"என்னா இது? நல்ல சீலை உடுத்திட்டு வரியா?"
எரிந்து விழுந்த முருகவேளை ரோகிணி உற்றுப் பார்த்தாள்.
"என்னாடி மொறக்கிறே?" விருட்டென்று முருகு தன் பழைய சைக்கிளை உதைத்து எழுப்பினான். சனியன். பழையதை விற்றுத் தொலைக்கலாம் என்றால் முடிகிறதா? என்றைக்காவது தனது கண்டுபிடிப்புகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ன? அன்றைக்கு நல்ல மோட்டார் சைக்கிள் என்ன, காரே வாங்கலாம். பிள்ளைகள் அஜீத்தையும், சிம்ரனையும் சைக்கிள் மேலே முன்னும் பின்னுமாக ஏற்றி வைத்தான். வேண்டுமென்றே ரோகிணி இல்லாமல் கிளம்பியவனை, சிம்ரன், "அம்மா வரலே....அம்மா வேணும்..." என்று கத்தி நிறுத்தினாள்.
"கொரங்கு, சீக்கிரம் கிளம்பித் தொலையுதா பாரு? ஏன்டி, பவுடர் போட்டு தீத்தியாச்சா? ஒக்காந்து தொலை. ஒங்கப்பன் என்னா கிலோ கணக்கிலியா நகை போட்டு அனுப்பிச்சிருக்கான்? இம்புட்டு நேரம் அலங்காரம் பண்ணியும்... மூதேவி கணக்கில வருது பாரு!!" ரோகிணி பேசாமல் பின்னால் உட்கார்ந்து சிம்ரனை முருகுவுக்கும் தனக்கும் இடையில் அமர்த்திக் கொண்டாள். எதிர் வீட்டு இந்திராணி சன்னல் வழியாகப் பார்ப்பது தெரிந்தது. நாளை தண்ணீர்க்குழாய் அடியில் பேச்சு இதுவாய்த் தான் இருக்கப் போகிறது.
திருமண மண்டபத்தில் வண்டியை நிறுத்தி பூட்டு போட்டு, இழுத்து பார்த்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு வந்தான். "கிஃப்டு எடுத்துட்டு வந்தியா?"
ரோகிணிக்கு திகில் பூண்டு ரேஷன் கடையில் வாங்கினாற் போலிருந்தது. வாயைத் திறந்து பேசவே பயமாக இருந்தது. கையில் காசு இல்லை. முருகவேள் மோட்டார் போடும் டாங்குகளில் நீர்நிலை மட்டம் அறிவிக்கும் கருவி ஒன்றை முந்தைய நாள் செய்து முடித்திருந்தான். இரண்டு மாடல்களை ஒரு பையில் போட்டுக் கொண்டு "எங்கியாவது புரட்ட முடியுதானு பாக்குறேன், கிடைச்சா கிஃப்டும் வாங்கிட்டு வரேன்" என்று காலையில் கிளம்பியவன் மாலையில் தான் வந்தான். வந்தவன் முகத்தில் மதியம் சாப்பிடாத களைப்பு தெரிந்தது. இருந்தாலும், காபியைக் கேட்டு வாங்கிக் குடித்தவன், உடனடியாக திருமண வரவேற்புக்குக் கிளம்பி விட்டான். இவ்வளவு தூரம் வந்து விட்டு அப்புறம் கிஃப்டு எங்கே என்றால் என்ன சொல்வது? கையில் சுத்தமாக காசு இல்லை என்று அவனுக்குத் தெரியாதா என்ன? சொன்னால் இன்னும் ஏதாவது உறவினர்கள் முன்னால் கத்தப் போகிறான் என்று பயமாக இருந்தது.
முருகு பல்லைக் கடித்துக் கொண்டு, "மூதி!" என்றான் மெள்ள. "சாப்பாடு வேணுமுன்னா எல்லாம் கிளம்பிடுவீங்க" என்றான். அதில் என்ன தவறு என்று நினைத்து வாயைச் சுழித்துக் கொண்டாள் ரோகிணி. சரியாய்ச் சாப்பிட்டு எத்தனை மாதங்கள் ஆகி விட்டன? நமக்கே இப்படி இருக்கும் போது குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்? அனிச்சையாய், சிம்ரனை இடுப்பில் ஏற்றி முதுகை நிமிர்த்தி நின்று கொண்டாள்.
"பிச்சைக்கார நாயி". இதுவும் பல்லைக் கடித்து மெள்ளச் சொன்னான்.
இரண்டு குழந்தைகளைச் சுமந்தும், இழுத்துக் கொண்டும் மண்டபத்தை நோக்கி மெள்ள நகர்ந்தாள் ரோகிணி. முன்னே நடந்து கொண்டிருந்த முருகவேள், நினைவு வந்தாற் போல், "இந்தா! பார்ட்டு வாங்கன்னு கடன் வாங்கிட்டு வந்தேன். மொய்யா கொடுக்க வேண்டியது தான். இருநூறு ரூவாக்கு என்னாத்த வாங்குறது?" என்று பான்டு பாக்கட்டில் கைவிட்டு மடித்து சுருட்டி வைத்திருந்த இரண்டு நூறு தாள்களை நீட்டினான்.
"நாளைக்கு திரும்ப கைநீட்ட வேண்டியது தான்".
