COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, October 15, 2010

(சவால் சிறுகதை) சவாலுக்கு அப்புறம்!

டிஸ்கி:
1. இந்த பதிவு நேற்றைய, இன்றைய, நாளைய எந்த பதிவரையும் குறிப்பதல்ல.
2. நான் ஒரு ஐயோ பாவம். என்னைப் பற்றி இங்கே கூறப் பட்டிருக்கும் எதுவும் உண்மையோ பொய்யோ அல்ல.

சுமாராக மூன்று வருடங்களாக காமினி "காதல் மட்டுமே" என்ற ப்ளாகில் அவள் காதலன் சிவமைந்தனோடு தமிழ்ப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறாள்.  சிவமைந்தன் "வாழ்க்கை வெல்வதற்கே"னு தனியா ப்ளாக் வைச்சிருக்காரு (இல்லைங்க, "அந்த சிவா" இல்ல இவர், இந்த விளக்கம் மட்டும் நான் போடலைன்னா, இதுக்கே "அந்த சிவா" மூணு பதிவு போட்டுருவாரே!).

இரண்டு வருடங்களாக "யாமறிவோம் பரம்"னு ஒரு ப்ளாகர் வந்து காமினியின் பதிவுகளில் அடிக்கடி பின்னூட்டம் போட்டிருக்காரு, பார்த்திருப்பீங்க.  இவங்க ப்ரொஃபைல்ல்லாம் பாத்தீங்கன்னா, "ஐடி படிப்பு / தொழில், சென்னை" ன்னு போட்டிருக்கும்.  காமினி ஃபாலோ பண்றது சிவமைந்தன் மற்றும் பரந்தாமன் இவங்க பதிவுகள் மட்டுமே. என்னையெல்லாம் தெரிஞ்ச மாதிரி பதிவுலகத்தில காட்டிக்கக் கூட மாட்டாள்:-(

பதிவுலகப் பிரபலம் பரந்தாமன் ("யாமறிவோம் பரம்" பதிவு வெச்சிருக்காரே, அவர் தான்!) இவங்க கூட இமெயிலில் சிலபல கும்மி அடிப்பது உங்களுக்குத் தெரியாது.  வருடத்துக்கு சில முறை இந்தியா செல்லும் நான், முடிந்த போதெல்லாம் இவங்களைச் சந்திச்சிட்டு தான் வருவேன்.

இந்தியாவின் எலக்ட்ரானிக் சூப்பர் ஸ்டாராக விளங்கப் போவதாக பரந்தாமனின் பெயர் "இந்தியன் ஈஈ டைம்ஸ்"இல் வந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம், அவருடைய பதிவுகளில் வந்திருந்தது. அவருடைய செமிகன்டெக்டர் ஓஇஎம் செய்யும் கம்பெனி விரைவில் பப்ளிக் கம்பெனி ஆனால், உலகத்தின் செமிகன்டெக்டர் இன்டஸ்ட்ரியின் பூமத்திய ரேகை இந்தியாவுக்கு இடம்பெயரலாம்...

பரந்தாமன் பற்றி உங்களுக்கு இன்னும் ஒன்று தெரியாமல் இருக்கலாம். பரந்தாமனின் பின்னூட்டங்கள் வந்தால், ஒரு காலத்தில் நானும் ரொம்ப புளகாங்கிதப் பட்டு அண்ணேன்னு சொல்லிட்டிருந்தது உண்டு. ஏதோ சந்தேகத்தில், அவர் பின்னூட்ட வரலாறு பார்த்த போது தான் தெரிந்தது பரந்தாமன் ஐரோப்பிய, தென் அமெரிக்க ஐபி அட்ரஸ்லிருந்து என் பதிவுகளுக்குச் சில சமயம் பின்னூட்டம் வந்திச்சு. "அண்ணே, சென்னையில நேத்தைக்கு ஒரே மழையாம்ல?"ன்னு பொடி வச்சு நான் பதில் பின்னூட்டம் போடுவேன்.  அவரும் சளைக்காம, "தங்கச்சி, பேய்மழையம்மா!  நீர்வழிகளில் என் கண்வரிகளும் சிலரின் முகவரிகளும் கலைந்து போயின"ன்னு பதில் போடுவாரு....

சரி, பதிவுலகத்தையே கலக்கிட்டிருக்கும் கதையைச் சொல்லாம, எங்கியோ போறேனே.

