்தில் வெடிச் சிரிப்பென்ன, சுழன்று அடிக்கும் சண்டை சீன் என்ன, நடை என்ன, ஐஸ்வர்யாவிடம் கடைசி சீன்களில் அடிக்கிற ஸ்டைல் பேச்சென்ன, தலைவர் தலைவர் தான். ஷங்கரின் பிரமாண்டம் நன்றாகவே தெரிகிறது. பாடல்கள் சிலவற்றை, மக்கள் கூடவே பாடியதும், தாளம் போட்டதும், சூப்பர். ரசிகப் பெருமக்கள் அள்ளிப் போட்ட துண்டுக் காகிதங்களூம் பாப்கார்ன் தூளும் அமெரிக்கத் திரையரங்கத் துப்புரவாளர்களுக்குக் கொஞ்சம் அதிசயமாகவே இருந்திருக்கலாம்.

ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்.

இதுவரைக்கும் படிச்ச ரஜினி ரசிகர்கள் நடையைக் கட்டுங்கப்பு:‍-)

யோவ், படமாய்யா இது? அவரு வயசு இப்படி மேக்கப்புப் பெயின்டையையும் மீறிட்டுத் தெரிது, க்ளோஸப்ல, அந்தம்மாவை விட இவரு லிப்ஸ்டிக்கு ஜாஸ்தியாப் போட்டிருக்காப்ல தெரிது. பேசாம, தலைவருக்கு ஐஸ் அஸிஸ்டென்டுன்னு கதாபாத்திரமாக்கிட்டு, எந்திரனா நடிக்கிறவரு கொஞ்சமாச்சும் இளந்தாரியாப் போட்டிருக்கலாம். அந்தம்மா நடிப்பு.... இன்னும் கொடுமை. எங்கிட்டு போய்ச் சொல்றது?

கம்ப்யூட்டர் ஜிகினா வேலை கொஞ்ச இடத்துல பல்லை இளிக்குது.

எப்பவோ படத்தை முடிச்சிருக்கணும்யா. இழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழழ்ழ்ழ்ழ்ழ்ழுத்துக்கிட்டுப் போவுது, எந்திரன் பாம்பு, தவளைன்னு அவதாரம் எடுத்துட்டு வரும்போது, கொட்டாவியா வந்திச்சு.  ஆமா, இம்புட்டுப் பெரிய விஞ்ஞானிக்கு வைரஸ் வைக்க முதல்லியே தோணலியா?

சின்னப் பசங்க கேட்ட கேள்விகள் அதுக்கு மேல: (அ) ஐஸ் ட்ரெயினில் ரவுடி மக்கள் கிட்ட மாட்டிகிட்டு, அவங்க கொடூரச் சிரிப்போட, ஃபோனை எடுத்துட்டு வரும்போது ஃபோட்டோ எதுக்குன்னு புள்ளைங்க கேட்டாங்க‌:-(( (ஆ) 'ஓஹோ, இப்படித் தான் குழந்தை பிறக்குமா'ன்னு கேட்டாங்க! (இ) எம் பசங்க "எப்ப அம்மா படம் முடியும்?"ன்னு இடைவேளைக்கு அப்புறம் ரொம்பவே கேட்டாங்க‌.

வந்தது வந்தீங்க, படத்தைப் பத்தி, உங்க கருத்தையும் சொல்லிட்டுப் போங்க!

Friday, August 13, 2010

மயங்கி விழுந்த நடிகர் கர்ப்பமா?

ஹீரோ நடிகரோடு 10 ஸ்டண்ட் நடிகர்கள் கலந்துகொண்டார்கள். ஸ்டண்ட் நடிகர்களுடன் ஹீரோ மோதுவது போன்ற சண்டை காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஹீரோ மயங்கி விழுந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. ஹீரோ முகத்தில் தண்ணீர் தெளித்து, குடிப்பதற்கு குளுக்கோஸ் கொடுத்தார்கள். அதன்பிறகு அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.

சிகிச்சைக்குப் பின்னர் உடல் தேறிய ஹீரோ கூறுகையில், "உடல் எடையை குறைப்பதற்காக, நான் கடந்த ஒரு வாரமாக உணவில் மிகவும் கட்டுப்பாடாக இருந்து வருகிறேன். தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறேன். நேற்று காலையில் எதுவும் சாப்பிடாமல் படப்பிடிப்புக்குச் சென்றேன்.

