COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, March 20, 2009

காதல் என்பது...

கல்லூரி விடுதியில், தோழிகள் எல்லாரும் "ஏய், வரியா இல்லியா? லேட் பண்ணாத" என்று மிரட்டிட்டிருந்தாங்க. டேஸ்காலர் ஆக நான் தினம் கல்லூரி போனாலும், அம்மாவிடம் இது ஃபைனல் இயர், நேர்முகத் தேர்வு இருப்பதால் நான் மஹாவுடைய அறையில் ரெண்டு நாள் தங்கப் போகிறேன்னு சொல்லியிருந்தேன். இன்றைக்கு வீட்டுக்கு வருவேன்னும் சொல்லியிருந்தேன். தோழிங்க எல்லாரும் இன்றைக்கு மலைக்கோட்டை போகலாம்னு திடீர் ப்ளான். தஞ்சையில் பொறண்டு வளர்ந்தவள், எனக்குத் தெரியாத மலைக்கோட்டையா? ஆனால், இந்த பொண்ணுங்க(& பசங்க)ளோட கொஞ்ச நாள் தானே, கடைசி வருடம், எல்லாரும் ஆளுக்கு ஒரு மூலைக்குப் போகப் போகிறோம்!

உஷாராணி, "ட்ரஸ் இல்லியேன்னு கவலைப்படாதே! உனக்குப் பிடிச்ச என்னோட ஸ்கர்ட் தரேன், போட்டுக்கோ! மஹாவோட ஷர்ட் டாப் மாட்ச் ஆகும்... வாடியம்மா!" இது எல்லாரும் சென்னைப் பெண்கள். இப்போதைக்கு மலைக்கோட்டைக்கு இவர்கள் எல்லாரும் திரும்பி வரப் போவதில்லை என்று அறிந்து அங்கே "தேவ" தரிசனம் பார்க்க வரும் பசங்களை ஒரு வழியாக்கிவிட்டுத் திரும்புவார்கள் - பாவம், அந்தப் பையன்கள் இரண்டு வாரத்துக்கு சாப்பிட, தூங்க‌ப் போவதில்லை. ஒருமுறை பிரஹதீஸ்வரர் கோவிலில் அப்படித்தான் இவர்கள் அடித்த கூத்து... நான் அதுக்கப்புறம் ஒரு வருஷம் அந்தப் பக்கமே போகவில்லை.

மஹா, "ஹே ட்ரீமர்! இது ஃபைனல் பார்ட்டி! வி ஆர் செலிப்ரேடிங் அவர் ஜாப்ஸ் டூ! கௌதமும் வரான். தெரியும்ல?" என்றாள். கௌதம் என் மனதுக்கினியவன். என்றாவது ஒரு நாள் என் கண்களால் என் கனவுகளை அவனிடம் சொல்லிவிட வேண்டும்.. எண்ணங்களை நானே கலைத்து, "நாந்தான் வரேன்னு சொல்றேனில்ல, எங்கம்மாவுக்கு ஃபோன் சொல்லிட்டு வரேன்" என்றேன். மஹா, "சொன்னேன்ல, அவ வருவான்னு. தம் தம் த தம் த கௌதம்!" என்று பாடினாள். கனவுகளும் வெட்கமுமாய் அங்கிருந்து கலைந்து போனேன்.

அம்மா தம்புமாமா வீட்டில் சமையல் செய்பவர்; தம்புமாமாக்கு ஃபோன் செய்து அம்மாவைக் கூப்பிடச் சொன்னால், மாமா ஆயிரம் சாக்கு சொல்வார்; "படிப்பு எல்லாம் ஒம் பொண்ணு தானே பாத்துக்கறது, புருஷனையும் தேடிடுவாள், பாரு" அதில் தேடிடுவாள் சப்தம் வேறு மாதிரி சொல்வார். அம்மாவிடம் சொன்னால், "ஏண்டி, உன்னையும் ராஜுவையும் படிக்க வச்சதே இந்த சம்பளம் தானே! நீயும் ராஜுவும் வேலைக்குப் போக ஆரமிச்சா, நான் வேலைய விட்டு நின்னுக்கறேன்" என்று விடுவாள். அப்பா வைதிகம் செய்தவர், நான் பிறந்த இரு வருடங்களில் போய் விட்டார். அவர் ஃபோட்டோ தவிர வேறு நினைவுகள் இல்லை.

