COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, November 27, 2008

மும்பை கோரம்

மிகுந்த மனவருத்தத்தோடு, என் தாயும் அவள் மக்களும் வந்த விருந்தினர்களும், கண்ணீர் வடிப்பதையும் இறப்பதையும் நோவதையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நானும் கண்ணீர் வடித்துக் கொண்டு. எல்லா செய்திகளையும் படித்துக் கொண்டு. உயிரீந்த தலைமகன்களையும் வணங்கிக் கொண்டு. விளக்கேற்றி, கடவுளே இந்த கோரம் விரைவில் முடிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு.

என் மண்ணில் என் மக்களை வீழச் செய்பவர்களை இந்த அளவுக்கு வளர விட்டது எது? கப்பலில் வந்து படகுகளில் வந்து, ஹோட்டல்களுக்கும் உள்ளே வர விட்டது எது? இந்தியாவில் வன்முறை என்று காட்டுவதால் எங்கள் வாணிபம் குறைந்து விடும் என்ற எண்ணமா? இல்லை நம் மடமையா?

இன்னும் நரிமன் ஹவுஸில் எம் இந்திய இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரிலிருந்து குதிப்பதைப் பார்த்துக் கொண்டு; ஓர் அன்னையாய், அவர்களை, செயலில் வெற்றி பெறவும், "என் ஆயுசையும் சேர்த்து நீடுழி வாழ்!" என்றும் என் மனமார வாழ்த்திக் கொண்டு - எம் இந்திய மாவீரரின் மதம், இனம் என்னவாயிருந்தாலும்.



போதும்.




செய்திகள்
NDTV
Rediff
சமாசார் தொகுப்பு
தட்ஸ்தமிழ்

NDTV தொலைகாட்சி

Friday, November 21, 2008

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை: நாளைய வல்லரசுகளில் இந்தியா, சீனா உண்டு, அமெரிக்கா இல்லை?

புதிசா எங்க ஊருக்கு ஜனாதிபதி வரும்போது, உளவுத்துறை அவரிட்ட, "இந்தாப்பா, இதான் இந்த ஊரு நிலைமை. செக்புக்குல கிழிக்கிறதுக்கு முன்னால, இதான் பாஸ்புக்கு"னு ஒரு அறிக்கை கொடுத்துடுவாங்க. இதே மாதிரி புஷ் ஐயா கிட்டயும் 4 வருடத்துக்கு முன்னால கொடுத்துருக்காங்க, அப்ப, 2004இன் பழைய அறிக்கையில், சப்ஜாடா "அமெரிக்கா 2020 வருடத்திலும் வல்லரசாகத் திகழும்"னு 'விட்டுருக்காங்க'.

4 வருடங்களில் எத்தனை மாறுதல்? அடுத்த வருடம் பதவி ஏற்கப் போகும் ஓபாமா கிட்ட கொடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், "2025க்குள் அமெரிக்கா வல்லரசாக இருக்காது. அரசியல், பொருளாதாரப் பேரரசுகளாய் இந்தியாவும் சீனாவும் இருக்கும்"னு சொல்கிறாங்க. போன அறிக்கையை நம்பிட்டோம், அதனால் இந்த அறிக்கையையும் நம்பிடுவோம்!

முக்கியமான கணிப்புகள்:

1. நாடுகள், சிறு நாடுகள், சின்னஞ்சிறு அரசாங்கங்கள் என்று மாறிவரும் அரசியல் பின்புலத்தில், ஐ.நா. போன்ற நிறுவனங்களின் மேலாண்மை இனி மிகக் கடினம். இப்ப மட்டும் என்ன கிழிச்சதாம்!

2. 2025க்குள் இந்தியா, சீனா வல்லரசுகளில் அமையும்; துருக்கி, இந்தனேஷியா, இரான் இவை வளர்ந்து வரும் நாடுகளில் வல்லமை பொருந்தியவையாய் இருக்கலாம். லாம்க்கு அர்த்தம் இவற்றின் தீவிரவாதப் போக்கு தணிந்தால்.

