COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Monday, January 02, 2012

பேயூரில் ஆவிபிடித்ததும், பனிநீராடியதுமான கதைகள் (புத்தாண்டுச் சுற்றுலா)

உங்க எல்லாருக்கும், எனது புத்தாண்டு வாழ்த்துகள்!! இந்த ஆண்டிலயாவது நல்லா உடற்பயிற்சி செய்யணும், பத்து கிலோ குறைக்கணும் என்று டிசம்பர் 31ந்தேதி உறுதி செய்து ஹிஹி, ஜனவரி 2ந்தேதியே உடற்பயிற்சி செய்யாத ஆளு நான். என்னைப் போலவே நீங்களும், ஹிஹி, டாப்ஃப்ளோர் ஸ்ட்ரா ங்க் பட் பேஸ்மெண்ட் வீக் என்றால்..... உங்களுக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் வாழ்த்துகள்:-)

நீங்க என்ன செய்தீங்க? இந்த புத்தாண்டுக்கு என்ன செய்தீங்க என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எல்லாரும் எங்க போனீங்க, இல்லாட்டி தொலைக்காட்சியில என்ன பார்த்தீங்க, வீட்ல என்ன செஞ்சீங்க என்று தெரிந்து கொள்ள விருப்பம்.

சரி, நான் என்ன செய்தேன்? பெரிய புள்ளக்கு 11 வயசு. பேய் பூதம் பற்றி பயம்/ஆர்வம் உள்ள வயது. "கூடப் படிக்கிற புள்ளங்க சவான்னா (Savannah) என்கிற ஊருக்குப் போயிட்டு வந்திருக்காங்க, நாமும் போவோம்"னு பிடுங்கி எடுத்ததால, அங்கு போனோம்.

சவான்னா! சவான்னாவின் ஊர்ச்சதுக்கம்:


சவான்னா, ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களில் (USA) நாட்டிலேயே அதிகப்படியான பேயாடும் ஊர் என்று பெயர் எடுத்தது. "சவான்னா" என்கிற ஆறு அட்லாண்டிக் மாகடலோடு கலக்கும் இடத்தில் இருக்கிறது இது. வெள்ளையர்கள் 1733இல் இங்கே முதலில் குடியேறியிருக்கிறார்கள். ஜெனரல் ஓகில்தோர்ப், அவரது 120 படைவீரர்கள், "ஆன்" என்ற கப்பலில் சவான்னா ஆற்றில் வந்து இறங்கினர். பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ்-இன் பேர்சொல்லும் முகமாக, ஜார்ஜியா என்ற மாநிலத்தை உருவாக்கினர். அதன் தலைநகரானது சவான்னா நகரம். (இன்றைக்கு ஜார்ஜியா மாநிலத்தின் தலைநகரம், அட்லாண்டா நகரம் ஆகும்). இங்கே இருக்கும் எல்லா இடங்களிலும் சைக்கிள்களில் போகலாம்; வாடகை சைக்கிள்கள், தானுந்துகள் எல்லாம் கிடைக்கின்றன.

சவான்னா நகரம் ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களிலேயே, மிகப்பெரிய கப்பல் சரக்குக் கொள்கலம் போகக் கூடிய நிலையம்; 4வது பெரிய துறைமுகம். சவான்னா ஆற்றின் மே ல் இருக்கும் பாலம் (படம் கீழே), 185அடி உயரக் கப்பல்கள் போக 1023அடி அகலப் பாதையோடு இருக்கிறது. சுமார் 2மைல் நீளமும் 1100அடி அகலமும் உள்ள பாலம். நாங்கள் இருக்கும்போதே கார்கள் பலவற்றைச் சரக்காக எடுத்துச் செல்லும் கப்பல்கள் பார்த்தோம்.
சவன்னா வரலாறு: பொதுவாக, மற்ற ஆங்கிலேயர்க ள் போலில்லாமல், ஜெனரல் ஓகில்தோர்ப், சவான்னா நகர்ப்பக்கம் இருந்த சிவப்பிந்திய மக்கள் தலைவர் யாமாக்ரா-வோடு நட்பு பாராட்டினார். இதனால் மற்ற அமெரிக்க மாநிலங்களில் இருந்த சிவப்பிந்தியரை சண்டை, சச்சரவு / தந்திரக் கொலைகள் மூலம் வென்ற வெள்ளையர்கள் இங்கே நட்போடு தங்கள் நகரத்தை நிலைநாட்டினர்.

சவான்னாவை 1800களிலேயே வலைக்கிராதி போல சதுரங்களாகக் கட்டியிருக்கிறார்கள். மது, கறுப்பின அடிமைத்தொழில், விலைமாதர் தொழில், வழக்கறிஞர் தொழில் இவற்றை ஓகில்தோர்ப் தடை செய்திருக்கிறார். இதுல ஒன்று வந்தாலும், மற்றதும் வந்திடும்னு! ஆனாலும், குறுகின காலத்திலியே கறுப்பின அடிமைகள், வழக்கறிஞர்கள், விலைமாதர்னு எல்லாரும் அப்புறம் இந்த நகரத்துல தொழில் செய்யத் தொடங்கிட்டாங்க.

