COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, September 14, 2013

எல்லாமே மென்பூக்கள்....


வார்த்தைகளில் சிக்கியே
காணாமல் போகின்றன...
வார்த்தைகள்.

காரின் வேகத்தில் பின்வாங்கும்
சாலையோரச் செடிகளின் பூக்களில்,
நில்லாமல் தாவிச் செல்லும்
பட்டாம்பூச்சியோடு
பின்தங்கி  நின்றுவிட்டது மனம்.

தொட்டாற்சுருங்கி என்று தெரிந்ததும்,
மிதித்துச் சுருங்குவதைச்
சரிபார்க்கும் கோழைமனம்.

இருந்த சுவடு தெரியாமல்,
கட்டிய கோலம் காணாமல்,
இன்றைய இருப்புக்கு மட்டுமே அடையாளமாய்.
மேகங்களைப் போலாகி விட்டது
வாழ்க்கை.

Saturday, February 11, 2012

கடவுள் அமைத்து வைத்த மேடை

[உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் எழுதியது]

நீலிமாவுக்கு வருத்தமாய் இருந்தது. ஆனந்த் இன்றும் வீட்டுக்கு வரப்போவதில்லை. அவனுக்காக நேற்று செய்து வைத்திருந்த இரவு-உணவை யும் காலையில் கொட்டியாயிற்று. வீட்டு நாய் மிஸ்டர்ஸ்பாட்ஸ்க்கு இந்திய உணவு பிடிக்காது. அதற்கு வேண்டிய உணவை எடுத்து வைத்துவிட்டு நீலிமா ஆனந்துக்காகக் காத்திருந்தாள்.

சனிக்கிழமை முழுக்க வீட்டுக்கு வராதவன், ஞாயிறன்று (நேற்று) மாலை வீட்டுக்கு வந்தவன், "எப்போ டிசைட் பண்ணுவ?" என்றான்.

"சாப்பிடலியா, ரொட்டியும் கடியும் சோறும் செய்து வைத்திருக்கிறேன்" என்றாள் நீலிமா.

"சீ. விவாகரத்து வேணும்னு கேட்டேன் வெள்ளிக்கிழமை. ஒரு எமர்ஜென்ஸி ஹாண்டில் செய்வதற்காக மருத்துவமனை போயிட்டு, அப்பிடியே லிசா அபார்ட்மெண்ட் போனேன்... உன்னோடு எனக்கு கணவன்மனைவி உறவு எல்லாம் முடிஞ்சு வருஷக்கணக்கு ஆயிடுச்சி" என்றான் ஆனந்த்.

"எனக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லீங்க" என்றாள்.

அது தானே உண்மையும் கூட. என்ன செய்வது, எங்கே போவது? தோழிகள் என்று யார் இருக்கிறார்கள்? அமெரிக்க உடமைகளில் தேவைப்பட்டதை எடுத்துக் கொண்டு இந்தியா கிளம்பி விடுவது எளிதா? இந்தியாவில் இருக்கும் அண்ணன், அண்ணி வரவேற்பு எப்படி இருக்குமென்று தெரியாதா ஆனந்துக்கு?

"புதன் கிழமைக்குள் காலி பண்ணு. வீடு க்ளீன் செய்ய லிசா யாரையாவது வெள்ளிக்கிழமை அனுப்புவாள்" ஆனந்த் நீலிமாவின் கண்களையே பார்க்காமல் சொன்னான்.

"ஏன் வீடு க்ளீனாத் தானே இருக்கு?" நீலிமாவுக்கு கண்ணீர் பெருகியது.

"சீ. சமையல் நாத்தம். லிசாவுக்கு இந்தியச் சமையலே பிடிக்காது. நீ கிளம்பும்போது பூஜையறை சாமானையும் எடுத்துக்கலாம். வேற என்ன பொருள் வேணும்னு லாயர்கிட்ட சொல்லிடு. ஹோண்டா ஆடிஸி, பர்னிச்சர், பாத்திரம் பண்டம், அலங்காரப்பொருள் எல்லாத்தையும் எடுத்துக்கலாம். ஜீவனாம்சம் மாசம் 3000$, உன் ஒருத்திக்கு இது நல்ல அமவுண்டு. சீக்கிரம் ஏற்றுக் கொண்டு கிளம்பு... மிஸ்டர்ஸ்பாட்ஸை நானே வைத்துக் கொள்வேன்". அவள் பதிலுக்கு காத்திராமல் ஆனந்த் கிளம்பி விட்டான்.

லிசாவுக்கு இந்தியச் சமையல் பிடிக்காது என்றால், ஆனந்துக்குப் பிடித்த மெந்திய ரொட்டியும், பருப்பும் யார் செய்து தருவார்கள்? நீலிமா செய்யும் கடி (மோர்க்குழம்பு) நன்றாக இருக்கிறது என்பானே? தான் சமையல்காரியாகவாவது இங்கேயே இருந்து விடலாமா? பூஜை செய்வது பிடிக்கலை என்றால், அதை கீழே அடித்தளமட்டம் (பேஸ்மெண்ட்) அறைக்குள் வைத்து அங்கேயே தானும் இருந்து கொள்ளலாம்.... மிஸ்டர்ஸ்பாட்ஸாவது, நீலிமாவின் பிரிவைத் தாங்காமல் அழாதா? இரவெல்லாம் தூங்காமல் அழுதுகொண்டிருந்தாள் நீலிமா.