தம்பு மாமா வீட்டுக்கு ஃபோன் செய்தேன். முக்கியமாய் அம்மாவிடம் சொல்ல வேண்டியது - எனக்கு டிசிஎஸ்ல வேலை கிடைத்து விட்டது என்பது. ஃபோன் செய்தால், தம்புமாமா நான் யாரோடாவது ஊர் சுற்றுகிறேனா, வேலை தேடுகிறேனா, எனக்கு வேலை கிடைத்தால் அம்மா சமையல் வேலைவிட்டு நின்று விடுவாளா என்றெல்லாம் கேட்டு விட்டு, "உங்கண்ணா ராஜு பாங்க் பரிட்சை எழுதினானாமே, அதுல வேலை கிடைச்சுடுத்து, அதான் கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு போனா.. நீ ஃபோன் பண்ணினா சொல்லச் சொன்னா". மாமாவிடம் எனக்கும் வேலை கிடைத்து விட்டது என்று சொல்லி அவர் நெஞ்செரிச்சலைக் கிளப்ப‌ வேண்டாமேன்னு (அப்புறம் அம்மா தானே பத்தியச் சமையல் வேறு செய்யணும்) சொல்லவில்லை. "சரி மாமா, நானும் கோயிலுக்குத் தான் கிளம்பிட்டிருக்கேன். அங்க பாத்துக்கறேன்" என்று எதையோ சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்.

வல்லத்திலிருந்து திருச்சி பஸ்ஸை கண்டக்டர் (எல்லா டிரைவர், கண்டக்டர் பேரும் எங்களுக்குத் தான் தெரியுமே!) பேரைச் சொல்லி நிறுத்தி ஏறிக் கொண்டோம். என்னிடமிருந்து ஓரடி தள்ளி என்னப் பார்த்தவாறே கௌதம். கௌதம் ரகசியமாக "யூ லுக் க்யூட்" என்றான். நான் சங்கடமாக மஹாவை நோட்டமிட்டேன். அவள் மெட்ராஸ் பெண்ணாய் லாகவமாய் ஒரு கண்ணடித்துத் திரும்பிக் கொண்டாள். "மஹா சொன்னாள்" என்று சொன்னான். ஐயோ, இந்த ஓட்டை பஸ்ஸில் தானா இந்த காதல் காவியம் தொடங்க வேண்டும்!! பஸ் லைசன்ஸ் ப்ளேட் நோட் கூடச் செய்யவில்லியேன்னு (கெக்கே பிக்கேவாகத்) தோன்றியது. கௌதம் சிற்சில தமிழ்ப்பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியிருந்தான். ஒரு கவிதைப் போட்டியில் அவன் மூன்றாம் பரிசும், நான் முதல் பரிசும் வாங்க என் ஒருதலைக் காதல் தொடங்கியது (மூணாவது பரிசு வாங்கறவங்களை யாராவது காதலிச்சுத் தானே ஆகணும்? அதே மாதிரி, முதல் பரிசு வாங்கற பொண்ணுக்குக் காதல் தப்பா?). கௌதம் மத்தியதரக் குடும்பம், அவன் அப்பா அரசாங்க குமாஸ்தா என்று மஹா துப்பறிந்து வந்து சொல்லியிருந்தாள்.

