COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, November 27, 2008

மும்பை கோரம்

மிகுந்த மனவருத்தத்தோடு, என் தாயும் அவள் மக்களும் வந்த விருந்தினர்களும், கண்ணீர் வடிப்பதையும் இறப்பதையும் நோவதையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நானும் கண்ணீர் வடித்துக் கொண்டு. எல்லா செய்திகளையும் படித்துக் கொண்டு. உயிரீந்த தலைமகன்களையும் வணங்கிக் கொண்டு. விளக்கேற்றி, கடவுளே இந்த கோரம் விரைவில் முடிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு.

என் மண்ணில் என் மக்களை வீழச் செய்பவர்களை இந்த அளவுக்கு வளர விட்டது எது? கப்பலில் வந்து படகுகளில் வந்து, ஹோட்டல்களுக்கும் உள்ளே வர விட்டது எது? இந்தியாவில் வன்முறை என்று காட்டுவதால் எங்கள் வாணிபம் குறைந்து விடும் என்ற எண்ணமா? இல்லை நம் மடமையா?

இன்னும் நரிமன் ஹவுஸில் எம் இந்திய இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரிலிருந்து குதிப்பதைப் பார்த்துக் கொண்டு; ஓர் அன்னையாய், அவர்களை, செயலில் வெற்றி பெறவும், "என் ஆயுசையும் சேர்த்து நீடுழி வாழ்!" என்றும் என் மனமார வாழ்த்திக் கொண்டு - எம் இந்திய மாவீரரின் மதம், இனம் என்னவாயிருந்தாலும்.



போதும்.




செய்திகள்
NDTV
Rediff
சமாசார் தொகுப்பு
தட்ஸ்தமிழ்

NDTV தொலைகாட்சி

Friday, November 21, 2008

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை: நாளைய வல்லரசுகளில் இந்தியா, சீனா உண்டு, அமெரிக்கா இல்லை?

புதிசா எங்க ஊருக்கு ஜனாதிபதி வரும்போது, உளவுத்துறை அவரிட்ட, "இந்தாப்பா, இதான் இந்த ஊரு நிலைமை. செக்புக்குல கிழிக்கிறதுக்கு முன்னால, இதான் பாஸ்புக்கு"னு ஒரு அறிக்கை கொடுத்துடுவாங்க. இதே மாதிரி புஷ் ஐயா கிட்டயும் 4 வருடத்துக்கு முன்னால கொடுத்துருக்காங்க, அப்ப, 2004இன் பழைய அறிக்கையில், சப்ஜாடா "அமெரிக்கா 2020 வருடத்திலும் வல்லரசாகத் திகழும்"னு 'விட்டுருக்காங்க'.

4 வருடங்களில் எத்தனை மாறுதல்? அடுத்த வருடம் பதவி ஏற்கப் போகும் ஓபாமா கிட்ட கொடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், "2025க்குள் அமெரிக்கா வல்லரசாக இருக்காது. அரசியல், பொருளாதாரப் பேரரசுகளாய் இந்தியாவும் சீனாவும் இருக்கும்"னு சொல்கிறாங்க. போன அறிக்கையை நம்பிட்டோம், அதனால் இந்த அறிக்கையையும் நம்பிடுவோம்!

முக்கியமான கணிப்புகள்:

1. நாடுகள், சிறு நாடுகள், சின்னஞ்சிறு அரசாங்கங்கள் என்று மாறிவரும் அரசியல் பின்புலத்தில், ஐ.நா. போன்ற நிறுவனங்களின் மேலாண்மை இனி மிகக் கடினம். இப்ப மட்டும் என்ன கிழிச்சதாம்!

2. 2025க்குள் இந்தியா, சீனா வல்லரசுகளில் அமையும்; துருக்கி, இந்தனேஷியா, இரான் இவை வளர்ந்து வரும் நாடுகளில் வல்லமை பொருந்தியவையாய் இருக்கலாம். லாம்க்கு அர்த்தம் இவற்றின் தீவிரவாதப் போக்கு தணிந்தால்.

3. அரசியல் மாற்றங்களில், பொதுவுடைமை கொள்கையை விட இன்றைக்கும் சீனா, ரஷ்யா பின்பற்றும் அரசுசார் பொருள்முதல்வாதமே பொதுவாய் விரும்பப்படும் கொள்கையாய் இருக்கும். ஜனநாயக‌ பொருள்முதல்வாதம் மெதுவாய் மடியலாம். இங்கியும், எந்த தூரத்துக்கு, ஜனநாயக‌ பொருள்முதலான அமெரிக்க அரசாங்கம் தன் ஏழைக் குடிகளைக் காக்க வேண்டும்னு வாதம் நடந்திட்டு இருக்கு. அரசாங்கம் - எனவே அதன் கடமைகள், இருத்தலியல்னு வரும்போது, தனியார் கம்பெனி லெவல்ல போயிட்டு தான், மானுடம் வழிமாறும்னு தோணுது. இதைப் பத்தி இந்த புத்தக விமர்சனங்களிலும் பார்க்கலாம்.

4. வருகின்ற புதிய சமுதாயம் இளைய சமுதாயமாக இருக்கும். ஒளி படைத்த கண்ணினாய் வா வா!

பிற்சேர்க்கை: For whatever it is worth.

அ) இடதுசாரி என்று சிலரால் கருதப்படுகிற NPR வானொலி அலைவரிசையில் நான் கேட்ட செய்தியை, NPR இன் இணையதளத்தில் கண்டது; வரலாறும் மாறும் காலமிது:-)



ஆ) நவம்பர் 20, 9மணியளவில் கூகிள் கேஷ் (நினைவுப்பெட்டகம்?)இல் சேமிக்கப்பட்ட இணைய தளப் பக்கத்திலிருந்து, தரப்பட்ட சுட்டி. சுட்டி மாறியிருக்கலாம். ஆனால், இந்த அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில், அமெரிக்கா வல்லரசுகளில் ஒன்றாயிருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Sunday, November 16, 2008

ஆதம் ஸ்மித்தின் பிழை என்ன? மா.சி. க்கு மறுமொழி

ஆதம் ஸ்மித்தின் வரலாற்றுப் பிழை என்றொரு பதிவு நான் விடாமல் படிக்கும் மா. சிவகுமார் அவர்களிடமிருந்து. அதுக்கு என் மறுமொழி (5 பக்கம் இல்லை, 5 பத்தி).

ஆதம் ஸ்மித் சொல்வது இது தான் ‍(ஓரளவு மா.சி. யின் பதிவிலிருந்து வெட்டி எடுத்திருக்கிறேன்): "தனி மனிதர்கள் தத்தமது சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் போது சமூகத்துக்குத் தேவையான பணிகள் நடந்து விடுகின்றன". இனி நான்: ஆதம் ஸ்மித்தின் சான்றுகளாய்ச் சொன்னது இது தான். "கசாப்புக் கடைக்காரர், ரொட்டி செய்பவர், சாராயக் கடைக்காரர் (டாஸ்மாக்!) யாரும் நம்முடைய நன்மைக்காக நமக்கு சோறு (சோத்துல ஏதுய்யா சாராயம்) போட்டு விடப்போவதில்லை; அவுங்களுக்கும் இதுல சுயநலம் இருக்கறதுனால, அவங்கவங்க வேலையப் பாக்கறாங்க". நாமும் தேவையானதை வாங்கி, தேவையானதை சாப்பிடுறோம் என்று புரிஞ்சுக்கணும். பொருளியலில் நோபல் பரிசு பெற்ற மில்டன் ஃப்ரீட்மென், ஆதம் ஸ்மித்தின் கோட்பாட்டைப் பற்றி "அதிகார துஷ்பிரயோகம் இல்லாத சமூக ஒத்துழைப்பு"ன்னு சொல்கிறார். இதுல சுயநலம் மட்டும் இருக்கா? சுயநலம் மட்டும்னு இருந்தால், ரொட்டி செய்பவர் ஒரேயடியா விலை வைக்க முடியாதா? அவர் ஏன் ரொட்டி செய்யணும்? அரசியல்வாதியானாப் போதுமே. ரொட்டி செய்யற கத்தியால ஒரே போடாப் போட்டு:‍) . இல்லீங்க, ஜோக் அடிக்க முடியலை இதப் பத்தி.

தொழில் செய்றோம். நம்மை மாதிரி நாலு பேரு தொழில் செய்ய ரெடியா இருப்பாங்க. பதுக்கல், கள்ளக் கடத்தல் இல்லாத இடத்துல, நேர்மையா போட்டி போட்டு நமக்கான சுயநலம் (நம் குடும்பத்தையும் சார்ந்தது) காட்டுற வழியில் வாழறோம். இதுல, ஆதம் ஸ்மித்தின் கோட்பாடு "சமூக நலத்தின் உருவற்ற கை தான் சுயநலம்"! ஒரு பொருளின் விலை அதற்கான வியர்வையின் விலை தான். என் வயித்தை மட்டும் பாக்கப் போறதில்லை. கொஞ்சம் சம்பந்தமில்லாத மாதிரி ஒரு மேற்கோள்: ஒரு சமயத்தில், அண்ணன் கமலகாசன் (ஸ்மித் சுமித்தானால், ஹா, காவாகும்:-) சொன்னாரு, "நான் சினிமாவில் செலவழிக்கறதுக்கு பதிலாக, வீட்டுக்குள் ஒரு நீச்சல் குளம் கட்டியிருக்கலாம்". இரண்டுமே சுயநலம் தான். இரண்டிலும் மனித உழைப்பு இருக்கப் போகிறது. ஒன்றில் மற்றதை விட நுகர்வோர் அதிகம்.

ஆதம் ஸ்மித் மட்டும் இன்றைக்கு நம்மை இங்கே கொண்டு வரவில்லை. ராபர்ட் அவன் (1771 -1858), போன்ற பலரும் வழி நடத்தினாங்க (அவர் பேரே அவன் தான், அதுக்காக அவர்ன்னு மாத்த முடியாது) - தொழிலாளிகளை "ஓரளவு" மரியாதையுடன் நடத்தி அதாவது, நல்ல உணவு, இருப்பிடம், உடல்நலம் பேணும் வகையில் நடத்தினால், உற்பத்தி அதிகரிக்கும்னு காமிச்சாரு. இது பத்தி ஊரு ஊராப் போயி பிரசாரம் செஞ்சாரு. தொழில் சார்ந்த சுயநலத்தால் சமூகநலம் விளையும்! அத்தோட‌, 1824இல், யு.எஸ் போய் அங்க 30,000 ஏக்கர் இந்தியானா மாநிலத்தில் வாங்கி வீடு குடியிருப்புகள் செய்திருக்காரு. (எனக்கு ஒண்ணு ரெண்டு எழுதிவச்சிருக்கலாம், ஏனா? அவரைப் பத்தி நான் எழுதி வைக்கறதுனால!) "கட்டு. கட்டினா வருவாங்க"ன்னு ஆரமிச்சு வைச்சிருக்காரு. இந்த குடியிருப்பின் தோல்விக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது: "உயர்ந்த கருத்துக்கள் கொண்டிருந்தாலும், எண்ணங்களால் வேறுபட்ட மானுடம் தன் சுயத்தைக் காக்கும் முயற்சிகளால் தோற்கடிக்கப்பட்டது".

கார்ல் மார்க்ஸ் சொல்வது என்னா? "இன்றைக்கு தொழிலதிபர்கள் ஊழியருக்குக் கொடுக்கும் சம்பளம் அவருக்கு வெளியில எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு தான். செய்யப்பட்ட பொருளின் மதிப்பு ஊழியர்களின் வேலையால் விளைந்தது". என்னால எளிமையா கார்ல் மார்க்ஸின் தத்துவங்களைச் சொல்ல இப்போ முடியும்னு தோணலை. ஆனால், பொதுவுடைமை கருத்துக்களை முன்வைத்த மார்க்ஸின் கோட்பாடுகளை இன்றும் எந்த கம்யூனிஸ்டு நாடும் முழுமையாக எடுத்துக்கலை. இதுபற்றி நிறைய கட்டற்ற இணையத்தில். இன்றைக்கு நடக்கும் பொருளாதார கஷ்டங்கள், கயிற்றின் மேல் நடக்கும் போது ஆகிற அட்ஜஸ்ட்மென்டு. பொருளாதார தியரிகள் அதைத் தான் சொல்கின்றன.

அதைத் தவிர‌, பலரும் சேர்ந்து ஆக்கியது இன்றைய தொழில்/விஞ்ஞான முன்னேற்றம். சுயநலம் மட்டும் பார்த்து இருந்தால், இன்டர்நெட் ஆராய்ச்சி-இரகசியமாகவே இருந்திருக்கும். நான் மா.சி. பதிவைப் படிச்சிருக்க மாட்டேன், உங்களை ப்ளேடு போட்டிருக்க மாட்டேன் (அப்பா, தப்பு என் மேல இல்லை). யாரையும் அட்லான்டிக் மாகடல் தண்ணீரில் தள்ளிவிட்டா, டைட்டானிக் ஜீரோ மாதிரி ஸ்டைலா பேசிட்டிருக்க மாட்டாங்க. தன்னலம் காத்துக் கொள்வார்கள். இந்த தன்னலத்தில், அவர்களின் குடும்ப நலமும் அடக்கம். இதுக்கு எடுத்துக்காட்டு எதுவும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு நான் கூற வேண்டாம்:‍-) இதுக்காக வறியவரின் துயர் போக்குவது தேவையில்லை என்று கட்டாயம் சொல்ல மாட்டேன். ஓரிருவரின் தாராளத்தில் மட்டும் வறியவர் வாழ முடியாது. கஷ்டப்பட்டு வளர்ந்த என்னைப் போன்ற‌ யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க. எனக்குக் கைநீட்டிக் கொடுத்தவங்க எல்லாரும் என்னால் முடியும்னு தெரிஞ்சப்புறம் மிகுந்த ஊக்கத்தோடு இன்னும் வாழ்த்தினாங்க. அவ்ளோ தான் இப்போதைக்கு.

Friday, November 14, 2008

ஓபாமாவின் ஜாதகம்!

நம்மாலானது: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பராக் ஓபாமாவின் ஜாதகம். ஜகன்னாத ஹோர என்னும் ஜாதகம் கணிக்கும் நிரலியில் கணிக்கப்பட்டது. அஷ்டவர்க்க பரல் விவரங்களுடன். தென்னிந்திய முறையில்.

பிறந்த தேதி / நேர, மேலதிக விவரங்கள், வாத்தியாரய்யாவின் பதிவில். (சுட்டி, பதிவின் தலைப்பில் இணைக்கப் பட்டிருக்கிறது).



"வாழ்க வளமுடன்"!

Wednesday, November 12, 2008

அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தராங்கப்பா!

அமெரிக்கர்கள் யாரையாவது கடுப்படிக்கணுமா?

"நீங்கள் வாங்க விரும்பியது அவ்வளவு தானா? மொத்தம் 7 டாலர் 53 சென்ட்"

"இந்தாங்க 10 டாலர்..." அதை வாங்கி அந்த பெண்மணி கம்ப்யூட்டரில் நம் தொகையை தட்டிய பின், கல்லாவில் போட்டுக் கொண்ட பின், "ஆ, மறந்துட்டேன், 3 சென்ட் இதோ, மிச்ச சில்லறை கொடுங்க‌" என்று சொல்லிப் பார்க்கலாம்.

நகரங்களில் வசிக்கும் அமெரிக்கர்கள் முக்கால்வாசி வாங்குவது இந்த பெரும் மளிகை வியாபாரிகளிடம். சுமாராய் சென்னை ராதாகிருஷ்ணன் சாலை நீல்கிரீஸை விட 5 மடங்கு அளவு பெரியவை இந்த மளிகைக் கடைகள். பால், மோர், பிஸ்கட், அரிசி/பாஸ்தா, பிஸ்ஸா, கோஸ், தக்காளி, ஷாம்பு எதுவும் வாங்கலாம். அந்த மளிகைக் கடையில் செக்கவுட் செய்பவர் 40 வயதுக்குட்பட்டவர் என்றால், அநேகமாக மேலே குறிப்பிட்ட உரையாடலில் மிகப் பாதிக்கப்பட்டு கால்குலேட்டர் தேடுவார்.

