COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tuesday, May 12, 2009

மக்களே, ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க!

இந்தியத் தேர்தல் விதிகளின் படி, “எனக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை, ஆனால், என் பேரில் கள்ள ஓட்டு விழுவதைத் தடுக்க விரும்புகிறேன்”னு சொல்லறது 49-ஒ (1). இது பத்தி ஞாநி ("ஒரு வேட்பாளரையும் பிடிக்காட்டி 49ஓ போடு, எப்படியும் ஓட்டு போடு" அப்படின்றாரு) புண்ணியத்தில நிறைய பேரு எழுதியிருக்காங்க. இன்றைய தேதியில் 49ஓ படி ஓட்டுப் போடாம நம்ம கடுப்பைக் காட்டிட்டு வர்றதுன்னால யாருக்கு லாபம்? அரசியல்வாதிகளுக்குத் தான்! நீங்க ஞாநியுடைய ஒரிஜினல் வாதம் பாத்தீங்கன்னா, 49ஓ போட்டால், அதே வேட்பாளர்கள் திரும்பி அடுத்த முறை தேர்தல்ல நிக்க மாட்டாங்க (நிறுத்தப்பட மாட்டாங்க?) என்று சொல்றாரு. ஏங்க, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரெல்லாம் தேர்தல்ல நிக்கறாங்க!!!

49ஓவினால, யாருக்கு ஓட்டுப் போடறோம்/போடலைங்கிற ரகசியம் ஒடைஞ்சுடுது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டுமுறை நம்முடைய வோட்டு முறையை மாற்றக் கோரியிருக்கிறது. தேர்தல் வோட்டு போடும்போது "மேற்கூறியவர்களுக்கு வோட்டளிக்க
விருப்பமில்லை" ன்னு கூட மக்கள் வோட்டிட வழி செய்யணுமாம். இன்னும் இது சட்டமாகலை.(2). இதுபத்தி எழுதினா, உ.த.பதிவுமாதிரி நீளமாயிடும் (அவர் பதவி காலியாயிட்டிருக்காம்ல!)

குண்டுக்கல் மாவட்டத்தில வோட்டுப்பட்டியில் கதைத்தேர்தல் நடந்ததுன்னு வச்சுக்குவோம்; அ) சாதியான் ஆ) துட்டான் இ) ரெண்டுங்கெட்டான்னு மூணு பேரு போட்டியிடறாங்க. 1000 பேர் வோட்டு போட்டாங்க (மிச்சம் பேர் சினிமாவுக்குப் போனாங்க). 1000 பேர்ல 900 பேர் (அவிங்க 900 பேரும் "வோட்டுப்பட்டி ஞாநி" கல்லூரி முதுகலை மாணவர்கள்), பூத் ஆபிசர் கையைக் காலைப் பிடிச்சி, கடைசியில் மிரட்டி போராடி (3) 49ஓ மூலமா வோட்டு போட விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க. இந்த நூறு பேரு போட்ட வோட்டுல ரெண்டுங்கெட்டான் ஜெயிச்சாரு. ஞாநி சொல்வது என்னா: இவ்வளவு பேரு ஓட்டு போடலைன்னு கட்சிகளுக்கு தெரியுமாம். கறி பிரியாணி செலவு 100 பேருக்குத் தானே?

49ஓவை பெரும்பான்மை (100% என்பது இயலாது!) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா? பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு எதிர்பார்த்த செலவு 818கோடி. தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில! தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி. வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது? தேர்தல் போது, எந்தத் தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க. அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் "ஆதரவாளர்கள்", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் தான்! எல்லா நாடுகளிலும் தேர்தல் ஊழல்கள், லஞ்சம் எல்லாம் உண்டு. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தொழிலதிபர்ங்கற ரீதியில் டொனேஷன் கேட்டு ஃபோன்கால் வந்தது, இது சகஜம்!!

உருப்படியா இரண்டு யோசனைகள் (நடைமுறைச் சிக்கல்கள் உண்டு):
1. ஓட்டுப் போடுவது சில நாடுகளில் கட்டாயம் (சுட்டியில இதுக்கான வாத/எதிர்வாதங்கள் இருக்கு). அதுபோல், திண்மையுள்ள இந்தியக் குடிமக்கள் எல்லாரும் வோட்டுப் போடணும்னு ஒரு சட்டம் வேணும். அட்லீஸ்ட், வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்களுக்கு தபால் ஓட்டுப் போடுவதை வழிமுறைப் படுத்தலாம் இல்லையா? படிச்சவங்க குறைவா ஓட்டுப் போடறாங்களாம் (4). பத்தாவது முடிச்சவங்க ஓட்டுப் போடலைன்னா, ரூ.10,000 வரை தண்டம் கட்டணும்னு வைக்கலாமே, அடுத்த எலக்‌ஷனுக்காவது பணம் சேரும்.

2. நாட்டைத் திருத்த இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் குழுவா அமைச்சு தேர்தலுக்கு நிக்கலாம். (அருண்குமார் பதிவில எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சி பற்றி எழுதியிருக்காரு). தேர்தலில் வென்றவர்களுக்கு சட்டத்துக்கு மீறி வருமானம்/இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்தால், வென்றவர் பதவி துறக்கணும்னு அந்த குழு கறாரா நடைமுறைப்படுத்தணும்.

ஒவ்வொரு இந்தியத் தேர்தலும்போதும் வந்து 49ஓ போடுன்னு சொல்லாம, இடைப்பட்ட நேரத்துல நல்ல வேட்பாளர்களை உருவாக்கப் பாக்கணும். வேட்பாளர்களுக்கு வோட்டு போட விருப்பமில்லை என்பது, சனநாயக அடிப்படைக்கு எதிராகவா என்றும் ஒரு கேள்வி இருக்கு. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல்ல மக்கள் பங்கேற்கணும் (அய்யோ சிரிக்காதீங்க;-( குறிப்பிட்ட நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், தேர்தலுக்குப் பின்னரே கட்சிக்கு டொனேஷன் தருவோம்னு மக்கள் உறுதி தர்றதுன்னு கூட வழிகள் இருக்கு. ஓ-போடு இயக்கத்தில், படிச்சவங்களை டார்கெட் செய்யறாங்க; படிக்காதவங்க ஓட்டு போடுறது எதுக்குன்னு முதல்ல புரிஞ்சுக்கணும். அட்லீஸ்ட் நம்மூரில் இருக்கிற சட்டங்களை அமல்படுத்துவதிலும் சட்டங்களைப் பற்றின உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும் தான் நம்மைப் போன்ற படித்த ஞாநிகள் ஒத்துழைக்க வேண்டும்.

தரவு/சுட்டிகள்:
1. இந்தியத்தேர்தல் விதிகள் இங்கே.
2. தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகள் இங்கே.
3. தேர்தல்களில் 49ஓ போடுவதில் பதிவர்கள் பட்ட நடைமுறைச் சிரமங்கள்: வித்யா, ஊர்சுற்றி, அருண்குமார்.
4. பத்ரி சார் பதிவிலே கிராமத்தை விட பெரிய நகரங்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவுன்னு விழுக்காட்டோட!




மீள்பதிவு!