"பிள்ளையாரே, நான் சமத்துப் பொண்ணு. இந்த பசங்க தான் கலாட்டா பண்ண வராங்க. அவங்களைக் கண்டுக்காம, என் காதலை நிறைவேத்திடு. அட்வான்ஸா மலைக்கோட்டை ஏறிடுறேன்" என்று மனமார பஸ்ஸில் தொங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவரை பிள்ளையாராக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டேன். "நீ திருக்குறள்லாம் படிப்பியாமே" என்று எங்கள் கடலை அஃபிஷியலாகத் தொடங்கியது. எப்போதுமில்லாமல் திருச்சி மிக விரைவில் வந்தாற்போலிருந்தது. மெயின்கார்டில் இறங்கி, நண்பர்கள் ஆளாளுக்கு "ஐஸ்க்ரீம்", "இல்ல, கோயில் போயிட்டு அப்புறம்", "நான் இன்னிக்குக் கோயில் வரமுடியாது", "ஏண்டி அப்பவே சொல்லலை?" எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது.... ரோட்டுக்கு அந்தப் பக்கம் விந்தி விந்தி ராஜுவும், கூடவே அம்மாவும்.

அம்மா பெரியதாய் விபூதி இட்டிருந்தாள். நான் கௌதம் பக்கத்திலிருந்து மெதுவாகக் கழண்டு, ரோட்டில் ஓடி "ராஜு கங்க்ராசுலேஷன்ஸ்டா" என்று கத்திவிட்டேன். படிப்பு, போட்டி, பரிசுன்னு எல்லாத்திலியும் நான் பேர் வாங்க, ராஜு எதிலும் சோபிக்காமல் இருந்தான்; பி.காம் மாலை நேரக் கல்லூரியில் படித்தான். அதைத் தவிர தையல் கடை, கோவில் என்று பகுதிநேர ஊழியமும். ராஜுவுக்குச் சிறுவயதில் போலியோவால் ஒரு கால் சூம்பியிருந்தது வேறு. இந்த வேலை கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி தானே. அம்மா, விபூதித் தீற்றலைவிடப் பெரியதாய்ச் சிரித்து, என்னிடம் "பாத்துடி" என்றாள்.

தம்புமாமாவோடு ஃபோனில் பேசியதையும், பேசாததையும் என்று ராஜுவின் வேலை, என் வேலை பற்றி நான் சொல்லச் சொல்ல அம்மாவுக்கு சிரிப்பு கொள்ளவில்லை - "நாங்க மலைக்கோட்டை அடிப்பிள்ளையாரைப் பாத்துட்டு, லட்சுமி சித்தியையும் பாக்கப் போறோம்னு தானேடி சொல்லிட்டு வந்தேன், ஆனாலும் தம்புமாமாவுக்குக் குசும்பு" - என்றாள். அம்மா ஒரு நிமிடம் மலைக்கோட்டையை விட நிமிர்ந்தாற் போலிருந்தது. திரும்பி ராஜுவின் முகத்தைப் பார்த்ததும், "என்னை தலையெடுக்க வச்சுட்டான்டி எம்பிள்ளை. நாளைக்கு நீயாவது யாரயாணும் கல்யாணம் பண்ணிட்டு எங்களை விட்டுப் போயிடுவே" என்று சிரித்தாள். நானும் "இன்னிக்கு ரொம்ப நல்ல நாள்மா", என்றேன். அதற்குள் கௌதம் ரோடை க்ராஸ் செய்து வந்தான். "நமஸ்காரம் மாமி" என்று அம்மாவிடமும், ராஜுவிடம் "ஹலோ" என்று பேசினான்.