காலை விடிந்ததும், பிள்ளை ஷ்ரேயஸுக்கு போன் செய்தாள்.

'மாம், இட்ஸ் செவென். ஐ காட் டு கோ டு வொர்க். ப்ளீஸ் மேக் இட் க்விக்'.

'அதைத்தான் உன் தந்தையும் சொல்கிறார். என்னை சீக்கிரம் வீட்டைக் காலி செய்யச் சொல்லி!' என்று எல்லா விவரங்களும் சொன்னாள் நீலிமா.

அதிர்ந்தானோ என்னவோ, ஷ்ரேயஸ் அதைக் காட்டவில்லை. 'அம்மா, அப்பாவின் ரசனைகள் வேறு. லிசாவுக்கு முன்னால் லிண்டா. லிசாவாவது நர்ஸ், அவரை வளைத்துப் போட்டு விட்டாள். லிண்டா இந்தியப் பெண், உன் தோழி. நீயும் சும்மா இருந்தாய். லிண்டாவுக்கு முன்னால் யாரோ? தெரிந்து கொண்டு சும்மாத் தானே இருந்தாய்? ஏதோ கெட்டது... சனி என்று சொல்வாயே, சனி விட்டது என்று நினைத்து விடு. வீட்டை நீ எடுத்துக் கொள்ளப் போகிறாயா? வீடு நல்ல லொக்கேஷன், பெரிய வீடு என்பதால் 1.5மில்லியன் வரை போகும். ஐ வுட் சே கோ டு அ லாயர்.'

'ரே, என்னடா பேச்சு இது உங்க அப்பாவைப் பத்தி? இந்த வீட்டைத் தாண்டி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அவருக்கு இந்த வீடு வேண்டுமாம். ஹோண்டா ஆடிஸி, வீட்டுல இருக்கிற சாமான் எல்லாத்தையும் எடுத்துக்க சொன்னார். மாசம் $3000 கொடுப்பாராம்.... மிஸ்டர்ஸ்பாட்ஸும் அவருக்கு வேண்டுமாம்'.

'மாம், எனக்கு இப்போ வயசு 24. 10வருஷத்துக்கு முன்னால அப்பா தப்பு பண்ணபோது கேட்கக்கூடாதுன்னு சொன்னே. திரும்பத்திரும்ப தப்பு பண்ணவிட்டுட்டு எதுக்கு இப்படி அடிமையா இருக்கே? சந்தோஷமா இரும்மா. பக்கத்திலே நல்ல அபார்ட்மெண்ட் பார்த்துக்கோ. உன் ஃப்ரெண்ட்ஸ் என்ன சொல்வாங்கன்னு நீ பயந்தாக்க, இந்தியா ட்ரிப் அடி. மனசுக்கு இதமா இருக்கும். இப்போ நான் வேலைக்குப் போகணும், மாலை 5மணிக்குத் வீட்டுக்கு வந்து பேசறேன். லாயர்கிட்ட போகறதைப் பத்திப் பேசறேன். ஸாரிம்மா. அண்ட் ஸாரி அபவுட் மிஸ்டர்ஸ்பாட்ஸ் டூ' போய் விட்டான்.

ஷ்ரேயஸிடம் பேசியதில் இருந்து மனம் இன்னும் கனத்தது. அப்பாவும் பிள்ளையும் 10வருடங்களாக நேருக்கு நேர் பேசுவது கிடையாது. ஆனந்த் செய்கிற பொம்பிளைப்பொறுக்கித்தனத்தை பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று பதின்ம வயதில் வீராப்பாக இருந்த ஷ்ரேயஸ், அப்பா பணத்தை வாரி இறைத்து மேல்படிப்பு படிக்க வைத்ததும் மௌனமாகி விட்டான்.

நீலிமா அழுது கொண்டே இருந்தாள். தோழிகள் எல்லாருக்குமே லிண்டா பற்றி தெரியும். லிண்டா வீடு வரை நட்பு பாராட்டியவள், பின் ஆனந்துக்கு காதல் லைன் போட்டாள். இல்லை, ஆனந்த் தான் அவளுக்கு லைன் போட்டானோ? என்னவோ ஏதோ, லிண்டாவின் கணவன் வந்து அடிதடியாகி லிண்டாவும் கணவனும் ஊரை விட்டுக் கிளம்பினார்கள்... அதற்குப்பிறகு தோழிகள் யாருமே அவளிடம் சரிவரப் பேசுவதில்லை. இப்போது ஆனந்துக்குத் தேவை, கூட வேலை செய்யும் வெள்ளைப்பெண் நர்ஸ் லிசா.