3. அரசியல் மாற்றங்களில், பொதுவுடைமை கொள்கையை விட இன்றைக்கும் சீனா, ரஷ்யா பின்பற்றும் அரசுசார் பொருள்முதல்வாதமே பொதுவாய் விரும்பப்படும் கொள்கையாய் இருக்கும். ஜனநாயக‌ பொருள்முதல்வாதம் மெதுவாய் மடியலாம். இங்கியும், எந்த தூரத்துக்கு, ஜனநாயக‌ பொருள்முதலான அமெரிக்க அரசாங்கம் தன் ஏழைக் குடிகளைக் காக்க வேண்டும்னு வாதம் நடந்திட்டு இருக்கு. அரசாங்கம் - எனவே அதன் கடமைகள், இருத்தலியல்னு வரும்போது, தனியார் கம்பெனி லெவல்ல போயிட்டு தான், மானுடம் வழிமாறும்னு தோணுது. இதைப் பத்தி இந்த புத்தக விமர்சனங்களிலும் பார்க்கலாம்.

4. வருகின்ற புதிய சமுதாயம் இளைய சமுதாயமாக இருக்கும். ஒளி படைத்த கண்ணினாய் வா வா!

பிற்சேர்க்கை: For whatever it is worth.

அ) இடதுசாரி என்று சிலரால் கருதப்படுகிற NPR வானொலி அலைவரிசையில் நான் கேட்ட செய்தியை, NPR இன் இணையதளத்தில் கண்டது; வரலாறும் மாறும் காலமிது:-)



ஆ) நவம்பர் 20, 9மணியளவில் கூகிள் கேஷ் (நினைவுப்பெட்டகம்?)இல் சேமிக்கப்பட்ட இணைய தளப் பக்கத்திலிருந்து, தரப்பட்ட சுட்டி. சுட்டி மாறியிருக்கலாம். ஆனால், இந்த அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில், அமெரிக்கா வல்லரசுகளில் ஒன்றாயிருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Sunday, November 16, 2008

ஆதம் ஸ்மித்தின் பிழை என்ன? மா.சி. க்கு மறுமொழி

ஆதம் ஸ்மித்தின் வரலாற்றுப் பிழை என்றொரு பதிவு நான் விடாமல் படிக்கும் மா. சிவகுமார் அவர்களிடமிருந்து. அதுக்கு என் மறுமொழி (5 பக்கம் இல்லை, 5 பத்தி).

ஆதம் ஸ்மித் சொல்வது இது தான் ‍(ஓரளவு மா.சி. யின் பதிவிலிருந்து வெட்டி எடுத்திருக்கிறேன்): "தனி மனிதர்கள் தத்தமது சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் போது சமூகத்துக்குத் தேவையான பணிகள் நடந்து விடுகின்றன". இனி நான்: ஆதம் ஸ்மித்தின் சான்றுகளாய்ச் சொன்னது இது தான். "கசாப்புக் கடைக்காரர், ரொட்டி செய்பவர், சாராயக் கடைக்காரர் (டாஸ்மாக்!) யாரும் நம்முடைய நன்மைக்காக நமக்கு சோறு (சோத்துல ஏதுய்யா சாராயம்) போட்டு விடப்போவதில்லை; அவுங்களுக்கும் இதுல சுயநலம் இருக்கறதுனால, அவங்கவங்க வேலையப் பாக்கறாங்க". நாமும் தேவையானதை வாங்கி, தேவையானதை சாப்பிடுறோம் என்று புரிஞ்சுக்கணும். பொருளியலில் நோபல் பரிசு பெற்ற மில்டன் ஃப்ரீட்மென், ஆதம் ஸ்மித்தின் கோட்பாட்டைப் பற்றி "அதிகார துஷ்பிரயோகம் இல்லாத சமூக ஒத்துழைப்பு"ன்னு சொல்கிறார். இதுல சுயநலம் மட்டும் இருக்கா? சுயநலம் மட்டும்னு இருந்தால், ரொட்டி செய்பவர் ஒரேயடியா விலை வைக்க முடியாதா? அவர் ஏன் ரொட்டி செய்யணும்? அரசியல்வாதியானாப் போதுமே. ரொட்டி செய்யற கத்தியால ஒரே போடாப் போட்டு:‍) . இல்லீங்க, ஜோக் அடிக்க முடியலை இதப் பத்தி.

