COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, April 27, 2011

இருட்டு நிழல்கள்

போகிற பாதை தெரியாத இருட்டு
தொடர்ந்து வரும் கருப்பு நிழல்கள்
இருளில் கருப்பு இருட்டு உண்டோ?

பாதைகளில் பரமபதம்.
சோழி உருட்டுவதும் நானில்லை.
பாம்புகளின் வழுக்குதலில்
ஏணிகளின் கனவுகள்.

கோர உருவங்கள் கற்பனையில் வருமளவு
விகாரக் குரல்கள்.

எக்களிப்பில்,  ஆங்காரத்தில்,
உமிழ்ந்து வரும் வசைகளில்,
கண்ணீர் இருட்டைச் சுட வைக்கும்.

நான் என்னிடமிருந்து காணாமல் போவதற்குள்
எங்கேனும் வீடு திரும்ப வேண்டும்.
 

Friday, April 15, 2011

பெண் பார்க்கும் நாடகத்தில், பிள்ளைக்கு இவ்வளவு கஷ்டமா? (இயற்கை உலகம்)

பதிவைப் படிக்க வந்தீங்களா, சௌக்கியமா? நல்லா குந்திக்குங்க! கம்பியூட்டர் மானிட்டரு பொட்டி நல்லா தெரியுதா? தெரியலயின்னா சரி பண்ணிக்குங்க. படம் காட்டப் போறேன். படத்தில், இந்திய டிவியில், நேஷனல் ஜியாக்ரஃபி சானலில்   காட்டாத எதுவும் இல்லை, என்றாலும், இந்தப் படத்தை, பெற்றோர் குழந்தைகளுக்குக் காட்ட விருப்பம் இல்லை என்றால் இனி பார்க்க வேண்டாம்.

"இந்த காலத்தில, பொண்ணுங்களுக்கு என்ன சுதந்திரம்பா? அவங்களே பிள்ளைய பாத்துக்குறாங்க,  இஷ்டம் இல்லைனு சொல்றாங்க, எங்க காலத்துல..."னு சொல்றவங்களுக்கான ஸ்பெஷல் படம் இது.

எங்க வீட்டுல, பெற்றோர் தெளிவா இருந்தாங்க, "பிள்ளையோட பேசு, புரிந்து கொள், உனக்குப் பிடிச்சா தான் கல்யாணம்"னு பக்காவா, ஒரு குடம் காவேரி மணலை.. அவ்வ்வ்... தண்ணியை தெளிச்சு விட்டாங்க. (நான் வளர்கிற காலத்தில, தண்ணி இல்லை, மணல் தான் இருந்தது, இப்ப மணலும் காணோம்னு சொல்றாங்க!)

என் மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தது வீட்டுல. (என்கிட்டே அவ்வளவு பயம்னு யாரங்கே சொல்றது?:-)

பறவை / விலங்கு  / பூச்சிகளின் வண்ண உலகத்தில், பெற்றோராவது ஒண்ணாவது! அதுங்களே பாத்துக்கிட்டு போயிட்டே இருப்பாங்க! இந்த வண்ண உலகத்தில் பொய், புரட்டு கிடையாது.

ஆஸ்திரேலிய "மயில் சிலந்தி"களின் "பொண்ணு பார்க்கிற" நாடகம் இங்கே.பொறுமையா ஒவ்வொரு ஆண் சிலந்தியும் பெண்ணைக் கவர "காலைத் தூக்கி" நர்த்தனம் ஆடி, தொகை விரித்து... நீங்களே பாருங்க!படம் பார்த்தீங்களா? எப்படி இருந்தது? சொல்லிட்டுப் போங்க! நன்றி! (அப்புறம், புது டெம்ப்ளேட் எப்படி இருக்கு, "பதிவு அமர்க்களமா இருக்கு"ன்னு எல்லாம் சொல்லிடுங்க:-)


Friday, April 08, 2011

மக்கள் சக்தி ஆளும் மன்னர்களுக்குத் தெரியட்டும்!

