புத்தக விமர்சனம்: “The Palace Of Illusions” - சித்ரா பானர்ஜி திவாகருனி எழுதியது. இந்த புத்தகத்தை 2008இலேயே படித்து முடித்திருந்தாலும், நேரமின்மை காரணமாகவும், இதை அசை போட்டுப் பார்த்து அப்புறம் எழுதணும்னு தோன்றியதாலும் இப்பதான் விமர்சனம். எழுத்தாளர் சித்ரா இந்தியாவில் பிறந்த இன்றைய-அமெரிக்கவாசி. அவருடைய இணைய தளத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி மேலும் காண்க.
கதை ‘மஹாபாரதம்’ கதை தான். ஆனால், பாஞ்சாலியின் பார்வையில். இந்த புத்தகப்படி பார்த்தால், அந்த கதையே அவளுக்காக, அவளால், அவளைப் பற்றி என்பது போல! துருபத ராஜனின் சபதம் முடிக்கப் பிறந்தவள் அவள். அந்த சபத வலையில் வளர்பவளுக்கு, பிறந்த வீட்டு அரண்மனை அந்நியமாகவே படுகிறது. அர்ஜுனனை மணம் முடிக்கவே வளர்க்கப் படுகிறவள், மஹாபாரத கதையில் வெளிப்படையாய்க் காட்டப்படாத ஒரு திருப்பமாய் அவள் இன்னொரு குந்திமகனுடன் காதல்வயப்படுகிறாள்னு கதை போகுது. ஐவரையும் ஏன் மணக்கிறாள், அவள் மகாராணியாய் அனுபவிச்சு வாழ்ந்த ஒரே மாளிகை மாய மாளிகை, அதுக்கு என்ன ஆவுது, இறுதி வரை அவளுக்குன்னு ஒரு இடம் இல்லாத அலைக்கழிக்கப் படுவது, இந்த பகுதிகளெல்லாம் விறுவிறுன்னு போகுது. எழுத்தாளர், திரௌபதியை முடிந்த அளவு பெண்ணியப் பார்வையிலே சித்தரிக்கிறார்ங்கறதால படிக்க நல்லா இருந்தது.
உங்களுக்கு மஹாபாரதக் கதை நல்லா தெரிந்திருந்தாலோ, அல்லது தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலோ, கட்டாயம் இதைப் படிங்க. மஹாபாரதக் கதை எல்லாருக்கும் தெரியும் என்பதால், கதைபாத்திரங்களிலோ, குருக்ஷேத்திர போரில் வெற்றி வேற யாருக்கோ அப்படின்னோ மாத்திட முடியாது. ஆனால், திரௌபதிக்கு கிருஷ்ணர் உற்ற பால்ய நண்பராக இருக்கிறார். கதையோட அடிப்படை ஓடையோட போகும்போது, திடீர்னு ஒரு மந்திரக் கிழவி வந்து திரௌபதிக்கு வருங்காலத்தில அவள் படக்கூடிய துன்பங்களைத் தாங்குவதற்கான மந்திரத் தந்திரங்கள் சொல்லிக்குடுக்கறாங்க; வியாசர் அவங்களுக்கு உதவி செய்யப் பாக்குறார்.
செல்லப் பொண்ணான பாஞ்சாலியின் கோபம் பிரசித்தின்னுவாங்க. ஐவரை மணமுடித்ததால் கேலிக்குள்ளாகும் தன்னிலை ஒருநாளும் அவளுக்கு மறப்பதில்லை. இதில ஐவரை மணந்தாலும், ஒவ்வொரு வருடமும் ஒருவருக்கு மனைவியாய், கன்னியாக ஆகும் வரம் வேறு:-( தன் மேல உண்மையாய் காதல் கொள்ளும் பீமனை தன் உண்மை உணர்வுகளைக் காட்டாமல் எப்படி நடத்துகிறாள்னு நல்லாக் காட்டுகிறார் (பெண்) எழுத்தாளர்;-) மற்றவர் கைகளில் தன்னூழ் இருக்கேன்னு Angry Young Woman ஆகவே காலம் கழிக்கிறாள் பாஞ்சாலி. கதையில் ரொம்ப மாற்றம் முடியாதுன்னாலும், பெண்ணியம் தெறிக்கிறது.