பள்ளிப் படிப்பை முடிக்க வியலாத என் தாயாரால் மனக் கணக்கு போட முடியும்; ஏழு வயதில் இருந்து மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் பழனிக்குக் கணக்குப் போடத் தெரியும். அமெரிக்கர்களால் ஏன் முடியவில்லை?

அதைத் தாங்க உலகம் முழுக்க விவாதிச்சுட்டிருக்காங்க. ஏன்னு சொல்றேன். இந்தியாவில் வளர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் சுரேஷ் மூர்த்தி தன் மகள்களுக்கு இந்திய முறையில் கணக்கு சொல்லிக் கொடுக்க விரும்பியிருக்கிறார். அந்த முயற்சி அவரை பாப் காம்ப்டன் என்கிற முதலை/தொழிலதிபர் (இவர் கிட்ட புதிய தொழில்களைத் தொடங்க நிறைய முதல் இருக்குங்க!) கிட்ட கொண்டு சேர்த்திருக்கிறது. இரண்டு பேருமா இந்தியன் மாத் ஆன்லைன் என்ற இணைய தளத்தை தொடங்கியிருக்காங்க. சுரேஷோட குழந்தைகளுக்காகன்னு உருவான இந்த தளத்தில் இப்ப பலரும் (நிறைய சீன / இந்திய வம்சாவளியினராம்) மாதத்துக்கு $12.50 இலிருந்து $25 வரை கொடுத்து பாடம் கத்துக்கிடறாங்க.

இந்தியா, சீனா இரண்டு நாடுகளிலிருந்து வருபவர்கள் கணக்கில் முனைப்பாக இருப்பதைச் சுட்டிக் காட்டும் பாப் காம்ப்டன் குறிப்பா சொல்வது இது தான்: "என் மகள்கள் எந்த வகுப்பில் படிக்கிறார்களோ, அதே வகுப்பில் இந்தியாவில் படிக்கும் மாணவர்களை விட, என் மகள்கள் 3 வருடங்கள் பின்தங்கி இருக்கிறார்கள்" என்று.

அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பிரமாதமான கல்வி நிலையங்கள்னு எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். ("தளையற்ற சிந்தனை" வந்து தட்டுதே!) ஆனால், இதுல, நியூயார்க் டைம்ஸ் சொல்லுறதை விட அதுல வந்து பின்னூட்டம் இட்டிருக்கிற இந்திய/சீன / அமெரிக்கர்களைப் பாருங்கள். ஐஐடி யிலிருந்து வந்தவர்களும் இருக்காங்க, இந்த் ஊர்ல வளர்ந்தவங்களும் இருக்காங்க. பொதுவில் தெரிவது:

1. பெற்றோரின் ஊக்கம் குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணம். (ஒரு சீன வம்சாவளி அமெரிக்கர் சொல்வது: "என் பெற்றோருக்கு ஆங்கிலம் தெரியாதுன்னாலும், நான் மார்க் மட்டும் வாங்கலை, பிச்சு எடுத்துடுவாங்க"). குழந்தைங்க வீட்டுப் பாடத்தில் அமெரிக்கப் பெற்றோர் (நேரமின்மையும் காரணி) ஆர்வங்காட்டுவதில்லை இங்கே. நிறைய வீட்டுப் பாடம் கொடுக்கறாங்கன்னு சில வருடங்கள் முன்னால் ஒரு தாய் புகார் சொல்லிட்டிருந்தாங்க.

2. சமூக எதிர்பார்ப்புகள். இது முதல் பாயின்டோட சம்பந்தப் பட்டதாயிருக்கலாம். புத்திசாலியாகக் காண்பித்துக் கொள்வது என்பது அமெரிக்கச் சமுதாயத்தில் கேலி செய்யபடுவதுங்கிறாங்க சிலர். ஏன், ஓபாமா கீக் (geek) ந்னு கூகிளிட்டுப் பாருங்களேன்! ஓபாமாவும் மெகெயினும் ஒண்டிக்கு ஒண்டி நின்னா, ஓபாமா தான் பெரிய கீக் - அதுல ஒரு கேலி!

நாளைக்கு என் குழந்தைகள் இந்தியாவில் இன்று வளரும் குழந்தைகளோடு தான் தொழிலிலும் வளர்ச்சியிலும் போட்டி போடப் போகிறார்கள். இன்றைக்கு உலகம் முழுக்க வளரும் குழந்தைகளில், 10ல் 3 இந்தியாவிலாம். அவர்களில் எவ்வளவு பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே, மளிகைக் கடை பழனியைப் போல்! அமெரிக்காவில் குடியேறும் இந்தியப் பெற்றோரோ, இந்திய நடுத்தர / மேட்டுக்குடி வகுப்புப் பெற்றோரோ தரும் கல்வியைப் பெறுபவர்கள் எத்தனை பேர்!!

Thursday, November 06, 2008

பண்பாட்டுக் காவலர்கள்

"நீ தாலி இல்லாம வெளியில வந்தே, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" அமெரிக்காவுக்கு வந்த புதிதில் தாலி இல்லாமல் எடுத்த ஒரு படத்தைப் பார்த்து விட்டு அம்மா.

"சீ போடி, தாலியில ஒரு கயிறு கட்டி கூட்டிட்டு போனா, வவ் வவ்னு குரைப்பியா?" அம்மா பேச்சைக் கேட்டு விட்டு என்னிடம் துணைவன் ராஜாமணி.

ஆனாலும், தாலி இல்லாமல் தான் சென்னை விமான நிலையத்தில் இறங்க வேண்டியதாயிற்று. இது எப்படி நடந்தது என்றும் சொல்லி விடுகிறேன். அமெரிக்காவை விட்டு கிளம்பும் போது, கான்சஸ் விமான நிலையத்திற்குள் வரும்போதே நேரம் ஆகிவிட்டிருந்தது. ராஜாமணி வேலை விஷயமாக இந்தியாவிற்கு போன வாரமே போயிருப்பதால், நானும் குழந்தை கண்ணனும் மட்டும் தனியாக இந்தியப் பயணம். கிளம்பும் நாள் வரை எனக்கு அலுவலகத்தில் வேலை இருந்தது. காலையில் போயே தீர வேண்டிய மீட்டிங் சென்று, அடுத்த 3 வாரங்களுக்கான வேலைப் பளு பற்றி விவாதித்து திரும்பி, கண்ணனை காப்பகத்திலிருந்து அழைத்து வந்து, நான் பான்ட் சூட்டிலிருந்து சல்வார் கமீஸ்க்கு மாறி கிளம்பும் போது நேரமாகிவிட்டது. ஊருக்குப் போகணும்னா சல்வார் கமீஸ், புடவை தான். வேறு எது போட்டாலும், நம்மூரில் ஆட்டோ/டாக்ஸிகாரர்களுக்கு கண்ணைப் பார்த்துப் பேச மறந்து விடும்.

கான்சஸிலிருந்து முதலில் சிகாகோ பயணம். விமானப் பயணத்தில் கண்ணன் கூட இருந்ததால், வேண்டிய சாப்பாடு/துணிகளை மட்டும் கொண்டு வர ஒரு பெட்டி, மற்றும் கண்ணனுக்கான டயபர் பை, கைப் பை. கண்ணன் நகர்படிகளில் மட்டுமே சாப்பிடுவேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான். கையில் வைத்திருந்த டோனட்களை (பாதுஷா சுவையிலிருக்கும்) ஊட்டியவாறே ஒரு பக்கம் நகர்படிகளில் ஏறி மறுபக்கம் இறங்கும் நகர்படிகளில் இறங்கி லூட்டி அடித்துக் கொண்டிருந்தான். குழந்தைகளின் ஸ்ட்ரோலர் ஊரில் பயன்படுவது இல்லை என்று தோழிகள் சொல்லிவிட்டார்கள். முதுகில் அவனைத் தூக்கிப் போக காரியர் அவசரத்தில் மறந்தது வேறு என் கோபத்தைக் கிளறிக் கொண்டு இருந்தது.

கான்சஸ் விமான நிலைய செக்யூரிட்டி பாயின்டில், கண்ணன் இழுத்த இழுப்புக்குப் போக முடியாமல், நானும் சாப்பிட நேரமில்லாமல் பசியோடு வந்து கொண்டிருந்த போது, செக்யூரிட்டி பீப்பர் அடித்தது. பொறுமையிழந்த அமெரிக்க‌ காவல் பணியாளர் "நகை ஏதாவது இருந்தால், அந்த டப்பாவில் வச்சு, கன்வேயர் பெல்ட்டில் வைங்க; ஸ்வெட்டரையும்!" என்று அடுத்து ஒரு குடும்பத்தை வரச் சொல்லி விட்டார்.

ஸ்வெட்டரைக் கழட்டும் போது தாலியில் கோர்த்த அம்மாவின் பவளம் மாட்டி தாலி வெளியில் வந்தது. தன் கோலால் "அதையும்" என்று சுட்டினார் இன்னொரு காவல் பணியாளர். தாலியை டப்பாவில் வைப்பதற்குள், கண்ணனைக் காணோம். மற்ற பிரயாணிகளின் கண் சுழட்டல், கமென்ட் ("தே ஹவ் நோ கன்ட்ரோல் அஃப் தெயர் கிட்ஸ்") எல்லாம் பார்த்து / கேட்டுக் கொண்டே, கண்ணனைத் தேடிக் கண்டுபிடித்து இழுத்துக் கொண்டு வந்தால், "அம்மா, ஸ்னாக்" என்றவனை கைப்பையிலிருந்த ஒரு டோனட் கொடுத்து கிளப்பினேன். இங்கிருந்து சிகாகோ போய் அங்கிருந்து சென்னைக்கு விமானம் பிடிக்க நேரமிருக்குமா என்று தெரியவில்லை.

ஃப்ரான்க்ஃபர்ட் வரை கண்ணனின் அழுகை நிற்கவில்லை. அங்கு வந்தவுடன் ராஜாமணிக்கு ஃபோன் செய்யச் சொல்லியிருந்தான்.

"வியர் ஸின்ந்த் இன் ஃப்ரான்க்ஃபர்ட்".

"ஸிந்து சந்து, போடி. கண்ணன் எப்படி இருக்கான்? அவனைப் படுத்தினியா?"

அடப்பாவி! ஆதியிலிருந்து செக்யூரிட்டியிலிருந்து கண்ணன் என்னைப் படுத்திய கதையைத் தொடங்கிச் சொல்லும் போது தான் தாலியை கான்சஸ் விமான
நிலையத்திலேயே மறந்தது நினைவுக்கு வந்தது. "அய்யய்யோ, என்னடா பண்றது?"

"இதுக்குத் தான் புருஷனை நீ வாடா போடா சொல்லாம இருக்கணும்கறது. என்கிட்டயே மரியாதை இல்லியே? இங்க வா, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்"

"தாலியை தொலைச்சதுக்கு அம்மா என்னை கொன்னு போட்டுடுவாள்"

"அப்ப சரி! அதான் இன்னொரு கல்யாணம்னு சொன்னாலும் சரியாத் தான் சொன்னேன்"

விளையாட்டாக ராஜாமணி பேசினாலும் எனக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. மாமியார் என்ன சொல்வாரோ? கண்ணன் முதுகில் ஓங்கி வைத்தால் கொஞ்சம் கடுப்பு குறையும் போல் இருந்தது. அதனால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்பதால் விமான நிலைய‌ பாத்ரூமில் கண்ணனை டயபர் பெட்டில் பெல்ட் போட்டு படுக்க வைத்து விட்டு, பின் என் கோபத்தைக் காட்ட காலால் ஃப்ளஷ் செய்து விட்டு கதவை ஓங்கி சாத்தினேன். கண்ணனுக்கு டயபர் மாற்றி, நானும் மஸ்காராவால் சிறிய கறுப்புப் பொட்டு வைத்து, லிப்ஸ்டிக் கொஞ்சமாய்ப் போட்டு விட்டு வெளியில் வந்தால் நேரமாகியிருந்தது.

ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருந்து சென்னை பறக்கும் போது கண்ணன் நன்றாகத் தூங்கிப் போனான். சென்னை விமான நிலையம் மாறவேயில்லை. "யூ வான்ட் ஹெல்ப் ப்ளீஸ்?" "ட்வென்டி டாலர் மேடம்" என்று பின்னால் வந்தவர்களை காலால் எத்தி விட்டதாக மனதில் நினைத்துக் கொண்டு நானே பெட்டியைத் தள்ளி வந்தேன்.

அவர்கள் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டதை கவனிக்காமல் வந்தேன். கால்டாக்ஸி பிடித்து நேராய் ஹோட்டலுக்குப் போக வேண்டும். ராஜாமணி மதிய ஃப்ளைட்டில் மும்பையிலிருந்து வருவதாக திட்டம். அப்புறம் அம்மாவை மதுரைக்கு சென்று பின் மாமியாரை ஆந்திராவிலும், பார்க்கலாம் என்று எண்ணியிருந்தோம். நான் ஹோட்டலுக்கு வந்து சேரும் போது பின்னிரவு. லிப்ஸ்டிக் அழிந்தும் அழியாமல் கொஞ்சம் தெரிந்திருந்தது; பொட்டு இருக்கிறதா என்று மட்டும் செக் செய்து கொண்டேன், தமிழ்நாடு ஆயிற்றே! கண்ணன் தூங்கி வழிந்து கொண்டிருந்தான்.

கண்ணனை இடுப்பிலிருந்து இறக்கி விட்டு இழுத்துக் கொண்டு ஹோட்டல் வரவேற்பாளரை நோக்கிப் போனால் இந்த பின்னிரவிலும் ஹோட்டல் முன்னறையில் நான்கைந்து கரை வேட்டிகள் பவ்யமாக நின்று கொண்டிருந்தனர். இந்த ஹோட்டலில் வாலிப வயோதிக அன்பர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் சிலர் தங்குவது உண்டு; கடந்த முறை தங்கிய போது போர்டு போட்டிருந்தது. ராஜாமணி கூடவே அப்போது வந்திருந்ததால், தமிழ் படிக்கத் தெரியாத, பேச‌த்தெரிந்த‌ மனவாடு ராஜாமணிக்கு நான் படித்துச் சொல்லி கிண்டல் அடித்தேன். அந்த வா. வ. கேஸ்களோ என்னவோ! இன்றைக்கு வரவேற்பறையில் நின்றிருந்த கரை வேட்டிகளில் அகலமாய்க் கரை வைத்த‌ வேட்டி கட்டியிருந்தவன் முன்னால் நின்றிருந்தான். பெரிய காலர் வைத்த‌ பச்சை ஜிகினா சட்டைக்கும் மேலே அகலச் செயின், இரண்டு கைகளிலும் தங்கத்தில் கங்கணம், வாட்ச் என்று.

சடாரென்று என்னைத் திரும்பிப் பார்த்தான். என் கழுத்தில் துளைத்த அவன் பார்வையால், என் கழுத்தில் ஒரு ஓட்டை விழுந்திருக்கலாம் . நான் கண்ணனைத் தூக்கி நெஞ்சுக்குக் குறுக்காகக் கிடத்தி தோளில் சார்த்தி கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். என் அருகே சூட்கேஸும் பையும்.

குரலை உயர்த்தியவன், "நல்ல பெரிய டீலக்ஸு ஏசி ரூம் தானே போட்டிருக்கீங்க!" என்று என் மேலிருந்து கண்களை எடுக்காமல் வரவேற்பாளரைக் கேட்டான்.

அவர் கண்களைத் தழைத்து "ஆமா சார்" என்றார். "எது முதல் ஃப்ளோரா?" என்று மீண்டும் கேட்டான். "ஆமா சார்" என்ற பதிலைத் தாண்டி, "ரூம் 125 தானே?" கரைவேட்டியின் கேள்விகள் தனக்கல்ல என்று அவர் மெதுவாய்ப் புரிந்து கொண்டு பேசாமல் நின்றிருந்தார். கரைவேட்டி பக்கத்தில் இருந்த அல்லக்கைகளிடம், "டேய், ரூம் 125. எப்ப வேண்ணாலும் வாடா". அவர்கள் சிரிக்காமல், என்னைப் பார்க்காமல் பயிற்சி பெற்றவர்கள் போல் பவ்யமாக நடந்தார்கள். திரும்பி இரண்டு முறை அவன் பலக்க சொல்லிக் கொண்டே போனான்.

