COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sunday, March 21, 2010

நம்முள் நிறைந்தது ஏதிலியானது!

எல்லாமானது என்னுள்ளும் நிறைந்தது.
எதுவுமே இல்லாமல் என்னுள் கரைந்தது.
தீயினிடை நீண்ட‌
இருள் நாவுகளாய்,
இருட்டினிடை ஒளிர்ந்த
வண்ண நினைவுகளாய்,
அறியாமையினின்றும் வளர்ந்து தெளிந்த
என் ப்ரம்மம்.

ஆழ்ந்த உள்ளில்,
மறுமொழி இல்லா கேள்விக‌ளின்
ஊடாய்க் கிளர்ந்த‌ அறியாமை.
தாழ்வும் உயர்வுமாய்
ஒன்றாய் இரண்டாய் விரிந்ததுவும் அதுவே தான்.

வெறுமையில் விளைந்தது
முழுமையில் கரைந்தது.
அறியாமையின் சூலில்
பிறந்த அறிவின் முடிவில்
இருக்கும் ப்ரம்மம்.
அதை அறிந்தோர் ஊழும்
விட்டிலின் விதியே.

Sunday, March 07, 2010

விளையாட்டின் வினை (Game Theory) - 1 / மேலாண்மை துறை

சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன்: நூற்றில் ஒருத்தி என்று ஒரு படம் வெளியாகுதுன்னு வைச்சுக்குவோம். அந்த படத்தைப் பத்தி நண்பர்கள் சொல்றாங்க. பதிவர்கள் எழுதறாங்க. பதிவர்கள் எழுதினதைப் பாத்துட்டு படம் பாத்துட்டு வந்தேன், நல்லாவே இல்ல என்று ஹாலிவுட் மாலா கோலா குடிச்சிட்டே எழுதறாங்க. அதைப் பாத்துட்டு இன்னும் 10 பேரு படத்தைப் பத்தி எழுதுறாங்க.

இந்த படம் மட்டும் தானா? நித்தியானந்தா கேஸ்ல பதிவர்கள் எப்படியெல்லாம் எழுதித் தாக்க‌றாங்க‌?! ஒரு ப‌திவ‌ர் சொல்வ‌து ப‌த்தி இன்னொருத்த‌ர் எழுத‌றாரு. அதைப் பார்த்துட்டு இன்னும் சில‌....

போலி ப‌திவ‌ர்க‌ள் விவ‌கார‌த்திலும், நற் குடிப் பெண்கள் விவகாரத்திலும் பதிவுகள் பதினாறானது அப்ப‌டித்தானே....?

இதுக்கும் மேலாண்மைக்கும் என்ன‌ தொட‌ர்பு?

மேலாண்மை என்கிற‌ ஆணீய‌ச் சொற்றொட‌ரிலேயே ஒன்று பத்தாகி பதினாறாகும் வித்தையைச் செய்வது யாருன்னு தெரியுதுன்னு சொல்கிற‌ பெண் ப‌திவ‌ர்க‌ளே: கை கொடுங்க‌:-) அப்புற‌ம் பார்ட்டிக்குப் போக‌லாம்:-)

ப‌ங்குச் ச‌ந்தையிலியும் அப்ப‌டித் தானே! ஒரு செய்தியை வ‌ச்சு ஒரு ப‌ங்கின் விலை மேல‌யோ, கீழ‌யோ போகுது. இன்னும் வேணும்னுட்டு ஒரு ப‌ங்கின் விலையை ஏற‌, இற‌ங்க‌ச் செய்ய‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வைக் கிள‌ப்ப‌ செய்திக‌ளே போதுமே!

ஒரு க‌ம்பெனியில‌ வேலை செய்றீங்க‌. இன்னுமொரு நாட்டில் இருக்கும் சின்ன‌ க‌ம்பெனி நல்லா வியாபாரம் செஞ்சிட்டிருக்கு . அந்த கம்பெனியை உங்க‌ முத‌லாளி வாங்க‌ப் போறாரு. அந்த‌ க‌ம்பெனியை வாங்கினால், நீங்க‌ இன்னுமொரு நாட்டில் வியாபார‌ம் செய்ய‌லாம். செய்தால், உங்க‌ளின் க‌ம்பெனி ப‌ங்குக‌ள் இன்னும் பெரிய‌ அள‌வு ஆக‌லாம். ஆனால், அந்த‌ க‌ம்பெனியை வாங்கினால், நீங்க‌ள் த‌லைமை வ‌கிக்கும் டிபார்ட்மென்டின் வேலை குறையும், ஆட்குறைப்பு ந‌ட‌க்க‌லாம்.