மதியம் இரண்டு மணியாகி பசிமீறிய தலைவலியோடு நீலிமா எழுந்தாள். தனக்கு என்று என்ன இருக்கிறது பாக் செய்ய? வேலைக்குப் போகாமல் இருந்ததால், நீலிமாவிடம் இருந்தவை விலைமலிவான அமெரிக்க ஆயத்த உடைகள்; நான்கு பார்ட்டி உடைகள், அதுவும் திருமணமான புதிதில் ஆனந்தோடு பார்ட்டிக்குச் செல்ல அணிந்தவை. மிச்சம் மீதி, ஆரவாரமான இந்திய நகைகள், அலங்காரம் நிறைந்த இந்திய உடைகள். கல்லூரிக்காலங்களில் எழுதிய பழைய கவிதை நோட்டுப்புத்தகம். "இட் இஸ் அ லூஸர்'ஸ் ஹாபிட்" என்று ஆனந்த் சொன்ன பிறகு கவிதை எழுதுவதும் நின்று போனது.

சமரசங்களில்
முதலில்
கொலையுண்டது
மனம்.

சாப்பிட விருப்பமே இல்லை. நீலிமா எல்லாத்துணிமணிகளையும் எடுத்து பாக் செய்தாள். பார்த்துப் பார்த்து இந்திய முறையில் அலங்கரித்த வீடு. என்ன செய்வது? முன்னறையில் குவித்த பர்னிச்சர், துணிமணி எல்லாவற்றிற்கும் "சால்வேஷன் ஆர்மிக்கு" என்று நோட் எழுதி அவர்களை அழைத்து வெள்ளியன்று வந்து எடுத்துப்போகச் சொன்னாள். நகைகளை ஒரு பெட்டியில் எடுத்து வைத்தாள். பூஜையறை பாக் செய்ய மனமே வரவில்லை. பூஜையறையின் மார்பிள் தரையைத் துடைத்தாள். நடுநாயகமாக இருந்த பூஜை மண்டபத்தைத் துடைத்தாள். வண்டியை எடுத்துப்போய் பெட்ரோல் பம்புக்குப் போய் ப்ளாஸ்டிக்குவளை நிறைய நிரப்பிக்கொண்டாள். மிஸ்டர்ஸ்பாட்ஸுக்குப் பிடித்த உணவையும் வாங்கிக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்து ஸ்பாட்ஸை வண்டியிலேயே விட்டு காரை வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு, உள்ளே வந்த நீலிமா, பூஜை மண்டபத்தின் முன் ஒரு டஜன் விளக்கேற்றினாள். மணி நான்கு நாற்பது, ஷ்ரேயஸ் 20நிமிடங்களில் வந்து விடுவான். நீலிமா நிம்மதியோடு பஜனைப் பாடல் சீடியை ஓட விட்டாள். ப்ளாஸ்டிக்குவளை பெட்ரோல் அத்தனையும் தலையில் கொட்டிக்கொண்டு விளக்குகளை நோக்கிப் பாய்ந்தாள். 

Monday, January 02, 2012

பேயூரில் ஆவிபிடித்ததும், பனிநீராடியதுமான கதைகள் (புத்தாண்டுச் சுற்றுலா)

உங்க எல்லாருக்கும், எனது புத்தாண்டு வாழ்த்துகள்!! இந்த ஆண்டிலயாவது நல்லா உடற்பயிற்சி செய்யணும், பத்து கிலோ குறைக்கணும் என்று டிசம்பர் 31ந்தேதி உறுதி செய்து ஹிஹி, ஜனவரி 2ந்தேதியே உடற்பயிற்சி செய்யாத ஆளு நான். என்னைப் போலவே நீங்களும், ஹிஹி, டாப்ஃப்ளோர் ஸ்ட்ரா ங்க் பட் பேஸ்மெண்ட் வீக் என்றால்..... உங்களுக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் வாழ்த்துகள்:-)

நீங்க என்ன செய்தீங்க? இந்த புத்தாண்டுக்கு என்ன செய்தீங்க என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எல்லாரும் எங்க போனீங்க, இல்லாட்டி தொலைக்காட்சியில என்ன பார்த்தீங்க, வீட்ல என்ன செஞ்சீங்க என்று தெரிந்து கொள்ள விருப்பம்.

சரி, நான் என்ன செய்தேன்? பெரிய புள்ளக்கு 11 வயசு. பேய் பூதம் பற்றி பயம்/ஆர்வம் உள்ள வயது. "கூடப் படிக்கிற புள்ளங்க சவான்னா (Savannah) என்கிற ஊருக்குப் போயிட்டு வந்திருக்காங்க, நாமும் போவோம்"னு பிடுங்கி எடுத்ததால, அங்கு போனோம்.