'என்னைக் கூப்பிட்டாலும் கண்ணனை என்ன செய்வது?' என்று அப்புறம் ராஜாமணியிடம் கேலியாகச் சிரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த‌ கறை(வேட்டி)ப்பிறவியைப் பார்க்காமல் நான் நின்று கொண்டிருந்தாலும், அவன் சென்று சில மணித்துளிகள் மட்ட சென்டு மற்றும் சிகரெட்டு வாசனை அங்கே இருந்தது.

பி.கு.: அம்மாவை தாஜா செய்து நகைக் கடைக்குக் கூட்டிப் போய் அதே போல் திருமாங்கல்யம், தாலி செயின் செய்து கொண்டேன். மாமியார் பார்ப்பதற்குள்.

பி.கு.2: அப்புறம் நான் சென்னை வருவதற்குள் கான்சஸ் நண்பர்களை அழைத்து விவரம் சொல்லிய‌ ராஜாமணியால், கான்சஸ் லாஸ்ட் அன்ட் ஃபவுன்டில் இருந்து அம்மாவின் பவளத்தோடு முதலாவதும் திரும்பக் கிடைத்தது. 1 அவுன்ஸ் தங்கம்! ராஜாமணியின் தாலி-பாக்கியம்!!

Monday, October 20, 2008

இட்லி வடையின் பலமுகங்கள் - என் ஊகம்

இட்லிவடையை தமிழ் கூறும் உலகம் நன்கறியும். ஆனால், ஒரிஜினலாய் அவர்கள் படம் பார்த்திருப்போமா? நீங்கள் பார்ப்பதற்காய் என் ஊகங்கள் இங்கே க்ரூப் படமாய் இணைத்திருக்கிறேன்.



வீட்டில் மல்லிகைப்பூப் போல் இட்லி செய்தாலும், காஞ்சீபுரம் இட்லி, கன்னட தட்டு இட்லி என்று பலவகையும் எனக்குப் பிடிக்கும். காஞ்சீபுரத்து இட்லியும் சரி, ஒப்பிலியப்பன் கோயிலில் கிடைக்கும் இட்லியும் சரி தனி டேஸ்டு தான். கர்நாடக தட்டு இட்லி (படம் காண்க) அளவில் பெரிது, ஆனால், மாவு அஃதே (என்று சொல்கிறார்கள்).

வடைக்கு உளுந்து வடை தான் எங்கள் வீட்டில் பிரியம். உழுந்து என்று சிலர் எழுதினாலும்:-( ஹோலி வடை என்று என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆனால், இட்லி வடை எதுவானாலும், நாவு நீண்ட எம் குடும்பத்தினருக்கு சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி எல்லாம் வேணும்னு சொல்லுவாங்க.

இத்தனையும் சொல்லிட்டு, என் ஊகத்தைச் சொல்லாம எப்படிப் போவது? கிழக்குப் பதியாமல், பாராமல், பாலாய் இருக்கிறதே... இன்னும் பல இருந்தாலும், மாவு புளிப்பதை கண் பார்ப்பதில்லை. அப்படியே இருந்தால் நலமே!

Friday, October 17, 2008

சினிமாய ஜாலம்

என்னுடைய இருபத்தைந்தாவது பதிவு. வெள்ளிவிழா கொண்டாட அவுக வாரேன், இவுக வாரேன்னு சொன்னதுக்கெல்லாம் வேண்டாம்னுட்டோம்ல!! வருசத்துக்கு ரெண்டு பதிவு, மூணு பதிவுன்னு ரெண்டு வருசமா ஒப்பேத்திட்டிருக்கேன் (எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு தெனைக்கும் போறாரு... கான்டீன் காபி குடிக்க).

இப்ப செமத்தியா மாட்டினேன். ராதா ஸ்ரீராம் என்னை திரைப்பட இடியாப்பத்தில் சிக்கிவிட்டு விட்டார்கள். என் பதினைந்து வயதுக்குள் மொத்தமே ஆறேழு படங்கள் பார்த்திருப்பேன். அவ்வளவு தான். என் அம்மா வழிச் சொந்தத்தில் ஒருவர் வீட்டுக்கு விடுமுறைக்குப் போனபோது, இரவுக் காட்சி ("கி"ந்திப் படம்) அவர்கள் கூட்டிச் சென்ற போது பார்த்ததுக்கே, "தே.#.யா பொண்ணுங்க தான் இரவுக் காட்சி பாக்கும்"னு அப்பாவிடமிருந்து வசவு விழுந்ததாக அம்மா சொன்னார் (ஏம்மா சொன்னீங்க?) அப்பாவைக் கேட்க வேண்டிய கேள்விகள் கேட்டாச்சு. அதுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை. அதே போல், "முளை விட்டாச்சு. என்னை காப்பாத்திக்க எனக்குத் தெரியும்"னு படி தாண்டி தனியாவே (கையில் அரை ப்ளேடு வச்சுகிட்டு) நிறைய படங்கள் அப்புறம் பார்த்துருக்கேன் (அர்த் சத்யா, தெ மேன் ஹூ ந்யூ டூ மச்... லாரல் ஹார்டி - இதுக்கு ப்ளேடு தேவையில்லை:-). இது தான் என் சினிமா பில்டப்.

1). எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எப்பப் பார்த்தேன்னு தெரியாது. நாலு வயதில், "அந்த ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்றாங்க" என்று அவர்கள் மரத்தைச் சுற்றி பாடியதற்காக, பறைசாற்றியிருக்கிறேன். என் ஜீனியஸ் புத்தியை:-) புரிந்து கொள்ளாத நம் ஊரார் கேலி செய்திருக்கிறார்கள். நாலு வயதுக்குள் ஓரிரண்டு படம் பார்த்திருக்கலாம். எங்கம்மாவுக்கு என்ன படம் பாத்தோம்னு நினைவில்லை.
நினைவு தெரிந்து பார்த்த முதல் படம்: என் க்ளாஸ்ல, பாக்கறதுக்கே செவப்பா, நல்லா படிக்கிற பொண்ணு, அவளை மாதிரி நானும் நல்லா படிக்கணும்கற முடிவுல் இருந்த காலம். அவள் எம்ஜியார் பக்தை. அது சொல்லிச் சொல்லி நானும் ஒரு எம்ஜியார் படம் பார்க்கணும்னு முடிவு செய்து, அப்பாவை கன்வின்ஸ் செய்து, "நாளை நமதே" போனது நினைவில் இருக்கிறது. ஓரளவுக்கு மூணு வேடம்னு புரிந்தாலும், நமக்குக் குடும்பப் பாட்டு இல்லியேன்னு கவலை படும் அளவுக்கு நான் சின்னவள் இல்லை அப்ப. ஏன், எதுக்குன்னு நிறைய கேள்வி கேட்டேன்னு சொல்லுவாங்க. கட்டாயம் மூட்டைப் பூச்சிகளை உணர்ந்தேன். எம்ஜியார் படத்தில் ஒன்றும் இல்லை என்றும். அதுக்கப்புறம் ஒரு எம்ஜியார் படமும் (துட்டு கொடுத்து) பார்த்ததில்லை.

2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குசேலன்:( பசுபதியோட ரசிகை நான். அது வரைக்கும் படம் ஓக்கே. டாலர் கொடுத்து ரஜினியோட வெத்து பிட் படம் பாக்குற அளவு நான் ரஜினி சார் ரசிகை இல்லை.

3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம் - முழுசா பார்க்கலை. தொண்டையில், கோலி சோடாவின் கோலி சிக்கியதாய். மீன் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததால். எனக்கு உள்ள பெரிய கஷ்டம், எனக்குப் பிடித்தவர்கள் முட்டாள்தனமான வேலை செய்தால் ஒக்காந்து பாக்க முடியாது. நானும்
இரைந்து திட்டி எங்கூட ஒக்காந்திருக்கவங்கள் எல்லாம் ஓட வைச்சிடுவேன். கமல் சார் கோட்டையை விட்டுட்டார், இனிமே ரூட் மாத்த மாட்டார்னு இந்த படம் பார்த்து புரிந்தது (நான் ஒரு ட்யூப் லைட் :-(

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
குணா. (அய்! அய்யனார் ஆயிட்டோம்லா!)
மகாநதி, மில்லியன் டாலர் கொடுத்தாலும் அந்த படம் திரும்பிப் பாக்க மாட்டேன் (நீங்க யாரச்சும் கொடுங்க, அப்ப திரும்பி யோசிக்கிறேன்). “அந்த நாள்” விமர்சனம் படித்ததிலிருந்து பாக்கணும்னு தோணுது.

5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
ஆட்டோ ஹோல்ஸேல் கம்பெனி நடத்தறீங்களா?

அரசியல் உணர்வு அதிகமாக உணர்ந்திருக்கிறேன். கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா என்று நம் தலைமுறை முதலமைச்சர்கள் எல்லாரும் திரை/நாடகப் பின்புலத்திலிருந்து வந்தவர்கள். ஏன் கலைஞர்/ அண்ணா பெரியாரிடமிருந்து பிரிந்தார், எம்ஜியார்/ஜெ. அரசியல் நாடகங்களுக்கு அர்த்தங்கள் புரிந்தே வளர்ந்தேன். இப்ப சத்யராஜ், ரஜினிக்கு முன்னால் நடிகர் சங்க நாடகத்தில், பேசுவதையும் பார்க்கிறோம். அவிங்க எல்லாரும் நம்மள என்னான்னு நினைச்சிட்டிருக்காங்க?

5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
ஹ்ம், எனக்கு எடிட்டிங்ல ஈடுபாடு உண்டு. அதுக்காக தமிழ்ல படங்கள் ஊன்றிப் பார்ப்பேன்... ஆனா பொதுவா இன்னிக்கு(ம்) தொழில்நுட்பம் மேல்நாடு சார்ந்து இருப்பதாக தோன்றுகிறது...
எனக்கு இன்னிக்கும் பிடித்தது (கடோத்கஜன் ஸ்டைலில் வாயப் பொளந்துகிட்டுல்லா பார்ப்போம், அவர் வாய்ல லட்டு எப்படிப் போவுதுன்னு. அவரு உடல் பெரிசாக பெரிசாக, பாத்திரங்கள் சிறிசாத் "தோணும்". அந்த ஷாட்களுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க! அப்படி கஷ்டப்பட்ட "சின்ன மனுஷங்களுக்கு" இந்த் பதிவு சமர்ப்பணம்):


6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
உண்டு & இல்லை. எல்லா கிசுகிசு படித்தாலும், இப்ப விகடன்ல மக்கள் பின்னூட்டத்தோடு படிப்பது தான் படு சுவாரசியம். எல்லாத்தையும் பொளந்து வச்சிடுறாங்க.

குமுதத்தில் நம்மூர் ஹாலிவுட்டார் தொடராய் எழுதியதை விரும்பிப் படித்தேன்.

7) தமிழ்ச்சினிமா இசை?
கேட்பேன். ரங்கு, நண்டு, சுண்டு எல்லாம் பீட்டரு பாட்டு தான்:-( நான் வாணி ஜெயராம் குரலின் அடிமை. ஹிந்தி, தமிழ்னு எல்லாம் கேட்பேன். யாரையும் குறிப்பா தமிழ் இசையமைப்பாளர் பிடிக்கும்னு இல்லை.
எனக்குக் கடந்த இரு வருடங்களாகப் பிடித்த்த்த்த்த்த்த்த்த பாடல், தேன் குரலழகி மும்பை ஜெயஸ்ரீயின் குரலில் (இதுக்கு மேல பொம்பளங்க காதலை அழகாச் சொல்ல முடியுமா?)

8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
உண்டு. இந்தியாவில் இருந்த போது தூர்தர்ஷன் டிவில மதியம் வரும் வேற்று மொழிப் படங்களில் தொடங்கியது (ரே, மற்றும் இந்திய கிழக்கத்தியப் படங்கள் பொதுவாகப் பிடித்தன) என் அறிவுத் தாகம் (ஹய்யோ!)

தமிழ்ப்பதிவர்களில் எத்தனை பேர் பெண்கள், சிறு குழந்தைகளின் தாயாய், வேலை பார்க்கிற பெண்ணாய் இருப்பவர்கள் அவர்களுக்கு மட்டுமே இது புரியும்: நேரம் இல்லை:-( "சென்ட் ஆஃப் அ உமன்" பார்த்து சிக்னலில் நிற்காமல் போய் போலிஸிடம் மாட்டியிருக்கிறேன். ஒஸாமா பார்த்திருக்கிறேன். இன்னும் பல படங்கள் உண்டு என்றாலும், ஹிஹி, "மை கஸின் வின்னி" வசனம் வரிவரியாக ஒப்பிப்பேன். (நம்ம காரக்டர் ஃப்ளா அது).

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
துட்டு கொடுத்து படம் பார்த்துட்றோம் இல்ல? அது தான் தொடர்பு. என் தந்தை வழி உறவினர் இருவர்(!) அந்த/இந்த கால படங்களில் கதை/வசன கர்த்தாக்கள். அவர்களுக்கு என்னைத் தெரியாது என்பதால், வுட்டுடறேன்.

10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என்னிக்குமே, சுஜாதா, ஜெயகாந்தன், ராஜேஷ்குமார்/சாரு, ஜெமோ, பொ. கருணாகரமூர்த்தின்னு பலதரத்தையும் படிக்கிற மாதிரி, தமிழ்ல சினிமால எல்லாரும் இருக்காங்க. வளர்ச்சி இருக்கும்னு கண்டிப்பா நம்புகிறேன். கார்ப்பரேட் தயாரிப்பாளர்களை சினிமா ஜீரணிச்சப்புறம் ஸீ! சேஞ்! (பன் இன்டென்டட்).

10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தயவு செய்து இதை நடைமுறைக்குள்ளாக்கினால், நம் குழந்தைகளின் நன்றிக்குரியவர்களாவீர்கள். இந்த டிவி சனியனையும்.

Thursday, September 25, 2008

விதி வலியது (அ) காதல்(?) நேரம்

எதையும் எதிர்பார்த்துப் போன பயணம் இல்லை. போயே ஆக வேண்டும், வரவில்லை என்றால், ஒப்பந்தம் காலி என்று அதட்டி வரச் சொல்லியிருந்தார்கள். தெரிந்த ஊர் என்றாலும், குழந்தைகளை விட்டுப் போவதில் மனமே இல்லை. அவர்களை விட நான் தான் கண்ணீர் விட்டிருப்பேன். "சின்னது பொறக்கறச்சே கூட பெரிசை விட்டுட்டு இருக்க முடியாம மறுநாளே ஆஸ்பத்திரியை விட்டு வந்துட்டேன். இப்ப எப்படி?" என்பதற்கு பாற்கடலில் பள்ளி கொண்டு அனைத்தையும் அறிந்த ரங்கமணியின் புன்னகை பதில்.

விமானம் சிறியது. இதை விட சிறிய விமானத்தில் ஒருமுறை போயிருக்கிறேன். பாராடைவிங் செய்யும் போது. வாழ்க்கை நிலையற்றது எனக் காணும் விதமாக நிறைய டேப் ஒட்டி விமானத்தை ஒரு விதமாக நொறுங்கி விழாமல் வைத்திருந்தார்கள். அப்படியும் குதிக்க‌ பயந்து விமானத்துக்குள் இருந்து விடுவேனோ என்று தள்ளி விடவே ஒருவர் இருந்தார். அந்த அளவுக்கு இல்லை என்றாலும் இந்த‌ விமானத்தில் இரைச்சல் அதிகம். முன் சீட்டில் இரண்டு ஆண்கள், கைகளில் சீட்டுக் கட்டு, சாப்பாடு, தண்ணீர். அந்த பக்கம் முன்சீட்டில் ஒன்று காலியாக இருந்தது. மிகுந்த சப்தம் போடுகிற, எல்லாரிடமும் ஹலோ, சௌக்யமா என்று உரிமையுடன் கேட்கிற தோரணையுடன் (எனக்கு முன்முடிவுகள் ஜாஸ்தி) ஒரு கறுப்பு ஆண் அங்கு வந்து கடைசிப் பயணியாக அமர்ந்தார். போய்ச் சேரும் இடத்தில், கறுப்பர்கள் அதிகம். அதனாலோ என்னவோ, விமானத்தின் ஒரே "பணிப்பெண்"ணும் கறுப்பர். யூ.எஸ்.ஸின் தென்பகுதியில் எங்கே வளர்ந்தவர் என்று கேட்காமலே சொல்லக்கூடிய அமைதியும் பாங்கும். மணமாகாதவர் என்று தெரிந்தது.