பேயாடுதோ? அந்தகாலத்துக்கே உரிய வன்கொடுமைகள் - சின்னப்பசங்க, பெண்கள், அடிமைகள் மீதான வன்கொடுமைகள் - இருந்திருக்கின்றன. இதைத் தவிர 1796, 1820களில் பெரும் தீவிபத்துகள், 1820, 1854களில் நிகழ்ந்த தொற்றுநோய்கள் இவற்றின்போது பெரிய எண்ணிக்கையில் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. நெருப்பின்போது மாடியில் சிக்கிய குழந்தைகள், வன்கொடுமைகளில் இறந்த உயிர்கள், கணவனின் கள்ளக் காதலியைக் கொன்று தானும் மடிந்த சீமாட்டி என்று குறை-ஆயுளில் மடிந்த உயிர்கள் ஆவிகளாக உலவுகின்றனவாம். ஒரு வீட்டுக்குள்ளே போனாலே, தன் கண்டிப்பால உயிரிழந்த மகளால தானும் வருந்தி உயிர்நீத்த ஒருவரோட ஆவி, வீட்டுக்குள்ளே வந்தவர்களைப் பிடித்துத் தள்ளி விடுகிறதாம். "ஆவிபிடிக்க", ஆவிகளின் சங்கேத மொழியைப் பதிவுசெய்யன்னு ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த குழுவும் பலவித சத்தங்களைப் பதிவுசெய்கிறார்கள்: "ஐயோ, காப்பாத்துங்க" என்பது மடிந்த கள்ளக் காதலியின் குரலாம்.

இந்தப் படத்தில உங்களுக்கு எவ்வளவு பேய் தெரியுது?
இந்த செய்திகளில் எனக்கு சுவை தோன்றக் காரணமே, என் கூட பணிபுரிந்த ஒரு பெண்மணி. சவான்னாவில் பிறந்து வளர்ந்த அவரோடு, வேறொரு நகரத்தில் சிலகாலம் பணிசெய்தேன். அப்போ அவர் சொன்ன கதை: 1820இல் நிகழ்ந்த பெரும் தொற்று நோய் மற்றும் தீ விபத்தில், மயக்கத்தில் இருந்தவர்களையும் இறந்தவர்களோடு, புதைக்க இடமில்லாமல், வீடுகளின் அடிப்பக்கத்தில் தூக்கிப்போட்டு, செங்கல் சுவர்கள் கல்லறைகள் கட்டினார்களாம். இந்த சுவர்கள் சிலவற்றின் உள்பக்கத்தில், இறக்காமல் அந்தச் சுவர்க்கல்லறைக்குள் மாட்டினவர்கள் மயக்கம் தெளிந்த எழுந்திருக்கிறார்கள்; எழுந்த பிறகு, வெளியில் வர நகங்களால் சுவரைப் பிறாண்டிய அடையாளங்கள் இன்றைக்கும் இருக்கின்றனவாம். (இதை எங்களுக்கு ஊர் சுற்றிக் காட்டிய வழிகாட்டியும் ஒப்புக்கொண்டார். கூட குழந்தைகள் இருந்தமையால், இதைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடியாது என்றுவிட்டார்!). இப்படி க் குறை ஆயுளில் இறந்தவர்கள் ஆவிகளாகத் திரிகிறார்களாம். சவான்னாவில் வாழும் பலரும் அப்படி இப்படி பேய்களைப் பார்த்த கதைகளைச் சொல்கிறார்கள்!

சவான்னா இன்றைக்கு: இன்றைய சவான்னாவில் உலகத்தரம் வாய்ந்த "சவான்னா நுண்கலை/வடிவமைப்புக் கல்லூரி" (Savannah College of Arts and Design) இருக்கிறது. உடைந்த நிலையில் இருக்கும் கட்டிடங்களையும் இந்த கல்லூரி மாணவர்களே புதுப்பிக்கிறார்கள். சவான்னா நகரம் இருப்பது சவான்னா ஆற்றங்கரையில் என்பதாலும், பழமை வாய்ந்த/வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நகரம் என்பதாலும், ஆற்றங்கரையில் படகு சவாரி, இரவு உணவுடன் கூடிய படகு சவாரி, பேய்ச்சுற்றுலா, ஊர்ச்சுற்றுலா என்று நிறைய உலாக்கள் இருக்கு. சாப்பாட்டு விடுதிகள் நிறைய! வித விதமான உணவு வகைகள், தேன் வகைகள் - ம், ம், சுவை!

புனித பாட்ரிக்ஸ் நாள் ஊர்வலம் "பெருங்குடி" ஊர்வலம். ஊர்வலம் வரும் சாலைகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் விடுமுறை கூட விட்டுவிடும்!

திருமணங்கள் பல நடைபெறுகிற காதல்பேரூராகவும் இது இருக்கிறது!