மற்ற தோழிகளும் தோழர்களும் அங்கிருந்து கையாட்ட, அம்மாவும் இங்கிருந்தே கையாட்டினாள். இதுவரை நான் ஆண் தோழர்களை வீட்டுக்கு அழைத்து வந்ததில்லை, 10அடிக்கு 10அடி குடிலில் எப்படி அழைத்து வருவது? கௌதமிடம் அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி, "நீங்கள்லாம் கோயில் போயிட்டு வாங்கோ, நாங்க கிளம்பறோம்" என்று ஊருக்குக் கிளம்பினாள். மலைக்கோட்டைக் கோயில் போகும் நண்பர்கள் முன்னே நடக்க, நானும் கௌதமும் நண்பர்களின் பின்னால். கௌதம் என்னிடம் "உங்க அம்மா ரொம்ப சிம்பிள்" என்றான். ஓரம் நைந்த புடைவை சிம்பிள் அல்ல, இருப்பது அவ்வளவே. ராஜுவின் ஷர்ட், பான்ட் தம்பு மாமாவுடையது. நான் நிதானித்து, என் குடும்பக் கதையைச் சொன்னேன். "கஷ்டம் தான்" என்ற கௌதம் மற்ற நண்பர்களோடு சேர்ந்து கொண்டான். மலைக்கோட்டை அடி வரை கூட எங்கள் காதல் பயணிக்கவில்லை.

பி.கு.: பின்னொரு நாள் "வானில் பயணிக்க நினைத்தாலும் என் பாதங்கள் மண்ணில்"னு என்னோட ஆட்டோகிராஃப் நோட்டில் கௌதம் எழுதினான்:-) கௌதமை விட உத்தமனாய், ஒரு ராஜாமணி எனக்குக் கிடைக்க வைச்ச மலைக்கோட்டை பிள்ளையாருக்கு நன்றி:‍-)

சங்கமம் கல்லூரி போட்டியில் இதுவும் சங்கமம்.

25 comments:

Unknown said...

காதல் என்பது

...காவியமானால் ஒரு கதாநாயகன் வேண்டும்!
...கண்ணில் உள்ளது!
...கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ!

சந்தனமுல்லை said...

:-)) சங்கமத்தை ”கலக்க” வாழ்த்துகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோ அய்யோ எல்லாரும் இப்படி புனைவு எழுதி படுத்தறாங்களே..
போங்க எனக்கு அழுகாச்சியா வருது.. :(

Unknown said...

சந்தனமுல்லை, வாழ்த்துக்கு நன்றி.

முத்து-‍கயல், என்னங்க, இப்படி ஒரு காதல் காவியம் கரைந்து போனதுக்குக் கண்ணீர் வடிக்கிறீங்களே. சரி, அழுவாதீங்க, இன்னும் ரெண்டு கதை கைவசம் இருக்கு, நல்ல முடிவுல முடியறாப்போல் எழுதிடறேன்:-)))

கலந்துட்டிருக்கிற கூட்டமும் பெரிய ஆட்கள் என்பதால், இன்னும் வாழ்த்துகள் தேவை மக்கள்ஸ்!

இலவசக்கொத்தனார் said...

ஜூப்பரு!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நான் நிதானித்து, என் குடும்பக் கதையைச் சொன்னேன். "கஷ்டம் தான்" என்ற கௌதம் மற்ற நண்பர்களோடு சேர்ந்து கொண்டான். //



இப்படித்தான் நிறையப் பேர் கணக்கு வழக்கெல்லாம் பார்க்கறாங்க.

ஆனால் வாழ்க்கை தணுஷ் படம் மாதிரி..

திருமனத்திற்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறது. நல்ல பின்புலத்தோடு வருபவர்கள் பலரும் மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள்.

எந்த வித துணையும் இல்லாமல் வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். அவசியமானது நல்ல வாழ்க்கைத்துணை மட்டுமே.. அதில் மட்டும் தேர்வு நன்றாக அமைந்துவிட்டால் எல்லாமே வெற்றிதான்.

மற்ற படி பணக்கார பெண்ணை/பையனை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடிப்பது எல்லாம் சுத்த வேஸ்ட். ஊர் சுற்ற வேண்டுமானால் உதவும்.