சரி ஏதோ பத்திக்கும், நமக்கும் பொழுது போகட்டுமேன்னு நினைத்தேன். அதற்கேற்றாற் போல், அந்த கறுப்பர் பயணத்தின் மூன்று மணி நேரங்களும் பேசிக் கொண்டே வந்தார். நான் கையோடு வைத்திருந்த புளிசாதம் சாப்பிட்டேன், பேசினார். தண்ணீர் கேட்டேன், பேசினார். அந்த பணிப்பெண் "தண்ணீர் பாட்டில் இரண்டு டாலர்" என்றார், உடன் எனக்கு விக்கல் வந்தது, அப்பவும் பேசினார்... என்ன, "உனக்கு வேலை பிடித்திருக்கிறதா, என்ன செய்கிறாய், எப்படி பொழுது போகும்" என்ற ரீதியில் (எனக்குக் காதில் விழுந்தது அவ்வளவு தான்).

இதற்குள் எனக்கு முன்னால் இருந்த ஆண்கள் சாப்பாடு முடித்து, கையோடு வந்த தண்ணீர் குடித்து, சீட்டு ஆட ஆரம்பித்தனர். சீட்டாட்டத்தில் யார் தோற்கிறார்களோ அவர் மற்றவருக்கு முத்தம் தர வேண்டும் என்று அவர்களுக்குள் விதி போல். விதி யாரை விட்டது?

பயணத்தின் இறுதியில் அந்த பணிப்பெண் அம்மாவை அம்போ என்று விட்டு விட்டு அந்த கறுப்பு இளைஞர் லக்கேஜுக்காக காத்திருக்கும் போது இன்னொரு குறுகுறுப்பழகியோடு கடலை வறுத்துக் கொண்டிருந்தார்.

எல்லாம் நேரம்!

Monday, August 04, 2008

செய்தி: மணிரத்னம் படத்தின் நடிக்க ஆசைப்படும் ஜே.கே.ரித்திஷ்


அண்ணன் ஜே. கே. ரித்தீஷ் வாழ்க வாழ்க!

அன்னார் புகழ் உலகெங்கும் பரவியது அவரது ரசிகர்களும் வெறியர்களும் அறிந்ததே! தன்னடக்கமற்ற அவர் இயல்பும், தற்புகழ்ச்சியுள்ள அவர் பேச்சும் (மாத்திச் சொல்லிட்டேனா?), அவர் நடையும் சடையும் படைகொல்லும் அவர் முகவெட்டும்... போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

தினமலர்ல பார்த்தவுடனே கையும் ஓடல, காலும் ஓடல! அவருடைய அஃபிஷியல் ரசிகர்கள் மன்றத்தினர் போடுவதற்குள் பதிவு போடணும்னு ஒரு வெறி.. அவ்ளோ தான்.

விஷயம் வேற ஒண்ணுமில்ல. இதுக்குத் தான் பில்டப்:

"கோடம்பாக்கத்தில் குறுகிய காலத்தில் வள்ளலாக (?) வலம் வரும் ஹீரோ ஜே.கே.ரித்திஷ்க்கு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாம்.

இதனை நிருபர்களிடம் தெரிவிக்கும் ரித்திஷ், மணிரத்னம் சார் படங்களை ஒன்று விடாமல் பார்த்தவர்களில் நானும் ஒருவன், என்றார். மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாத படசத்தில் நாயகன், தளபதி என மணிரத்னத்தின் ஹிட் பட டைட்டில்களில் நடித்து வருகிறார் ரித்திஷ்."


அண்ணன் ஜே.கே. ரித்திஷ் ரசிகர் மன்றம், அமெரிக்கக் கிளை.

செய்தி நன்றி: தினமலர் ஆகஸ்டு 5, 2008, சினிமலர் பக்கம்.
தலை புகைப்படத்துக்கு நன்றி: தமிழ்ஃபிலிம்ரேட்டிங்ஸ்

Thursday, July 31, 2008

யுகப்புரட்சி (அ) அக்னிப் பரீட்சை

"கவுஸ், நீ காந்தியப்பத்தி கேள்விப்பட்டதேயில்லியா?" ஒரு அழகான பெண் ஒரு இளைஞனிடம் கேட்பதால் மட்டும் சுற்றியிருக்கும் சூழ்நிலைக்கு சம்பந்தமில்லாத கேள்வி சரியாய்ப் போய் விடுமா?

"சியா, இது தான் முக்கியமா இப்ப? நாளைக்கு எவ்வளவு முக்கியமான நாள்". என் பதில் கேட்டு சியா சிரித்தாள். இந்த புரட்சி ஓயட்டும், அந்த சிரிப்பை எனக்கே எனக்காக்கிக் கொள்கிறேன். அவளும் புரட்சி ஆன பிறகு தான் எங்கள் திருமணம் என்று உறுதியோடு இருக்கிறாள்...

"புரட்சிக்காரன்னா, உலகத்தில் இருக்கும் கொள்கைகள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு இல்லை" என்றேன். ஒத்துக்கொள்ளாதது போல் புருவத்தைச் சுருக்கினாள். "எனக்கு காந்தி பத்தித் தெரியும். அப்ப அவருடைய நாட்டு மக்கள் சண்டைக்குத் தயாராயில்லை. பட்டினியாயிருக்கும் ஏழைக்கு முன்னால கடவுள் சாப்பாடாத் தான் வருவார்னு சொன்னது அவர் தானே! நாட்டு விடுதலை பத்தி வெறும் கொள்கைகளால் மட்டுமே பேசிக் கொண்டிருந்த அறிவுஜீவிகளையும், நாட்டு விடுதலை பத்தி கவலைப்படக் கூட நேரமில்லாத ஏழைகள¨யும் தன் பக்கம் இழுத்துக்க செஞ்ச ட்ரிக் தான் அஹிம்சை".

"போடா! அஹிம்சையில் எனக்கும் நம்பிக்கையில்லை, அதுக்காக, ட்ரிக்னெல்லாம் சொல்ல மாட்டேன்" கிளம்பிப் போய் மற்ற தோழர்களோடு அமர்ந்தாள். அவர்களின் சிரிப்பும் பேச்சும் எங்கள் இருட்டு பாலிமர் கூடுகளைக் கலக்க, நான் இரவுக்குளிருக்கு இதமாக வைத்திருந்த கதிர்க்கணப்பின் தழலை உற்று நோக்கத் தொடங்கினேன். காந்தியைப் பற்றி அவருடைய கொள்ளுப்பேரனுடைய பேரன் எழுதிய புத்தகங்களைப் படித்திருக்கிறார் என் தாத்தா. என் தாத்தாவின் தாத்தா அப்போதைய இந்தியாவிலிருந்து அப்போதைய அமெரிக்கா வந்தவர்.

இந்தியா, அமெரிக்காவெல்லாம் இப்போது பள்ளிக்கூடங்களில் மட்டும் தான். ஏதோ ஒரு எண்ணெய்ப் போரால் உலகப் பொருளாதாரம் சரிய, ஒவ்வொரு முன்னேறிய நாடாய்க் களைத்து எண்ணெய் வள நாடுகள் சிலகாலம் கொழிக்க, பொருளாதார இடியாப்பச் சிக்கல் அவிழும் போது எண்ணெய் வளம் தேவையில்லாமல் போய் விட்டது. அதற்குள், சூரியனின் சக்தியிலும் காற்றின் சக்தியிலும் அணுசக்தியிலும் தயாரிக்கப்பட்ட மின்சக்தி உலகமெங்கும் பயனாகிவிட்டது. அதைத் தடுக்க எண்ணெய் வள நாடுகள் போட்ட உலக யுத்தத்தில், நாடுகள் அழிந்தன. ஒரு ஒழுங்கில்லாத மனித குல முன்னேற்றத்தில் பிறந்த இரு பெரும் கட்சிகள் தாம் ருபோர், லாதோர். ஒழுங்குள்ள மனித குல முன்னேற்றம் என்று சரித்திரமே இல்லையே!

நான் லாதோர் கட்சி. கட்சி என்று சொல்வதா, இல்லை அப்போதைய இந்திய சமுதாயத்தில் சொல்லப்பட்ட சாதி என்று சொல்வதா! பூமியின் முக்கால் வாசி நிலத்தில் குப்பைகள் தேங்கிக் கிடந்தன. மிச்ச இடத்தில், மனிதத் தொகை மிதமிஞ்சிப் போனது. உயர்ந்து போன வெப்ப நிலை காரணமாக உலகின் வட பகுதியில் மக்கள் தொகை வசித்து வந்தது. தென் பகுதி நாடுகளில் மிருகங்கள் மடிந்தன, உயிரோடு வாழ வட பகுதியில் தான் வசிக்க முடியும். அதனால், காற்று மாசும் அங்கே தான் அதிகம். நானும் மிச்ச லாதோரும் ஓங்கி உலகளந்த கட்டிடங்களுக்கிடையே இருந்த சந்துகளில் பாலிமர் கூடுகளில் வசித்தோம். மழையோ பனியோ அது தரை வர வருவதற்கு பூமியின் மாசுபட்ட காற்று மண்டலம் அனுமதிப்பதில்லை. பண சக்தி வாய்ந்த ருபோர் சாதியினர் மாசுவளிக்கும் மேல் சாடிலைட்டுகளிலோ பறக்கும் கூடுகளிலோ வசித்தனர். எங்களில் பலரோ மூப்பினால் இறப்பதை விட மூச்சு சம்பந்தப்பட்ட வியாதிகளால் இறந்தனர்.

இன்றைக்குத் தான் வெள்ளை, கறுப்பு, மஞ்சள் என்று அடையாளம் தெரியவில்லை மனித இனத்தில். ஆனால், அப்படி அடையாளம் தெரிந்த காலத்தில், மார்ட்டின் லூதர் கிங் என்பவர் கறுப்பின மக்களுக்காகப் போரிட்டாராம், அவர் மறைந்தும் பல வருடங்கள் , கறுப்பின மக்கள் துன்பப்பட்டனராம். அது போல் தான், என் சாதியில் பிறந்தவர்களுக்கு படிக்க, முன்னேற வசதி கிடையாது. உணவு நாங்களே பயிரிட்டுக் கொள்கிறோம், அதற்கு உந்துகள், எரிசக்தி என்று என் மூத்த லாதோர் எப்பவோ எங்கிருந்தோ பீராய்ந்து வந்தவற்றையெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறோம்... ருபோர் இருக்கும் இடத்துக்குள் நாங்கள் வாழ முடியாது. வாழச் சரியான இடம் கிடையாது. பிறக்கும் ஒவ்வொரு லாதோர் உயிருக்கும் அடையாள அட்டை வாங்க போராட்டம். அட்டையில்லாமல் உணவு கிடையாது. கள்ள அடையாள அட்டைகள் செய்து எப்பொழுதாவது ருபோர் கட்சியில் எங்கள் மக்கள் போய்ச் சேர்ந்தது உண்டு. ருபோர் அடையாளம் எங்களுக்குத் தேவையில்லை என்றே எங்கள் தலைமுறை நினைக்கிறது. எப்போதோ படித்த கறுப்புக் கவிதை நினைவுக்கு வந்தது: 'பிறப்பின் நாற்றத்திலேயே எங்கள் வாழ்க்கை கழிந்து போகிறது' உரக்கச் சொல்லிப் பார்த்தேன். சிரிப்புச் சத்தம் குறைந்து எல்லாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

துல் அருகில் வந்து, 'பாஸ், இதில் ஜெயிப்போம். கட்டாயம். நாம செய்ய வேண்டியவற்றை ஒருமுறை சொல்லிப் பார்க்கலாமா!' துல் மிக நம்பிக்கையானவன். லாதோர் சாதியிலேயே உபசாதியான பாணாவைச் சேர்ந்தவன். என் ஆணைகளிலும் என் திறமையிலும் ஒரு பக்தியே வைத்திருந்தான். துல், நான், மற்ற பாணாக்கள் எல்லாருமே சேர்ந்து உட்கார்ந்தோம். ரீசா கனைத்துக் கொண்டே, கட்டிட அஸ்திவாரமாயிருந்த கம்பங்களை பிடித்துக் கொண்டே பக்கத்தில் வந்தார். ரீசா எங்கள் லாதோர் இன மூத்தவர். ரீசாவுக்குக் கட்டாயம் அஹிம்சையில் நம்பிக்கை விட்டுப் போயிருந்தது. என் சிறு வயதில், கட்டிட இடுக்குகளில் குப்பைமேடுகளில் கிடக்கும் எலக்ட்ரானிக் பண்டங்களை உடைத்து நான் செய்யும் கருவிகள் அனைத்துக்கும் ஊக்கமூட்டுவார். லாதோர் குழந்தைகள் அனைவரும் அவரிடம் வளர்ந்தன. எங்களுக்கு எல்லோருக்குமே அவர் "ரீசாபா".

என் அம்மா முதற்கொண்டு, வயது வந்த, மூப்பில்லாத, உடல் ஊனம் இல்லாத அனைவரும் ருபோர் சாதியின் தொழிற்சாலைகளிலும் வீடுகளிலும் வேலை செய்தார்கள். ரீசாபாவுக்கு ருபோரிடம் அடிமையாய் இருக்க விருப்பமில்லாமல், சண்டை போட்டு ஓரிரு முறை சிறை சென்றிருக்கிறார். சிறை அனுபவங்களைப் பற்றிப் பேசத் தொடங்க்கினால், அந்த காடராக்டு விழிகள் இன்னும் திரை போடும். என்னில் தொடங்கி இளைய தலைமுறையினர் வேலைக்குப் போவதைத் தற்போதைக்கு அதை நிறுத்தி விட்டோம். போராட்டம் தொடங்கி இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இந்த இரண்டு வருடங்களுக்குள் எத்தனை மாற்றங்கள்? என்னைப் போன்றவர்கள் பல தொழிற்சாலைகளின் சூப்பர்-கணிணி செயல்பாடுகளையும் நிறுத்தினோம். பாடப் பாட ராகம் என ஒவ்வொரு முறையும் கணிணி வழிகள் இன்னும் கைகூடி வந்தன.

"ரீசாபா! இது நடக்கும்னு நினைக்கிறீங்களா?"

"கவுஸ், நம்ம மானப் பிரச்னை. நடக்காதுன்னா செத்துடு!" தீர்மானமாகச் சொன்னார். "உங்க போராட்டத்துல விலைவாசி கூடிப் போயிருக்கு. ஆனால், நீங்கள் செய்வதை ரோபோக்கள் செய்ய முடியும் என்பதால் செய்வதைத் திருந்தச் செய்." சியாவும் மற்ற துணைத் தலைவர்களும் தத்தம் வழியே பறக்கும் கூடுகளில் கள்ள டிக்கட்டுகள், கள்ள அடையாள அட்டைகளோடு பல நாடுகளுக்குப் பயணம் செய்து போய் விட்டார்கள். சியாவுக்கு இமாலயத்தில் வேலை, 2 மணி நேரத்தில் பறக்கும் கூட்டில் போய் செய்தி அனுப்பித்தாள். அங்கேயும் பழைய இந்தியாவின் தெற்குப் பகுதி வசிக்கத் தகுந்தது அல்ல; போன முறைக்கு இந்த முறை இன்னமுமே மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது என்றாள். நானும் துல்லும் இங்கே நியூயார்க்கில். இன்னும் பல லாதோர் உலகின் பல பகுதிகளில் நள்ளிரவுக்குள் போய்ச் சேர்ந்தனர்.