அது, ஒரு பெரிய, ரிஸ்க்கான சண்டை காட்சி. திடீரென்று தலை சுற்றுவது போல் இருந்தது. மயங்கி விழுந்து விட்டேன். சிகிச்சைக்குப்பின் நன்றாக இருக்கிறேன்...", என்றார்.

வளர்ந்து வரும் நடிகர் என்பதால், 'ஜாக்கிரதை'யாக இருக்க வேண்டாமா?

நகைச்சுவைக்கு மட்டுமே! சமூக அவலம், பெண்ணீயம் எதுவும் இல்லை.

Friday, July 30, 2010

தாய் வழித் தோன்றல்

என் பட்டங்களை நீ
சுவரில் மாட்டியதில்லை.
என் தோல்விகளால் என்னைத்
துவள விட்டதில்லை.
என் பசியும் ருசியும்
என்னை விட உனக்கே தெரியும்.
என்றாலும்,
என் வாழ்க்கை அமைய
நீ வழியே சொன்னதில்லை.
உன் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதினும் பெரிதே
செய்தாய்.

என் மக்களின் பட்டங்கள்
சுவர்களில் சட்டங்களில்.
ஆனாலும் தோல்விகளால்
அவர்களைத் துவள விட்டதில்லை.
என் மகள்களின் பசியும் ருசியும்
அவர்களை விட எனக்கே தெரியும்.
என்றாலும்
அவர்கள் வாழ்க்கை அமைய
நான் வழியைச் சொல்ல மாட்டேன்.
என் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதினும் பெரிதாய்ச்
செய்வதை விட
வேறென்ன இருக்கிறது?

இன்றைத் திங்கள் நாளைக்கும் பூக்குமென்று...

கடல் வழிக் கப்பலுக்கு தெரியுமா
எந்த அலை தன்னைத் தொடும் என்று?
எது கிழக்கு, எது மேற்கு என்று?

கடல் வழிக் கப்பலுக்கு தெரியுமா
நேற்றைய போலாரிஸும் இன்றைய தென் துருவமும்?

கால அலைகளின் ஆட்டங்களில்
மானுடர்களின் வாழ்க்கைக் கனவுகள்.
எந்த அலை அடிக்கும்,
எந்த அலை தாலாட்டும்?

இன்றைக்கு முளைக்கிற வெள்ளி
நாளைக்கும் என்று
கைக்கெட்டா விண்மீனாய் ஒளிரும் நம்பிக்கைகள்.

Saturday, May 29, 2010

கடற்கரையில் வாழ்க்கைப் பயணம்

நண்டுகளைச் சுற்றி
கவனமாகப் போகிறேன்....
மணல்வீடுகளுக்கு ஒரு புன்சிரிப்புடன்
என் அன்பு!
கிடக்கும் உடையாத கிளிஞ்சல்களை
பொறுக்கி என்கூடையில் சுமக்கிறேன்....
தாய்நாட்டில் கிடைக்காத கட்டற்ற பெண்விடுதலையோடு
சிற்றுடையில் சைக்கிளில் கடற்கரையில்
கடல்காதலோடு சைக்கிள் பயணம்.

குழந்தைகளின் சிற்றடிச் சுவடுகளைக்
கனிவுடன் கடக்கிறேன்...
நுரையும் பந்துமாய்
நாய்களோடு குழந்தைகளின் ஆட்டம்,
பிரபஞ்சத்தின் பிரக்ஞை இல்லா
நம்பிக்கை அவர்களுக்கு கடல் மேல்!

'ஹை பாப், நான் உன்னை காதலிக்கிறேன், ஸூ'
'நான் தான் கடவுள்'
பிரகடனங்களின் மேல்
சிறு கோடிட்டுச் செல்கிறது
என் சைக்கிள்.

காலை மலர்வதற்குள்,
பிரகடனங்களோடு
சைக்கிள் டயர் சுவடுகளையும்,
குழந்தைகளின் காலடிச் சுவடுகளையும்
நண்டுகளின் சுவடுகளையும்
எல்லாவற்றையும் அழிக்கும் கடல்.

Sunday, March 21, 2010

நம்முள் நிறைந்தது ஏதிலியானது!

எல்லாமானது என்னுள்ளும் நிறைந்தது.
எதுவுமே இல்லாமல் என்னுள் கரைந்தது.
தீயினிடை நீண்ட‌
இருள் நாவுகளாய்,
இருட்டினிடை ஒளிர்ந்த
வண்ண நினைவுகளாய்,
அறியாமையினின்றும் வளர்ந்து தெளிந்த
என் ப்ரம்மம்.