சவான்னா! சவான்னாவின் ஊர்ச்சதுக்கம்:


சவான்னா, ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களில் (USA) நாட்டிலேயே அதிகப்படியான பேயாடும் ஊர் என்று பெயர் எடுத்தது. "சவான்னா" என்கிற ஆறு அட்லாண்டிக் மாகடலோடு கலக்கும் இடத்தில் இருக்கிறது இது. வெள்ளையர்கள் 1733இல் இங்கே முதலில் குடியேறியிருக்கிறார்கள். ஜெனரல் ஓகில்தோர்ப், அவரது 120 படைவீரர்கள், "ஆன்" என்ற கப்பலில் சவான்னா ஆற்றில் வந்து இறங்கினர். பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ்-இன் பேர்சொல்லும் முகமாக, ஜார்ஜியா என்ற மாநிலத்தை உருவாக்கினர். அதன் தலைநகரானது சவான்னா நகரம். (இன்றைக்கு ஜார்ஜியா மாநிலத்தின் தலைநகரம், அட்லாண்டா நகரம் ஆகும்). இங்கே இருக்கும் எல்லா இடங்களிலும் சைக்கிள்களில் போகலாம்; வாடகை சைக்கிள்கள், தானுந்துகள் எல்லாம் கிடைக்கின்றன.

சவான்னா நகரம் ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களிலேயே, மிகப்பெரிய கப்பல் சரக்குக் கொள்கலம் போகக் கூடிய நிலையம்; 4வது பெரிய துறைமுகம். சவான்னா ஆற்றின் மே ல் இருக்கும் பாலம் (படம் கீழே), 185அடி உயரக் கப்பல்கள் போக 1023அடி அகலப் பாதையோடு இருக்கிறது. சுமார் 2மைல் நீளமும் 1100அடி அகலமும் உள்ள பாலம். நாங்கள் இருக்கும்போதே கார்கள் பலவற்றைச் சரக்காக எடுத்துச் செல்லும் கப்பல்கள் பார்த்தோம்.
சவன்னா வரலாறு: பொதுவாக, மற்ற ஆங்கிலேயர்க ள் போலில்லாமல், ஜெனரல் ஓகில்தோர்ப், சவான்னா நகர்ப்பக்கம் இருந்த சிவப்பிந்திய மக்கள் தலைவர் யாமாக்ரா-வோடு நட்பு பாராட்டினார். இதனால் மற்ற அமெரிக்க மாநிலங்களில் இருந்த சிவப்பிந்தியரை சண்டை, சச்சரவு / தந்திரக் கொலைகள் மூலம் வென்ற வெள்ளையர்கள் இங்கே நட்போடு தங்கள் நகரத்தை நிலைநாட்டினர்.

சவான்னாவை 1800களிலேயே வலைக்கிராதி போல சதுரங்களாகக் கட்டியிருக்கிறார்கள். மது, கறுப்பின அடிமைத்தொழில், விலைமாதர் தொழில், வழக்கறிஞர் தொழில் இவற்றை ஓகில்தோர்ப் தடை செய்திருக்கிறார். இதுல ஒன்று வந்தாலும், மற்றதும் வந்திடும்னு! ஆனாலும், குறுகின காலத்திலியே கறுப்பின அடிமைகள், வழக்கறிஞர்கள், விலைமாதர்னு எல்லாரும் அப்புறம் இந்த நகரத்துல தொழில் செய்யத் தொடங்கிட்டாங்க.

பேயாடுதோ? அந்தகாலத்துக்கே உரிய வன்கொடுமைகள் - சின்னப்பசங்க, பெண்கள், அடிமைகள் மீதான வன்கொடுமைகள் - இருந்திருக்கின்றன. இதைத் தவிர 1796, 1820களில் பெரும் தீவிபத்துகள், 1820, 1854களில் நிகழ்ந்த தொற்றுநோய்கள் இவற்றின்போது பெரிய எண்ணிக்கையில் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. நெருப்பின்போது மாடியில் சிக்கிய குழந்தைகள், வன்கொடுமைகளில் இறந்த உயிர்கள், கணவனின் கள்ளக் காதலியைக் கொன்று தானும் மடிந்த சீமாட்டி என்று குறை-ஆயுளில் மடிந்த உயிர்கள் ஆவிகளாக உலவுகின்றனவாம். ஒரு வீட்டுக்குள்ளே போனாலே, தன் கண்டிப்பால உயிரிழந்த மகளால தானும் வருந்தி உயிர்நீத்த ஒருவரோட ஆவி, வீட்டுக்குள்ளே வந்தவர்களைப் பிடித்துத் தள்ளி விடுகிறதாம். "ஆவிபிடிக்க", ஆவிகளின் சங்கேத மொழியைப் பதிவுசெய்யன்னு ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த குழுவும் பலவித சத்தங்களைப் பதிவுசெய்கிறார்கள்: "ஐயோ, காப்பாத்துங்க" என்பது மடிந்த கள்ளக் காதலியின் குரலாம்.