ரோகிணி பேசாமல் அதை வாங்கி இன்னும் சுருட்டி, முந்தானைக்குள் முடிச்சிட்டு வைத்துக் கொண்டாள்.
உள்ளே பட்டுச்சீலைகளும் நகையும் பாங்கும் பெண் மாப்பிள்ளை குடும்பங்களின் செல்வத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன. ரோகிணி சுவரோரமாகக் குழந்தைகளை இழுத்துக் கொண்டு போனாள். அதற்குள் ஒரு அத்தை, பெரியம்மா எல்லாரும் பார்த்து, "வாடி, இப்ப தான் வழி தெரிஞ்சுதா? சீக்கிரம் வா, சாப்பிடு" என்று கூடவே நடந்து வந்தனர். ரோகிணி முகத்தைப் பார்த்த பெரியம்மா, "ஏண்டி, அவன் ஏதாச்சும் சொல்லிட்டானா" என்றாள்.
அத்தை நொடித்தாள். "முருகு சரியான முசுடு. ஆகாசக் கோட்டை கட்டுவான் நல்லா...." என்று தொடங்கினாள். பெரியம்மா தன் நாத்தியை கண் சாடை காட்டி அடக்கினாள்.
சாப்பிட்டு விட்டு அத்தையுடன் பேசிக் கொண்டே வெளியே வந்தவளை, முருகவேளின் குரல் தடுத்து நிறுத்தியது.
"சாப்டாச்சா அதுக்குள்ள?" கடுப்பாக, ஆனால் மெதுவாகக் கேட்டான். ரோகிணி பேசாமல் குழந்தைகள் கைகளை இறுக்கிப் பிடித்து நின்றாள். "போய் பொண்ணு மாப்பிள்ளையைப் பாத்திட்டு வந்தியா?" என்றான். ரோகிணி மெல்ல இல்லையென்று தலையாட்டினாள். "பசங்களுக்குப் பசிக்குமேன்னு நாந்தானடா சாப்பிடச் சொன்னேன்..." என்றாள் அத்தை.
"அத்தே, கல்யாணத்துக்கு வந்திட்டு பொண்ணு மாப்பிள்ளையை கூடப் பாக்கலையின்னா எப்படி" என்று வேகமாக முருகு மண மேடை அருகே போனான். பெண் ஒப்பனை எல்லாம் பிரமாதமாக இருந்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் எஞ்சினியர்களாம். முருகுவுக்கு மணப்பெண் முறைப் பெண் என்றாலும், அந்த கம்ப்யூட்டர் பெண் வேலை விஷயமாக உலகம் சுற்றக் கிளம்பிய போதே, முருகு தன் அம்மா சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து செட்டில் ஆகி விட்டான்.
"ரோகிணி, மொய்ப்பணம் எங்கே?" ரோகிணி சாப்பிட்டவுடன் மண்டபத்தின் புறக்கடையில் கைகழுவி விட்டு முகம் துடைத்த போது, முந்தானையிலிருந்து பணத்தை எடுத்து கையில் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது.. இப்போது எங்கே?
"எங்கடி?" முருகு கத்திக் கேட்ட போது, ஓரிருவர் இரைச்சலிலும் திரும்பிப் பார்த்தனர். "கீழ வுழுந்திருச்சி" - கணவனிடம் காலையிலிருந்து முதல் முறையாக அவள் பேசியது அது தான். பளார் என்று ஒரு அவளை ஓர் அறை விட்டு விட்டு முருகு கிளம்பினான்.
அத்தை வேகமாக அவளிடம் வந்தாள். கையைப் பிடித்து "பின்னால எங்கடி வுழுந்துச்சி? சட்னு போய் தேடுவோம், வா" என்று கைகழுவும் பக்கம் அழைத்துச் சென்றவள், "மொறைப் பொண்ணைக் கட்டிக்க முடியலன்னு கோவத்தை ஒங்கிட்ட காமிக்கிறான். நீ கண்டுக்காதே" என்றாள்.
அறை வாங்கிய துயரத்தை விட, பெருகி வந்த கண்ணீர் சுட்டது.
4 comments:
கதை நல்லா இருக்குங்க.
ஆனா ரோகிணி ரேவதின்னு ஒரே கதாபாத்திரம் ரெண்டு பேருல குழப்புது அதைப்பாருங்க..
முத்துலெட்சுமி, தவறைச் சுட்டிக் காட்டியதுக்கு நன்றி. திருத்திட்டேன். இன்னும் மற்றும் எடிட்டிங்கும் செய்திருக்கிறேன்.
கதை நல்லா இருக்குன்ற பின் ஊக்கத்துக்கும் நன்றி!
பெயரைப் பார்த்து நம்மளைப் போலவே இன்னொருத்தரான்னு கொஞ்சம் பயந்துதான் வந்தேண்ணே! சிறுகதை நல்லாவேயிருக்கு! என்னை மாதிரி மொக்கை எழுதறவங்க பதிவு போடறதுக்கு முன்னாடி திரும்பப் படிக்காட்டிப் பரவாயில்லை. ஆனா, புனைவுகள் எழுதும்போது ஒண்ணுக்கு ரெண்டு தடவை படிச்சிப்புட்டுப் போடுங்கண்ணே! சிறுகதை அமர்க்களம்!!
ரொம்ப நல்லாருக்குங்க கதை. அவங்கவங்களுக்கு அவங்கவங்க ஆசைகள்!!
Post a Comment