தொழில் செய்றோம். நம்மை மாதிரி நாலு பேரு தொழில் செய்ய ரெடியா இருப்பாங்க. பதுக்கல், கள்ளக் கடத்தல் இல்லாத இடத்துல, நேர்மையா போட்டி போட்டு நமக்கான சுயநலம் (நம் குடும்பத்தையும் சார்ந்தது) காட்டுற வழியில் வாழறோம். இதுல, ஆதம் ஸ்மித்தின் கோட்பாடு "சமூக நலத்தின் உருவற்ற கை தான் சுயநலம்"! ஒரு பொருளின் விலை அதற்கான வியர்வையின் விலை தான். என் வயித்தை மட்டும் பாக்கப் போறதில்லை. கொஞ்சம் சம்பந்தமில்லாத மாதிரி ஒரு மேற்கோள்: ஒரு சமயத்தில், அண்ணன் கமலகாசன் (ஸ்மித் சுமித்தானால், ஹா, காவாகும்:-) சொன்னாரு, "நான் சினிமாவில் செலவழிக்கறதுக்கு பதிலாக, வீட்டுக்குள் ஒரு நீச்சல் குளம் கட்டியிருக்கலாம்". இரண்டுமே சுயநலம் தான். இரண்டிலும் மனித உழைப்பு இருக்கப் போகிறது. ஒன்றில் மற்றதை விட நுகர்வோர் அதிகம்.

ஆதம் ஸ்மித் மட்டும் இன்றைக்கு நம்மை இங்கே கொண்டு வரவில்லை. ராபர்ட் அவன் (1771 -1858), போன்ற பலரும் வழி நடத்தினாங்க (அவர் பேரே அவன் தான், அதுக்காக அவர்ன்னு மாத்த முடியாது) - தொழிலாளிகளை "ஓரளவு" மரியாதையுடன் நடத்தி அதாவது, நல்ல உணவு, இருப்பிடம், உடல்நலம் பேணும் வகையில் நடத்தினால், உற்பத்தி அதிகரிக்கும்னு காமிச்சாரு. இது பத்தி ஊரு ஊராப் போயி பிரசாரம் செஞ்சாரு. தொழில் சார்ந்த சுயநலத்தால் சமூகநலம் விளையும்! அத்தோட‌, 1824இல், யு.எஸ் போய் அங்க 30,000 ஏக்கர் இந்தியானா மாநிலத்தில் வாங்கி வீடு குடியிருப்புகள் செய்திருக்காரு. (எனக்கு ஒண்ணு ரெண்டு எழுதிவச்சிருக்கலாம், ஏனா? அவரைப் பத்தி நான் எழுதி வைக்கறதுனால!) "கட்டு. கட்டினா வருவாங்க"ன்னு ஆரமிச்சு வைச்சிருக்காரு. இந்த குடியிருப்பின் தோல்விக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது: "உயர்ந்த கருத்துக்கள் கொண்டிருந்தாலும், எண்ணங்களால் வேறுபட்ட மானுடம் தன் சுயத்தைக் காக்கும் முயற்சிகளால் தோற்கடிக்கப்பட்டது".

கார்ல் மார்க்ஸ் சொல்வது என்னா? "இன்றைக்கு தொழிலதிபர்கள் ஊழியருக்குக் கொடுக்கும் சம்பளம் அவருக்கு வெளியில எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு தான். செய்யப்பட்ட பொருளின் மதிப்பு ஊழியர்களின் வேலையால் விளைந்தது". என்னால எளிமையா கார்ல் மார்க்ஸின் தத்துவங்களைச் சொல்ல இப்போ முடியும்னு தோணலை. ஆனால், பொதுவுடைமை கருத்துக்களை முன்வைத்த மார்க்ஸின் கோட்பாடுகளை இன்றும் எந்த கம்யூனிஸ்டு நாடும் முழுமையாக எடுத்துக்கலை. இதுபற்றி நிறைய கட்டற்ற இணையத்தில். இன்றைக்கு நடக்கும் பொருளாதார கஷ்டங்கள், கயிற்றின் மேல் நடக்கும் போது ஆகிற அட்ஜஸ்ட்மென்டு. பொருளாதார தியரிகள் அதைத் தான் சொல்கின்றன.

