COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, January 17, 2009

கனம் கோர்ட்டாரே, நடந்த கொலைக்கு சாட்சியாக குற்றவாளியின் மூளை-மின்னலைகள்!

மளிகைக் கடைக்காரர் பழனிச்சாமி நம்ம பக்கத்து வீட்டுக்காரர் மருதைக்கு அளந்து எடுத்த சக்கரையிலிருந்து, மருதை பாக்காத போது கொஞ்சம் எடுத்து பழன்ஸ் உள்ளே போட்டுக்கறாரு. நாம பேசாம இருக்கோம். இதுவே, நமக்கு அளக்கிற சக்கரைன்னா பழன்ஸ் எடுத்துக்குவாரோன்னு கண்கொட்டாம பாக்கிறோம். நீதி, அநீதின்னு நம்ம மூளை எப்படி யோசிக்குது? நீதிமன்றத்திலோ, தினப்படி வாழ்க்கையிலோ, நீதி வழங்குவது எது? மூளை இதை எப்படி தீர்மானிக்குது? சட்ட வல்லுனராயில்லாத சாதாரண மனுஷன் ஒரு ஜூரராக (1) எப்படி குற்றத்தைக் கண்டுகொள்கிறார்?

இது பற்றி உலகம் முழுக்க பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மூளையிலுள்ள பல்லாயிரக்கணக்கான நுண்ணிய‌ செல்கள் தம்முள் இது சரி இது தப்புன்னு தீர்மானிக்கும் போது அதை ஸ்கான் செய்து (வருடி) பார்த்தா, மூளையின் எந்த பாகங்கள் நீதி/அநீதின்னு தீர்மானிக்குதுன்னு தெரிஞ்சுக்க வாய்ப்பு தானே! என்னது?! அதாங்க, மூளை மின்னலை வருடின்னு ஒரு கண்டுபிடிப்பு; ஒரு குற்றம் நடக்கும் போது, கேட்ட சப்தம், அந்த குற்றத்தைப் பத்தி குற்றவாளிக்குக் குறிப்பா தெரிந்திருக்கக் கூடிய விவரங்கள்... இதை குற்றவாளின்னு கருதப்படுபவர் கிட்ட சொல்ல வேண்டியது; அவருடைய மூளையின் சில பகுதிகளை இதை 'அட, ஆமா, அப்படித்தானே நடந்தது'ன்னு அடையாளங் கண்டு கொள்ளுதா? அப்படின்னா, இந்த குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியம்!!!

அமெரிக்காவின் நாஷ்வில் (டென்னஸி மாநிலம்)இல் உள்ள‌ வென்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பேராசிரியர் ஓவன் ஜோன்ஸ், நியுரோஅறிஞர்கள் ரெனெ மாரொய்ஸ், ஜாஷ்வா பக்ஹோல்ட்ஸ் இவர்கள் 16 தன்னார்வலர்களை சட்டத் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் போது fMRI (functional Magenetic Resonance Imaging) செய்து மூளையின் எந்த பாகங்கள் எப்படி இயங்குது, நியாயம் அநியாயம் தீர்மானத்தின் போது மூளை எப்படி இயங்குதுன்னு கடந்த வருடத்தில் - 2008 - ஆராய்ச்சி செய்துருக்காங்க (2). இவங்க ஆராய்ச்சியை குற்றம் சாட்ட பயன்படுத்தலை. ஆனா, இதே ஆராய்ச்சி வகையில், ஒரு மூளை அலை வருடி கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார், இந்தியா பெங்களூரு நிம்ஹான்ஸில் முன்னாள் க்ளினிகல் சைகாலஜி தலைவர்/பேராசிரியர் திரு. சம்பாதி ராமன் முகுந்தன் - அது பேரு BEOS (Brain Electrical Oscillations Signature test).

இதுல உலகைக் கலக்கும் நியுஸ் என்னான்ன சமீபத்தில், (அ) மஹாராஷ்ட்ரா புனேஇல், MBA மாணவி அதிதி ஷர்மாவுடைய பழைய காதலர் உதித் பாரதி, விஷங் கலந்த 'பிரசாதம்' சாப்பிட்டு இறந்தார். இதுல அதிதி, அவரோட இன்னாள் காதலர் ப்ரவீன் க்ஹான்டெல்வல் இவங்க சம்பந்தப்பட்டிருக்கலாம்னு அதிதியை 'பொய் அறியும் கருவி'யில சோதிச்சிருக்காங்க. அது தவிர‌ அந்த குத்தம் பத்தி விவரங்களைப் படிக்க படிக்க, அந்தம்மாவின் தலையில‌ BEOS வச்சு மூளை அலைகளை வருடி - 32 எலக்ட்ரோடு கொண்ட தொப்பி போட்டு, காதுல எலக்ட்ரோடு மாட்டி.. - கண்டதில், அந்தம்மாவுக்கு குத்தம் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க‌; (ஆ) மும்பையை சேர்ந்த பான் கடைக்காரர் அமின் ப்ஹோய், தன்கூட பணிபுரிந்த ராம்துலார் சிங்கை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட‌ கேஸிலும் BEOS ஐ பயன்படுத்தியிருக்காங்க. ரெண்டு கேஸ்லயுமே BEOS மட்டுமில்லாத சூழ்நிலைக் காரணங்களிலாலும் இரண்டு பேரையுமே குற்றவாளியாக இரு வேறு நீதிமன்றங்கள் சொல்லியிருக்கு. ஆனால், இந்த வருடி இயந்திரத்தை கண்டுபிடித்த திரு. முகுந்தன் முன்னாலே பணிபுரிந்த பெங்களூரு நிம்ஹான்ஸ்ஐச் சேர்ந்த இன்னொரு நியுரோ அறிஞரையும் (அப்படிப் போடு அருவாளை!) கொண்ட ஒரு குழுவே வருடியை வச்சு குற்றம் காணும் வழிமுறையை இப்போதைக்கு சட்டரீதியா பயன்படுத்த வேணாம்னு சொல்லியிருக்காங்க.