இந்தப் படத்தில உங்களுக்கு எவ்வளவு பேய் தெரியுது?
இந்த செய்திகளில் எனக்கு சுவை தோன்றக் காரணமே, என் கூட பணிபுரிந்த ஒரு பெண்மணி. சவான்னாவில் பிறந்து வளர்ந்த அவரோடு, வேறொரு நகரத்தில் சிலகாலம் பணிசெய்தேன். அப்போ அவர் சொன்ன கதை: 1820இல் நிகழ்ந்த பெரும் தொற்று நோய் மற்றும் தீ விபத்தில், மயக்கத்தில் இருந்தவர்களையும் இறந்தவர்களோடு, புதைக்க இடமில்லாமல், வீடுகளின் அடிப்பக்கத்தில் தூக்கிப்போட்டு, செங்கல் சுவர்கள் கல்லறைகள் கட்டினார்களாம். இந்த சுவர்கள் சிலவற்றின் உள்பக்கத்தில், இறக்காமல் அந்தச் சுவர்க்கல்லறைக்குள் மாட்டினவர்கள் மயக்கம் தெளிந்த எழுந்திருக்கிறார்கள்; எழுந்த பிறகு, வெளியில் வர நகங்களால் சுவரைப் பிறாண்டிய அடையாளங்கள் இன்றைக்கும் இருக்கின்றனவாம். (இதை எங்களுக்கு ஊர் சுற்றிக் காட்டிய வழிகாட்டியும் ஒப்புக்கொண்டார். கூட குழந்தைகள் இருந்தமையால், இதைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடியாது என்றுவிட்டார்!). இப்படி க் குறை ஆயுளில் இறந்தவர்கள் ஆவிகளாகத் திரிகிறார்களாம். சவான்னாவில் வாழும் பலரும் அப்படி இப்படி பேய்களைப் பார்த்த கதைகளைச் சொல்கிறார்கள்!

சவான்னா இன்றைக்கு: இன்றைய சவான்னாவில் உலகத்தரம் வாய்ந்த "சவான்னா நுண்கலை/வடிவமைப்புக் கல்லூரி" (Savannah College of Arts and Design) இருக்கிறது. உடைந்த நிலையில் இருக்கும் கட்டிடங்களையும் இந்த கல்லூரி மாணவர்களே புதுப்பிக்கிறார்கள். சவான்னா நகரம் இருப்பது சவான்னா ஆற்றங்கரையில் என்பதாலும், பழமை வாய்ந்த/வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நகரம் என்பதாலும், ஆற்றங்கரையில் படகு சவாரி, இரவு உணவுடன் கூடிய படகு சவாரி, பேய்ச்சுற்றுலா, ஊர்ச்சுற்றுலா என்று நிறைய உலாக்கள் இருக்கு. சாப்பாட்டு விடுதிகள் நிறைய! வித விதமான உணவு வகைகள், தேன் வகைகள் - ம், ம், சுவை!

புனித பாட்ரிக்ஸ் நாள் ஊர்வலம் "பெருங்குடி" ஊர்வலம். ஊர்வலம் வரும் சாலைகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் விடுமுறை கூட விட்டுவிடும்!

திருமணங்கள் பல நடைபெறுகிற காதல்பேரூராகவும் இது இருக்கிறது!

பல ஆங்கிலத் திரைப்படங்கள் எடுத்திருக்காங்க இந்த ஊரில்! Forrest Gump, Midnight in the Garden of good and evil, The Gingerbread man, Glory, Cape Fear, The General's Daughter... இந்த பட்டியல் நீண்டுகிட்டே போகுது: http://www.savannahoffthebeatenpath.com/Top%20Level/books.htm

இன்னும் சவான்னா பற்றி தெரிந்து கொள்ளணுமா? சவான்னா பற்றிய ஒரு சுட்டி: http://www.georgiaencyclopedia.org/nge/Article.jsp?id=h-1056 . சவான்னாவின் பேய்களைப் பற்றி இன்னும்: http://www.google.com/search?q=savannah+ghost+stories

******************************************************************************

பக்கத்தில் இருக்கும் ஊர்/தீவுகள்: புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பார்க்க நாங்கள் அடுத்துப் போனது டைபீ (Tybee) தீவு. சவான்னா பக்கத்தில் இருக்கு.
இந்த அலைமேடையிலிருந்து தான் வாணவேடிக்கை நடந்தது! டைபீத் தீவில் எங்களைப் போன்ற சைவ உணவுவிரும்பிகளுக்கு அவ்வளவா உணவு கிடைக்கலை. இந்திய உணவு இந்தத் தீவுலியே இல்லை! படேல்கள் இங்கியும் தங்குவிடுதிகள், எரிபொருள் நிலையம் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்றாலும்!! இருந்தாலும், சவானாவுக்குப் பயணம் செய்து பிடித்த தாய் நூடுல்ஸ் / சைவ உணவு சாப்பிட்டுட்டு வந்தோம்.