நீங்க‌ ந‌ல்ல‌வ‌ர்ன்னா, என்ன‌ செய்வீங்க‌: ஆட்குறைப்பைத் த‌டுக்க‌ இந்த‌ சின்ன‌ க‌ம்பெனியைப் ப‌த்தின‌ எல்லா கெட்ட‌ ந்யூஸையும் வெளியிடுவீங்க‌ ... வேற்றாட்க‌ள் மூல‌மா.

நீங்க‌ கெட்ட‌வ‌ர்ன்னா, இந்த‌ க‌ம்பெனியை வாங்குவ‌தால் உங்க கம்பெனியிலியே எந்த‌ டிபார்ட்மெட்ன்ட் ந‌ல்ல‌ ப‌ய‌ன் அடையுமோ, அந்த‌ டிபார்ட்மென்ட் த‌லைவ‌ரை கையில் போட / இல்ல, அவர் தலையில் மிளகாய் அரைக்க‌ப் பார்ப்பீங்க‌?

ஙே?

வியாபார‌த்தில‌ ந‌ல்ல‌வ‌ர் என்ன‌, கெட்ட‌வ‌ர் என்ன‌ங்க‌? சொல்லுங்க‌, எந்த‌ வ‌ழி உங்க‌ வ‌ழி?

விளையாட்டு தொட‌ரும்....

Friday, March 05, 2010

குட்டிக் குறும்புக‌ள்

என‌க்கு இர‌ண்டு வாண்டுக‌ள் வீட்டில். என் வாழ்க்கையின் மாறா வ‌ச‌ந்த‌ங்க‌ள். இந்த‌ பூக்க‌ளின் கால‌டியில் நான். அத‌னாலேயே அப்ப‌ப்ப‌ இவ‌ர்க‌ள் செய்யும் லூட்டியை எழுதி வைத்துக் கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து.


பெரிசு சொல்வ‌து:

“அம்மா, தொண்டைக்குள்ள என்னவோ வலிக்கிறது!”

“ஏம்பா என்ன செய்யிறது?”

“தெரியலியே, தலையை தொண்டைக்குள்ளியா விட்டுப் பாக்க முடியும்?”


சின்ன‌து:

“அம்மா, நீ வீ (நிண்டண்டோ விளையாட்டு) விளையாட்டு நல்லா விளையாடத் தெரியலயேன்னு வருத்தப்படாதே. நீ ப்ராக்டிஸ் பண்ணலையே அதனால் தான். நீ ரொம்ப ஸ்மார்ட் கேர்ல். சீக்கிரம் இதெல்லாம் கத்துக்கலாம்”.


பெரிசு: பெரிசு தன் ஆசிரியை பற்றிச் சொன்ன ரகசியத்தை நான் குழந்தைகளின் அப்பாகிட்ட சொல்லிட்டேன். அதுக்கு ”ஒரு ரகசியத்தைக் கூட தலையில ரகசியமா வச்சுக்கத் தெரியல! மண்டு! நான் சொன்னது எல்லாம் ம‌ண்டையிலிருந்து அழிச்சுடு”


சின்னது செய்ததைப் பார்த்து பெரிசுக்கு ஏதோ பொறாமை. அதனால் பெரிசு கிட்ட, உணர்வுகளை ஆற்றுப் படுத்தும் வகையில் ஏதோ பேசினேன். பிறகு என்னிடம் சின்னது வந்து “அம்மா, நான் க்டைசியா இருக்கறதைப் பத்தி கவலைப்படலை. ஏனெனில், ‘பெரிசு’இன் உணர்வுகளை நான் மதிக்கிறேன். பல விஷயங்களில், சிலசமயம், நான் முதலாவது சிலசமயம் 2வது ஏன் கடைசியாக் கூட நான் இருக்கலாம். அதனால் என்ன? எனக்கு ‘பெரிசு’ மேல இருக்கும் அன்பு தான் முக்கியம்” இதைச் சொன்னபோது சின்னதுக்கு வயது 4.


பெரிசு:
”அம்மா, இந்த லிப்ஸ்டிக்கெல்லாம் எப்படி தான் போட்டுக்கிறியோ? ஒண்ணுமே டேஸ்ட் நல்லாயில்ல்... (என் முறைப்பைப் பார்த்து விட்டு) நெவர் மைண்ட். அப்பா தான் அப்படி சொல்லச் சொன்னார்.............!"