================================================

அடுத்த நாள், உலகளாவிய எங்கள் வலை இளைஞர்கள் சொல்லி வைத்தாற் போல் மின்சக்தி நிலையங்களின் கணிணிகளைச் செயலிழக்க வைத்தோம். எங்கும் இருட்டு. அவ்வப்போது கதறல். ஒவ்வொரு மணி நேரமும் ஊடகங்கள் எத்தனை இறப்புக்கள் எத்தனை விபத்துக்கள் என்று செய்தி கொடுத்துக் கொண்டிருந்தன. எங்கள் சிறு கணப்புக்களின் தழலைக் குறைத்து வெளி உலகு தெரியாமல், மின்சக்தி நிலையங்களை இயக்கும் தானியங்கி கணிணிகளின் ஈட்டுக் கணிணிகள் (பாக்-அப்), அவற்றோடு தொடர்புடைய மற்ற தானியங்கிகள் என்று உலகம் ஸ்தம்பித்துப் போனது. ருபோரில் முக்கால் வாசி இறந்தனர். அவ்வப்போது, ருபோர் மக்கள் கட்டிடங்களில் இருந்து, உணவுப் பற்றாக்குறை, உறவுகள் இறப்பு என்று பல காரணிகளால் குதித்துச் செத்துப் போனதும் உண்டு. அவ்வப்போது ஒரு சில ருபோர் எங்களுடன் பேச வந்த போது, துல்லும் மற்ற பாணாக்களும் அவர்களைக் கொன்று விட்டார்கள்.

6 வாரங்களாக நடந்த எங்கள் போராட்டத்தை முடித்தோம். லாதோர் கட்டிடங்கள் வெற்றிடங்களாகியிருந்தன. லாதோர் தம் இறந்து போனவர்களை மின்னடக்கம் செய்ததிலேயே இன்னும் புகை மண்டலம் அதிகரித்திருக்கிறது என்று ஊடகங்கள் அறிவித்தன. அடையாள அட்டை முறைமைகளை மாற்ற வேண்டும். எங்களுக்கு வாழ இடம் வேண்டும் என்பதெல்லாம் இன்றைக்கு நனவாகிக் கொண்டிருக்கிறது.

உலகின் அத்தனை மூலைகளிலிருந்தும் என் ஆட்கள் திரும்பி வந்தார்கள். சியா இமாலயத்தில் தங்கிவிட்டாள். ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு செய்தி அனுப்பித்தாள் : "நான் செத்துப் போயிட்டேன்டா".

Saturday, June 28, 2008

வால் ஈ விமர்சனம்



வால்-ஈ வெள்ளிக்கிழமை (ஜூன் 27, 2008) முதன்முதலாக திரையிடப்பட்டது.

இந்த சிறுவர் படங்களுக்கு முதல் நாளே போகவில்லையென்றால், எங்க வீட்டு வானரங்கள் (சின்னது 2, பெரிசு 1) தொல்லை செய்யும். ஆதலால், அவர்கள் இழுத்த இழுப்பில் நான் போய்விடுவேன். அரங்கு நிறைந்திருந்தது. கங்ஃபூ பாண்டாவும் இப்படித்தான் போனோம் --- ஆனால், அரங்கில் ஈ ஓட்டியது நான் தான் (பின்ன? மேற்படி வானரங்கள் வாய்க்குள்ள போயிடுச்சுன்னா என்ன செய்றது, எந்த திரையைப் பாத்தாலும் ரெண்டு கண்களும் வாயும் திறந்து பார்த்துடுவாங்க!). ஆனா வால் ஈ யிலோ குட்டிப்பசங்க (5க்கும் கீழ்) பெரிய குழந்தைங்க (25க்கு மேல்) நன்றாக சிரித்தார்கள். என் எட்டு வயது வாண்டுக்கு ஏற்கனவே பூமி பற்றி கவலை, ரொம்ப சிரத்தையாக எல்லாவற்றையும் பற்றி கேட்டுக் கொண்டது (நாளைக்கு பெரிய கவிதை விளையும் இதனால்:-)

சரி, ஸ்பாய்லர் அலெர்ட். கதை படிக்க வேண்டாம்னா, இந்த கவிதை பதிவு, அறிவியல் பதிவு படிக்கும் போது செய்றாப் போல் அடுத்த பத்திக்குக் கண்ணை ஓட்டிடுங்க. இந்த பத்தி தான் கதை. இதுக்கப்புறமும் இந்த பத்தி படிச்சீங்கன்னா, அது உங்க இஷ்டம். பூவுலகில் 2110ல் உயிரினம் வாழ இயலாது நேர்கிற போது, மனித உயிர்கள் எல்லாம் விண்ணூர்திகளில் உயிர் வாழ்கின்றன. ஒரு சின்ன்ன்ன்ன ரோபோ .. பேர் வால்-ஈ. அதற்கு இந்த பூமியின் குப்பைகளை குறுக்கிஅடைத்து சுத்தம் செய்யும் வேலை கிடைக்கிறது. அவ்வப்போது பூமி உயிர் வாழத்தக்கதாயிருக்கிறதா என்று அக்ஸியம் விண்ணூர்தியில் இருந்து பார்க்க வரும் ப்ரோப்களில் ஒன்றான ஈவாவுக்கும் வால்-ஈக்கும் 29வது நூற்றாண்டில் நிகழும் காதல் கதை. பூமிக்கு மனிதர்கள் திரும்புவார்களா என்பதை வெள்ளி / டிவி / கம்ப்யூட்டர் திரைகளில் காண்க.

படம் பரவாயில்லை. எப்பவும் போல், லாஜிக் பார்க்கறவங்க வேற தியேட்டர் போயிருந்திருக்கணும். தசாவதாரம் நல்லா இருந்ததுன்னு சொன்னா, "இன்கன்வீனியன்ட் ட்ரூத்" நல்லா இருந்ததுன்னு சொன்னா, இந்த படம் சூப்பர். குழந்தைகள் இன்னும் சிலகாலம் (கெ.பி. அம்மாக்களும் கூட) வால் ஈ, ஈவா ன்னு ப்ரேக் ச்க்றீச் குரலில் கத்திக் கொண்டிருப்போம்.

வால் ஈ விளையாட்டு விளையாட...
படம் பற்றி இன்னும் அறிய...
படம், செய்தி நன்றி / Thanks To: வால் டிஸ்னி (Walt Disney), திமூவிபாக்ஸ் (The Movie Box)

Saturday, June 21, 2008

சிந்தனை மாய்த்து விடு!

வானம் பார்த்திருப்பதில் அயர்வே இல்லை.
பசி இல்லை, தாகமும் இல்லை.
மேகம் தாண்டிப் போகும்;
கூடிப் போகும்,பிரிந்தும் போகும்.
மேகம் காணா நேரங்களில்,
கண் மயக்கும் தாரகைகள்.
'என்ன தான் பார்க்கிறாய்?'
எனக்கே தெரியாது.
மொழி தாண்டிய மௌனம்;
எண்ணங்களில் சிறைப்படாமல்
யோகத்தில் இறுத்தி வைக்கும்
யுகாந்திர ரகசியங்கள்.

என்னை வந்து மோதிப்பாரேன்
என்று ஊன்றி நின்ற கால்களை
ஆர்ப்பரித்து மோதிப் போகும் கடலலைகள்....
சுட்டுத்தான் பாரேன் என்று
நீட்டிய ஊனைச் சிதைக்கும் தீநுனிகள்....
இவை எதிலும் இல்லாமல்,
நீலவானில் மட்டும் மோகம்.

Monday, June 02, 2008

யாசகம்

'அன்புள்ள பெரியம்மாவுக்கு, விலைவாசி ஏறியிருப்பதால், இந்தமாதத்திலிருந்து இன்னும் ரூ.75 கூட அனுப்பவும். இப்படிக்கு, அப்பாசொல்படி ....'
'அன்புள்ள சித்தப்பாவுக்கு, சிறுவயதில் சந்துரு அண்ணாவுக்கு அப்பா புதுடவுசர்கள் வாங்கிக் கொடுத்ததையும் படம்வரையும் வகுப்பிற்குக் காசுகட்டியதையும் நினைவு படுத்திக் கொள்ளச் சொல்கிறார். நான்கல்லூரிக்கு அணிந்து செல்ல உங்களிடம் கேட்டு அப்பா சொல்படி நான்எழுத, நீங்கள் புதிதாய் வாங்கியனுப்பியதாய்ச் சொன்ன‌ சேலைகள் ஏற்கெனவேஉபயோகப்படுத்தப்பட்டவை...'

இளமையில் கைநீட்டிக் கேட்ட‌ சிறுமை ...
இன்றைக்குக் கோயிலில் எங்கள் பெயரில்
அன்னதானம்...
இலைக்கு அந்தப் பக்கத்திலும் நான் தானோ?
என்றைக்கும் உன்னிடத்தில் என் யாசகம்.

Thursday, April 24, 2008

வ‌.வா.சங்கம் போட்டிக்கு: உலகம் போற்றும் இரண்டு

வ‌.வா.சங்கம் போட்டிக்கு:

இந்த ரெண்டு இல்லாத இடம் ஏது?

இந்த ரெண்டு போற்றாத மொழி ஏது?





Twee

Deux

Zwei

Due

Δύο

Dois

Два

Dos

வெக்கை

காத்துக் கிடக்கிறது மனசு,
சாலைகளை வெள்ளையடித்து
எலும்பை உருக்கும் வெயிலுக்கு...
த‌ண்ணீரில் விழுந்திருந்தாலும்
ந‌னையாத உயிரைக் க‌ரைக்கும் கொதிப்புக்கு...

அணியில்லாப் பாத‌ம் பாண்டியாடிப் போகும்.
வேர்த்துக் கொட்டும் ஏ.சி. அணிந்த‌ கார்க‌ள் ப‌வ‌னி.
க‌திர் நோக்க‌க் குழைந்த‌ பூவும் நாவுமாய்
விருந்து கிளம்ப‌க் காத்திருக்கும் ம‌ர‌ங்க‌ளும் மாக்க‌ளும்.
க‌ண் குத்தி, நா வ‌ற‌ண்டு, தோல் க‌ருத்து
'இன்னுமா' என்று கைம‌றைத்த‌ க‌ண்ணோடு ம‌க்க‌ள்.

எப்போ வ‌ரும் என‌க்கு ம‌ட்டும் பிடித்த‌ வெயில்?

Thursday, April 17, 2008

பூமியில் விழப் போகிறது சிறுகல்கோள் (அஸ்டெரொஇட்)!

அந்த சிறுகல்கோள் பெயர் அபோஃபிஸ். 2029இல பூமிக்கு மிக அருகில், எவ்வளவு அருகில்?


இப்போ நம்ம பூமியை சுத்திகிட்டுருக்கிற செயற்கைக்கோள்கள் பல உண்டு. அதாங்க, ஆப்கனிஸ்தான்ல பின் லேடன் பாண்டி விளையாடுறாரான்னு பாக்க ஒரு செயற்கைக் கோள், நம்மூரு டிவி நிகழ்ச்சிகளுக்கு செயற்கைக் கோள் (கண்ணீரைப் பிழியறதுக்கே சீலை கட்டணும்) நம்மூருல இருந்து தட்ப வெப்ப நிலை எப்படி இருக்கிறதுனு பாக்கிற செயற்கைக் கோள் (இதை பிஸினஸாகவே செய்யும் அளவு தொழில் நுட்ப அறிவும் உள்கட்டமைப்பும் குறிப்பிட்டு சொல்கிற அளவுக்கு நம்மூர்ல இருக்குங்க!) என்று பல நூறு (விக்கில 238 என்று சொன்னாலும், இதுவரை 4000க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் நாம் இட்டிருக்கிறோம்) இப்பொழுது பூமியைச் சுற்றி் கொண்டு இருக்கின்றன) செயற்கைக் கோள்கள் இருக்கின்றன.

இந்த செயற்கைக் கோள்களில், சில (சுமார் 800) பூ‍வொத்த சுழற்சி கொண்டவை. அதாங்க, ஃப்ரான்ஸ்ல ரோட்டோரமா நடந்தா நம்ம பின்னாலயே நடந்து நம்மின் நடை பாவனைகளைக் கேலி செய்யும் மைம் போல, பூமியின் சுழற்சியை ஒத்துப் போகும் செயற்கைக்கோள்கள். ஸோ, ஒரே இடத்தில் நிற்கிற மாதிரி சுழலும்! இவை பொதுவாக 22,000மைல் (36,000கி.மீ.) உயரத்தில் சுழலுமாம்.

இத்தினி சுழல்கோள்கள் இருக்கும்போது, ஏதேனும் சிறுகோள், எவ்வளவு இருக்கும் பிரபஞ்சத்தில்? அவை மோதினால் என்ன ஆகும்? சுமார் 300 கல்கோள்கள் ஆபத்து விளைவிக்கக் கூடியவை தாம்! ஏன், இந்த ஜனவரி 30, 2008 கூட ஒரு சிறுகல்கோள் நம்ம வூட்டாண்ட பக்கமா போச்சு, அதிகம் இல்ல ஜென்டில்மென், ஒரு 540000கி.மீ. இப்பதான், ஒரு 20,000 ‍..50,0000 வருடங்களுக்கு முன் அரிஜோனா மாநிலத்தில், ஒரு கல்கோள் இடிச்ச படம்;) சுமார் 1.5கி.மீ. விட்டம்! பக்கத்தில் இருக்கும் படம் அந்த க்ரேட்டர் தான்.

அபோஃபிஸ் 2029இல் பூமிக்கு மிக அருகில் வரப் போவுது. இந்த கல்கோள் 1971இல் நம்ம பூமிக்கு பக்கத்தில் வந்திருக்கிறது. சூரியனைத்தான் சுத்துது. இப்போதைக்கு பூமியிலிருந்து நிலா எவ்வளவு தள்ளியிருக்கோ, அதைவிட 15முறை (அதாவது 5.8மில்லியன் கி.மீ.) தள்ளிதான் இந்த கல்கோள் 2029இல் போகும்னு சொல்றாங்க. இதன் சுழற்சி வேகத்தைப் பற்றி தெளிவாகத் தெரியாதுன்னும் ஒத்துக்கறாங்க. அதனால், இந்த கல்கோள் சுமார் 30‍-70மீ விட்டம் இருக்கும்ங்கறதால், இது மோதினால் எங்க மோதுமோ? அதன் சுழல்பாதை பற்றியும் தெளிவாகத் தெரியலை. (கடலில் விழுந்தால், சுனாமி போன்ற பெரும் கடல்கோள் ஏற்படலாம்னும் பயமுறுத்தறாங்க; பூமி அழுக்குமயமாகிடும்னு சில இணைய தளங்கள் வேற பில்டப்பு!) அதனால் தான் விஞ்ஞானிகள் 'பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏன்னா, வாழ்க்கை எப்படியுமே நிச்சயமில்லை. நமக்குத் தெரியாத ஒரு கல்கோளினால் பூமி இடிபட்டு நாம் அழிவதற்கான வாய்ப்பு எல்லாவற்றையும் அதிகம்'னு ஆறுதல் சொல்றாங்க;-)

பயந்து போயிடலியே? NASA சொல்றாங்க, பூமிக்கு அபோஃபிஸ்னால‌ ஆபத்து வருவதற்கான நிகழ்தகவு சுமார் 1/450,000. அந்த கல்கோள், மனிதன் செய்த சுழல்கோள்கள் மேல் இடித்தால் அதன் வழித்தடம் பூமிக்கு இன்னும் அருகில் வரலாம்.... இல்லை, அடுத்த முறை சுழற்சியின் போது, பார்ப்போம்! சுழல்கோள்கள் போகும் உயரம் இணையத்திலிருந்து போட்டிருக்கேன். இவ்வளவு அருகில் அந்த கல்கோள் வரும் வாய்ப்பு இல்லைனு தோணுது. Err on the side of caution, Better safe than sorryங்கற ரீதியில் பேசுறாங்கன்னு நான் நினைக்கிறேன். பல விடயங்கள் இந்த கல்கோள் பற்றி தெளிவாயில்லை.

நான் இந்த பதிவைத் தொடங்கக் காரணம், ஒரு சிறுவன். ஜெர்மனியைச் சேர்ந்த இந்த பதின்ம வயதுச் சிறுவன் தன் பள்ளிப் பாடத்துக்காக இந்த அபோஃபிஸ் பற்றி ஆராய்ச்சி செய்தான். அப்ப அவன் சொன்னது NASA வின் கணக்கு தவறு, 1/400 வாய்ப்பு இருக்கிறது ந்னு. அவ்வளவு தாங்க, பத்திகிச்சு. யூரோப்பிய ESA வெளியிட்டதுங்கறாங்க, டிக்க் கூட செய்துட்டாங்க... இன்று நாஸா தன் கணக்கு சரின்னு சொல்லிடுச்சு.