புத்தாண்டுக்கான வாணவேடிக்கைகள், பட்டாசுவெடிகள் எல்லாவற்றையும், கடற்கரையிலியே இருந்து பார்த்தோம். தலையிலே கோமாளி குல்லா, சத்தம் போடுற பீப்பீ வச்சுகிட்டு எல்லாரையும் போல அலப்பறையும் செய்தோம். போலீஸு கண்ணுல படவில்லை, எனவே நல்லாவே சத்தம் போட்டோம்:-)

புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1, 2012) காலையில் நிலமுனைநீச்சல் (polar plunge) என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர், பகடிக்குரிய உடைகள், வீட்டு உடைகள்னு விதவிதமா களியாட்டம் போட்டுகிட்டு நீரில் குதித்தார்கள். இது கின்னஸ் சாதனை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு வானொலி நிலையம் ஏற்பாடு செய்தது. அதுனால உள்ளூர் மக்கள் எக்கச்சக்கமாக வந்திருந்தார்கள்.
இம்புட்டு தொலைவு வந்திட்டு, தண்ணி பார்ட்டி இல்லாமலா? "டால்பின் கடற்பாறை உணவகம்" (dolphin reef restaurant - படம் கீழே) போய் சாப்பிட்டோம். கடலைப் பார்த்துட்டே சாப்பிடலாம். பச்சைத்தக்காளிக்கா ய் பஜ்ஜி (இந்நாட்டின் தெற்கத்திய சிறப்புத் தின்பண்டமாம் இது), பாஸ்டா (கணவரும் நானும்), பிட்சா, வெஜ் கேசடியா (குழந்தைகள்) சாப்பிட்டோம்.
இன்னும்... பக்கத்து ஊர்கள்: சவான்னா பக்கத்திலேயே ஹில்டன்ஹெட் ஹில்டன்(தென் கரோலினா மாநிலம்) என்கிற தீவு - மிகவே வணிகப்படுத்தல் இந்தத்தீவில்! - இருக்கிறது. தென் கரோலினா மாநிலம் பாலத்துக்கு அந்தப்பக்கம்! நிறையபேர் தென்கரோலினாவில் குடியமர்ந்து ஜார்ஜியாவில் பணிபுரியவும் செய்கிறார்கள்.

நிறைய தீவுகள், தங்குவிடுதிகள் - சிறுகுடில், படுக்கையும்காலையுணவும் வழங்குவிடுதிகள், பெரிய உல்லாசவிடுதிக ள், எல்லாம் இருக்கின்றன.

விமானநிலையங்கள்: சவான்னா மற்றும் ஹில்டன்ஹெட் விமானநிலையங்கள் அருகருகே இருக்கின்றன. சவான்னாவுக்கு போக டெல்டா மற்றும் ஏர்ட்ரான்- இல் குறைந்தவிலை சீட்டுகள் கிடைக்கின்றன.

படங்கள் உதவி: tybee-times, ibookcdn.com, savannah-georgia-vibe-guide.com, விக்கிபீடியா, மற்றும் கூகிள் படங்கள்.

"முக்கிய" குறிப்பு: அப்போ ஆவி பிடிச்சோமா இல்லியா? பெரிய புள்ளக்கு சவான்னா போய்ச்சேரையிலியே ஆஸ்துமா பிரச்னை தொடங்கிருச்சு. அந்த ஆவி தான்...ஹிஹி, பிடிச்சோம். எப்படி தலைப்புக்குக் கொணாந்தேன்!

Tuesday, September 27, 2011

வேப்ப முத்து -

வேப்ப முத்து

தமிழோவியத்தில் வெளி வந்த என் சிறுகதை (முழுக்கப் படிக்க சுட்டியில் தட்டவும்!)