முதலில் கதை எனக்கு சுவையாகப் படவில்லை; தொடக்கத்தில் ஓரிரண்டு இடங்களில் கதைத் தொடர்ச்சி சொதப்புது; மஹாபாரதக் கதைப் படியே குந்தி லேசுப்பட்டவங்க இல்ல! திரௌபதியின் கோபத்தில், அவள் அவசரக் குடுக்கைத்தனத்தில் மட்டும் விளைந்ததல்ல பாரதம். குந்தியினாலும்!!! குந்தி, சிறுபருவத்தில் தனக்குக் கர்ணன் பிறந்ததைச் சொல்லாமல் மறைக்கிறாங்க. அதோட, அவங்க கணவனுக்கு இரண்டாவது மனைவி மாத்ரி மேல தான் குந்தியைவிட விருப்பம் அதிகம்! குந்தி, தன் கணவனுக்குக் குழந்தை பிறக்காதுன்னதும் கூலா மூன்று குழந்தைகள் ‘வரமா வாங்கிக்கிறாங்க’. அர்ஜுனன் போட்டியில் திரௌபதியை வென்று வந்த போது, அதை அறியாமல் (?) குந்தி ‘நீங்க அஞ்சு பேரும் உங்க பரிசைப் பகிர்ந்துக்கணும்’னு சொன்னாலும், ‘அச்சோ, தெரியாம சொல்லிட்டேன், அடிச்சு கிள்ளி அதுமேல துப்பினா நான் சொன்னதை மாத்தின மாதிரி ஆயிடும்’ அப்படின்னு சொல்லியிருக்கலாம்; கதையில அப்பப்ப எண்ட்ரி கொடுக்கிற கிருஷ்ணர் இப்பவும் டகால்டி வேலை செய்திருக்கலாம். ஆனால், குந்தி ‘அஞ்சுபேரும் இணைஞ்சு இருக்கணும்; ஆளுக்கு ஒரு மனைவியை திருமணம் செய்தா வெவ்வேறு வழி போயிடுவாங்க, அதுக்குள்ள இப்படி பூட்டி வைக்கணுமி’ன்னு செய்த குறுக்குவேலை அது (என்பது என் தாழ்மையான கருத்து). அவங்களுக்கு இன்னும் இந்த கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். எது சொன்னாலும், கதையின் கடைசி இரண்டு பக்கங்கள் எனக்குப் பிடிக்கவேயில்லை - எழுத்தாளரின் கற்பனை முடிவு மட்டும் கதை ஓட்டத்துக்கும் பெண்ணியத்துக்கும் ஒவ்வாத கொடுமை.
மத்தபடி வித்தியாசமா, விறுவிறுன்னு இருந்தது. நீங்களும் கட்டாயம் படிங்க. உங்களுக்குப் பிடிச்சது/பிடிக்காதது எதுன்னு சொல்லுங்க!
4 comments:
ஒரே பித்தளை பளபளப்பா இருக்கே மீ தி எஸ்கேப்பூஊஊ!!
இ.கொ., அப்படிச் சொன்னா விட்டுடுவோமா? ஈயத்தைப் பாத்து பயந்ததா பித்தளை?! உங்க தங்கமணியைப் படிக்கச் சொல்லுங்க:-)
எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.....தெரிஞ்ச கதா பாத்திரங்கள்தான்னாலும். சிகண்டிய விவரிச்சிருந்த விதம், உப கதைகளெல்லாம் இன்கார்பொரேட் பண்ணின சாமர்த்தியம் பிடிச்சிருந்தது.கிருஷ்ணர், த்ரொபதி நட்பு...மேலும் இவங்க்ளோட எழுத்துல இருக்கற மிஸ்டிகல் க்வாலிடி பிடிக்கும்.மிஸ்ட்ரெஸ் ஆஃப் ச்பைசெஸ் படிச்சிருக்கீங்களா??
வாங்க ராதா, ரொம்ப நாளா வலைப்பக்கம் உங்களைக் காணலை... நீங்களும் இந்த புத்தகம் படிச்சிருக்கீங்களா? ஆமா, சிகண்டிய விவரித்திருந்ததைப் பற்றி சொல்லாமப் போயிட்டேனே:-( நினைவு/ஆவணப்! படுத்தினதுக்கு நன்றி.
இவங்க எழுதிய புத்தகங்களில் இது தான் நான் படித்த முதல் புத்தகம். நீங்க சொல்றதுனால, மிஸ்ட்ரெஸ்.. தேடிப் படிக்கப் போகிறேன். சொன்னதுக்கு நன்றி!!
Post a Comment