ஆழ்ந்த உள்ளில்,
மறுமொழி இல்லா கேள்விக‌ளின்
ஊடாய்க் கிளர்ந்த‌ அறியாமை.
தாழ்வும் உயர்வுமாய்
ஒன்றாய் இரண்டாய் விரிந்ததுவும் அதுவே தான்.

வெறுமையில் விளைந்தது
முழுமையில் கரைந்தது.
அறியாமையின் சூலில்
பிறந்த அறிவின் முடிவில்
இருக்கும் ப்ரம்மம்.
அதை அறிந்தோர் ஊழும்
விட்டிலின் விதியே.

Sunday, March 07, 2010

விளையாட்டின் வினை (Game Theory) - 1 / மேலாண்மை துறை

சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன்: நூற்றில் ஒருத்தி என்று ஒரு படம் வெளியாகுதுன்னு வைச்சுக்குவோம். அந்த படத்தைப் பத்தி நண்பர்கள் சொல்றாங்க. பதிவர்கள் எழுதறாங்க. பதிவர்கள் எழுதினதைப் பாத்துட்டு படம் பாத்துட்டு வந்தேன், நல்லாவே இல்ல என்று ஹாலிவுட் மாலா கோலா குடிச்சிட்டே எழுதறாங்க. அதைப் பாத்துட்டு இன்னும் 10 பேரு படத்தைப் பத்தி எழுதுறாங்க.

இந்த படம் மட்டும் தானா? நித்தியானந்தா கேஸ்ல பதிவர்கள் எப்படியெல்லாம் எழுதித் தாக்க‌றாங்க‌?! ஒரு ப‌திவ‌ர் சொல்வ‌து ப‌த்தி இன்னொருத்த‌ர் எழுத‌றாரு. அதைப் பார்த்துட்டு இன்னும் சில‌....

போலி ப‌திவ‌ர்க‌ள் விவ‌கார‌த்திலும், நற் குடிப் பெண்கள் விவகாரத்திலும் பதிவுகள் பதினாறானது அப்ப‌டித்தானே....?

இதுக்கும் மேலாண்மைக்கும் என்ன‌ தொட‌ர்பு?

மேலாண்மை என்கிற‌ ஆணீய‌ச் சொற்றொட‌ரிலேயே ஒன்று பத்தாகி பதினாறாகும் வித்தையைச் செய்வது யாருன்னு தெரியுதுன்னு சொல்கிற‌ பெண் ப‌திவ‌ர்க‌ளே: கை கொடுங்க‌:-) அப்புற‌ம் பார்ட்டிக்குப் போக‌லாம்:-)

ப‌ங்குச் ச‌ந்தையிலியும் அப்ப‌டித் தானே! ஒரு செய்தியை வ‌ச்சு ஒரு ப‌ங்கின் விலை மேல‌யோ, கீழ‌யோ போகுது. இன்னும் வேணும்னுட்டு ஒரு ப‌ங்கின் விலையை ஏற‌, இற‌ங்க‌ச் செய்ய‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வைக் கிள‌ப்ப‌ செய்திக‌ளே போதுமே!

ஒரு க‌ம்பெனியில‌ வேலை செய்றீங்க‌. இன்னுமொரு நாட்டில் இருக்கும் சின்ன‌ க‌ம்பெனி நல்லா வியாபாரம் செஞ்சிட்டிருக்கு . அந்த கம்பெனியை உங்க‌ முத‌லாளி வாங்க‌ப் போறாரு. அந்த‌ க‌ம்பெனியை வாங்கினால், நீங்க‌ இன்னுமொரு நாட்டில் வியாபார‌ம் செய்ய‌லாம். செய்தால், உங்க‌ளின் க‌ம்பெனி ப‌ங்குக‌ள் இன்னும் பெரிய‌ அள‌வு ஆக‌லாம். ஆனால், அந்த‌ க‌ம்பெனியை வாங்கினால், நீங்க‌ள் த‌லைமை வ‌கிக்கும் டிபார்ட்மென்டின் வேலை குறையும், ஆட்குறைப்பு ந‌ட‌க்க‌லாம்.

