COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sunday, March 09, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 2

உளறுதலே எம் பணி: புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 1

அப்போது அம்பாவின் தனித்திரை சிவப்புவெளிச்சப் புள்ளிகள் காட்டி விர்விரென விரிந்தது. திரும்பி என்னை முறைத்தவர், "புரட்சி என்பது வெறும் புரட்டு. உன்னை இங்கே வரவைத்தால் அவர்களை யார் நடத்துவார்கள்?" என்று வறட்டுச் சிரிப்புச் சிரித்தார். திரையிலேயே இன்னொரு சிவப்புப் புள்ளியை அம்பாவின் பார்வை ஒத்தி எடுப்பதை நான் கவனிக்கும் அதே கணத்தில் ரோபாலிகா உள்ளே வந்து, ஒரு வலிய பிடியில் என்னைப் பிடித்துப் போனாள்.

மிகக் குறுகிய தூரத்திலேயே ஆறடிக்கு மூன்றடிக்கு ஆறடியில் ஒரு குண்டு துளைக்காத கரிப்பொருள் பெட்டியில் ரோபாலிகா என்னைத் தள்ளி அடைத்துப் போனாள். இதில் நுண்ணணுக் கடவு எதுவும் இல்லை. என்னை அம்பா முழுமையாக நம்பத் தயாரில்லை என்று புரிந்தது! ஆனால், கவலையில்லை. அம்பாவின் வார்த்தைகளிலேயே நிலத்தடி எழுச்சி புலப்பட்டது. நிலத்தடிவாழ் மக்களின் காலக்கோட்டை எண்ணலானேன். எதிர்காலத்தை எண்ணினால், எண்ணங்கள் தெரிந்து விடுவதற்கு, கடந்த காலத்தை எண்ணுவது எவ்வளவோ மேல்.

===========================================================================================

நிலத்தடி வாழ்வு காலம் காலமாய் இருப்பது தான். அராஜகம் நடக்கும் போது, தட்டி வைக்கப்படும் அத்தனை பேரும் குனிந்து கொண்டு இருப்பதில்லை. ஆனால், இருநூறு ஆண்டுகளுக்கு முன், 2025இல் நடந்தது "யுகப் புரட்சி". அப்போது வல்லரசு நாடுகளாய் இருந்த சைனா, இந்தியா, மற்றும் எண்ணை வள ரஷ்யா, இவை இந்த புரட்சியை வளர்த்தன. எல்லா வல்லரசுகளுக்கும் ஏற்படும் விதியே பழைய வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் ஐக்கிய ஐரோப்பியாவுக்கும் நிகழ்ந்தது. பொருளாதாரச் சரிவுக்கேற்றாற் போல் அவர்களின் நுகர்வு குறையவில்லை; நுகர்வுக்கேற்ப எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் வளரவில்லை. அதன் பின் இந்தியாவும் சைனாவும் குலத்தை ஒன்றாய் ஆக்கியது. வெள்ளை, கருப்பு, மஞ்சள் என்று பிரிந்து இருந்த மக்கள் ஒன்றாய்க் கலந்து வாழக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் சனநாயக முறையில் நிர்வாக துணைக்குழுவும், அகில உலக அளவில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டன. வணிகப் பொருளாதார குழுக்கள் மக்கள் இனமின்றி வாழ்வதை துரிதப்படுத்தின‌. ஏற்கனவே இனங்கலந்து வாழ்ந்த பூமியின் மக்கள், 2100க்குள் முக அமைப்பு வேறுபாடுகள் மறைந்து, வண்ணத்தால் அடையாளங் காட்ட இயலாதவராய் ஒரே மண் வண்ணத்தவர் ஆனர். பல முறை விவாதிக்கப் பட்டு ஒரு வழியாக 2104இல் நாட்டு எல்லைகள் அழிக்கப் பட்டன.

மருத்துவ முன்னேற்றம் புதிய பிறப்புக்களை வழிமுறைப்படுத்தி வயதுக்கு அர்த்தமில்லாமல் செய்து விட்டது. குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்கள் மகப் பேறு அலுவலகத்தில் பதிந்த சில மாதங்களில் வாழ்நாள் முழுக்க நோய் நொடி வராத உத்திரவாதத்துடன் பிறந்தார்கள். வாழ்நாள் என்பது மனத்தின் வசப்பட்டது.

