COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, September 25, 2008

விதி வலியது (அ) காதல்(?) நேரம்

எதையும் எதிர்பார்த்துப் போன பயணம் இல்லை. போயே ஆக வேண்டும், வரவில்லை என்றால், ஒப்பந்தம் காலி என்று அதட்டி வரச் சொல்லியிருந்தார்கள். தெரிந்த ஊர் என்றாலும், குழந்தைகளை விட்டுப் போவதில் மனமே இல்லை. அவர்களை விட நான் தான் கண்ணீர் விட்டிருப்பேன். "சின்னது பொறக்கறச்சே கூட பெரிசை விட்டுட்டு இருக்க முடியாம மறுநாளே ஆஸ்பத்திரியை விட்டு வந்துட்டேன். இப்ப எப்படி?" என்பதற்கு பாற்கடலில் பள்ளி கொண்டு அனைத்தையும் அறிந்த ரங்கமணியின் புன்னகை பதில்.

விமானம் சிறியது. இதை விட சிறிய விமானத்தில் ஒருமுறை போயிருக்கிறேன். பாராடைவிங் செய்யும் போது. வாழ்க்கை நிலையற்றது எனக் காணும் விதமாக நிறைய டேப் ஒட்டி விமானத்தை ஒரு விதமாக நொறுங்கி விழாமல் வைத்திருந்தார்கள். அப்படியும் குதிக்க‌ பயந்து விமானத்துக்குள் இருந்து விடுவேனோ என்று தள்ளி விடவே ஒருவர் இருந்தார். அந்த அளவுக்கு இல்லை என்றாலும் இந்த‌ விமானத்தில் இரைச்சல் அதிகம். முன் சீட்டில் இரண்டு ஆண்கள், கைகளில் சீட்டுக் கட்டு, சாப்பாடு, தண்ணீர். அந்த பக்கம் முன்சீட்டில் ஒன்று காலியாக இருந்தது. மிகுந்த சப்தம் போடுகிற, எல்லாரிடமும் ஹலோ, சௌக்யமா என்று உரிமையுடன் கேட்கிற தோரணையுடன் (எனக்கு முன்முடிவுகள் ஜாஸ்தி) ஒரு கறுப்பு ஆண் அங்கு வந்து கடைசிப் பயணியாக அமர்ந்தார். போய்ச் சேரும் இடத்தில், கறுப்பர்கள் அதிகம். அதனாலோ என்னவோ, விமானத்தின் ஒரே "பணிப்பெண்"ணும் கறுப்பர். யூ.எஸ்.ஸின் தென்பகுதியில் எங்கே வளர்ந்தவர் என்று கேட்காமலே சொல்லக்கூடிய அமைதியும் பாங்கும். மணமாகாதவர் என்று தெரிந்தது.

சரி ஏதோ பத்திக்கும், நமக்கும் பொழுது போகட்டுமேன்னு நினைத்தேன். அதற்கேற்றாற் போல், அந்த கறுப்பர் பயணத்தின் மூன்று மணி நேரங்களும் பேசிக் கொண்டே வந்தார். நான் கையோடு வைத்திருந்த புளிசாதம் சாப்பிட்டேன், பேசினார். தண்ணீர் கேட்டேன், பேசினார். அந்த பணிப்பெண் "தண்ணீர் பாட்டில் இரண்டு டாலர்" என்றார், உடன் எனக்கு விக்கல் வந்தது, அப்பவும் பேசினார்... என்ன, "உனக்கு வேலை பிடித்திருக்கிறதா, என்ன செய்கிறாய், எப்படி பொழுது போகும்" என்ற ரீதியில் (எனக்குக் காதில் விழுந்தது அவ்வளவு தான்).

இதற்குள் எனக்கு முன்னால் இருந்த ஆண்கள் சாப்பாடு முடித்து, கையோடு வந்த தண்ணீர் குடித்து, சீட்டு ஆட ஆரம்பித்தனர். சீட்டாட்டத்தில் யார் தோற்கிறார்களோ அவர் மற்றவருக்கு முத்தம் தர வேண்டும் என்று அவர்களுக்குள் விதி போல். விதி யாரை விட்டது?

பயணத்தின் இறுதியில் அந்த பணிப்பெண் அம்மாவை அம்போ என்று விட்டு விட்டு அந்த கறுப்பு இளைஞர் லக்கேஜுக்காக காத்திருக்கும் போது இன்னொரு குறுகுறுப்பழகியோடு கடலை வறுத்துக் கொண்டிருந்தார்.

எல்லாம் நேரம்!