indiangirl1 வேப்ப முத்துஉள்ளேயிருந்து மீன் குழம்பின் வாசனை வந்து கொண்டிருந்தது. நாவூறியது மீனாவுக்கு. ஞாயிறு மதியம் வீட்டுக்கார வசந்தாக்கா அசைவம் சமைத்தால், ஊருக்கும் மணக்கும். ஆனால், சமைத்து முடித்து வீட்டினர் சாப்பிட்டப்புறம் மீனா சாப்பிடும் போது மணி இரண்டாகி விடும். இப்பொழுதிருக்கிற பசிக்கு, யாருக்கும் தெரியாமல் சிறியதாய் தேங்காயிலிருந்து கீறி எடுத்து வந்ததை கைக்குள் வைத்து கொல்லைப்பக்கம் போய், வேப்ப மரத்தின் கீழ், முதுகைக் காட்டி உட்கார்ந்து கொண்டாள். கொல்லைப் பக்கம் முழுக்க வேப்ப மரத்தின் நிழல். பறவைகள் பழுத்த வேப்பம் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் எச்சம் மேலே விழாமல் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டே இருந்தாள் மீனா.
மீனாவுக்கு எட்டு வயது வரை, பெற்றோர் வீட்டில் இருந்த போது மீன் குழம்பு சாப்பிட வழி இருக்கவில்லை. ஆனாலும், இங்கே வந்து இரண்டு வருடங்களில் நல்ல சாப்பாட்டு ருசி கண்டாயிற்று.  வசந்தாக்கா தன் இரட்டைக் குழந்தைகளை கவனிக்க, தன் உறவுக்கார வள்ளியின் மகளான மீனாவைக் கொண்டு வந்து வைத்திருந்தார். எட்டு வயதுத் தன்னம்பிக்கையோடு மீனா தன் தம்பி மணியை கவனிப்பது போலவே இரட்டைக்குழந்தைகள் ராஜேஷ், ராஜஸ்ரீ இருவரையும் கவனித்துக் கொண்டாள். அந்த பாசத்துக்காக, வசந்தாக்காவும் மீனாவிடம் அன்போடு இருப்பாள். யாரும் கவனிக்காத போது எப்போதேனும் மீனாவுக்கு மிட்டாய் வாங்க காசு கிடைக்கும். மாமியாரும் குழந்தைகளும் தூங்கி, வசந்தாக்காவின் கணவர் சுரேஷ் மாமா கடையை கவனிக்கப் போன மதியப் பொழுதுகளில், வசந்தாக்கா மீனாவுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள்.
ஆனாலும், விழித்துக் கொண்டிருந்த போதெல்லாம் வசந்தாக்காவின் மாமியாரின் கண்கள் மீனாவையே கவனித்துக் கொண்டிருக்கும். மாமியார் நடக்க முடியாதென்றாலும், உட்கார்ந்த இடத்திலிருந்தே அதிகாரம் செய்து கொண்டிருப்பார். அது தான், மீனாவுக்குக் கொள்ளைப்பசியாய் இருந்தாலும், சின்ன தேங்காய்க்கீற்றை ரகசியமாய் எடுத்துக் கொண்டு கொல்லைப் பக்கத்தில் மீனா சாப்பிட்டுக் கொண்டிருந்ததன் காரணம்.
தேங்காய்க் கீற்றை கையில் மறைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கொல்லைப் பக்கம் இருந்தவளை, வசந்தாக்கா கூப்பிட்டாள். குழந்தைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தனர். வசந்தாக்காவுக்குக் கூட மாட மீனா உதவி செய்து விட்டு, மாமியாருக்கும் சுரேஷ் மாமாவுக்கும் பரிமாறி, வசந்தாக்கா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, தனக்கும் உணவைத் தட்டில் இட்டுக் கொண்டாள் மீனா.  சாப்பிட்டுக் கொண்டே இருந்த போது, புரை ஏறியது. “அம்மா நினைக்கிறா அக்கா ” என்றாள் மீனா. புரை எறினதற்காக மீனாவின் தலையைத் தடவிக் கொடுத்த வசந்தாக்கா, “உங்க அம்மா வந்து போயி ஒரு மாசமாச்சில்ல, உன்னைப் பாக்க வருவாளாயிருக்கும்!” என்றாள்.


.......................மேலும் படிக்க: http://www.tamiloviam.com/site/?p=1920


Tuesday, June 21, 2011

இந்த வருட கோடை விடுமுறை

எங்க வீட்டு வம்பர்கள் - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற மூத்தோர் சொற்படி, எங்க அம்மாவை நான் படுத்திய பாடு எனக்கு வந்து விடிகிறது - இந்த கோடை விடுமுறையில் செய்யும் சில வம்புகள்:

வெளியில் கடைகளில் மேலே போகிற நகரும்-மாடிப்படிகளில் பொறுமையாக கீழே இறங்கி வருவது - நான் எவ்வளவு கூப்பிட்டாலும் அவர்களுக்கு காதில் விழாத பொறுமை!

வெளியில் போனால், தமிழே புரியாத மாதிரி நடிப்பது - ஹிஹி ஆங்கிலத்தில் திட்ட வேணாமே என்ற நல்ல மனசில் நான் தமிழில் திட்டிக் கொண்டிருப்பேன்...

சுற்றி சுற்றி வந்து அமெரிக்க இந்திய மொழியில் (இவர்களே எதோ உளறிக் கொண்டு) "பலா பலா பலா" என்று கத்தியவாறே ஓடுவது

கடைக்கு வந்து இப்படி மானத்தை வாங்கறியே என்றால், நேரே போய் கடையின் கண்ணாடிச் சுவரில் தலையை முட்டிக் கொண்டு தமிழில் "ஐயோ, முருகா காப்பாத்து" என்று சொல்வது (அம்மாவை கேலி செய்வதாம்)

அப்பா வீட்டுக்கு வந்ததும், அவர் போட்டிருக்கும் சட்டை, உள்சட்டையையும் சேர்த்து தலைக்கு மேலே கொண்டு வந்து அப்பாவை "ஜெயிலில் போட்டு" விட்டு அப்பாவை சுற்றி வந்து அவரை அழ வைத்தல்.


வீட்டுக்கு அருகில் இருக்கும் ஓடையிலிருந்து கண்டதையும் கொண்டு வந்து இலை தழைகளில் சுற்றி வைத்து அம்மாவுக்கு "அன்புப் பரிசு" ஆகக் கொடுத்தல், பல சமயம் அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய "அன்புப் பரிசு" மறந்து போய் படுக்கை/சாப்பிடும் டேபிள் மேலே பத்திரமாக இருக்கும்...