காமினியும் நானும் அப்பப்ப இமெயில் எழுதிக்குவோம். "அக்கா, நான் பி.ஈ. படிச்சு முடிச்சவுடனே, அமெரிக்கா வந்திரணும். சிவாவுக்கு அங்கேயே கட்டாயம் வேலை கிடைக்கும்"னு சொல்லிட்டிருப்பா.  சிவமைந்தன் நெட்வொர்க் எஞ்சினியரிங் லீட்; CCNA பாஸ் பண்ணியிருக்கார். ரெண்டு வருஷமா சென்னையிலியே ஒரு சின்ன ஸ்டார்ட்‍அப் கம்பெனியில் வேலை செஞ்சிட்டிருக்காரு. அப்பப்ப பெங்களூரு, டெல்லின்னு பறந்திட்டிருந்தாலும், காமினியோட காதலும் சிவமைந்தனின் தமிழ்ச்சேவையும் தொடர்ந்திட்டிருக்கே.

அப்ப தான் திடீர்னு, காமினி கிட்ட இருந்து ஃபோன் வந்திச்சு. நாங்க எப்பவும் ஃபோன்ல பேசிக்கறது இல்லை, ரெண்டு பேரும் ஃபோன் நம்பர் வச்சிட்டிருந்தாலும், ஃபோன்ல பேசி கிழிக்க மாட்டோம், எல்லாம் சாட் தான். அதுனால, காமினி ஃபோன்னதும் டக்னு எடுத்தேன். "க்கா! ழிழா ழிழ்ழழி..." அது கட்டாயம் காமினி குரல் தான்னு தெரியும். திரும்பி ஃபோன் செய்தேன், அவள் எடுக்கலை.  இமெயில், சாட்னு எதிலியும் அவள் இல்லை. அவங்க பதிவுல "ஹே, என்னடி கத்திரிக்கா என்ன  விலை!"ன்னு பின்னூட்டம் கூட போட்டிருந்தேன். பின்னூட்டம் பப்ளிஷ் கூட ஆகலை. அவங்க குடும்ப அட்ரஸ், ஃபோன் நம்பர் தெரியாது.  சரி, நவம்பர்ல என் கம்பெனி ப்ராஜக்ட் விஷயமா இந்தியா கிளம்பணும்னு போட்டிருந்த ப்ளானை கொஞ்சம் மாத்தி, இதோ இந்தியா கிளம்பியாச்சு.  அவங்க பின்னூட்டம் டைரக்டா பப்ளிஷ் பண்ற இமெயிலுக்கு இன்னும் ஒரு ஜோக்கை அனுப்பிச்சேன். 

இந்தியா வந்தவுடனே, பரந்தாமன் சாரைக் கூப்பிட்டேன். அவரு தான் சொன்னாரு, 'காமினியும் சிவாவும் மாமல்லபுரம் சேந்து போயிருக்காங்க, ஒரு ஆக்சிடென்ட்ல ரெண்டு பேரும்  மாட்டிகிட்டாங்க. காமினி ஹாஸ்பிடல்ல இருக்காங்க, சிவாவுக்கு அவ்வளவு காயம் படலை. ஆனாலும் சிவாவும் காமினியை கவனிச்சிட்டு ஹாஸ்பிடல்ல இருக்காரு"ன்னுட்டு. நேரா ஆஸ்பத்திரி போனேன்.

நல்ல வேளை "விசிட்டர் அவர்ஸ்"ல தான் போனேன். சிவா டாக்டர் கிட்ட பேசிட்டிருந்தார்.  முதுகும் முகமும் உயர்த்தி வைக்கப் பட்டு, படுத்துக் கொண்டு காமினி முகத்தில் ஸீத்ரு மாஸ்க் சிறியதாக இருந்தது,  கைகளில் வயர் பிணைக்கப் பட்டிருந்தது.   ஆனால், காமினி முகத்தில் என்னைப் பார்த்ததும் மாற்றம் தெரிந்தது. அவள் கண்களில் பயம் தெளிவாகத் தெரிந்தது. உள்ளே போகாமல் தயங்கினேன். என்னைப் பார்த்த சிவா அவசரமாக வெளியே வந்தார். டாக்டரிடமும் சிவாவிடமும் நான் பேசத் தொடங்கிய போது தான் உள்ளே அது நிகழ்ந்தது.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். 

டாக்டரும் சிவாவும் காமினி இருந்த அறைக்கு முதுகைக் காட்டிப் படுத்திருந்தமையால் அவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை(ன்னு நினைச்சேன்).  நான் முகத்தில் மாற்றம் ஏதும் காட்டாமல் பேசிக் கொண்டிருந்தேன்.  பரந்தாமன் தயாராக வெளியே காருடன் இருந்தார்.  அவர்கள் கிளம்பியதும், எனக்கு டெக்ஸ்ட் அனுப்புவார்கள், நான் தப்பிப்பதாக ப்ளான்.  மயிலாப்பூரில் நான் தங்கும் ஹோட்டலுக்கு வந்த காமினியும் பரந்தாமனும் என் அறைக்குப் போய் காத்திருப்பார்கள் என்றும் ப்ளான்.  நடந்தது.