கதையில் அற்புதமான போதனைகளை போதனைகள் என்று தெரியாத அளவில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

பாலராஜன்கீதா said...

truth is stranger than fiction என்பது நினைவிற்கு வந்தது
:-)
வெற்றி பெற(பெற்றதற்கு) வாழ்த்துகள்.

Unknown said...

நான் போட்ட க்மெண்ட் என்னாச்சு?
நான் சரியா...close பண்ணலியா?

Unknown said...

இ.கொ. வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றி.

Unknown said...

SUREஷ், விமர்சனத்துக்கு மிக்க நன்றி.

//கதையில் அற்புதமான போதனைகளை போதனைகள் என்று தெரியாத அளவில்//
போதனைகள் அற்புதமான்னு தெரியாது. கல்லூரி வாழ்க்கையில் இப்படி மத்தியதர‌/பணக்காரப் பொண்ணுங்க / பசங்களோட இருக்கும் போது, "நான் கடன் வாங்கிய உடை அணிந்தது போலவே" உணர்வேன். அதோடு, தாழ்வு மனப்பான்மை இருப்பவர்கள் காதலைச் சொல்ல ரொம்ப நாள் காத்திருப்பார்கள். இன்னும் ராஜு பாத்திரம் மாதிரி கடமைகளைக் கண்டு கலங்கும் ஆட்கள் வேறு (என் அண்ணா கட்டாயம் அப்படி இல்லை). அதை எல்லாவற்றையும் வெளிப்படையா கொண்டு வந்திருக்கேனான்னு தெரியலை.

பொதுவா, 6 அ 7 முறை திருப்பிப் பார்க்கும் தேவை எனக்கு:-( இந்த முறை, அந்த அளவு முடியலை - நேரக்குறைவுன்னால (போட்டி விதிமுறைகள் இனி மாற்றுவதை அனுமதிக்குமான்னு தெரியல).

மீண்டும் நன்றி!

Unknown said...

பாலராஜன்(கீதா), உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Do underdogs win? :-)

Unknown said...

கே. ரவிஷங்கர், என்னாச்சு தெரியலையே?

வல்லிசிம்ஹன் said...

அற்புதமா எழுதிட்டீங்க கெ.பிக்குணி.
கடைசி வரிகள் டாப்ஸ்.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Unknown said...

என்னாச்சு? நேக்குத் தெரியலயே?ஒரு வேள காக்கத் தூக்கிண்டுப் போயிருக்குமோ? (??????????)

Unknown said...

வல்லியம்மா, வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. இந்த கதையில் பாதி உண்மை இல்லை. ஆனால், கடைசி வாக்கியம் நிசம்! ஊர்ப் பக்கம் வந்தால், கட்டாயம் ராஜாமணியுடன் உங்களிடம் ஆசிகள் வாங்க வருவோம்.

ரவி, கதை பற்றிய உங்கள் கருத்துக்களைச் சொல்லலாமே. நன்றி.

லக்ஷ்மி said...

கலக்கலா இருக்குங்க கதை. போட்டில கலந்துக்கறதுக்கு வாழ்த்துகள்.

Sridhar Narayanan said...

//கௌதமை விட உத்தமனாய், ஒரு ராஜாமணி எனக்குக் கிடைக்க வைச்ச மலைக்கோட்டை பிள்ளையாருக்கு நன்றி:‍-)//

இந்த வரி உண்மைன்னா கௌதமும் உண்மை, கதையும் உண்மைதானே. அப்புறம் எப்படி ‘பாதிதான் உண்மை’ன்னு சொல்றீங்க?

அதெல்லாம் நாங்க பாயிண்டை பிடிச்சிருவோமில்ல கரெக்டா :-))

Was just kidding.

கதையில் ஒரு நேர்த்தி இருக்கிறது.