நிம்மதியா தூங்கப் போகலாம், 2029க்கு அலாரம் செட் செய்யலாம்னு யோசனை!

பூமி மேல் எதாவது வந்து குறிப்பிட்ட வேகத்தில் மோதினால், என்ன ஆகும்னு கணக்கிட ஒரு கால்குலேட்டர் இருக்கிறது. பாருங்களேன்!

Tuesday, April 15, 2008

காதல் கதை!

இரங்கமணி (இல்லாட்டி அவர் இரங்காவிடில் புகலேது?) மாலை வீட்டுக்கு வந்ததும் நல்லா கேக்கணும்ணு தோணிச்சு.

அமெரிக்காவில் கிறுக்கர்கள் நிறையன்னு தெரியும். அதுவும், காதலிக்குப் புது விதத்தில் "என்னை திருமணம் செய்து கொள்வாயா"ன்னு கேட்பது காதலனுக்குப் பெரிய விஷயம். "இந்த பொண்ணு மேல எனக்கு நிசமாவே காதல் தானா", "அவளுக்கு என் மேல நிசமாவே காதல் தானா" இல்ல, அந்த காதலனுக்குக் கொஞ்சம் தெளிவு இருந்ததுன்னா, "இரண்டு பேரும் ஒருத்தரொருத்தர் கொலை செய்யாமல் போலிஸ்க்குப் போகாமல் சேர்ந்து இருப்போமா" (எவ்வளவு வருடம் என்பது வேறு விஷயம்) அப்படின்னு ஒரு தெளிவு இருந்ததுன்னா பெண் கிட்ட ப்ரபோஸ் செய்வாங்க. சில மாதம்/வருடங்கள் சேர்ந்து இருந்த பின், மோதிரம் (அது தாங்க நிச்சயதார்த்த / கல்யாண மோதிரம்) கிடைக்காத பெண் "ஹ்ம், என் ஃப்ரண்டுக்கு கல்யாணம் ஆகி ரெண்டாம் வருஷத்துக்கு கான்கூன் போறாங்க"ன்னு சொல்லி பெருமூச்சு விட்டு (மூக்கு சிந்தி) காமிக்கலாம். அதுவும் இல்லியா, சரி, "காதல் கிளியே உன்னை நான் காதலிக்கலையே"ன்னு பாடிட்டு மூட்டையை கட்டலாம். இந்த வாழ்க்கை கஷ்டம்னுதான் எனக்குத் தோணுது. காதல் நம் வயதோடு அதுவும் வளரவில்லைன்னா ஒரு கஷ்டம். வாழ்க்கையை (டெம்பரரியாவாவது) பகிரும் இருவரின் எதிர்பார்ப்புக்கள் வேறாய் இருத்தல் இன்னொரு கஷ்டம்.

சரி இப்ப சொல்ல வந்த கதை இது தான். Bejeweled விளையாட்டு விளையாடி இருக்கீங்களா? பழைய விளையாட்டு. மூன்றுக்கு மேற்பட்ட ஒரே மாதிரியான "ரத்தினங்கள்" (பித்தளை பீப்பாசிம்பாங்க எங்க ஊர்ல:) ஒரு வரிசையில் வரவைக்கணும். என் கைபேசியில இருக்கு. எங்கியாவது வரிசையில் மாட்டி முழிக்கும் போது இது விளையாடலாம்.

அந்த விளையாட்டு இந்த பெண்ணு டேமி லீக்குப் பிடிக்குமாம். நியூ ஜெர்ஸியில் இருப்பவங்க. எப்பப் பாத்தாலும் விளையாடிட்டிருக்குமாம். அதோட காதலன் பெர்னி பெங் நிரலிகள் எழுதுபவர், அதுவும் வணிகத் தொடர்பான நிரலிகள். பாத்தாரு, இந்த விளையாட்டை அக்கு வேறு ஆணி வேறாய் பிரிச்சு (தொடக்கத்திலிருந்து எழுதியிருக்காருங்கறாங்க) ஒரு மாதத்தில் அதே விளையாட்டு நிரலியில், ஒரு செய்தியை இணைச்சுட்டாரு. சத்தம் போடாம டேமி லீ விளையாட விட்டுருக்காரு. அந்தம்மா, விளையாடிட்டு இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட ஸ்கோரு வந்தவுடனே, "கல்யாணந்தான் கட்டிகிட்டு"ன்னு செய்தி வந்திருக்கு. (எங்க ஓடிப் போறது!)


அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. இதைக் கேள்விப்பட்ட‌ அந்த விளையாட்டைத் தயாரித்து விற்கும் பாப்கேப் நிறுவனம் அவர்களின் திருமணத்துக்கு வருபவர்களுக்கு அந்த விளையாட்டு தான் பரிசுப் பொருள் (தோடா!); அதோட தேனிலவுக்கு பாப்கேப் இருக்கும் சியாட்டிலுக்கு போக, இருக்க, வர செலவு சத்தம் கொடுக்கறாங்களாம்! (இதுல அந்த நிறுவனர்கள் அவங்க தங்கப் போகிற ஹோட்டல் அறைக்கு கீழ பாட்டு பாட்றேன்னு வேற டீல்)

அது ஏன்னு தெரியல. நான் பார்த்த வரை, ஆசியர்களிடையே, சீன ஆண்கள் (இள வயசுக்காரங்க மட்டும்!), தைவானிய ஆண்கள் தம் மனைவியருக்குப் பெய்யும் மரியாதை இருக்கே!! அன்னிக்கு எல்லாரும் பூ வாங்கிட்டுருக்காங்க, இந்த (சீன) ஆண் (கூட வேலை செய்றவர்) 'என் காதலிக்கு ஏழு பூ'ன்னாரு. ஏம்பா? 'ஏழு மாசமா காதலிக்கிறோமே'ன்னாரு. என்னோட பணிபுரிந்த ஒரு தைவானிய ஆண் தட்சிணை(!) கொடுத்து, புரோக்கர் மூலமாக திருமணம் செய்த பெண்டாட்டி தன்னை விட்டுப் போவதைப் பற்றிச் சொன்னார்...

ஹ்ம்! எப்படியோ, கொடுத்து வச்சவங்கப்பா!

'இப்ப என்ன ரொம்பவா கேட்டுட்டேன்? வைர ஒட்டியாணம் கூட கேட்டதில்ல... இந்த மாதிரி ஒரு நிரலி எழுதிக் கொடேன்!'

(இடிக்க உரல் வேண்ணா கிடைக்கும், நிரலியாவது!)

Tuesday, April 01, 2008

குறும்புக்கார கூகிள்

தமிழ்மணத்தில எல்லாரும் ஏப்ரல் தினத்தை நல்லாவே கொண்டாடுறாங்க போலிருக்கிறது. சின்ன வயசில மிக மகிழ்ச்சியோடு சொந்தங்கள் என்னை ஏய்த்து முடித்தவுடன், பள்ளியில் போய் அலட்டிக் கொண்டதுண்டு. இப்ப, என் பசங்க என்னை ஏய்க்கிறாங்கன்னு கூட விளையாடிட்டிருக்கேன். என் ஜாதக அமைப்பு அப்படி:-)

போன வருடம் ஜிமெயில் ஏப்ரல் முட்டாள் தினக் குறும்பாக, "உங்கள் கண் போகும் தடம் வைத்தே, உங்கள் தேடுதிறனை அறிந்து நாங்களே தேடு சொற்களை உங்களுக்காக எழுதிக் கொடுப்போம்"ங்கற ரீதியிலே அறிவிச்சிருந்தாங்க. அதனால், இன்னிக்கு அவசரமா, காலைச் சாப்பாட்டை முடிச்சு கை ஈரத்தை கால்சட்டையிலே துடைச்சிட்டே(!) ஜிமெயிலுக்குள்ளே வந்தால் "கஸ்டம் டைம்" பத்தி அறிவிச்சிருக்காங்க.

இன்னிக்கு ஜிமெயில் குறும்பு பார்த்தீங்களான்னு பதிவு எழுதலாம்னு ப்ளாகருக்குள்ளே வந்தால் அங்கே இன்னும் குறும்பு.


முதலில் ஜிமெயில் குறும்பு: "கஸ்டம் டைம்" என்றால், எந்த நேரத்துக்கு இந்த இமெயில் அனுப்பப்படுகிறது என்று நீங்களே தீர்மானிக்கலாம்; ஏன், இரண்டு வருடங்களுக்கு முன் கூட அனுப்பலாம்; இதைச் செய்ய ஜிமெயில் ஒரு "இ‍ஃப்ளக்ஸ் கபாசிடர்" (கஷ்டம்டா!) பயன்படுத்துகிறது; இது பற்றீ இன்னும் தெரிந்து கொள்ள, "தாத்தாவை கொன்றால், நான் பிறப்பேனா" ஐயப்பாடு பற்றி விக்கிபீடியாவில் அறியவும்!! படங்களைப் பார்த்தீர்களா?!

கூகிள்காரவுங்க ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா!

ப்ளாக்கர்ல இன்னும் கஷ்டம்! இனிமே என் பதிவுல எது முக்கியம்னு அவங்களே போர்டு போடுவாங்களாம். ஹிஹி, நமக்கு ஐடியா பஞ்சம் வந்தா, கூகிளே பதிவு கூட போட்டுத் தர முடியுமாம்!

யப்பா, இந்த நடிகை ஓடிப் போனாள்னு படிக்கறதுக்கு, இதுமாதிரி என்னிக்கு வேண்ணாலும் படிப்பேன்!

இந்த விடியோ பதிவில நம்மை எல்லாரையும் செவ்வாய்க்கு அழைத்துச் செல்லப் போக அழைக்கிறார்கள், லேரியும் செர்கேயும். நன்றி இ.கொ., காமிச்சு கொடுத்ததுக்கு!

Wednesday, March 19, 2008

நட்சத்திரப் போட்டி: வடை பிட் நோட்டிஸ்

வடை செய்வது எப்படி?

1. 1 கப் உளுந்து . கொஞ்சம் துவரை சேர்க்கலாம். இவற்றை நனைத்து வைக்கவும்.
2. எண்ணெய் .
3. என்று இருப்பவரிடம் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து அடுப்பை ஏற்றவும்.
4. அதே என்று இருப்பவரிடம் நனைத்த உளுந்தை அரைத்து (உப்பு, மிளகாய்/மிளகு எது வேணுமோ அவை இட்டு) வைக்கச் சொல்லவும்.
5. வடை லக்ஷ்மி செகலாக வர, எண்ணெய் அடுப்பு மிதமாக எரிய வேண்டும்.
6. அரைத்த மாவை பதமாக எடுத்து ப்ளாஸ்டிக் பேப்பரில்/......லையில் ..இ...ட்டு துளை செய்து தயாராக் வைக்கவும்.
7. அதே யைப் பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கச் சொல்லவும்.
8. ...ன்னும் வடையை டேஸ்ட் செய்து பார்க்கலையா?
9. சாந்தி யோடு சொந்தராஜனும் டேஸ்டு செய்யலாம், பெண்கள் மட்டும் தான் டேஸ்ட் செய்யணும் என்று இல்லை.
10. , என்ன சுவை!

பி.கு.: ஈ என்று இருப்பவர், கணவர் அல்லது அவர் சொந்தக்காரர்கள், இல்லை, இந்த குறிப்பில் தவறு கண்டுபிடிக்கும் ஆண் ப்திவர்கள் யாராயும் இருக்கலாம்.

Friday, March 14, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

அமி திடமாய்ச் சொன்னாள், "அம்பா நிர்வாகக் குழு கலைக்கப் படணும், நீ உன் பதவியை விட்டிறங்கணும். வாழ்க்கை மேல எல்லாருக்கும் நம்பிக்கை வரணும்... ஜனநாயக முறையில் ஆட்சி செய்ய தேர்தல் நடத்துவோம். ஆண்கள் இந்த சமுதாயத்தில திரும்பி வரணும்".

"உனக்கு என்ன பைத்தியமா?" அம்பா கத்தினார். நான் பேசாமல் இருந்ததை எல்லாரும் கவனித்தார்கள். அம்பா என்னை நேராகப் பார்த்துக் கத்தும் போது சில கெட்ட வார்த்தைகள் தாமாய் வந்து விழுந்தன‌. "என்றைக்கு ஆண் தன்னை பெண்ணை விட உயர்வு என்று நினைத்தானோ அன்றிருந்து பெண் வெளியே தனியா போக முடிந்ததா? இது உனக்கு இது எனக்கு என்று இரண்டு பேரும் கடமையை பகிர்ந்துக்கலாம்னு ஆரமிச்ச ஒரு விளையாட்டு, பெண்ணை நாலு சுவர்களுக்குள்ளேயே அடைச்சு வச்சதே? ஆதி நாள் முதலாய் தாழ்த்தப்பட்ட‌ 'சாதி'யாய் உண்மையான வன்முறை பெண் மேல் தானே? இன்றைக்கு பெண் தனக்கு வேணும்னா அலங்காரம் செய்து கொள்ளலாம். தன் உருவத்தை மாற்றிக் கொள்ளலாம், எப்ப எங்க வேணும்னாலும் போகலாம் எதையும் செய்யலாம்...."

சற்றே குரலைத் தழைத்தவர், "குழந்தை, பெண் இன்று தனக்காய் வாழ்கிறாள். பெண் சுற்றத்தோடு கூடி வாழ்பவள். இன்றைக்கு மனித இனத்தின் உயர்வைக் காட்டும் வகையில் சேர்ந்து தோழிகளாய் வாழ்கிறோம், அறிவும் உணர்வும் கலந்த ஜீவிகளாய். அந்த கனவுகளைக் கலைத்து விடாதே..."

அமி பேசத் தொடங்கினாள்: "அம்பாவுக்கான பதில் இது தான். தாழ்த்தி வாழ்ந்த ஆணிடம் போரிட்டோ, விளக்கியோ சொல்வதை விட்டு அவனைக் கொன்று போடு என்கிறாயே? பெண்ணும் ஆணும் நிகர் என்று எல்லாரும் புரிந்து கொண்டால், பெண்ணையே பெண்ணுக்கு எதிராகச் செய்ய ஆணும் துணிய மாட்டான். பெண்ணும் இன்னொரு பெண்ணுக்கு அநியாயம் செய்ய மாட்டாள்... "

நான் சொன்னேன், "அமி, ஒரு சில நிமிடங்கள் நான் பேசலாமா?" அமி சிரித்துத் தலையாட்டினாள். இன்னொரு கிழாத்தி கேட்டார் "அமி யாரு?"

"புதிய ஜனநாயகக் குல அமைப்பு ஆலோசகர்களில் அமி ஒருவர்... அது பற்றி அப்புறம் பேசலாம். முதலில், நான் தான் கடவுள். ஏனென்றால், கடவுள் இல்லை என்றால், ஆக்கி அழிக்கக் கூடிய நான் கடவுள். கடவுள் இருக்கிறார் என்றால், எனக்குள்ளும் இருந்தே ஆக வேண்டும். இது மனித குலத்தின் சாபம்! இன்னும் தீர்க்கப் படாத இந்த புதிரை விட்டு 'இல்லை', 'இருக்கிறது' என்று சொல்ல அரசாங்கத்துக்கு உரிமை கிடையாது. எத்தனை மதங்கள், எத்தனை போர்கள்! அப்படி எல்லாம் இருந்த மனித இனம் கடவுள், மதம் என்ற அமைப்பு இல்லாமல் நன்றாகத் தானே 2100 வரை வாழ்ந்தோம்... கட்டமைப்புக்கள் மாறினால் நம்மாலும் மாறி வளர முடியும்.

"அம்பா, அப்புறம் நீ தானே உன் தோழிகளுட‌ன் சேர்ந்து சதி செய்து பழைய அம்பாவை கொலை செய்தீர்கள்.. யாருமே ஆண் குழந்தை பெற முடியாமல் சதி செய்து...அப்போ உன்னதமான சமுதாயம் உருவாக்குகிறோம் என்று உதவி செய்த லிகி இன்று நீ செய்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்டதால் அவளைக் கொன்று அவளிடத்தில் ஒரு க்ளோனைப் போட்டாய்.. மிடோகான்ட்ரியல் டிஎன்ஏ ஸ்கானைத் தகிடுதத்தம் செய்தாய்!" இப்போது அம்பாவின் தோழிகளில் பலர் என் பேச்சை ஒரு தீவிரத்தோடு கேட்டார்கள். லிகியின் க்ளோன் தன் நகப் பூச்சைப் பார்த்துக் கொண்டிருந்தது.