நீங்க‌ ந‌ல்ல‌வ‌ர்ன்னா, என்ன‌ செய்வீங்க‌: ஆட்குறைப்பைத் த‌டுக்க‌ இந்த‌ சின்ன‌ க‌ம்பெனியைப் ப‌த்தின‌ எல்லா கெட்ட‌ ந்யூஸையும் வெளியிடுவீங்க‌ ... வேற்றாட்க‌ள் மூல‌மா.

நீங்க‌ கெட்ட‌வ‌ர்ன்னா, இந்த‌ க‌ம்பெனியை வாங்குவ‌தால் உங்க கம்பெனியிலியே எந்த‌ டிபார்ட்மெட்ன்ட் ந‌ல்ல‌ ப‌ய‌ன் அடையுமோ, அந்த‌ டிபார்ட்மென்ட் த‌லைவ‌ரை கையில் போட / இல்ல, அவர் தலையில் மிளகாய் அரைக்க‌ப் பார்ப்பீங்க‌?

ஙே?

வியாபார‌த்தில‌ ந‌ல்ல‌வ‌ர் என்ன‌, கெட்ட‌வ‌ர் என்ன‌ங்க‌? சொல்லுங்க‌, எந்த‌ வ‌ழி உங்க‌ வ‌ழி?

விளையாட்டு தொட‌ரும்....

Friday, March 05, 2010

குட்டிக் குறும்புக‌ள்

என‌க்கு இர‌ண்டு வாண்டுக‌ள் வீட்டில். என் வாழ்க்கையின் மாறா வ‌ச‌ந்த‌ங்க‌ள். இந்த‌ பூக்க‌ளின் கால‌டியில் நான். அத‌னாலேயே அப்ப‌ப்ப‌ இவ‌ர்க‌ள் செய்யும் லூட்டியை எழுதி வைத்துக் கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து.


பெரிசு சொல்வ‌து:

“அம்மா, தொண்டைக்குள்ள என்னவோ வலிக்கிறது!”

“ஏம்பா என்ன செய்யிறது?”

“தெரியலியே, தலையை தொண்டைக்குள்ளியா விட்டுப் பாக்க முடியும்?”


சின்ன‌து:

“அம்மா, நீ வீ (நிண்டண்டோ விளையாட்டு) விளையாட்டு நல்லா விளையாடத் தெரியலயேன்னு வருத்தப்படாதே. நீ ப்ராக்டிஸ் பண்ணலையே அதனால் தான். நீ ரொம்ப ஸ்மார்ட் கேர்ல். சீக்கிரம் இதெல்லாம் கத்துக்கலாம்”.


பெரிசு: பெரிசு தன் ஆசிரியை பற்றிச் சொன்ன ரகசியத்தை நான் குழந்தைகளின் அப்பாகிட்ட சொல்லிட்டேன். அதுக்கு ”ஒரு ரகசியத்தைக் கூட தலையில ரகசியமா வச்சுக்கத் தெரியல! மண்டு! நான் சொன்னது எல்லாம் ம‌ண்டையிலிருந்து அழிச்சுடு”


சின்னது செய்ததைப் பார்த்து பெரிசுக்கு ஏதோ பொறாமை. அதனால் பெரிசு கிட்ட, உணர்வுகளை ஆற்றுப் படுத்தும் வகையில் ஏதோ பேசினேன். பிறகு என்னிடம் சின்னது வந்து “அம்மா, நான் க்டைசியா இருக்கறதைப் பத்தி கவலைப்படலை. ஏனெனில், ‘பெரிசு’இன் உணர்வுகளை நான் மதிக்கிறேன். பல விஷயங்களில், சிலசமயம், நான் முதலாவது சிலசமயம் 2வது ஏன் கடைசியாக் கூட நான் இருக்கலாம். அதனால் என்ன? எனக்கு ‘பெரிசு’ மேல இருக்கும் அன்பு தான் முக்கியம்” இதைச் சொன்னபோது சின்னதுக்கு வயது 4.


பெரிசு:
”அம்மா, இந்த லிப்ஸ்டிக்கெல்லாம் எப்படி தான் போட்டுக்கிறியோ? ஒண்ணுமே டேஸ்ட் நல்லாயில்ல்... (என் முறைப்பைப் பார்த்து விட்டு) நெவர் மைண்ட். அப்பா தான் அப்படி சொல்லச் சொன்னார்.............!"

Friday, February 26, 2010

நாலு பேர்

மோட்டு வளையில் ஒளிந்திருந்த‌
காலம்
நீண்டதொரு கரம் நீட்டி
வளைத்துத் தின்றது என்னை.