அதைத் தவிர‌, பலரும் சேர்ந்து ஆக்கியது இன்றைய தொழில்/விஞ்ஞான முன்னேற்றம். சுயநலம் மட்டும் பார்த்து இருந்தால், இன்டர்நெட் ஆராய்ச்சி-இரகசியமாகவே இருந்திருக்கும். நான் மா.சி. பதிவைப் படிச்சிருக்க மாட்டேன், உங்களை ப்ளேடு போட்டிருக்க மாட்டேன் (அப்பா, தப்பு என் மேல இல்லை). யாரையும் அட்லான்டிக் மாகடல் தண்ணீரில் தள்ளிவிட்டா, டைட்டானிக் ஜீரோ மாதிரி ஸ்டைலா பேசிட்டிருக்க மாட்டாங்க. தன்னலம் காத்துக் கொள்வார்கள். இந்த தன்னலத்தில், அவர்களின் குடும்ப நலமும் அடக்கம். இதுக்கு எடுத்துக்காட்டு எதுவும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு நான் கூற வேண்டாம்:‍-) இதுக்காக வறியவரின் துயர் போக்குவது தேவையில்லை என்று கட்டாயம் சொல்ல மாட்டேன். ஓரிருவரின் தாராளத்தில் மட்டும் வறியவர் வாழ முடியாது. கஷ்டப்பட்டு வளர்ந்த என்னைப் போன்ற‌ யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க. எனக்குக் கைநீட்டிக் கொடுத்தவங்க எல்லாரும் என்னால் முடியும்னு தெரிஞ்சப்புறம் மிகுந்த ஊக்கத்தோடு இன்னும் வாழ்த்தினாங்க. அவ்ளோ தான் இப்போதைக்கு.

Friday, November 14, 2008

ஓபாமாவின் ஜாதகம்!

நம்மாலானது: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பராக் ஓபாமாவின் ஜாதகம். ஜகன்னாத ஹோர என்னும் ஜாதகம் கணிக்கும் நிரலியில் கணிக்கப்பட்டது. அஷ்டவர்க்க பரல் விவரங்களுடன். தென்னிந்திய முறையில்.

பிறந்த தேதி / நேர, மேலதிக விவரங்கள், வாத்தியாரய்யாவின் பதிவில். (சுட்டி, பதிவின் தலைப்பில் இணைக்கப் பட்டிருக்கிறது).



"வாழ்க வளமுடன்"!

Wednesday, November 12, 2008

அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தராங்கப்பா!

அமெரிக்கர்கள் யாரையாவது கடுப்படிக்கணுமா?

"நீங்கள் வாங்க விரும்பியது அவ்வளவு தானா? மொத்தம் 7 டாலர் 53 சென்ட்"

"இந்தாங்க 10 டாலர்..." அதை வாங்கி அந்த பெண்மணி கம்ப்யூட்டரில் நம் தொகையை தட்டிய பின், கல்லாவில் போட்டுக் கொண்ட பின், "ஆ, மறந்துட்டேன், 3 சென்ட் இதோ, மிச்ச சில்லறை கொடுங்க‌" என்று சொல்லிப் பார்க்கலாம்.

நகரங்களில் வசிக்கும் அமெரிக்கர்கள் முக்கால்வாசி வாங்குவது இந்த பெரும் மளிகை வியாபாரிகளிடம். சுமாராய் சென்னை ராதாகிருஷ்ணன் சாலை நீல்கிரீஸை விட 5 மடங்கு அளவு பெரியவை இந்த மளிகைக் கடைகள். பால், மோர், பிஸ்கட், அரிசி/பாஸ்தா, பிஸ்ஸா, கோஸ், தக்காளி, ஷாம்பு எதுவும் வாங்கலாம். அந்த மளிகைக் கடையில் செக்கவுட் செய்பவர் 40 வயதுக்குட்பட்டவர் என்றால், அநேகமாக மேலே குறிப்பிட்ட உரையாடலில் மிகப் பாதிக்கப்பட்டு கால்குலேட்டர் தேடுவார்.

பள்ளிப் படிப்பை முடிக்க வியலாத என் தாயாரால் மனக் கணக்கு போட முடியும்; ஏழு வயதில் இருந்து மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் பழனிக்குக் கணக்குப் போடத் தெரியும். அமெரிக்கர்களால் ஏன் முடியவில்லை?

