COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Monday, March 02, 2009

புத்தக விமர்சனம் - சாட்ராபி: பெர்ஸிபோலிஸ்-2.

பெண்களுக்கு பதின்ம வயதில் ஆண்களை எதிர் கொள்ளுவது மிகச் சிக்கலானது! நம்மூர்ல சான்ஸே இல்லை; அதுவும் வயசு வித்தியாசம் பார்க்காம பெண்களைக் கிண்டல் செய்வாங்க. பொண்ணுங்க என்ன செய்வோம்? தெரிஞ்ச பசங்க என்றால், பேரைச் சொல்லிக் கூப்பிட்டு “ஏன்டா அப்பிடி கிண்டல் பேசறே” என்று கேட்டால் அழுதுடுங்க;-) ஏதாவது தெரியாத பசங்க கிண்டல் அடிச்சா, அதுவும் ஜோக்கா நல்லா இருந்தா, சிரிக்கவே முடியாது, சிக்னல் ப்ராப்ளம் வந்துடும்! யாராவது நல்லா இருக்கானேன்னு திரும்பிப் பாத்தா நம்மூர்ல வாழ்நாள் சிறை:-) ஜோக்கடிச்சாலும்..., உண்மையில் கட்டுப்பாடுகள் நிறைந்தவை பெண்களின் வாழ்க்கை - எல்லா நாடுகளிலுமே.

இரானிலும் கூட. பர்தா, முக அலங்காரம் கூடாது, பின்பாகம்(!) தெரியாத உடை / நடை கட்டுப்பாடுகள்.... இதையெல்லாம் மீறி பெண்களின் வாழ்க்கையை - பெர்ஸிபோலிஸ் இரண்டாம் பாகத்தில், பதின்ம வயது முதல் மர்ஃஜானேவின் 24 வயது வரை - இரான், ஆஸ்ட்ரியா, திரும்பி இரான், ஃப்ரான்ஸ்னு நீளும் தன் வாழ்க்கையை நேர்மையா (மொழிப் பிரசினை தொடங்கி, உடல் மாற்றங்கள், போதைப் பழக்கம்னு எல்லா பிரசினைகளையும்) சித்திரங்களில் எழுதியிருக்கிறார் மர்ஃஜானே சாட்ராபி. மர்ஃஜானே சாட்ராபியின் பெர்ஸிபோலிஸ் பத்தி பிரபலப் பதிவர்கள் எழுதியிருக்காங்க. நான் பிரபலம் இல்லை; சாதாரணப் பதிவர். அதுனால, பெர்ஸிபோலிஸ்-2 (2ம் பாகம்) பத்தி எழுதறேன்.

பெர்ஸிபோலிஸ் என்பது பெர்சியாவின் தலைநகரத்தின் பழைய பெயர். உயர்நடுத்தரக் குடும்பத்தில பிறந்த மர்ஃஜானே சாட்ராபி, பக்கத்தில் உங்களைப் பாத்து சிரிக்கறது அவங்க தான். (உச்சரிப்பு இங்கே), அவங்க பேட்டி இங்கே... (ஷாவின் பல மனைவிகளில் ஒருவரோட எள்ளுப் பேத்தின்னு சொல்லிக்கிறாங்க தன்னை! இல்லைன்னு சொல்றவங்களும் இருக்காங்க) நிறையவே துடுக்கு! சிறுவயதிலேயே அவங்க துடுக்குத் தனத்தால, ஈரானில் நிகழ்ந்த புரட்சியின் போது வம்புல மாட்டிக்கப் போறாங்கன்னு சொல்லி இடதுசாரி எண்ணங்களுடைய (இன்ஜினியர்) அப்பா, (ஆடை டிஸைனர்) அம்மா, போராளிப் பாட்டி எல்லாரும் சிறு வயதிலேயே ஆஸ்ட்ரியாவுக்கு படிக்க அனுப்பிடறாங்க. அவங்க படிக்காமல், உள்ளூர் பெண்களைப் போல இருக்க ஆசைப்பட்டு (அந்த வயசிலே வேறு என்ன செய்வாங்க?) எதுவும் ஒத்துவராமல் 4 வருடங்களில் திரும்ப ஊருக்கு வந்துடறாங்க. ஊர்லயும் தனக்குக் காதல் என்று தோன்றிய ஒருவரை மணம் செய்து கொண்டு விரைவிலேயே விவாகரத்தும். அப்புறம் ஃப்ரான்ஸுக்கு திரும்பிப் போய் சித்திரம் வரைவதில் படிப்பும் தொழிலும். Maus புத்தகத்தைப் பார்த்த தாக்கத்தில், அதே போல் தன்கதையை எல்லாமே நகைச்சித்திரங்களாக எழுதியிருக்காங்க.