//அம்மா ஒரு நிமிடம் மலைக்கோட்டையை விட நிமிர்ந்தாற் போலிருந்தது. //

கலக்கல். வாழ்த்துகள்!

Unknown said...

ஸ்ரீதர், உங்கள் வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் நன்றி.

அந்த வரியில பாதி உண்மையா இருக்கலாமே?

கெக்கெ பிக்கேன்னு பேரு தான். நான் ஆளு கெட்டி. Well, almost:-)

Sridhar Narayanan said...

//அந்த வரியில பாதி உண்மையா இருக்கலாமே?//

ராஜாமணி: ‘எந்த பாதி உண்மை?’

கெபி: ?!?!

ராஜா: ஆளுதான் கெட்டின்னு பேரு. சொல்றதெல்லாம் கெக்கேபிக்கேதான்.

சரி... சரி... இதுக்கு மேல ராகிங் பண்ணல. விட்டுடறேன் போங்க. :))

Unknown said...

நல்லா இருக்கு.fine tune பண்ணினால் சரியாகி விடும்.காதலைப் பற்றி முதலிலேயே கோடிட்டு காட்டியிருக்கலாம்.

கதையின் knot விழும் இடம்
கெளதம்-அந்த பெண் காதல்.அவிழும் இடம் “"கஷ்டம் தான்" என்ற கௌதம் மற்ற நண்பர்களோடு சேர்ந்து
கொண்டான்”

இரண்டும் கொஞ்சம் வலுவாக இருந்திருக்கலாம்.ஏன்?

//கௌதம் மத்தியதரக் குடும்பம், அவன் அப்பா அரசாங்க குமாஸ்தா என்று மஹா துப்பறிந்து வந்து சொல்லியிருந்தாள்//

இவன் எப்படி அவள ரிஜக்ட பண்ண
முடியும்?


//இந்த ஓட்டை பஸ்ஸில் தானா இந்த காதல் காவியம் தொடங்க வேண்டும்//

//திருவள்ளுவரை பிள்ளையாராக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டேன்//

உங்களுக்குஇயல்பாக ந.சுவை வருகிறது.


குறைகள்:-
பாரா பிரித்து எழுத வேண்டும்.
conversation and non conversation எல்லாமே ஒன்றாக இருக்கிற்து.
கதையின் prevaling mood, swing
ஆகிறது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நீங்கள் படித்து ”கண்டிப்பாக”கருத்து சொல்ல வேண்டியது:-

உங்களுக்கு ஒரு அனுபவம் கிடைக்கும்.Please try and comment.

http://raviaditya.blogspot.com/search/label/சிறுகதை

1.சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி - சிறுகதை

2.சாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை

3.வைஷ்ணவியின் அம்மா ஒரு ஹோம் மேக்கர் - சிறுகதை


http://raviaditya.blogspot.com/search/label/பதிவர்

சிறு கதை எழுதுவது எப்படி?பதிவர்களே படியுங்கள்!

மீண்டும் வாழ்த்துகிறேன்.

நன்றி!

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்...

Unknown said...

கே. ரவிஷங்கர், விரிவான கருத்துக்கு நன்றி. ஏன் அதுக்கு முந்தைய பின்னூட்டத்தை அப்படிப் போட்டீங்கன்னு புரியவில்லை.

கௌதம் மத்தியதரம்; அவனைக் காதலிக்கும் பெண் ஏழை, கடமைகளைக் கொண்டவள். இந்த காதல் உணர்வு வெற்றி பெறப் போவதில்லைன்றதால, முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பத்திகள் எனக்கான குறிப்பு கொண்டவை. இனி பிரிக்க முயற்சிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

Unknown said...

தமிழன்‍-கறுப்பி, நன்றி!

Unknown said...

ஸ்ரீதர், ராஜாமணிக்குத் தெரியாத உண்மையா? பேசாப் பொருளை பேசாமல் இருக்கும் துணிவு பெற்றவர்:-)

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள்.