அதைத் தாங்க உலகம் முழுக்க விவாதிச்சுட்டிருக்காங்க. ஏன்னு சொல்றேன். இந்தியாவில் வளர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் சுரேஷ் மூர்த்தி தன் மகள்களுக்கு இந்திய முறையில் கணக்கு சொல்லிக் கொடுக்க விரும்பியிருக்கிறார். அந்த முயற்சி அவரை பாப் காம்ப்டன் என்கிற முதலை/தொழிலதிபர் (இவர் கிட்ட புதிய தொழில்களைத் தொடங்க நிறைய முதல் இருக்குங்க!) கிட்ட கொண்டு சேர்த்திருக்கிறது. இரண்டு பேருமா இந்தியன் மாத் ஆன்லைன் என்ற இணைய தளத்தை தொடங்கியிருக்காங்க. சுரேஷோட குழந்தைகளுக்காகன்னு உருவான இந்த தளத்தில் இப்ப பலரும் (நிறைய சீன / இந்திய வம்சாவளியினராம்) மாதத்துக்கு $12.50 இலிருந்து $25 வரை கொடுத்து பாடம் கத்துக்கிடறாங்க.

இந்தியா, சீனா இரண்டு நாடுகளிலிருந்து வருபவர்கள் கணக்கில் முனைப்பாக இருப்பதைச் சுட்டிக் காட்டும் பாப் காம்ப்டன் குறிப்பா சொல்வது இது தான்: "என் மகள்கள் எந்த வகுப்பில் படிக்கிறார்களோ, அதே வகுப்பில் இந்தியாவில் படிக்கும் மாணவர்களை விட, என் மகள்கள் 3 வருடங்கள் பின்தங்கி இருக்கிறார்கள்" என்று.

அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பிரமாதமான கல்வி நிலையங்கள்னு எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். ("தளையற்ற சிந்தனை" வந்து தட்டுதே!) ஆனால், இதுல, நியூயார்க் டைம்ஸ் சொல்லுறதை விட அதுல வந்து பின்னூட்டம் இட்டிருக்கிற இந்திய/சீன / அமெரிக்கர்களைப் பாருங்கள். ஐஐடி யிலிருந்து வந்தவர்களும் இருக்காங்க, இந்த் ஊர்ல வளர்ந்தவங்களும் இருக்காங்க. பொதுவில் தெரிவது:

1. பெற்றோரின் ஊக்கம் குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணம். (ஒரு சீன வம்சாவளி அமெரிக்கர் சொல்வது: "என் பெற்றோருக்கு ஆங்கிலம் தெரியாதுன்னாலும், நான் மார்க் மட்டும் வாங்கலை, பிச்சு எடுத்துடுவாங்க"). குழந்தைங்க வீட்டுப் பாடத்தில் அமெரிக்கப் பெற்றோர் (நேரமின்மையும் காரணி) ஆர்வங்காட்டுவதில்லை இங்கே. நிறைய வீட்டுப் பாடம் கொடுக்கறாங்கன்னு சில வருடங்கள் முன்னால் ஒரு தாய் புகார் சொல்லிட்டிருந்தாங்க.

2. சமூக எதிர்பார்ப்புகள். இது முதல் பாயின்டோட சம்பந்தப் பட்டதாயிருக்கலாம். புத்திசாலியாகக் காண்பித்துக் கொள்வது என்பது அமெரிக்கச் சமுதாயத்தில் கேலி செய்யபடுவதுங்கிறாங்க சிலர். ஏன், ஓபாமா கீக் (geek) ந்னு கூகிளிட்டுப் பாருங்களேன்! ஓபாமாவும் மெகெயினும் ஒண்டிக்கு ஒண்டி நின்னா, ஓபாமா தான் பெரிய கீக் - அதுல ஒரு கேலி!

நாளைக்கு என் குழந்தைகள் இந்தியாவில் இன்று வளரும் குழந்தைகளோடு தான் தொழிலிலும் வளர்ச்சியிலும் போட்டி போடப் போகிறார்கள். இன்றைக்கு உலகம் முழுக்க வளரும் குழந்தைகளில், 10ல் 3 இந்தியாவிலாம். அவர்களில் எவ்வளவு பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே, மளிகைக் கடை பழனியைப் போல்! அமெரிக்காவில் குடியேறும் இந்தியப் பெற்றோரோ, இந்திய நடுத்தர / மேட்டுக்குடி வகுப்புப் பெற்றோரோ தரும் கல்வியைப் பெறுபவர்கள் எத்தனை பேர்!!