ஆனால், அதற்கும் மேலாய் மனித குலத்தின் எதிர்காலத்தை மாற்றும் ஒரு பெரிய நிகழ்வு 2080களிலேயே கண்டுகொள்ளப்பட்டது. அப்போது 100 : 70 என்று இருந்த பெண் : ஆண் விகிதம், நாளடைவில் குறைந்தது. 2100இல் கடைசியாக 100க்கு 10 என்று இருந்த ஆண்கள் பின் என்னாவானார்கள் என்று அப்போது வாழ்ந்த பல பெண்களாலும் சொல்ல முடியவில்லை. 'இதை உடுத்தாதே, இதை மட்டுமே உடுத்து' என்று சொல்ல ஆணில்லை. 'நீ இருப்பதால் மனிதம் வளரும், ஆனால் நீ இருப்பதால் மட்டுமே எனக்கு ஆசை வருகிறது' என்று உள்ளே பூட்டி வைக்க ஆணில்லை. 'எனக்காய் நீ தியாகம் செய்யும் போது உன்னை இன்னும் ஆள ஆசைப்படுகிறேன்' என்று பெண்மையை யாரும் வருத்தவில்லை. வீர விளையாட்டுக்களை பெண்களைப் போலவே ஆண்களும் விரும்பினார்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால், உலக வரலாற்றில் ஆண் தான் எப்பொழுதும் முதலில் போரிட்டது. ஆண்களின் போர்ச் சண்டைகளில் பெண்கள் இன்னும் துன்பப்பட்டார்கள்.

ஆனால், இன்றைக்கோ, 12 வயதில் தனக்கு வேண்டிய துறைகளைத் தேர்ந்தெடுத்த மகளிர் அந்தந்த துறைகளில் தீவிர ஆர்வத்துடன் செயல்பட்டனர். 'ஆணாதிக்கம் இல்லாத சமுதாயத்தில், குழந்தைகளை உங்களுக்காய் நாங்கள் தருகிறோம்' என்ற மருத்துவ முன்னேற்றத்தில், மாத விலக்கு தேவையில்லாமல் போயிற்று. கடைசியாய், 2125இல் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால், கர்ப்பமுற்று பெண் குழந்தை பெறுவது தடை செய்யப்பட்டது. ஆனால் நிலம்மேல் வாழ்ந்த யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அரசாங்கம் 'சட்ட மீறல்கள் 95% குறைந்தது, கொலை கொள்ளைகள் 99% குறைந்தன, கற்பழிப்பு அறவே இல்லை' என்று ஒவ்வொரு நாளும் அறிவித்தது. ஆண்களைப் பற்றிய நினைவுகள் பலருக்கு இன்று இல்லை. அதற்கான தேவைகளும் இல்லை. இன்றைய வணிகப் பொருளாதார வழிகளில், வேண்டியது வேண்டிய நேரத்தில் தனித்திரையில் கண்களால் வாங்கலாம். காதலைக் கூட. இதையே தொழிலாகக் கொண்டவர்களும் இருந்தார்கள்.

நிலத்தடியில் நான் சந்தித்த பெண்கள் பலர் 150, 200 வயதைத் தாண்டியவர்கள். சிலர் வெறுமே சாவை எதிர்பார்த்தார்கள். நிலம்மேல் வாழ்வில் அவர்களுக்கு
விருப்பமில்லை. பலர் கட்டுப்பாட்டை எதிர்ப்பவர்கள். எல்லோரும் கூடி வாழ்ந்தோம். என் பழம்பெரும் தோழியரில் சிலர் சொன்னது இது தான், 'இயல்பாகவே ஆண்மை குறைந்து வந்து கொண்டிருந்த காலத்தில், மிச்சமிருந்த ஆண்களைக் கொன்று தீர்த்தார்கள்' என்பது. நிலம்மேல் இருப்பவர் போல் இல்லாமல், நிலத்தடியில் பெண்‍களுக்கிடையே உறவு தடை செய்யப்பட்டிருந்தது. இயக்கத்துக்கு எதிராக நினைத்தோம்.

இப்போது ஆளும் அம்பா, உலகின் இரண்டாவது அம்பா. என் தாய். (என்னைப் பெற்றவள் என்று இன்றைக்கு அறிந்து கொண்டேன்). நான் அரசாங்கத்தின் செல்லப் பெண்ணாய் வளர்ந்தாலும், வரலாற்றையும் அறிவியலையும் விரும்பிப் படித்தேன். நிலத்தடித் தோழியரின் நட்பு, அவர்கள் நினைத்ததை வெளிப்படையாகப் பேசுவது எல்லாம் எனக்கு மிகப் பிடித்ததால், 25 வருடங்களுக்கு முன் நிலத்தடி இடம் பெயர்ந்தேன். என் நிலத்தடி நண்பர்கள் வரலாற்றில் நான் படித்த அத்தனை பொய்களையும் எனக்கே காண்பித்துக் கொடுத்தார்கள்.