"ஆண்களை மீண்டும் இந்த சமுதாயத்துக்குக் கொண்டு வருவோம். உண்மைகளின் பேரில் அன்பின் பேரில் சமுதாயத்தை மாற்றுவோம். மனித இனத்தின் கடமை, சமூகம் பாற்பட்ட தன்னுயர்வு என்று எல்லாருக்கும் சொல்லிக் கொடுப்போம். அம்பா, உன் வயிற்றில் ஏன் நீ என்னைப் பிறப்பித்தாய் என்று நினைத்துப் பார்! லட்சியப் பெண்ணாய் வாழ்ந்த உன்னைப் போல் உன் உயிரின் பொருளாய் உனக்கு ஒரு வாழ்க்கைத் துண்டு தேவையாயிருந்தது. நீயே மறந்து போன லட்சியங்கள் நான்!"

அம்பா முகம் சிவந்து பாய்ந்தெழுந்து சொன்னார் "சும்மா உன்னை ஏமாற்றிக் கொள்ளாதே... ரோவிடமும் என் காதலி மிலாவுடனும் நீ கொண்ட பொறாமையில் நீ என்னை விட்டுப் போனாய். உன் லட்சியங்கள் உன்னதம் என்று கதை விடுகிறாயா? அம்பாவாய் ஆகியிருக்க வேண்டிய நீ இப்போ சாகப் போகிறாய்... முதலில் அமி."

இத்தனை தூரம் புரட்சிக்கு நாளும் நேரமும் பார்த்து, அழிக்க வேண்டிய கட்டிடங்களைத் தேர்ந்தெடுத்தவள் நான்... பாய்ந்து அமியை நோக்கி வந்து கொண்டிருந்த ரோபாலிகாவைச் செயலிழக்க வைத்தேன்... எத்தனை நாள் கனவு? அதற்குள் அமி திரும்பி அம்பாவின் தனித்திரையில் ஏற்கனவே ஏற்பாடாய் வைத்திருந்த ஆணைகளைப் பிறப்பித்தாள். வெளியில் அணைந்து எரியும் சிவப்பு விளக்குகளும், சங்கூதும் சத்தமுமாக... ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. ரோபாலிகாக்கள் வேறு இருவர் உள்ளே வந்து எங்கள் ஆணைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.

==========================================================================

புதிய ஜனநாயக முறையில் உலக முழுதிருந்து அமர்த்தப்பட்ட நீதிக் குழுக்கள் பழைய நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் விசாரித்து ஏற்ற தண்டனை வழங்கினார்கள். சிலருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டது. அம்பா முதலான சிலருக்கு மருத்துவ முறையில் அவர்களை மனரீதியில் மாற்றி அமைக்கும் பெரும் சிகிச்சைகள் நடந்தன. அம்பாவுக்குக் குறிப்பாக அதில் விருப்பமில்லை. இறந்து விடவே விரும்பினார். அதே போல், ஒரு தனித்த இரவில் தற்கொலை செய்து கொண்டார். இதெல்லாம் முடிந்து உலக முழுதும் புதிய ஜனநாயகக் குழுக்கள் அமைந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன.

அமி போன்றோர் சிறப்பாகவே உலகளாவிய குழுக்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் ஒரு சிற்றூரில் பள்ளி ஆசிரியையாகவும் பகுதி நேர நூலகராயும் இருக்கிறேன். இப்போது ஒரு சில ஆண் குழந்தைகள் படிக்க வந்திருக்கிறார்கள். நான் பெற்ற என் மகளும் என் பள்ளியில் படிக்கத் தொடங்கியிருக்கிறாள். இந்த புதிய அம்பாக்களின் வருகையில், வாழ்க்கை மீது எனக்கிருந்த நம்பிக்கை இன்னும் பூத்துக் குலுங்குகிறது.

நிறைந்தது

Tuesday, March 11, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 3

பகுதி 1
பகுதி 2
"நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா ரோ" இது ரோவைத் தடத்தில் நிறுத்தியது. திரும்பி என் கண்ணைப் பார்த்து நின்றாள். குழுக் கூட்ட அறை கட்டாயம் இதே கட்டிடத்தில் தான் இருக்க வேண்டும். அமி எனக்காகக் காத்திருப்பாள். இருந்தாலும், இந்த வம்பில் எனக்கு சுவாரஸ்யம் இருந்தது!

"அம்பாவை. அவருக்கு அப்புறம் யார் புதிய அம்பாவாய் வருகிறார்களோ அவரை".

"என்னையும் காதலிப்பாயா?" சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"நீ புதிய அம்பாவானால் உன்னையும் காதலிப்பேன்" இதைச் சொல்லும் போது ரோபாலிகாவின் கண்ணில் தெரிந்தது வருத்தமா? அறிவியல் பயின்ற எனக்கு, ரோ ஏன் நின்று எனக்குப் பதிலளித்தாள் என்று இன்னும் விளங்கவில்லை. அதனால் தான் இதில் சுவாரஸ்யமா?

"ரோ, காதல் தானா வரும்னு அம்பா சொன்னாங்க. காதல் உணர்வு தானே? நீ உணர்வுகள் அற்றவள் இல்லியா?"

"சிந்தனைத் திறனுடையவர்களுடன் பணிபுரிவது எனக்கு எளிதாக இருக்கிறது. அவர்களின் அருகாமை எனக்குத் தெளிவைத் தருகிறது".

எம்மா, பிடித்திருக்கு என்று சொல்லத் தான் உனக்குத் தெரியாதே! "அது காதல் இல்லை ரோ".

"ஆம், அம்பாவும் அதைத் தான் சொல்கிறார்".

இதற்கு மேல் எனக்கு ரோவிடம் பேசப் பிடிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். "நிர்வாகக்குழுக் கூட்டம் எத்தனை மணிக்கு என்று தெரியுமா?" என்றேன்.

"நீ புதிய அம்பாவாவதற்கு பேச்சுத் திறன் இன்னும் கற்க வேண்டும். பேச்சை மாற்றுகிறாய் அல்லவா? நிர்வாகக் குழுக் கூட்டம் இன்னும் 2 நிமிடங்களில் தொடங்க இருக்கிறது". திரும்பிய ரோபாலிகா இப்போது என் கையைப் பிடித்து இழுத்துச் செல்லாமல் நடந்தாள்.

குழுக் கூட்டம் அம்பாவின் அறைக்குள்ளேயே இருந்தது. தன் பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவோ, அல்லது இது தன் கோட்டை என்ற எண்ணத்திலோ! அறை இன்னும் பெரிதாக்கப் பட்டு பல மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தன. கூட்டத்துக்கு வர வேண்டியவர்கள் எல்லாரும் வந்தாற் போல தெரியவில்லை. ஆறேழு இருக்கைகளில் யாருமில்லை. அமி ஓர் ஓரமாய் நின்றிருந்தாள். என் சமிக்ஞை புரிந்தவள் தன் கையில் இருந்த தாளை என்னிடம் கொடுத்தாள். அவளுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை என்பதற்கான அடையாளத் தாள் அது. என் தோழிகள் சிலர் எழுதிய கவிதைகள் அந்த தாளில் இருந்தன. இன்னும் சில தாள்கள் அதே போல் அமியிடம் இருந்தாலும், இதில் ஒரு பக்கத்தில் அந்த தோழிகளோடு நான் விளையாடிய கட்டங்கள்... என் அழுக்குக் கையின் அடையாளம் சிறிதாய்.

அதை விட அவள் சொன்னது இன்னும் இனித்தது. "திட்டம் வெற்றி, யாம்னி... 2 கட்டிடங்கள் தரைமட்டம். மொத்தம் 7 பேர் நிலம்மேல் இறந்தார்கள். நிர்வாகக் குழுவில் 3 பேர் மரணம். இன்னும் 42 பேர்.." என்றவள், நிறுத்தி நிதானமாக உதட்டைச் சுழித்து "செப்பனிடப்படுகிறார்கள்....! ரிமாவும் லினியும் நம் பக்கத்தில் இறந்தார்கள், அவர்களின் விருப்பத்தின் பேரில், அவர்களைச் செப்பனிட அனுப்பவில்லை".

எங்கள் பேச்சு அங்கிருந்தவர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை என்று நன்றாகத் தெரிந்தது. ரோபாலிகா என்னிடம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் அது அவள் பணியுமல்ல. அவளுக்கு என்னைக் கண்டால் பிடிக்காததற்கு அதுவும் காரணமாயிருக்கலாம்.

ஒரு சப்பை மூக்கழகியான கிழாத்தி கேட்டாள் "யாம்னி, உன்னை என்னால் குறைவாக எடை போட முடியாது. இதற்கு என்ன அர்த்தம்? அம்பா கூப்பிட்டனுப்பியும் நீ புரட்சியைத் தொடங்கியது ஏன்?"

"நியாயமான முறையில் குழந்தை பெறக் கூடாது என்ற சட்டம் இயற்றி 60 ஆண்டுகள் கழித்து என்னை சட்டத்துக்குப் புறம்பாகப் பெற்றிருக்கிறார் அம்பா. தன்னைப் போல் ஒருத்தி என்ற எண்ணம் ஏன் எல்லாருக்கும் இருக்கக் கூடாதா?" என்றேன்.

இன்னொருத்தி எழுந்து கொண்டாள், அளவு கடந்த கோபத்தில் இரைந்து பேசினாள்: "யாம்னி, அம்பா பல வருடங்களாக எங்களின் தோழி. எங்கள் எல்லாருக்கும் ஒரே குறிக்கோள் உன்னதமான‌ பெண் சமுதாயம்".

"கடவுளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

ச.மூ. கிழாத்தி உடன் சொன்னாள்: "மதங்கள் இறந்து விட்டன. அவை சொல்லிக் கொடுத்த வித விதமான கடவுள்களுக்கும் நம் இன்றைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் கிடையாது. நீ புதிய அம்பாவானால், கடவுளை நம் வாழ்வில் புகுத்தாதே".

"வாழ்வின் பொருள் என்ன?"

"கட்டாயம் ஆண் இல்லை!" பின்னிருந்த யாரோ சொன்னதற்கு எல்லா கிழாத்திகளும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

அம்பாவுக்குத் தான் என் எண்ணம் புரிந்திருக்க வேண்டும். "உன் புரட்சி வென்றது என்று நினைக்காதே. நிலத்தடியில் வாழும் அழுக்குக் கிழவிகளுக்காக உன் தாயைப் பகைக்காதே. உனக்கு வரும் பதவியை மறுக்காதே. இங்கே நீ பேசிப் பேசி நேரம் எடுத்தால் அதனால் உனக்கு எந்த லாபமும் இல்லை. உன் கோரிக்கைகள் என்ன?"

தொடரும்

Sunday, March 09, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 2

உளறுதலே எம் பணி: புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 1

அப்போது அம்பாவின் தனித்திரை சிவப்புவெளிச்சப் புள்ளிகள் காட்டி விர்விரென விரிந்தது. திரும்பி என்னை முறைத்தவர், "புரட்சி என்பது வெறும் புரட்டு. உன்னை இங்கே வரவைத்தால் அவர்களை யார் நடத்துவார்கள்?" என்று வறட்டுச் சிரிப்புச் சிரித்தார். திரையிலேயே இன்னொரு சிவப்புப் புள்ளியை அம்பாவின் பார்வை ஒத்தி எடுப்பதை நான் கவனிக்கும் அதே கணத்தில் ரோபாலிகா உள்ளே வந்து, ஒரு வலிய பிடியில் என்னைப் பிடித்துப் போனாள்.

மிகக் குறுகிய தூரத்திலேயே ஆறடிக்கு மூன்றடிக்கு ஆறடியில் ஒரு குண்டு துளைக்காத கரிப்பொருள் பெட்டியில் ரோபாலிகா என்னைத் தள்ளி அடைத்துப் போனாள். இதில் நுண்ணணுக் கடவு எதுவும் இல்லை. என்னை அம்பா முழுமையாக நம்பத் தயாரில்லை என்று புரிந்தது! ஆனால், கவலையில்லை. அம்பாவின் வார்த்தைகளிலேயே நிலத்தடி எழுச்சி புலப்பட்டது. நிலத்தடிவாழ் மக்களின் காலக்கோட்டை எண்ணலானேன். எதிர்காலத்தை எண்ணினால், எண்ணங்கள் தெரிந்து விடுவதற்கு, கடந்த காலத்தை எண்ணுவது எவ்வளவோ மேல்.

===========================================================================================

நிலத்தடி வாழ்வு காலம் காலமாய் இருப்பது தான். அராஜகம் நடக்கும் போது, தட்டி வைக்கப்படும் அத்தனை பேரும் குனிந்து கொண்டு இருப்பதில்லை. ஆனால், இருநூறு ஆண்டுகளுக்கு முன், 2025இல் நடந்தது "யுகப் புரட்சி". அப்போது வல்லரசு நாடுகளாய் இருந்த சைனா, இந்தியா, மற்றும் எண்ணை வள ரஷ்யா, இவை இந்த புரட்சியை வளர்த்தன. எல்லா வல்லரசுகளுக்கும் ஏற்படும் விதியே பழைய வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் ஐக்கிய ஐரோப்பியாவுக்கும் நிகழ்ந்தது. பொருளாதாரச் சரிவுக்கேற்றாற் போல் அவர்களின் நுகர்வு குறையவில்லை; நுகர்வுக்கேற்ப எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் வளரவில்லை. அதன் பின் இந்தியாவும் சைனாவும் குலத்தை ஒன்றாய் ஆக்கியது. வெள்ளை, கருப்பு, மஞ்சள் என்று பிரிந்து இருந்த மக்கள் ஒன்றாய்க் கலந்து வாழக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் சனநாயக முறையில் நிர்வாக துணைக்குழுவும், அகில உலக அளவில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டன. வணிகப் பொருளாதார குழுக்கள் மக்கள் இனமின்றி வாழ்வதை துரிதப்படுத்தின‌. ஏற்கனவே இனங்கலந்து வாழ்ந்த பூமியின் மக்கள், 2100க்குள் முக அமைப்பு வேறுபாடுகள் மறைந்து, வண்ணத்தால் அடையாளங் காட்ட இயலாதவராய் ஒரே மண் வண்ணத்தவர் ஆனர். பல முறை விவாதிக்கப் பட்டு ஒரு வழியாக 2104இல் நாட்டு எல்லைகள் அழிக்கப் பட்டன.

மருத்துவ முன்னேற்றம் புதிய பிறப்புக்களை வழிமுறைப்படுத்தி வயதுக்கு அர்த்தமில்லாமல் செய்து விட்டது. குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்கள் மகப் பேறு அலுவலகத்தில் பதிந்த சில மாதங்களில் வாழ்நாள் முழுக்க நோய் நொடி வராத உத்திரவாதத்துடன் பிறந்தார்கள். வாழ்நாள் என்பது மனத்தின் வசப்பட்டது.

ஆனால், அதற்கும் மேலாய் மனித குலத்தின் எதிர்காலத்தை மாற்றும் ஒரு பெரிய நிகழ்வு 2080களிலேயே கண்டுகொள்ளப்பட்டது. அப்போது 100 : 70 என்று இருந்த பெண் : ஆண் விகிதம், நாளடைவில் குறைந்தது. 2100இல் கடைசியாக 100க்கு 10 என்று இருந்த ஆண்கள் பின் என்னாவானார்கள் என்று அப்போது வாழ்ந்த பல பெண்களாலும் சொல்ல முடியவில்லை. 'இதை உடுத்தாதே, இதை மட்டுமே உடுத்து' என்று சொல்ல ஆணில்லை. 'நீ இருப்பதால் மனிதம் வளரும், ஆனால் நீ இருப்பதால் மட்டுமே எனக்கு ஆசை வருகிறது' என்று உள்ளே பூட்டி வைக்க ஆணில்லை. 'எனக்காய் நீ தியாகம் செய்யும் போது உன்னை இன்னும் ஆள ஆசைப்படுகிறேன்' என்று பெண்மையை யாரும் வருத்தவில்லை. வீர விளையாட்டுக்களை பெண்களைப் போலவே ஆண்களும் விரும்பினார்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால், உலக வரலாற்றில் ஆண் தான் எப்பொழுதும் முதலில் போரிட்டது. ஆண்களின் போர்ச் சண்டைகளில் பெண்கள் இன்னும் துன்பப்பட்டார்கள்.