சின்ன வயசில இருந்து 'அரசியல்னா சாக்கடை, அரசியல்வாதி கிட்ட வம்பு வைக்காதே'ன்னு சொல்லி வளர்த்திருப்பாங்க, இல்ல 'தம்பி, ஓங்கினவன் கைய ஒடச்சிட்டு வந்தாத்தானே நாளைக்கு அரசியல்ல பெரிய ஆளா வர முடியும்'னு சொல்லி வளர்த்திருப்பாங்க. ஒரு பக்கம் அடிமாடுகளா வளர்கிறோம், இல்லையென்றால் அடியாள்களாக வளர்க்கப்படுகிறோம்!

எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம். எங்கள் திருமணம் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னால நடந்தது, அதுக்கு சர்டிஃபிகேட் வாங்க நடையா நடந்தார் என் கணவர். இந்த சான்றுப் பத்திரம் வாங்க லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு அவருக்கு ஒரு வீராப்பு. அஞ்சு நாள் அந்த ஆபிசர் முன்னால உட்கார்ந்திட்டு வந்ததால், ஆபீசர் வெறுத்துப் போய் லஞ்சம் வாங்காமல் அந்த பத்திரத்தைக் கொடுத்திட்டார். ஒரு பத்திரத்துல கையெழுத்துப் போடத் தானே அரசாங்கம் அவருக்குச் சம்பளம் கொடுக்குது? எதுக்கு நாம மேல போட்டுக் கொடுக்கணும்?

ரேஷன் கடையில நின்னு சாமான் வாங்கியிருக்கீங்களா? சின்ன வயசில நான் வாங்கியிருக்கேன். நான் பார்த்த போதெல்லாம், நடப்பது இது தான்: ரேஷன் கடை ஊழியருக்கு வேண்டிய ஆள்னா, க்யூவுல நிக்க வேண்டாம். நல்ல அரிசி வந்தா, வேண்டியவங்களுக்குத் தான் போகும். ஏன்?

நேத்தைக்கு ஒருத்தர் நொந்து போய் ட்விட்டர்ல எழுதுறாரு: 'லோ வோல்ட்டேஜ் கரன்ட்டா இருக்கு. யாரச் சொல்லி என்ன பிரயோசனம்? தெரிஞ்ச கவுன்சிலர் கிட்டச் சொல்லணும்' என்று! 'தெரிஞ்ச கவுன்சிலர்' கிட்ட சொன்னா, அவர் நமக்கு உதவி செய்ய அவருக்கு என்ன முகாந்திரம்? கரன்ட் சரியா வர வைக்க எல்லாரும் அவங்க-அவங்க கவுன்சிலர் கிட்ட போனா என்ன ஆவும்? 'யாரு நிறைய எனக்கு லஞ்சம் கொடுக்கிறாங்களோ, யாரு எனக்கு வேண்டப்பட்டவங்களோ அவங்களுக்குத் தான் நான் உதவுவேன்' அப்படின்னு சொல்லப் போகிறார்?

தெரிஞ்ச விஷயம் தானே? பூனைக்கு யார் மணி கட்டப் போறாங்க? படிச்சவங்களாச்சும் அரசியலைத் தூய்மைப் படுத்தி, 5 வருடம் இருந்து, பாலம் கட்டுறது; ரோடு பள்ளம் சரி செய்யிறது; பென்ஷன் வாங்கித் தரதுன்னு முயற்சி செய்து கொடுத்தால் தான், நம் கட்டமைப்பில் இருக்கும் பிரச்னைகள் என்னன்னு தெரியும்; கட்டமைப்பின் ஓட்டைகள் சரியாகும்!

படிச்சவங்க ஏற்படுத்தின அமைப்பு இந்த அரசாங்கம். இதுல ஏன் இத்தனை ஊழல்? அரசாங்கத்துக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் எப்படி வந்தது? 