பல ஆங்கிலத் திரைப்படங்கள் எடுத்திருக்காங்க இந்த ஊரில்! Forrest Gump, Midnight in the Garden of good and evil, The Gingerbread man, Glory, Cape Fear, The General's Daughter... இந்த பட்டியல் நீண்டுகிட்டே போகுது: http://www.savannahoffthebeatenpath.com/Top%20Level/books.htm

இன்னும் சவான்னா பற்றி தெரிந்து கொள்ளணுமா? சவான்னா பற்றிய ஒரு சுட்டி: http://www.georgiaencyclopedia.org/nge/Article.jsp?id=h-1056 . சவான்னாவின் பேய்களைப் பற்றி இன்னும்: http://www.google.com/search?q=savannah+ghost+stories

******************************************************************************

பக்கத்தில் இருக்கும் ஊர்/தீவுகள்: புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பார்க்க நாங்கள் அடுத்துப் போனது டைபீ (Tybee) தீவு. சவான்னா பக்கத்தில் இருக்கு.
இந்த அலைமேடையிலிருந்து தான் வாணவேடிக்கை நடந்தது! டைபீத் தீவில் எங்களைப் போன்ற சைவ உணவுவிரும்பிகளுக்கு அவ்வளவா உணவு கிடைக்கலை. இந்திய உணவு இந்தத் தீவுலியே இல்லை! படேல்கள் இங்கியும் தங்குவிடுதிகள், எரிபொருள் நிலையம் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்றாலும்!! இருந்தாலும், சவானாவுக்குப் பயணம் செய்து பிடித்த தாய் நூடுல்ஸ் / சைவ உணவு சாப்பிட்டுட்டு வந்தோம்.

புத்தாண்டுக்கான வாணவேடிக்கைகள், பட்டாசுவெடிகள் எல்லாவற்றையும், கடற்கரையிலியே இருந்து பார்த்தோம். தலையிலே கோமாளி குல்லா, சத்தம் போடுற பீப்பீ வச்சுகிட்டு எல்லாரையும் போல அலப்பறையும் செய்தோம். போலீஸு கண்ணுல படவில்லை, எனவே நல்லாவே சத்தம் போட்டோம்:-)

புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1, 2012) காலையில் நிலமுனைநீச்சல் (polar plunge) என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர், பகடிக்குரிய உடைகள், வீட்டு உடைகள்னு விதவிதமா களியாட்டம் போட்டுகிட்டு நீரில் குதித்தார்கள். இது கின்னஸ் சாதனை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு வானொலி நிலையம் ஏற்பாடு செய்தது. அதுனால உள்ளூர் மக்கள் எக்கச்சக்கமாக வந்திருந்தார்கள்.
இம்புட்டு தொலைவு வந்திட்டு, தண்ணி பார்ட்டி இல்லாமலா? "டால்பின் கடற்பாறை உணவகம்" (dolphin reef restaurant - படம் கீழே) போய் சாப்பிட்டோம். கடலைப் பார்த்துட்டே சாப்பிடலாம். பச்சைத்தக்காளிக்கா ய் பஜ்ஜி (இந்நாட்டின் தெற்கத்திய சிறப்புத் தின்பண்டமாம் இது), பாஸ்டா (கணவரும் நானும்), பிட்சா, வெஜ் கேசடியா (குழந்தைகள்) சாப்பிட்டோம்.
இன்னும்... பக்கத்து ஊர்கள்: சவான்னா பக்கத்திலேயே ஹில்டன்ஹெட் ஹில்டன்(தென் கரோலினா மாநிலம்) என்கிற தீவு - மிகவே வணிகப்படுத்தல் இந்தத்தீவில்! - இருக்கிறது. தென் கரோலினா மாநிலம் பாலத்துக்கு அந்தப்பக்கம்! நிறையபேர் தென்கரோலினாவில் குடியமர்ந்து ஜார்ஜியாவில் பணிபுரியவும் செய்கிறார்கள்.

நிறைய தீவுகள், தங்குவிடுதிகள் - சிறுகுடில், படுக்கையும்காலையுணவும் வழங்குவிடுதிகள், பெரிய உல்லாசவிடுதிக ள், எல்லாம் இருக்கின்றன.

விமானநிலையங்கள்: சவான்னா மற்றும் ஹில்டன்ஹெட் விமானநிலையங்கள் அருகருகே இருக்கின்றன. சவான்னாவுக்கு போக டெல்டா மற்றும் ஏர்ட்ரான்- இல் குறைந்தவிலை சீட்டுகள் கிடைக்கின்றன.

படங்கள் உதவி: tybee-times, ibookcdn.com, savannah-georgia-vibe-guide.com, விக்கிபீடியா, மற்றும் கூகிள் படங்கள்.

"முக்கிய" குறிப்பு: அப்போ ஆவி பிடிச்சோமா இல்லியா? பெரிய புள்ளக்கு சவான்னா போய்ச்சேரையிலியே ஆஸ்துமா பிரச்னை தொடங்கிருச்சு. அந்த ஆவி தான்...ஹிஹி, பிடிச்சோம். எப்படி தலைப்புக்குக் கொணாந்தேன்!