============================================================================================

கதவைத் தன் மாயக் கரத்தால் திறந்தாள் ரோபாலிகா. அவள் தான் அம்பாவின் நம்பிக்கைக்குரிய ஒரே... என்ன சொல்வேன், கருவி என்றா? என் மதிய உணவாக, என் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கணிக்கப்பட்டு என் பேர் அச்சடித்த சாகலேட் துண்டைக் கொடுத்தாள் ரோபாலிகா. நான் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டேன். தினப்படி உணவுக்கு, நிலத்தடியில் அங்கே கிடைக்கும் கிழங்கு வகைகளும் எலிகளுமாய் எங்கள் வாழ்வு கழிந்து கொண்டிருந்தது. சில சந்தோஷ சமயங்களுக்கு, உணவுகள் நிலம்மேல் விளைவிக்கப் பட்டுக் கடத்தப் பட்டன.

என் எண்ணங்களைக் கலைத்துச் சொன்னாள் ரோபாலிகா "அம்பா இன்னும் 15நிமிடத்தில் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு நிலத்தடி புரட்சியைப் பற்றிப் பேச உன்னை வரச் சொன்னாள். உன் தோழி அமி அங்கே இருப்பாள்".

அமிக்காகவாவது நான் போயே ஆக வேண்டும். அம்பாவால் புரட்சியைக் கட்டுப்படுத்த இயலாததால் தான் இந்த குழுக் கூட்டமே. நன்றாய்ப் புரிந்தது. அவசரமாய் சாகலேட்டை வாயில் போட்டு மென்றேன். "தின்னாச்சு, இப்ப போலாமா?"

என் கிண்டல் புரிந்தாலும் ரோபாலிகா கண்டு கொள்ளாமல் (அவளுக்கு என்ன!) என் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.

"நீ யாரையாவது காதலிச்சிருக்கியா ரோ?" என்றேன்.

தொடரும்....

3 comments:

Unknown said...

மகளிர் தின ஸ்பெஷல் பகுதி 2. தினமுமே மகளிர் தினம் தானே?!

chummasuman said...

யாமினிக்கு என்ன வயது, 100-120?

ரோபோலிகா என்ன ரோபோவா?

//////"நீ யாரையாவது காதலிச்சிருக்கியா ரோ?" என்றேன்.///////
ரோபோ காதல் சுவாரசியமாக இருக்குமா? ஏமாற்றாதீர்கள்!

//////'நீ இருப்பதால் மனிதம் வளரும், ஆனால் நீ இருப்பதால் மட்டுமே எனக்கு ஆசை வருகிறது' என்று உள்ளே பூட்டி வைக்க ஆணில்லை. 'எனக்காய் நீ தியாகம் செய்யும் போது உன்னை இன்னும் ஆள ஆசைப்படுகிறேன்' //////
பெண்ணடிமையும், பெண்விடுதலையும் இங்குதான் தொடங்குகின்றன.

//////'இயல்பாகவே ஆண்மை குறைந்து வந்து கொண்டிருந்த காலத்தில், மிச்சமிருந்த ஆண்களைக் கொன்று தீர்த்தார்கள்' //////
ஆஆஆஆ??????!!!!!

Unknown said...

யாமினிக்கு இன்னும் அவ்வளவு வயதாகலை. அது அடுத்த பகுதில வரும்.

ரோபாலிகா - துவாரபாலிகா;-) ரோபோ தான்.

ரோபோ - வெறும் மெசினுக்குக் காதல் வரும் னு தோணல. ஆனா காதல் இல்லாம கதையா!?

//ஆஆஆஆ??????!!!!!// பாயிண்டுக்கு வந்துட்டீங்க போலருக்கு;-)

மிச்ச கதை இந்திய நேரம் புதன் காலை:-( ..

கதை நடை எப்படி இருக்குன்னு யாராவது சொன்னா தேவலை (சொ.செ.சூ). இது உண்மையில் என் வாழ்வில் எழுதும் முதல் தொடர், இரண்டாவது கதை. பதிவர்கள் ஓரளவுக்கு;-) புத்திசாலிகள் ஆனதால சொன்னதைச் சொல்லாமல், குறுக்கிச் சொல்கிறேன்.