ஆனால், என் பின்னாலேயே சிவா தொடர்ந்து வருவது தெரியாமல் போய் விட்டது.  உட்லண்ட்ஸின் மாடிப்படிகளில் இருந்து வெளி வந்து என் அறைக் கதவைத் திறக்கும் போது திடீரென்று சிவா என்னையும் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான். வந்தவன், "ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.  "எல்லாம் ஆளாளுக்கு ப்ளான் போட்டு தான் வந்திருக்கீங்க. இதுல காமினியும் உடந்தைன்றது தான்... சே!" என்றான்.

எனக்கு வந்த கோபத்தில் அறைந்திருப்பேன், எங்கியாவது அந்த நாதாரி சுட்டுத் தொலைத்து விட்டால்?

என்றாலும், க்ளாசட்டிலும் பாத்ரூமிலும் ஒளிந்திருந்த போலிஸ் வெளிவந்ததும், காமினியின் நெற்றிப் பொட்டில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டியே பயமுறுத்தி சிவா வெளியேறத் தொடங்கியதும், நான் பாய்ந்து துப்பாக்கியைத் தட்டி விட்டதும்....,  சிவா சுட்டதும், என் தோளில் துப்பாக்கி ரவை கொதித்ததும், ஓரு சில விநாடிகளுக்குள் நடந்து முடிந்தது.  பரந்தாமனின் சென்னை போலீஸ் தொடர்புகள் மூலமாக எல்லாம் சீக்கிரம் முடிந்தன.  சிவாவை போலிஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டது.  வெறும் தோளின் மேல்பாகத்தில் பட்டுக் கொண்டு போன ரவையையும் காயத்தையும் சுத்தம் செய்து, உடனடியாக டாக்டர் கிட்ட முதலுதவி செய்து கொண்டோம் (இல்லை, உட்லண்ட்ஸ்க்கு பக்கத்தில் "வேற" டாக்டர்:-). 

காமினி மெதுவாக, அவள் சல்வாரின் பாக்கட் (இப்ப அப்படியும் தைத்துக் கொடுக்கறாங்க டோய்!) டிலிருந்து டயமண்ட் செமிகண்டக்டர் சிப் ப்ரோடோடைப்பை வெளியே எடுத்தாள்.   “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

ஹிஹி, நான் யாரென்று பொதுவாக பதிவுலகத்தில் சொல்லுவதில்லையே! சென்னை ஐஐடியில் படித்த மாணவி, என் பிஹெச்டியை பெர்க்லியில் முடித்து அங்கேயே சிலபல கம்பெனிகளைத் தொடங்கி, ஏராளமாக பணம் சம்பாதித்து,  எலக்டிரிக் காருக்கான கன்ட்ரோல் மாட்யூலின் மாஸ் ப்ரொடக்ஷனுக்கான ஆராய்ச்சியில் இருக்கிறேன்.  "அதிக மின்சக்தியை தாங்கக் கூடிய செயற்கை வைரத்தால் செய்த மைக்ரோசிப் மூலமாக இந்த கன்ட்ரோல் மாட்யூலை"ச் செய்ய, பரந்தாமன் சாரின் உதவியை நாடிய போது, சிவமைந்தனுக்கு அது தெரிய வந்தது.

சிவாவிடம் இந்த TOR பற்றிக் கற்றுக் கொண்ட பரந்தாமன், என்னை முட்டாளாக்குவதாக நினைத்துக் கொண்டு ப்ராக்ஸி ஐபி வழி பின்னூட்டம் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.  பரந்தாமனின் சிஸ்டத்தில் TOR மட்டுமல்லாமல், கீபோர்டு லாகர் முதற்கொண்டு இன்ஸ்டால் செய்திருக்கிறான் சிவா!

அந்த சமயத்தில் தான், சிவா என் கம்பெனி நெட்வொர்க்கில் ஹாக் செய்ததை கவனித்தேன்.  சிவாவின் தவறான வழிகளைப் பற்றி, காமினியிடமும் பரந்தாமனிடமும் பேசினேன்.  சிவாவின் இமெயில்களை, காமினி பெற்றுத் தந்தாள்:‍-)  அதிலிருந்து, இந்த செயற்கை வைர ஆராய்ச்சியில் எங்கள் முன்னேற்றம் பற்றி சிவா அமெரிக்க டெக்ஸாஸைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு விவரம் அளித்தது தெரிய வந்தது.