Thursday, November 06, 2008

பண்பாட்டுக் காவலர்கள்

"நீ தாலி இல்லாம வெளியில வந்தே, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" அமெரிக்காவுக்கு வந்த புதிதில் தாலி இல்லாமல் எடுத்த ஒரு படத்தைப் பார்த்து விட்டு அம்மா.

"சீ போடி, தாலியில ஒரு கயிறு கட்டி கூட்டிட்டு போனா, வவ் வவ்னு குரைப்பியா?" அம்மா பேச்சைக் கேட்டு விட்டு என்னிடம் துணைவன் ராஜாமணி.

ஆனாலும், தாலி இல்லாமல் தான் சென்னை விமான நிலையத்தில் இறங்க வேண்டியதாயிற்று. இது எப்படி நடந்தது என்றும் சொல்லி விடுகிறேன். அமெரிக்காவை விட்டு கிளம்பும் போது, கான்சஸ் விமான நிலையத்திற்குள் வரும்போதே நேரம் ஆகிவிட்டிருந்தது. ராஜாமணி வேலை விஷயமாக இந்தியாவிற்கு போன வாரமே போயிருப்பதால், நானும் குழந்தை கண்ணனும் மட்டும் தனியாக இந்தியப் பயணம். கிளம்பும் நாள் வரை எனக்கு அலுவலகத்தில் வேலை இருந்தது. காலையில் போயே தீர வேண்டிய மீட்டிங் சென்று, அடுத்த 3 வாரங்களுக்கான வேலைப் பளு பற்றி விவாதித்து திரும்பி, கண்ணனை காப்பகத்திலிருந்து அழைத்து வந்து, நான் பான்ட் சூட்டிலிருந்து சல்வார் கமீஸ்க்கு மாறி கிளம்பும் போது நேரமாகிவிட்டது. ஊருக்குப் போகணும்னா சல்வார் கமீஸ், புடவை தான். வேறு எது போட்டாலும், நம்மூரில் ஆட்டோ/டாக்ஸிகாரர்களுக்கு கண்ணைப் பார்த்துப் பேச மறந்து விடும்.

கான்சஸிலிருந்து முதலில் சிகாகோ பயணம். விமானப் பயணத்தில் கண்ணன் கூட இருந்ததால், வேண்டிய சாப்பாடு/துணிகளை மட்டும் கொண்டு வர ஒரு பெட்டி, மற்றும் கண்ணனுக்கான டயபர் பை, கைப் பை. கண்ணன் நகர்படிகளில் மட்டுமே சாப்பிடுவேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான். கையில் வைத்திருந்த டோனட்களை (பாதுஷா சுவையிலிருக்கும்) ஊட்டியவாறே ஒரு பக்கம் நகர்படிகளில் ஏறி மறுபக்கம் இறங்கும் நகர்படிகளில் இறங்கி லூட்டி அடித்துக் கொண்டிருந்தான். குழந்தைகளின் ஸ்ட்ரோலர் ஊரில் பயன்படுவது இல்லை என்று தோழிகள் சொல்லிவிட்டார்கள். முதுகில் அவனைத் தூக்கிப் போக காரியர் அவசரத்தில் மறந்தது வேறு என் கோபத்தைக் கிளறிக் கொண்டு இருந்தது.

கான்சஸ் விமான நிலைய செக்யூரிட்டி பாயின்டில், கண்ணன் இழுத்த இழுப்புக்குப் போக முடியாமல், நானும் சாப்பிட நேரமில்லாமல் பசியோடு வந்து கொண்டிருந்த போது, செக்யூரிட்டி பீப்பர் அடித்தது. பொறுமையிழந்த அமெரிக்க‌ காவல் பணியாளர் "நகை ஏதாவது இருந்தால், அந்த டப்பாவில் வச்சு, கன்வேயர் பெல்ட்டில் வைங்க; ஸ்வெட்டரையும்!" என்று அடுத்து ஒரு குடும்பத்தை வரச் சொல்லி விட்டார்.