எந்த போராளியின் சின்ன வயசு கதையிலும் ஒரு உத்வேகம் இருக்கும் - அது கட்டாயம் இதுல மிஸ்ஸிங். இந்த அளவு எண்ணம், பணம் ரெண்டுத்திலியுமே சுதந்திரம் கொடுக்கும் அப்பா, அம்மா, பாட்டி இருந்தாலும், தன்னோட சந்தோஷங்கள் தான் எதையும் விட முக்கியம் என்னும் ஒரு மேட்டிமைத்தனம் (மொள்ளமாரித்தனம்?) கதை முழுக்க தெரியுது... பிரச்னைகளை உருவாக்கி அதிலிருந்து வெளியேறும் உதவியையும் பெறுகிறார்:-( (”பரிட்சைக்கு பயமா இருக்கு அம்மா, சாமி கிட்ட வேண்டிக்கோ”, “இந்தத் திருமணத்தை முறிச்சுக்கிறேன், என்னை வெளிநாட்டுக்கு அனுப்புங்க அப்பா”). ஆனால், மிகுந்த அரவணைப்போடு இரானில் வளர்ந்தவர், பதின்ம வயதில் தனியாய் ஆஸ்ட்ரியாவுக்குப் போய் அங்கே தங்க சரியாய் இடம் இல்லாமல் இடம் மாறி, இடம் மாறி வாழுவதை விவரிக்கும் போது பாவமாத் தான் இருக்கு.

சரி, இந்த புத்தகத்தின் சிறப்பு தான் என்ன? எழுத்தாளரின் எண்ண நேர்மை. இரான் திரும்பியதும், பல்கலைக்கு நேர்முகத்தேர்வுல முல்லா கிட்ட ”ஆஸ்ட்ரியாவில பர்தா அணியவில்லை; எனக்கு அரபி தெரியாது”ன்னு கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மை. போதைப் பழக்கத்தையோ, அல்லது ஆஸ்ட்ரியாவில் சந்திக்கிற மாணவர்களின் வாழ்க்கையை (ஒருமாதிரி க்யூட்! ரசிச்சேன்!) நேர்மையா சொல்லுகிறார். அவருடைய சுய எள்ளல் நல்லாவே இருக்கு - தன்னைப் பற்றி வரைகிற படங்களும் சரி, சொற்களும் சரி, சூப்பரா விழுது!

நம்மூர் போலவே (முதல் பத்திக்கு வந்துட்டோமே!) ஆண்களின் உலகத்தில் வளர்ந்து போராளியாக, நேர்மையான உணர்வுகளோடு இருப்பது கஷ்டம் தான்! இரானிலோ, ஓவியப் பாட வகுப்பில் கூட, மாடல் பெண் முழுக்க பர்தா அணிந்து அமர்கிறார். இரானில் புதிய ஆட்சியின் கீழ், ஆண்களின் பார்வைக் கோணலைச் சரி செய்ய, பெண்களின் நடைக்கும் உடைக்கும் ஏற்படுத்தப்படுகிற கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றன. மேல்குடி இரானியப் பெண்கள் அந்த கெடுபிடியிலும் ரகசிய பார்ட்டி, காதல்னு இருக்காங்க. புத்தகத்தைப் படிக்கும் போது, பர்தாவைத் தவிர்த்துப் பார்த்தா, நம்மூர் நினைவு தான் எனக்கு முழுக்க! (நம்மூர் ஆண்களின் உலகம் இல்லைன்னு சொல்பவர்கள் எல்லாரும் பெண்ணுடை தரித்து கூட்டம் நிறைந்த நேரத்தில் சென்னை மாநகர பஸ்ஸில் ஏறி வர பிடி-சாபம்! இதுல மங்களூரு ஸ்ரீராம் சேனே வேற நினைவுக்கு வந்து தொலைக்குது!!!)

இரண்டே மணிநேரத்தில் முடிக்கக் கூடிய சித்திரப் புத்தகம். முடிந்தால், பெர்ஸிபோலிஸ் முதல் பாகம் முடித்து விட்டுப் படிக்கவும்.

4 comments:

Vijay said...

இதே புத்தகம் பத்தி இணைய விமர்சனம் ஒண்ணும் படிச்சேன். நீங்க வேற ரெக்கமண்ட் பண்ணி இன்னும் ஆர்வத்தை தூண்டி இருக்கீங்க. பாக்கறேன்.

கெக்கே பிக்குணி said...

வாங்க விஜய். கட்டாயம் படிங்க! அதுவும் சிறு பயணம் போகும் போது படிக்க வசதியான புத்தகம்.

வரவுக்கு நன்றி.

த.அகிலன் said...

நானும் ரொம்பநாளா இதைப்பத்தி எழுதணும்னு நினைச்சேன்.. சித்திரக்கதைப் பத்தகங்கள் வெறமுனே காமிக்ஸ்களாகவும்.. புராணங்களாகவும் இல்லாமல் இதுமாதிரியும் இருக்கேன்னு நினைச்சேன்.. அப்புறம் இது திரைப்படமாவும் வந்திச்சு பாத்தீங்களா முடிஞ்சா பாருங்க நான் பாத்தேன் எழுதணும்னு நினைச்சேன் அப்புறம்.. எழுதல..

கெக்கே பிக்குணி said...

வாங்க அகிலன், எழுதணும்னு ட்ராஃப்டில் தொடங்கி, சோம்பி விட்டேன். உடற்பயிற்சி செய்யும்போது திடீர்னு பெர்ஸிபோலிஸ் படம் ஒரு சானலில் சிக்கியது!!! அதையும் பார்த்து விட்டு புத்தக விமர்சனத்தை எழுதி முடித்தேன்! முழுக்க புத்தகம் படித்தது எனக்கென்னவோ, படத்தை விடப் பிடித்திருந்தது.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.