காணாமல் போன என்னை
நாலு பேர் திட்டினார்கள்.

மேகங்களில் மிதந்த என்னை
பட்டுப்பூச்சிகள் மகரந்தத்தில்
தெளித்துப் போயின.

மகரந்தத்தில் இருந்து
தேனீ என்னைக் கொட்டிப் போனது.

ஒரு ராணித் தேனீயின்
ராஜ்யத்தில் இருந்த போது
கல் விழுந்து கூடு கலைந்தது.

கூட்டைத் தின்ற சிறுவனின்
உதடுகளில் நின்ற போது
அவன் அம்மா கொடுத்த அடியில்
கரைந்து போனேன்.

 மிச்சம் இருந்த என்னை
எறும்பு தின்றது.

எறும்புப் புற்றை
எரித்துக் கொன்றார்கள்.

நாலு பேர்.

Thursday, February 18, 2010

நனைத்தெடுக்கும் நினைவுகள்

மழை போடும் கோலங்களாய்

நில்லாமல் நினைவலைகள்.

நெஞ்சிடுக்கினிலும்

நனைந்து போகும்.

இங்கும் அங்குமாய்

நனைந்த குருவியாய்

என் உள்ளம்.

இடியும் மின்னலும்

மறைக்கும் டிவி சப்தம் போல்

ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்.

நினைவுத் திவலைகள்

கண்களுக்குள் ஒளிந்து கொண்டு.


கைகால் நடுங்க‌

உள்ளம் பதற‌

ஓயாத மழைக் காதலோடு


இன்னும் நனைகிறேன்.


நினைவலைகளில்.

Friday, February 05, 2010

இருநூற்றுச் சோகம்

"என்னா இது? நல்ல சீலை உடுத்திட்டு வரியா?"

எரிந்து விழுந்த முருகவேளை ரோகிணி உற்றுப் பார்த்தாள்.

"என்னாடி மொறக்கிறே?" விருட்டென்று முருகு தன் பழைய சைக்கிளை உதைத்து எழுப்பினான். சனியன். பழையதை விற்றுத் தொலைக்கலாம் என்றால் முடிகிறதா? என்றைக்காவது தனது கண்டுபிடிப்புகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ன? அன்றைக்கு நல்ல மோட்டார் சைக்கிள் என்ன, காரே வாங்கலாம். பிள்ளைகள் அஜீத்தையும், சிம்ரனையும் சைக்கிள் மேலே முன்னும் பின்னுமாக ஏற்றி வைத்தான். வேண்டுமென்றே ரோகிணி இல்லாமல் கிள‌ம்பிய‌வ‌னை, சிம்ர‌ன், "அம்மா வ‌ர‌லே....அம்மா வேணும்..." என்று க‌த்தி நிறுத்தினாள்.

"கொர‌ங்கு, சீக்கிர‌ம் கிள‌ம்பித் தொலையுதா பாரு? ஏன்டி, ப‌வுட‌ர் போட்டு தீத்தியாச்சா? ஒக்காந்து தொலை. ஒங்கப்பன் என்னா கிலோ கணக்கிலியா நகை போட்டு அனுப்பிச்சிருக்கான்? இம்புட்டு நேரம் அலங்காரம் பண்ணியும்... மூதேவி கணக்கில வருது பாரு!!" ரோகிணி பேசாம‌ல் பின்னால் உட்கார்ந்து சிம்ர‌னை முருகுவுக்கும் த‌ன‌க்கும் இடையில் அம‌ர்த்திக் கொண்டாள். எதிர் வீட்டு இந்திராணி சன்னல் வழியாகப் பார்ப்ப‌து தெரிந்த‌து. நாளை த‌ண்ணீர்க்குழாய் அடியில் பேச்சு இதுவாய்த் தான் இருக்க‌ப் போகிற‌து.

திருமண ம‌ண்ட‌ப‌த்தில் வ‌ண்டியை நிறுத்தி பூட்டு போட்டு, இழுத்து பார்த்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு வ‌ந்தான். "கிஃப்டு எடுத்துட்டு வ‌ந்தியா?"