ஸ்வெட்டரைக் கழட்டும் போது தாலியில் கோர்த்த அம்மாவின் பவளம் மாட்டி தாலி வெளியில் வந்தது. தன் கோலால் "அதையும்" என்று சுட்டினார் இன்னொரு காவல் பணியாளர். தாலியை டப்பாவில் வைப்பதற்குள், கண்ணனைக் காணோம். மற்ற பிரயாணிகளின் கண் சுழட்டல், கமென்ட் ("தே ஹவ் நோ கன்ட்ரோல் அஃப் தெயர் கிட்ஸ்") எல்லாம் பார்த்து / கேட்டுக் கொண்டே, கண்ணனைத் தேடிக் கண்டுபிடித்து இழுத்துக் கொண்டு வந்தால், "அம்மா, ஸ்னாக்" என்றவனை கைப்பையிலிருந்த ஒரு டோனட் கொடுத்து கிளப்பினேன். இங்கிருந்து சிகாகோ போய் அங்கிருந்து சென்னைக்கு விமானம் பிடிக்க நேரமிருக்குமா என்று தெரியவில்லை.

ஃப்ரான்க்ஃபர்ட் வரை கண்ணனின் அழுகை நிற்கவில்லை. அங்கு வந்தவுடன் ராஜாமணிக்கு ஃபோன் செய்யச் சொல்லியிருந்தான்.

"வியர் ஸின்ந்த் இன் ஃப்ரான்க்ஃபர்ட்".

"ஸிந்து சந்து, போடி. கண்ணன் எப்படி இருக்கான்? அவனைப் படுத்தினியா?"

அடப்பாவி! ஆதியிலிருந்து செக்யூரிட்டியிலிருந்து கண்ணன் என்னைப் படுத்திய கதையைத் தொடங்கிச் சொல்லும் போது தான் தாலியை கான்சஸ் விமான
நிலையத்திலேயே மறந்தது நினைவுக்கு வந்தது. "அய்யய்யோ, என்னடா பண்றது?"

"இதுக்குத் தான் புருஷனை நீ வாடா போடா சொல்லாம இருக்கணும்கறது. என்கிட்டயே மரியாதை இல்லியே? இங்க வா, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்"

"தாலியை தொலைச்சதுக்கு அம்மா என்னை கொன்னு போட்டுடுவாள்"

"அப்ப சரி! அதான் இன்னொரு கல்யாணம்னு சொன்னாலும் சரியாத் தான் சொன்னேன்"

விளையாட்டாக ராஜாமணி பேசினாலும் எனக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. மாமியார் என்ன சொல்வாரோ? கண்ணன் முதுகில் ஓங்கி வைத்தால் கொஞ்சம் கடுப்பு குறையும் போல் இருந்தது. அதனால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்பதால் விமான நிலைய‌ பாத்ரூமில் கண்ணனை டயபர் பெட்டில் பெல்ட் போட்டு படுக்க வைத்து விட்டு, பின் என் கோபத்தைக் காட்ட காலால் ஃப்ளஷ் செய்து விட்டு கதவை ஓங்கி சாத்தினேன். கண்ணனுக்கு டயபர் மாற்றி, நானும் மஸ்காராவால் சிறிய கறுப்புப் பொட்டு வைத்து, லிப்ஸ்டிக் கொஞ்சமாய்ப் போட்டு விட்டு வெளியில் வந்தால் நேரமாகியிருந்தது.

ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருந்து சென்னை பறக்கும் போது கண்ணன் நன்றாகத் தூங்கிப் போனான். சென்னை விமான நிலையம் மாறவேயில்லை. "யூ வான்ட் ஹெல்ப் ப்ளீஸ்?" "ட்வென்டி டாலர் மேடம்" என்று பின்னால் வந்தவர்களை காலால் எத்தி விட்டதாக மனதில் நினைத்துக் கொண்டு நானே பெட்டியைத் தள்ளி வந்தேன்.

அவர்கள் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டதை கவனிக்காமல் வந்தேன். கால்டாக்ஸி பிடித்து நேராய் ஹோட்டலுக்குப் போக வேண்டும். ராஜாமணி மதிய ஃப்ளைட்டில் மும்பையிலிருந்து வருவதாக திட்டம். அப்புறம் அம்மாவை மதுரைக்கு சென்று பின் மாமியாரை ஆந்திராவிலும், பார்க்கலாம் என்று எண்ணியிருந்தோம். நான் ஹோட்டலுக்கு வந்து சேரும் போது பின்னிரவு. லிப்ஸ்டிக் அழிந்தும் அழியாமல் கொஞ்சம் தெரிந்திருந்தது; பொட்டு இருக்கிறதா என்று மட்டும் செக் செய்து கொண்டேன், தமிழ்நாடு ஆயிற்றே! கண்ணன் தூங்கி வழிந்து கொண்டிருந்தான்.