இன்றைய கடற் கொள்ளை விளையாட்டு நன்றாக இருக்கே என்று நான் நினைப்பதற்குள், சண்டை வந்து முந்தா நாள் விளையாடின விளையாட்டு வேறொன்று நடுவில் ஓடும்.

அவர்களின் சண்டையின் போது நான் சமரசம் செய்தால், செய்த இரண்டாம் நிமிடம் என்னை கேலி செய்தல்.

ஏன் இத்தனை லூட்டி என்றால், இந்த குழந்தைப் பருவம் முடிந்து விடப் போகிறதே என்ற கவலை அவர்களுக்கு.

இந்த கோடை விடுமுறை முடிந்து விடப் போகிறதே என்ற கவலை எனக்கு. உங்களையும் இழுத்துட்டு எப்படி தான் இந்தியா பயணம் போவேனோ, ப்ளேன் கதவை திறந்து நான் அண்டார்க்டிக் கடலில் குதிக்கப் போகிறேன் என்று அவர்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன்.

Wednesday, April 27, 2011

இருட்டு நிழல்கள்

போகிற பாதை தெரியாத இருட்டு
தொடர்ந்து வரும் கருப்பு நிழல்கள்
இருளில் கருப்பு இருட்டு உண்டோ?

பாதைகளில் பரமபதம்.
சோழி உருட்டுவதும் நானில்லை.
பாம்புகளின் வழுக்குதலில்
ஏணிகளின் கனவுகள்.

கோர உருவங்கள் கற்பனையில் வருமளவு
விகாரக் குரல்கள்.

எக்களிப்பில்,  ஆங்காரத்தில்,
உமிழ்ந்து வரும் வசைகளில்,
கண்ணீர் இருட்டைச் சுட வைக்கும்.

நான் என்னிடமிருந்து காணாமல் போவதற்குள்
எங்கேனும் வீடு திரும்ப வேண்டும்.
 

Friday, April 15, 2011

பெண் பார்க்கும் நாடகத்தில், பிள்ளைக்கு இவ்வளவு கஷ்டமா? (இயற்கை உலகம்)

பதிவைப் படிக்க வந்தீங்களா, சௌக்கியமா? நல்லா குந்திக்குங்க! கம்பியூட்டர் மானிட்டரு பொட்டி நல்லா தெரியுதா? தெரியலயின்னா சரி பண்ணிக்குங்க. படம் காட்டப் போறேன். படத்தில், இந்திய டிவியில், நேஷனல் ஜியாக்ரஃபி சானலில்   காட்டாத எதுவும் இல்லை, என்றாலும், இந்தப் படத்தை, பெற்றோர் குழந்தைகளுக்குக் காட்ட விருப்பம் இல்லை என்றால் இனி பார்க்க வேண்டாம்.

"இந்த காலத்தில, பொண்ணுங்களுக்கு என்ன சுதந்திரம்பா? அவங்களே பிள்ளைய பாத்துக்குறாங்க,  இஷ்டம் இல்லைனு சொல்றாங்க, எங்க காலத்துல..."னு சொல்றவங்களுக்கான ஸ்பெஷல் படம் இது.

எங்க வீட்டுல, பெற்றோர் தெளிவா இருந்தாங்க, "பிள்ளையோட பேசு, புரிந்து கொள், உனக்குப் பிடிச்சா தான் கல்யாணம்"னு பக்காவா, ஒரு குடம் காவேரி மணலை.. அவ்வ்வ்... தண்ணியை தெளிச்சு விட்டாங்க. (நான் வளர்கிற காலத்தில, தண்ணி இல்லை, மணல் தான் இருந்தது, இப்ப மணலும் காணோம்னு சொல்றாங்க!)

என் மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தது வீட்டுல. (என்கிட்டே அவ்வளவு பயம்னு யாரங்கே சொல்றது?:-)

பறவை / விலங்கு  / பூச்சிகளின் வண்ண உலகத்தில், பெற்றோராவது ஒண்ணாவது! அதுங்களே பாத்துக்கிட்டு போயிட்டே இருப்பாங்க! இந்த வண்ண உலகத்தில் பொய், புரட்டு கிடையாது.

ஆஸ்திரேலிய "மயில் சிலந்தி"களின் "பொண்ணு பார்க்கிற" நாடகம் இங்கே.பொறுமையா ஒவ்வொரு ஆண் சிலந்தியும் பெண்ணைக் கவர "காலைத் தூக்கி" நர்த்தனம் ஆடி, தொகை விரித்து... நீங்களே பாருங்க!படம் பார்த்தீங்களா? எப்படி இருந்தது? சொல்லிட்டுப் போங்க! நன்றி! (அப்புறம், புது டெம்ப்ளேட் எப்படி இருக்கு, "பதிவு அமர்க்களமா இருக்கு"ன்னு எல்லாம் சொல்லிடுங்க:-)