(அவனுக்கு ஜப்பானின் ட்ஸுகுபா / Tsukuba தொழில் நுட்ப ஆராய்ச்சித் தொழிலகத்தில் செய்த ஆராய்ச்சித் தாள்கள் என்று நான் பொய்யாய் ஒரு எலிப்பொறி வைத்ததில் மாட்டி, அவன் அந்த ஆராய்ச்சித் தொழிலகத்தின் நெட்வொர்க்கில் நுழைந்ததும் பழங்கதை.  அவன் அந்த நெட்வொர்க்கில் நுழைந்தது எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா?  உங்கள் தொழில் நுட்பப்பதிவுகளில் கார்கி, லீலா என்றெல்லாம் பெயர்களில், ஜப்பான் / ஐரோப்பிய ஐபி அட்ரஸில் வந்து பின்னூட்டம் இடுவது யார் என்று நினைக்கிறீர்கள்? ;-)


ஹிஹி

Saturday, October 02, 2010

எந்திரன்: சிறுகுறிப்பு

ரஜினி ரசிகர்கள், அல்லாதோர் இரண்டு வகையினருக்கும் விமர்சனம் இருக்கு இங்க!

ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்.

தலைவருக்கு வில்லன் வேஷம் என்றால் அடித்து தூள் கிளப்பிடுவார். இந்தப் படத்தில் வெடிச் சிரிப்பென்ன, சுழன்று அடிக்கும் சண்டை சீன் என்ன, நடை என்ன, ஐஸ்வர்யாவிடம் கடைசி சீன்களில் அடிக்கிற ஸ்டைல் பேச்சென்ன, தலைவர் தலைவர் தான். ஷங்கரின் பிரமாண்டம் நன்றாகவே தெரிகிறது. பாடல்கள் சிலவற்றை, மக்கள் கூடவே பாடியதும், தாளம் போட்டதும், சூப்பர். ரசிகப் பெருமக்கள் அள்ளிப் போட்ட துண்டுக் காகிதங்களூம் பாப்கார்ன் தூளும் அமெரிக்கத் திரையரங்கத் துப்புரவாளர்களுக்குக் கொஞ்சம் அதிசயமாகவே இருந்திருக்கலாம்.

ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்.

இதுவரைக்கும் படிச்ச ரஜினி ரசிகர்கள் நடையைக் கட்டுங்கப்பு:‍-)

யோவ், படமாய்யா இது? அவரு வயசு இப்படி மேக்கப்புப் பெயின்டையையும் மீறிட்டுத் தெரிது, க்ளோஸப்ல, அந்தம்மாவை விட இவரு லிப்ஸ்டிக்கு ஜாஸ்தியாப் போட்டிருக்காப்ல தெரிது. பேசாம, தலைவருக்கு ஐஸ் அஸிஸ்டென்டுன்னு கதாபாத்திரமாக்கிட்டு, எந்திரனா நடிக்கிறவரு கொஞ்சமாச்சும் இளந்தாரியாப் போட்டிருக்கலாம். அந்தம்மா நடிப்பு.... இன்னும் கொடுமை. எங்கிட்டு போய்ச் சொல்றது?

கம்ப்யூட்டர் ஜிகினா வேலை கொஞ்ச இடத்துல பல்லை இளிக்குது.

எப்பவோ படத்தை முடிச்சிருக்கணும்யா. இழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழழ்ழ்ழ்ழ்ழ்ழுத்துக்கிட்டுப் போவுது, எந்திரன் பாம்பு, தவளைன்னு அவதாரம் எடுத்துட்டு வரும்போது, கொட்டாவியா வந்திச்சு.  ஆமா, இம்புட்டுப் பெரிய விஞ்ஞானிக்கு வைரஸ் வைக்க முதல்லியே தோணலியா?

சின்னப் பசங்க கேட்ட கேள்விகள் அதுக்கு மேல: (அ) ஐஸ் ட்ரெயினில் ரவுடி மக்கள் கிட்ட மாட்டிகிட்டு, அவங்க கொடூரச் சிரிப்போட, ஃபோனை எடுத்துட்டு வரும்போது ஃபோட்டோ எதுக்குன்னு புள்ளைங்க கேட்டாங்க‌:-(( (ஆ) 'ஓஹோ, இப்படித் தான் குழந்தை பிறக்குமா'ன்னு கேட்டாங்க! (இ) எம் பசங்க "எப்ப அம்மா படம் முடியும்?"ன்னு இடைவேளைக்கு அப்புறம் ரொம்பவே கேட்டாங்க‌.

வந்தது வந்தீங்க, படத்தைப் பத்தி, உங்க கருத்தையும் சொல்லிட்டுப் போங்க!