ரோகிணிக்கு திகில் பூண்டு ரேஷன் கடையில் வாங்கினாற் போலிருந்த‌து. வாயைத் திற‌ந்து பேச‌வே ப‌யமாக‌ இருந்த‌து. கையில் காசு இல்லை. முருகவேள் மோட்டார் போடும் டாங்குகளில் நீர்நிலை மட்டம் அறிவிக்கும் கருவி ஒன்றை முந்தைய நாள் செய்து முடித்திருந்தான். இரண்டு மாடல்களை ஒரு பையில் போட்டுக் கொண்டு "எங்கியாவது புரட்ட முடியுதானு பாக்குறேன், கிடைச்சா கிஃப்டும் வாங்கிட்டு வ‌ரேன்" என்று காலையில் கிள‌ம்பிய‌வ‌ன் மாலையில் தான் வ‌ந்தான். வந்தவன் முகத்தில் ம‌திய‌ம் சாப்பிடாத‌ க‌ளைப்பு தெரிந்த‌து. இருந்தாலும், காபியைக் கேட்டு வாங்கிக் குடித்த‌வ‌ன், உட‌ன‌டியாக‌ திரும‌ண‌ வ‌ர‌வேற்புக்குக் கிள‌ம்பி விட்டான். இவ்வ‌ள‌வு தூர‌ம் வ‌ந்து விட்டு அப்புற‌ம் கிஃப்டு எங்கே என்றால் என்ன‌ சொல்வ‌து? கையில் சுத்த‌மாக‌ காசு இல்லை என்று அவ‌னுக்குத் தெரியாதா என்ன‌? சொன்னால் இன்னும் ஏதாவ‌து உற‌வின‌ர்க‌ள் முன்னால் க‌த்த‌ப் போகிறான் என்று ப‌ய‌மாக‌ இருந்த‌து.

முருகு ப‌ல்லைக் க‌டித்துக் கொண்டு, "மூதி!" என்றான் மெள்ள‌. "சாப்பாடு வேணுமுன்னா எல்லாம் கிள‌ம்பிடுவீங்க‌" என்றான். அதில் என்ன‌ த‌வ‌று என்று நினைத்து வாயைச் சுழித்துக் கொண்டாள் ரோகிணி. ச‌ரியாய்ச் சாப்பிட்டு எத்த‌னை மாத‌ங்க‌ள் ஆகி விட்ட‌ன‌? ந‌ம‌க்கே இப்ப‌டி இருக்கும் போது குழ‌ந்தைக‌ளுக்கு எப்ப‌டி இருக்கும்? அனிச்சையாய், சிம்ர‌னை இடுப்பில் ஏற்றி முதுகை நிமிர்த்தி நின்று கொண்டாள்.

"பிச்சைக்கார‌ நாயி". இதுவும் ப‌ல்லைக் க‌டித்து மெள்ள‌ச் சொன்னான்.

இரண்டு குழந்தைகளைச் சுமந்தும், இழுத்துக் கொண்டும் மண்டபத்தை நோக்கி மெள்ள நகர்ந்தாள் ரோகிணி.  முன்னே நடந்து கொண்டிருந்த முருகவேள், நினைவு வந்தாற் போல், "இந்தா! பார்ட்டு வாங்கன்னு கடன் வாங்கிட்டு வந்தேன். மொய்யா கொடுக்க வேண்டியது தான். இருநூறு ரூவாக்கு என்னாத்த வாங்குறது?" என்று பான்டு பாக்கட்டில் கைவிட்டு மடித்து சுருட்டி வைத்திருந்த இரண்டு நூறு தாள்களை நீட்டினான்.

"நாளைக்கு திரும்ப கைநீட்ட வேண்டியது தான்".

ரோகிணி பேசாமல் அதை வாங்கி இன்னும் சுருட்டி, முந்தானைக்குள் முடிச்சிட்டு வைத்துக் கொண்டாள்.

உள்ளே பட்டுச்சீலைகளும் நகையும் பாங்கும் பெண் மாப்பிள்ளை குடும்பங்களின் செல்வத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன. ரோகிணி சுவரோரமாகக் குழந்தைகளை இழுத்துக் கொண்டு போனாள். அதற்குள் ஒரு அத்தை, பெரியம்மா எல்லாரும் பார்த்து, "வாடி, இப்ப தான் வழி தெரிஞ்சுதா? சீக்கிரம் வா, சாப்பிடு" என்று கூடவே நடந்து வந்தனர். ரோகிணி முகத்தைப் பார்த்த பெரியம்மா, "ஏண்டி, அவன் ஏதாச்சும் சொல்லிட்டானா" என்றாள்.