கண்ணனை இடுப்பிலிருந்து இறக்கி விட்டு இழுத்துக் கொண்டு ஹோட்டல் வரவேற்பாளரை நோக்கிப் போனால் இந்த பின்னிரவிலும் ஹோட்டல் முன்னறையில் நான்கைந்து கரை வேட்டிகள் பவ்யமாக நின்று கொண்டிருந்தனர். இந்த ஹோட்டலில் வாலிப வயோதிக அன்பர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் சிலர் தங்குவது உண்டு; கடந்த முறை தங்கிய போது போர்டு போட்டிருந்தது. ராஜாமணி கூடவே அப்போது வந்திருந்ததால், தமிழ் படிக்கத் தெரியாத, பேச‌த்தெரிந்த‌ மனவாடு ராஜாமணிக்கு நான் படித்துச் சொல்லி கிண்டல் அடித்தேன். அந்த வா. வ. கேஸ்களோ என்னவோ! இன்றைக்கு வரவேற்பறையில் நின்றிருந்த கரை வேட்டிகளில் அகலமாய்க் கரை வைத்த‌ வேட்டி கட்டியிருந்தவன் முன்னால் நின்றிருந்தான். பெரிய காலர் வைத்த‌ பச்சை ஜிகினா சட்டைக்கும் மேலே அகலச் செயின், இரண்டு கைகளிலும் தங்கத்தில் கங்கணம், வாட்ச் என்று.

சடாரென்று என்னைத் திரும்பிப் பார்த்தான். என் கழுத்தில் துளைத்த அவன் பார்வையால், என் கழுத்தில் ஒரு ஓட்டை விழுந்திருக்கலாம் . நான் கண்ணனைத் தூக்கி நெஞ்சுக்குக் குறுக்காகக் கிடத்தி தோளில் சார்த்தி கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். என் அருகே சூட்கேஸும் பையும்.

குரலை உயர்த்தியவன், "நல்ல பெரிய டீலக்ஸு ஏசி ரூம் தானே போட்டிருக்கீங்க!" என்று என் மேலிருந்து கண்களை எடுக்காமல் வரவேற்பாளரைக் கேட்டான்.

அவர் கண்களைத் தழைத்து "ஆமா சார்" என்றார். "எது முதல் ஃப்ளோரா?" என்று மீண்டும் கேட்டான். "ஆமா சார்" என்ற பதிலைத் தாண்டி, "ரூம் 125 தானே?" கரைவேட்டியின் கேள்விகள் தனக்கல்ல என்று அவர் மெதுவாய்ப் புரிந்து கொண்டு பேசாமல் நின்றிருந்தார். கரைவேட்டி பக்கத்தில் இருந்த அல்லக்கைகளிடம், "டேய், ரூம் 125. எப்ப வேண்ணாலும் வாடா". அவர்கள் சிரிக்காமல், என்னைப் பார்க்காமல் பயிற்சி பெற்றவர்கள் போல் பவ்யமாக நடந்தார்கள். திரும்பி இரண்டு முறை அவன் பலக்க சொல்லிக் கொண்டே போனான்.

'என்னைக் கூப்பிட்டாலும் கண்ணனை என்ன செய்வது?' என்று அப்புறம் ராஜாமணியிடம் கேலியாகச் சிரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த‌ கறை(வேட்டி)ப்பிறவியைப் பார்க்காமல் நான் நின்று கொண்டிருந்தாலும், அவன் சென்று சில மணித்துளிகள் மட்ட சென்டு மற்றும் சிகரெட்டு வாசனை அங்கே இருந்தது.

பி.கு.: அம்மாவை தாஜா செய்து நகைக் கடைக்குக் கூட்டிப் போய் அதே போல் திருமாங்கல்யம், தாலி செயின் செய்து கொண்டேன். மாமியார் பார்ப்பதற்குள்.

பி.கு.2: அப்புறம் நான் சென்னை வருவதற்குள் கான்சஸ் நண்பர்களை அழைத்து விவரம் சொல்லிய‌ ராஜாமணியால், கான்சஸ் லாஸ்ட் அன்ட் ஃபவுன்டில் இருந்து அம்மாவின் பவளத்தோடு முதலாவதும் திரும்பக் கிடைத்தது. 1 அவுன்ஸ் தங்கம்! ராஜாமணியின் தாலி-பாக்கியம்!!