COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, March 14, 2009

புத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மேற்கும்)


உண்மையில, நான் பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்). பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல!) போன்ற புதிய சமுதாயங்களின் கேள்விகளுக்கான விடைகளை புனிதக் குரான், ஹதீத் சொற்றொடர்களிலிருந்து புரிதல்களுடன் ஆரம்பிக்கிறது. மேற்படி சொற்றொடர்களை வேறு விதங்களில் புரிதல் இஸ்லாமிய வழக்கத்துக்கு எதிரானதா இல்லியா என்பது அவரவர் சொந்த விஷயம் என்று அதை டீல்ல விட்டுடறேன் (இந்த எண்ணம் தோணும் வரை என்னால் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க முடியவில்லை). புட்டோ இறப்பதற்கு முன் எழுதி, இறந்த பின் வெளிவந்த புத்தகம் என்பதையும் கவனிக்க.

புட்டோவின் அரசியல் பின்புலம், எழுத்துத் திறமை எல்லாம் தெரிந்த விஷயம். இந்த புத்தகத்தின் ஆடியன்ஸ் (எழுதினவர் பார்வையில்) மேலை நாடுகள் தாம்; எடுத்துக்காட்டாக, "மற்ற பெரும் மதங்கள் மாற்று-மதத்தினரை நடத்துவதற்கு நேர்மாறாக, முஸ்லிம்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் ‘வேத மறையினர்’ என்றே கருதுகின்றனர். எனவே ஓஸாமா பின் லாடென் உள்ளிட்ட உலகளாவிய முஸ்லிம் தீவிரவாதிகள் இஸ்லாத்தைப் பற்றிய தம் முழு அறியாமையையே காட்டுகின்றனர்” என்று கூறுகிறார்;-) [பக். 37] இன்னும் சொல்கிறார்: “இஸ்லாத்தைப் பொறுத்த வரை, ஒரே-இறைத் தத்துவம் கொண்ட மதங்கள் எல்லாமே மோட்சத்தை நோக்கியே செல்கின்றன. இஸ்லாத்தில், முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஒரே-இறைத் தத்துவத்தை நம்புவோர் அனைவருமே அவரவர் பூவுலகில் கொண்ட நடத்தை கொண்டே கடவுளால் கணிக்கப்படுவர், அம்மனிதர்களின் மதங்களால் அல்ல”. (கொலம்பஸ், கொலம்பஸ், எனக்கும் - இன்னும் கோடானு கோடியினருக்கும் - விட்டாச்சு லீவு!)

அவங்க புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடந்த புரட்சி/மக்களாட்சி/மறுமலர்ச்சி பற்றி உலக வரலாற்றுப் பாடங்கள் படிக்கிறாங்க. அவங்க [பக். 84/85] இரண்டு பக்கங்களில் எழுதியதை புள்ளிகளில் குறுக்கிச் சொல்கிறேன்: "இஸ்லாமிய உலகில், பலகாலங்களாய் வாழும் மக்களாட்சிகள் உண்டு. இதற்கு புனிதக் குரானின் சொற்கள் பொறுப்பல்ல! ... இதற்கு இரண்டு காரணங்கள்: இஸ்லாத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குள் மறைஞானத்தை ஒட்டி நிகழும் யுத்தம்; மேலை நாடுகளின் காலனீய ஆதிக்கம் - இவையே! ... முஸ்லிம் மன்னராட்சி என்பது நியாயமான மதச்சார்பற்ற அரசின் வழிகளை மக்களுடன் கலந்தாலோசனை செய்யும் அல்-குரானின் வழிகளோடு இணைக்கிறது...இஸ்லாமிய நாடுகளில் மக்களின் சுதந்திரத்தைக் குறித்து அமெரிக்கா செய்திருக்கும் ஆராய்ச்சி முஸ்லிம் வழக்கங்களை அறியாமல் செய்யப்பட்ட ஆராய்ச்சியாகும் - எனவே முஸ்லிம் நாடுகளில் சுதந்திரம் இல்லை என்பது பிழை! ” எனவே சரியான அரசியல் ஒப்புநோக்கு செய்யிறேன்னுட்டு, இஸ்லாமிய நாடுகள் பற்றின வரலாற்றுப் பாடங்கள் (அமெரிக்க இடதுசாரி ஒப்புக் கொள்ளும் வகையில்!) படிக்கிறாங்க! பல எடுத்துக்காட்டுக்களும் அமெரிக்க நாட்டினருக்குப் புரியும் வகையில் இருக்கு: “சுதந்திரம் என்பது இந்தோனேஷியாவில் இருப்பவருக்கும் லூயிசியானாவில் இருப்பவருக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும்”. இந்தோனேஷியா மக்கள் தொகையில் உலகளவில் நான்காவது பெரிய நாடு - 230மிலியன்; லூயிசியானா, அமெரிக்க தென் மாநிலம், 5மிலியன் மக்கள் தொகை!

இந்த புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடக்கிற / நடந்த அரசாட்சி முறைகள், புரட்சி எல்லாவற்றுக்கும் ஒரு (மேலை நாட்டு) அரசியல் சார்ந்த மழுப்பல் இருக்கு. பின் அட்டை முழுக்க, புத்தகத்தைப் பாராட்டி அமெரிக்க (ஜனநாயகக் கட்சி) அரசியல் பிரபலங்கள் எழுதியிருக்காங்க. இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ள குறிப்பிடப்படும் நாடுகள் தயாரில்லை என்பது ஊறுகாய்க் காரம் மாதிரி (தெரிஞ்ச விஷயம்). பெநசிர் புட்டோ இறக்குமுன் எழுதிமுடித்த, மேலை ஆதரவோடு அரசியலில் மீண்டு வர முயற்சி செய்யும் போது எழுதியது என்பது தான் இந்த புத்தகத்தின் வரலாற்றுப் பின்னணி, வேறு விஷயம் ஏதுமில்லை - எ.தா.க! இந்த புத்தகத்தைப் படித்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம்னு நேரங்கடந்து அறிந்து கொண்டேன்.

மொத்தத்தில், பெர்ஸிபோலிஸ்/சமரசம் - இரண்டு புத்தகங்களுமே இஸ்லாமியப் புரட்சிக்குடும்பங்களில் பிறந்த, அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்த, இரண்டு வித்தியாசமான பெண்கள் எழுதினது. 1969இல் பிறந்த அரசியல்/கட்சி எதிர்காலம் கருதாத, மனம்போன போக்கில் வாழும் மர்ஃஜானே சாட்ராபி பர்தாவின் மேலான வெறுப்பை வெளிப்படையாகவே சொன்னார்; 1953இல் பிறந்து அரசியல்/கட்சி எதிர்காலத்தையே கருத்தில் கொண்ட பெநசிர் புட்டோவின் கைகள் எப்பவுமே புகைப்படம் எடுக்குமுன் ஹிஜாப்பை சரி செய்யும். புத்தகங்கள் அவரவர் வாழ்வியல் நேர்மையைக் காட்டுகின்றன.

புத்தக அட்டைப்படம், விமர்சனம் இன்னும் இணையத்தில்.

2 comments:

Unknown said...

நான் எப்படியெல்லாம் என் நேரத்தை வீணடிச்சிருக்கேன்னு சொல்ல ஒரு பதிவு! நேரம்பா!

Unknown said...

எனக்குத் தோணினதை சொல்லுவேன்,

உங்களுக்குத் தோணினதை சொல்லிட்டிங்க. ஆனா தல சுத்துது..