அத்தை நொடித்தாள். "முருகு சரியான முசுடு. ஆகாசக் கோட்டை கட்டுவான் நல்லா...." என்று தொடங்கினாள். பெரியம்மா தன் நாத்தியை கண் சாடை காட்டி அடக்கினாள்.

சாப்பிட்டு விட்டு அத்தையுடன் பேசிக் கொண்டே வெளியே வந்தவளை, முருகவேளின் குரல் தடுத்து நிறுத்தியது.

"சாப்டாச்சா அதுக்குள்ள?" கடுப்பாக, ஆனால் மெதுவாகக் கேட்டான். ரோகிணி பேசாமல் குழந்தைகள் கைகளை இறுக்கிப் பிடித்து நின்றாள். "போய் பொண்ணு மாப்பிள்ளையைப் பாத்திட்டு வந்தியா?" என்றான். ரோகிணி மெல்ல இல்லையென்று தலையாட்டினாள். "பசங்களுக்குப் பசிக்குமேன்னு நாந்தானடா சாப்பிடச் சொன்னேன்..." என்றாள் அத்தை.

"அத்தே, கல்யாணத்துக்கு வந்திட்டு பொண்ணு மாப்பிள்ளையை கூடப் பாக்கலையின்னா எப்படி" என்று வேகமாக முருகு மண மேடை அருகே போனான். பெண் ஒப்பனை எல்லாம் பிரமாதமாக இருந்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் எஞ்சினியர்களாம். முருகுவுக்கு மண‌ப்பெண் முறைப் பெண் என்றாலும், அந்த கம்ப்யூட்டர் பெண் வேலை விஷயமாக உலகம் சுற்றக் கிளம்பிய போதே, முருகு தன் அம்மா சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து செட்டில் ஆகி விட்டான்.

"ரோகிணி, மொய்ப்பணம் எங்கே?" ரோகிணி சாப்பிட்டவுடன் மண்டபத்தின் புறக்கடையில் கைகழுவி விட்டு முகம் துடைத்த போது,  முந்தானையிலிருந்து பணத்தை எடுத்து கையில் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது.. இப்போது எங்கே?

"எங்கடி?" முருகு கத்திக் கேட்ட போது, ஓரிருவர் இரைச்சலிலும் திரும்பிப் பார்த்தனர். "கீழ வுழுந்திருச்சி" - கணவனிடம் காலையிலிருந்து முதல் முறையாக அவள் பேசியது அது தான்.  ப‌ளார் என்று ஒரு அவளை ஓர் அறை விட்டு விட்டு முருகு கிள‌ம்பினான்.

அத்தை வேக‌மாக‌ அவ‌ளிட‌ம் வ‌ந்தாள். கையைப் பிடித்து "பின்னால எங்கடி வுழுந்துச்சி? சட்னு போய் தேடுவோம், வா" என்று கைகழுவும் பக்கம் அழைத்துச் சென்றவள், "மொறைப் பொண்ணைக் க‌ட்டிக்க‌ முடிய‌ல‌ன்னு கோவ‌த்தை ஒங்கிட்ட‌ காமிக்கிறான். நீ க‌ண்டுக்காதே" என்றாள்.

அறை வாங்கிய‌ துய‌ர‌த்தை விட‌, பெருகி வ‌ந்த‌ க‌ண்ணீர் சுட்ட‌து.

Tuesday, February 02, 2010

வரவுகளும் செலவுகளும்

அந்த பசிக் குரலுக்கு நான்
நின்று போயிருந்திருக்கலாம்.
நீட்டிய கைகளில்
வெறுப்பைத் தவிர வேறேதும்
தந்திருக்கலாம்.
பிச்சை எடுத்த சிறுமி ஒருத்தி
தூக்கிக் கொண்டிருந்த கைக்குழந்தை
அவள் தம்பி ஆகவே இருந்திருக்கலாம்.
குருட்டுப் பாடலென்று
சொல்லாமல்
நின்று அவதானித்து இருக்கலாம்.
இருக்கையிலிருந்து நான் நிமிர்ந்து பார்த்திருந்தால்,
கிழவிக்கு எழுந்து இடம்
கொடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும்.

அவை செலவுகளாய் இருந்திருக்கும்.

என் மேலாளருக்காய்க் கதவு திறந்து,
அசடு வழிய காத்திருந்த நேரங்கள்
வரவுகள் தாமே!