ஏன்? ஆராய்ச்சிக்கான / இந்த வருடியின் வழிமுறைகளில் குற்றம் இருக்கலாம்ங்கறாங்க. நிறைய மூளைகளின் நுண்ணலைகளை, புள்ளியியல் ஆய்வு மூலம் ஒப்புநோக்கி, இன்னும் எப்ப எப்ப என்னா மாறுதல் நடக்குதுன்னு அறிந்தால் தான் இந்த ஆராய்ச்சி முழுமை பெறும். இதுலியும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரி செயல்பட்டாலும், கொலைக்குற்றச்சாட்டு போன்ற உக்கிரமான சூழ்நிலையில் மனிதனின் உணர்வுகளும் அதனால் மூளையும் ஒரே மாதிரி தான் செயல்படும்னு எப்படி ஒப்புக்கறது? இந்த ஆராய்ச்சி தொடங்கி கொஞ்ச காலம் தான் ஆகியிருந்தாலும் இதன் பேரில் ஒருவரைக் குற்றம் சாட்டுவது சரிதானா? இந்த ரீதியில போனம்னா, வருங்காலத்தில‌ நீதியிலிருந்து, சாதாரண நட்பு வரைக்கும் என்னவெல்லாம் ஆகலாம்! இன்னபிற.

தரவுகள்
(1). இந்தியாவில் ஒரு வழக்கு நடக்கும் போது, நீதிபதியோ, நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்'ஓ விசாரிக்கும். அமெரிக்காவில், நம்மூர் பஞ்சாயத்து ஸ்டைல்ல 'ஜூரி' எனப்படும் மக்களால் ஆன நீதிக்குழுவும் நீதி வழங்கலாம். அமெரிக்கக் குடிமக்களுக்கு மட்டும் அனுமதி; யார் ஜூரர் ஆக இருக்கலாம்னு கேள்வி/சோதனை எல்லாம் செய்து வழக்குரைஞர்கள் தீர்மானிக்கலாம். இன்னும் இணையத்தில்

(2) இது அமெரிக்காவில் புகழ் பெற்ற தனியார் புரவலர் (charity) ஜான் டி. & காதரின் றி. மக்ஆர்தர் கழகம் வழங்கிய நிதியுதவியின் பேரில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற (எனக்கும் பிடித்த) ஸன்ட்ரா டே ஓ'கானர் மற்றும் ஸான்டா பார்பரா கலிஃபோர்னிய பல்கலையைச் சேர்ந்த நியுரோ அறிஞர் மைக்கல் கஃஜானிகா (Gazzaniga) இவர்களால் நிர்வாகிக்கப்படும் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய 10மிலியன் டாலர் (ஆராய்ச்சிக்கு இது ரொம்ப ஜுஜுபி) ஆராய்ச்சித்திட்டம்.

(3) நியுயார்க் டைம்ஸ்
(4) டைம்ஸ் அஃப் இன்டியா
(5) படம், செய்தித் தலைப்புக்கு நன்றி: வால்ஸ்ட்ரீட் ஜர்னல்
(6) http://www.nowpublic.com/world/indian-court-allows-brain-scan-evidence
(7) http://www.privacylives.com/india-brain-scan-can-be-evidence-of-guilt/2008/09/25/

Friday, January 16, 2009

தேடல்...

தொடராய்ப் போகும் தேடலுக்கு
'முற்றுப்புள்ளி' மூன்று முறை.
அதுவாய் இதுவாய்,
நேரத்துக்கு ஒவ்வொன்றாய்த்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
எப்போதும் தேடுவதற்கு
ஒன்று இருந்து கொண்டிருக்கிறது.
இல்லாவிடில் என்னாவேன்?

எண்ணச்சரம் பற்றி பழைய தேடலுக்கு
மீண்டும்.
மௌனம் மூடியது என் தேடல்,
என்றைக்காவது அது ஏன்
என்று எனக்குத் தெரியும் வரை...