ஆனால், இன்றைக்கோ, 12 வயதில் தனக்கு வேண்டிய துறைகளைத் தேர்ந்தெடுத்த மகளிர் அந்தந்த துறைகளில் தீவிர ஆர்வத்துடன் செயல்பட்டனர். 'ஆணாதிக்கம் இல்லாத சமுதாயத்தில், குழந்தைகளை உங்களுக்காய் நாங்கள் தருகிறோம்' என்ற மருத்துவ முன்னேற்றத்தில், மாத விலக்கு தேவையில்லாமல் போயிற்று. கடைசியாய், 2125இல் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால், கர்ப்பமுற்று பெண் குழந்தை பெறுவது தடை செய்யப்பட்டது. ஆனால் நிலம்மேல் வாழ்ந்த யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அரசாங்கம் 'சட்ட மீறல்கள் 95% குறைந்தது, கொலை கொள்ளைகள் 99% குறைந்தன, கற்பழிப்பு அறவே இல்லை' என்று ஒவ்வொரு நாளும் அறிவித்தது. ஆண்களைப் பற்றிய நினைவுகள் பலருக்கு இன்று இல்லை. அதற்கான தேவைகளும் இல்லை. இன்றைய வணிகப் பொருளாதார வழிகளில், வேண்டியது வேண்டிய நேரத்தில் தனித்திரையில் கண்களால் வாங்கலாம். காதலைக் கூட. இதையே தொழிலாகக் கொண்டவர்களும் இருந்தார்கள்.

நிலத்தடியில் நான் சந்தித்த பெண்கள் பலர் 150, 200 வயதைத் தாண்டியவர்கள். சிலர் வெறுமே சாவை எதிர்பார்த்தார்கள். நிலம்மேல் வாழ்வில் அவர்களுக்கு
விருப்பமில்லை. பலர் கட்டுப்பாட்டை எதிர்ப்பவர்கள். எல்லோரும் கூடி வாழ்ந்தோம். என் பழம்பெரும் தோழியரில் சிலர் சொன்னது இது தான், 'இயல்பாகவே ஆண்மை குறைந்து வந்து கொண்டிருந்த காலத்தில், மிச்சமிருந்த ஆண்களைக் கொன்று தீர்த்தார்கள்' என்பது. நிலம்மேல் இருப்பவர் போல் இல்லாமல், நிலத்தடியில் பெண்‍களுக்கிடையே உறவு தடை செய்யப்பட்டிருந்தது. இயக்கத்துக்கு எதிராக நினைத்தோம்.

இப்போது ஆளும் அம்பா, உலகின் இரண்டாவது அம்பா. என் தாய். (என்னைப் பெற்றவள் என்று இன்றைக்கு அறிந்து கொண்டேன்). நான் அரசாங்கத்தின் செல்லப் பெண்ணாய் வளர்ந்தாலும், வரலாற்றையும் அறிவியலையும் விரும்பிப் படித்தேன். நிலத்தடித் தோழியரின் நட்பு, அவர்கள் நினைத்ததை வெளிப்படையாகப் பேசுவது எல்லாம் எனக்கு மிகப் பிடித்ததால், 25 வருடங்களுக்கு முன் நிலத்தடி இடம் பெயர்ந்தேன். என் நிலத்தடி நண்பர்கள் வரலாற்றில் நான் படித்த அத்தனை பொய்களையும் எனக்கே காண்பித்துக் கொடுத்தார்கள்.

============================================================================================

கதவைத் தன் மாயக் கரத்தால் திறந்தாள் ரோபாலிகா. அவள் தான் அம்பாவின் நம்பிக்கைக்குரிய ஒரே... என்ன சொல்வேன், கருவி என்றா? என் மதிய உணவாக, என் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கணிக்கப்பட்டு என் பேர் அச்சடித்த சாகலேட் துண்டைக் கொடுத்தாள் ரோபாலிகா. நான் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டேன். தினப்படி உணவுக்கு, நிலத்தடியில் அங்கே கிடைக்கும் கிழங்கு வகைகளும் எலிகளுமாய் எங்கள் வாழ்வு கழிந்து கொண்டிருந்தது. சில சந்தோஷ சமயங்களுக்கு, உணவுகள் நிலம்மேல் விளைவிக்கப் பட்டுக் கடத்தப் பட்டன.

என் எண்ணங்களைக் கலைத்துச் சொன்னாள் ரோபாலிகா "அம்பா இன்னும் 15நிமிடத்தில் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு நிலத்தடி புரட்சியைப் பற்றிப் பேச உன்னை வரச் சொன்னாள். உன் தோழி அமி அங்கே இருப்பாள்".

அமிக்காகவாவது நான் போயே ஆக வேண்டும். அம்பாவால் புரட்சியைக் கட்டுப்படுத்த இயலாததால் தான் இந்த குழுக் கூட்டமே. நன்றாய்ப் புரிந்தது. அவசரமாய் சாகலேட்டை வாயில் போட்டு மென்றேன். "தின்னாச்சு, இப்ப போலாமா?"

என் கிண்டல் புரிந்தாலும் ரோபாலிகா கண்டு கொள்ளாமல் (அவளுக்கு என்ன!) என் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.

"நீ யாரையாவது காதலிச்சிருக்கியா ரோ?" என்றேன்.

தொடரும்....

Saturday, March 08, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 1

ரோபாலிகாக்கள் விர் விர்ரென எனைக் கடந்து போனார்கள். காவல் காக்கும் ரோபாலிகாக்கள் முகங்கள் எல்லாம் ஒரே மாதிரி தான் படைக்கப் பட்டிருந்தாலும், சீனியர் ரோபோக்களிடம் தனித்துவம் உண்டு. சப்பை மூக்கு, விரிந்த காது என்று கணிணிகளின் கவிதைகளாய் விரிந்தவர்கள். சீனியர்கள் மட்டும் "யாம்னி" என்று தலை அசைத்து என்னை அடையாளம் கண்டு கொண்டதை காட்டிப் போனார்கள்.

அம்பா என்னை அவசர அவசியமாய் தன் அறையில் சந்திக்க வேண்டுமென அழைத்திருக்கிறார். ஏனென்று எனக்கு ஓரளவுக்குப் புரிந்திருந்தாலும், அம்பாவின் மூலமாகவே அதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். அம்பாவின் அறையில் இன்று ஸ்டெல்த் அளவு அதிதீவிர பாதுகாப்பு இருந்தது. வெளியில் ரோபாலிகா என் கண்களை ஸ்கான் செய்தாள்; டிஎன்ஏ ஸ்கான் என்றவுடன் தலை சாய்த்தேன், லாகவமாய் என் சிக்கெடுத்த வாராத தலை பிடித்து ஸ்கான் செய்தாள். பின் தலையாட்டி உள்ளே விட்டாள்.

ஒரு சிறுமூச்சோடு உள்ளே வந்து அமர்ந்தேன். அம்பாவிடமிருந்து குரலாணை வந்து கொண்டிருந்தது ‍ "வந்துட்டிருக்கேன்".

"அம்பா?"

இரண்டு நிமிடங்களில் அம்பா வந்தார். அம்பாவையும் ரோபாலிகா விரைவு ஸ்கான் செய்த பின் கதவு சாத்திக் கொண்டது. "யாம்னி, முக்கியமாப் பேசணும்".

"..."

"என்னோட வயத்துல பிறந்தவள் நீ, என்கிட்டயே திமிரைக் காமிக்காதே. பதில் பேசு யாம்னி"

பதில் சொல்லாமல் கண்ணால் அறையைச் சுற்றிக் காண்பித்தேன்.

"அதுக்குத் தான் ஸ்டெல்த்ல போட்டேன். அதத் தவிர விஷயம் வெளில தெரிஞ்சாச்சு. மனித குல‌ நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் போட்டுக் கேட்டாங்க... அங்க இருந்து தான் வந்தேன்..."

முகம் சுழித்துச் சொன்னேன் ‍ "அம்பா, உன் வயத்துல நான் பிறக்கணும்னு கேக்கலை...."

"யாம்னி, காலம் காலமா பெண், குறிப்பா தாய் மதிக்கப் படறதுக்குக் காரணம் இருக்கிறது. மரியாதை கொடுப்பதை நீ சில காலமாகக் குறைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். இந்தக் குலத்தைக் காக்கும் பணி எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது, ராணியாக இருப்பது..."

"போதும் அம்பா. குலத்தைக் காக்கும் பணி உனக்குக் கொடுக்கப்பட்டது யாரால? குழு உன்னைத் தேர்ந்தெடுக்கலை. நீ இந்தப் பணிக்கு வருவதற்காகச் செய்த சூழ்ச்சிகள் என்னைப் போல் நிலத்தடிவாழ் விளிம்பு....."

"யாம்னி, நிலத்தடி நீ வாழ வேண்டிய தேவை இல்லை. நிர்வாகக் குழுவில் என்னுடைய கருத்துக்கு உடன்படாதவர்கள் என்று நான் கருதியவர்களுக்குப் பதிலா இப்போ அவரவர் க்ளோன்கள் வந்துட்டாங்க. என் கருத்தோடு உடன் பட்டாச்சு. நான் எனக்காய், என் காதலுக்காய், மிலாவோடு ஓய்வுலகம் போறேன். நீ தான்டி இனி ராணி".

இதுக்குத் தானே யாம்னி ஆசைப்பட்டாய்! "அம்பா, எனக்கு இதில் உடன்பாடு இல்லை. காதலைப் பற்றி எனக்குச் சில ஆசைகள் இருக்கே..".

"காதல் வரும். வாழ்வில் ஒரு நிலை வரட்டும், தானே வரும்."

அம்பா பேசிக் கொண்டே, கண்களால், தன் தனித்திரையை கவனித்துக் கண்களால் ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தார். ரோபாலிகாவும் ஏதோ விர்விரென்றிருந்ததைக் கவனித்தேன். என் தனித்திரையும், மற்ற தகவல் தொடர்பு சாதனங்களும் அலுவலக வாயிலிலேயே பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் எம் இயக்கத்துக்குச் சேதாரம் செய்யக் கூடிய எதுவும் இல்லை.

"நிலத்தடியிலும் நண்பர்கள் உண்டு எனக்கு" அம்மா ‍ என் எண்ணங்களைப் படித்தாற் போல், த‌ன் 137 வயதிலும் மருத்துவ ரோபோக் கரங்கள் செப்பனிட்டிருந்த உதடுகளை விரித்துப் புன்னகைத்தார்.

"அழகும் அன்பும் மற்றவருக்காய் இல்லை கண்ணே..." என் எண்ணங்களை எடை போடும் ஆற்றலைக் காட்டும் விதமாயும் ஓர் இடைவெளி விட்டு சிறிதாய் "ஷடூ
டி‍இகெம் லா வீனஸ்" இனிப்பு-மதுவைப் பருகினார். "தத்தம் வாழ்வின் நீட்சி அவை. இருத்தலியல் என்று 19ம் நூற்றாண்டு உளறல் படித்திருப்பாயே? அவைதாம் தன்னிடத்தே புற அழகாயும், தன்னை விட்டு சிலரிடம் அன்பாயும் விரிகின்றன...".

மது ஊட்டும் விளக்கம் எனக்குத் தேவையில்லாமல் இடைமறித்தேன் "என்னை எதற்காகக் கூப்பிட்டாய்? நான் அடுத்த அம்பா என்று நிலத்தடியில் எல்லாருக்கும் தெரியும்".

"நம் ரகசியங்களையும் பாரம்பரியத்தையும் காக்கப் போகிறாய் என்ற நிச்சயம் எனக்கு வேணுமடி, அப்புறம் நீதான் புதிய அம்பா".

"மாட்டேன் என்றால்..."

"உனக்கு இந்த பதவி மேல் ஆசை இருக்கிறது, நிலத்தடியில் வரும் சண்டைகளுக்கு சமரசம் செய்கிறாய். அவர்களின் எழுச்சியை அவ்வப்போது கட்டுப்படுத்தி நல்ல நாள் வரும் என்று சொல்கிறாய். இதெல்லாம் எனக்கும் தெரியும்...."

இருநூறு ஆண்டுகளுக்கு முன் வரை கூட இந்தியா என்று ஒரு நாடு இருந்ததாகவும் அங்கிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த சதுரங்கம் எனப்படும் செஸ் இன்றைக்கும் எம் இயக்கப் பெண்டிரால் விளையாடப் படுகிறது. அதில் எப்பவும் நான் தான் வெல்வேன். "அம்பா, உன் பயம், இந்தளவு தான் உனக்குத் தெரியும் என்பது தானே?"

அம்பாவின் கண்கள் வெகு வேகமாய்த் தனித்திரையை ஆட்சி செய்தன.

"அம்பா, தகவல் தொடர்புக்கு உன் கம்ப்யூட்டர்களின் ப்ரோகிராமை மட்டும் நம்புவோம் என்று நினைத்தாயா?" வெகு வேகமாக ராணி என் கையில்!

தொடரும்....

Tuesday, March 04, 2008

நாங்களும் ட்விட்டுவோமே! & இம்பார்டன்டிஸ்.

அய்யா, அம்மா எல்லாருக்கும் வணக்கம் போடு ராசா! ரொம்ப நாளாச்சு பதிவு போட்டு. கொஞ்சம் இம்பார்டன்டிஸ் வியாதி இருந்ததால், இந்த பக்கம் வரலே..

அது என்ன வியாதியா? தெரியுமே, புதிசா ஒரு வியாதி பேரு சொல்லிட்டா, நீங்களூம் காபி/இளநி ரைட்டு வாங்க வந்துடுவீங்களே. நான் இப்ப ரீஜன்டா படிச்சது அதாவது, இம்பார்டன்ட்டாக பேரு எடுத்தவங்க (தோடா!) "வாழ்வின் முக்கிய படைப்பு" என்ற வகையிலே படைக்கும் வரையிலே ஒரு மனத்தடை, படைப்புத்தடை வந்துடுதுன்னு. நான் எப்படி எழுதினாலும் படிக்கறவங்க படிக்கத்தான் போறிங்க. வீக்கென்டு ஜொள்ளப் போறவங்க... எப்படியோ உங்க தலை எழுத்து எதுவோ!

*************************************************************************************

சரி, இன்னிக்கு என் பதிவுக்குப் புதிசா ஒரு ட்விட்டர் கொண்டு வந்திருக்கேன். ட்விட்டர் வந்து ரொம்ப நாளாக இருக்கிறது. தமிழ் மக்கள் பயன் படுத்துவாங்களாயிருக்கும். நான் கொஞ்ச நாள் மட்டம் போட்டதில யாரும் எழுதியிருந்தால், என் அறியாமையை பொறுத்தருள்க.

ட்விட்டரை வச்சுகிட்டு, துளசி டீச்சர் போகிற ஊர்ல என்ன "பரேட் வந்துகிட்டுருக்கு"; "நடந்து போறேன்"; "ஹை, யானை பொம்மை இங்க நல்லா இருக்கு"னு அப்டேட்டு செய்யலாம். இல்லையா, வேற யாராச்சும் "போண்டா சாப்பிட்டேன்", "இங்கன நல்லா இல்ல", "எல்லாரும் படோசன் ;‍) பார்க்குக்கு வராதீங்க, தாத்தா இருக்காரு" ன்னு டக்னு அப்டேட்டும் செய்யலாம்.

எனை ஈன்ற தந்தைக்கு என்னால் தினையளவு நன்றி: என் குருவாய், என் குடும்பத்தில் சில "முதல்" பட்டங்களை நான் பெற துரோணரான "சுஜாதா"வுக்காக இப்ப இந்த குறுங்கதை
மளிகை: அரிசி, துவரம், உளுந்து, பொட்டுக்க.. சர்தான், 4பாக்கட் இட்லி வடை பார்சல். உங்கம்மாக்கு காரம் இல்லாம.