ராசாவா இருக்க வேண்டிய ஒரு மந்திரி 'மக்களுக்காக அரசாங்கம் புதுக் கடையத் திறந்திருச்சு, ஆனா, அப்படித் திறந்திருச்சுன்னு ஒரு மாசம் கழிச்சுச் சொன்னா, எனக்கு வேண்டிய ஆளுங்க வந்து அந்த ஒரு மாசத்துக்குள்ள வேண்டிய சாமானை எடுத்திட்டுப் போவட்டும்'னு லட்சம் கோடின்னு மாய்மாலம் பண்றாரு. ஆனால், அவருக்குக் கையூட்டாக பணம் வந்ததுன்னு, 'மவனே'ன்னு அந்த சிவனே வந்து தீர்ப்பு சொன்னாலும், வந்த கையூட்டுப் பணத்தை மந்திரி திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை!

இந்தியாவில் மாற்றம் ஏற்படணும்னு, லஞ்சம் ஊழலை எதிர்த்து நல்ல மனுசங்க சேர்ந்து தோற்றுவித்த இயக்கம் இந்த மக்கள் சக்தி இயக்கம்!!  இந்த இயக்கம், நம்மால மாற்றம் ஏற்படுத்த முடியும்னு படிச்ச / படிக்காத நல்லவர்களை வேட்பாளர்களா நிறுத்தியிருக்கு. வேட்பாளர்கள் விவரம் இங்கே இருக்கு. வோட்டுப் போடுங்க! மாற்றத்தை ஏற்படுத்துங்க!

தமிழ்நாட்டில், 15 மாவட்டங்களில் 35 தொகுதிகளில் மக்கள் சக்தி இயக்கம் போட்டியிடுகிறது. லோக்சத்தாவோடு கையிணைத்து மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும்னு நம்புகிறது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவங்க, சட்டசபைக்குப் போயிட்டு வந்தவங்க, நம்ம கட்டமைப்புல இருக்கிற‌ பிரச்னைகளை எடுத்துச் சொல்ல மாட்டேன்றாங்க. மக்கள் சக்தி இயக்கம் சொல்லட்டும். மாற்றம் ஏற்படட்டும்.

மக்கள் சக்தி இயக்கம் போட்டியிடும் இடங்களில் நீங்களோ, உங்கள் உறவினர்களோ வசித்தால், என் மனமார்ந்த பணிவான வேண்டுகோள் இது! நீங்க என்னை விட வயசிலே பெரியவங்கன்னா, உண்மையான பணிவோட, வணங்கிக் கேட்டுக்கிறேன், வயசில் சின்னவங்க - ஓட்டுப் போடும் வயசா இருந்தால், காலரைப் பிடித்துக் கேட்கிறேன் - வோட்டுப் போடுங்க! மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடுங்க!

வோட்டுப் போடும் வயசு வரலைன்னா, முத வேலையா உங்க வீட்டுப் பெரியவங்களை வணங்கி, அதட்டி, கெஞ்சி, மிரட்டி எப்படியாவது வோட்டுப் போட வைங்க. எதிர்காலம் உங்களுதுன்னா, உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய‌ணும்னா, லஞ்ச ஊழலற்ற பெரிய நாடா இந்தியா வரணும்னா, மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடச் சொல்லுங்க.

மாற்றத்துக்கு வோட்டுப் போடுங்க! 
மறுமலர்ச்சிக்கு வோட்டுப் போடுங்க!
மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடுங்க!

PhD படித்த, கோவை பல்கலை முன்னாள் துணைவேந்தர், RECT/NITT முன்னாள் முதல்வர் திரு. இளங்கோ, இந்தத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில நிற்கிறார்.

விஜய் ஆனந்த், அமெரிக்க வாழ்க்கையைத் துறந்து, 5th Pillar என்கிற இயக்கத்தைத் தொடங்கிட்டு, இப்ப மக்களுக்காகப் பயனுள்ளதா செய்யணும்னு கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் இந்தத் தேர்தலில் மக்கள் சக்தி இயக்கத்துக்காகப் போட்டியிடுகிறார்.

மக்கள் சக்தி இயக்கத்துக்காக, ஐந்தாம் வகுப்புப் படிச்சவங்களும் தேர்தல்ல நிக்கிறாங்க, MBA/LLB படிச்சவங்களும் தேர்தல்ல நிக்கிறாங்க, மாற்றம் ஏற்படுத்தச் சொல்லி வோட்டுப் போடுங்க!