COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, April 24, 2008

வ‌.வா.சங்கம் போட்டிக்கு: உலகம் போற்றும் இரண்டு

வ‌.வா.சங்கம் போட்டிக்கு:

இந்த ரெண்டு இல்லாத இடம் ஏது?

இந்த ரெண்டு போற்றாத மொழி ஏது?





Twee

Deux

Zwei

Due

Δύο

Dois

Два

Dos

வெக்கை

காத்துக் கிடக்கிறது மனசு,
சாலைகளை வெள்ளையடித்து
எலும்பை உருக்கும் வெயிலுக்கு...
த‌ண்ணீரில் விழுந்திருந்தாலும்
ந‌னையாத உயிரைக் க‌ரைக்கும் கொதிப்புக்கு...

அணியில்லாப் பாத‌ம் பாண்டியாடிப் போகும்.
வேர்த்துக் கொட்டும் ஏ.சி. அணிந்த‌ கார்க‌ள் ப‌வ‌னி.
க‌திர் நோக்க‌க் குழைந்த‌ பூவும் நாவுமாய்
விருந்து கிளம்ப‌க் காத்திருக்கும் ம‌ர‌ங்க‌ளும் மாக்க‌ளும்.
க‌ண் குத்தி, நா வ‌ற‌ண்டு, தோல் க‌ருத்து
'இன்னுமா' என்று கைம‌றைத்த‌ க‌ண்ணோடு ம‌க்க‌ள்.

எப்போ வ‌ரும் என‌க்கு ம‌ட்டும் பிடித்த‌ வெயில்?

Thursday, April 17, 2008

பூமியில் விழப் போகிறது சிறுகல்கோள் (அஸ்டெரொஇட்)!

அந்த சிறுகல்கோள் பெயர் அபோஃபிஸ். 2029இல பூமிக்கு மிக அருகில், எவ்வளவு அருகில்?


இப்போ நம்ம பூமியை சுத்திகிட்டுருக்கிற செயற்கைக்கோள்கள் பல உண்டு. அதாங்க, ஆப்கனிஸ்தான்ல பின் லேடன் பாண்டி விளையாடுறாரான்னு பாக்க ஒரு செயற்கைக் கோள், நம்மூரு டிவி நிகழ்ச்சிகளுக்கு செயற்கைக் கோள் (கண்ணீரைப் பிழியறதுக்கே சீலை கட்டணும்) நம்மூருல இருந்து தட்ப வெப்ப நிலை எப்படி இருக்கிறதுனு பாக்கிற செயற்கைக் கோள் (இதை பிஸினஸாகவே செய்யும் அளவு தொழில் நுட்ப அறிவும் உள்கட்டமைப்பும் குறிப்பிட்டு சொல்கிற அளவுக்கு நம்மூர்ல இருக்குங்க!) என்று பல நூறு (விக்கில 238 என்று சொன்னாலும், இதுவரை 4000க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் நாம் இட்டிருக்கிறோம்) இப்பொழுது பூமியைச் சுற்றி் கொண்டு இருக்கின்றன) செயற்கைக் கோள்கள் இருக்கின்றன.

இந்த செயற்கைக் கோள்களில், சில (சுமார் 800) பூ‍வொத்த சுழற்சி கொண்டவை. அதாங்க, ஃப்ரான்ஸ்ல ரோட்டோரமா நடந்தா நம்ம பின்னாலயே நடந்து நம்மின் நடை பாவனைகளைக் கேலி செய்யும் மைம் போல, பூமியின் சுழற்சியை ஒத்துப் போகும் செயற்கைக்கோள்கள். ஸோ, ஒரே இடத்தில் நிற்கிற மாதிரி சுழலும்! இவை பொதுவாக 22,000மைல் (36,000கி.மீ.) உயரத்தில் சுழலுமாம்.

இத்தினி சுழல்கோள்கள் இருக்கும்போது, ஏதேனும் சிறுகோள், எவ்வளவு இருக்கும் பிரபஞ்சத்தில்? அவை மோதினால் என்ன ஆகும்? சுமார் 300 கல்கோள்கள் ஆபத்து விளைவிக்கக் கூடியவை தாம்! ஏன், இந்த ஜனவரி 30, 2008 கூட ஒரு சிறுகல்கோள் நம்ம வூட்டாண்ட பக்கமா போச்சு, அதிகம் இல்ல ஜென்டில்மென், ஒரு 540000கி.மீ. இப்பதான், ஒரு 20,000 ‍..50,0000 வருடங்களுக்கு முன் அரிஜோனா மாநிலத்தில், ஒரு கல்கோள் இடிச்ச படம்;) சுமார் 1.5கி.மீ. விட்டம்! பக்கத்தில் இருக்கும் படம் அந்த க்ரேட்டர் தான்.

அபோஃபிஸ் 2029இல் பூமிக்கு மிக அருகில் வரப் போவுது. இந்த கல்கோள் 1971இல் நம்ம பூமிக்கு பக்கத்தில் வந்திருக்கிறது. சூரியனைத்தான் சுத்துது. இப்போதைக்கு பூமியிலிருந்து நிலா எவ்வளவு தள்ளியிருக்கோ, அதைவிட 15முறை (அதாவது 5.8மில்லியன் கி.மீ.) தள்ளிதான் இந்த கல்கோள் 2029இல் போகும்னு சொல்றாங்க. இதன் சுழற்சி வேகத்தைப் பற்றி தெளிவாகத் தெரியாதுன்னும் ஒத்துக்கறாங்க. அதனால், இந்த கல்கோள் சுமார் 30‍-70மீ விட்டம் இருக்கும்ங்கறதால், இது மோதினால் எங்க மோதுமோ? அதன் சுழல்பாதை பற்றியும் தெளிவாகத் தெரியலை. (கடலில் விழுந்தால், சுனாமி போன்ற பெரும் கடல்கோள் ஏற்படலாம்னும் பயமுறுத்தறாங்க; பூமி அழுக்குமயமாகிடும்னு சில இணைய தளங்கள் வேற பில்டப்பு!) அதனால் தான் விஞ்ஞானிகள் 'பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏன்னா, வாழ்க்கை எப்படியுமே நிச்சயமில்லை. நமக்குத் தெரியாத ஒரு கல்கோளினால் பூமி இடிபட்டு நாம் அழிவதற்கான வாய்ப்பு எல்லாவற்றையும் அதிகம்'னு ஆறுதல் சொல்றாங்க;-)

பயந்து போயிடலியே? NASA சொல்றாங்க, பூமிக்கு அபோஃபிஸ்னால‌ ஆபத்து வருவதற்கான நிகழ்தகவு சுமார் 1/450,000. அந்த கல்கோள், மனிதன் செய்த சுழல்கோள்கள் மேல் இடித்தால் அதன் வழித்தடம் பூமிக்கு இன்னும் அருகில் வரலாம்.... இல்லை, அடுத்த முறை சுழற்சியின் போது, பார்ப்போம்! சுழல்கோள்கள் போகும் உயரம் இணையத்திலிருந்து போட்டிருக்கேன். இவ்வளவு அருகில் அந்த கல்கோள் வரும் வாய்ப்பு இல்லைனு தோணுது. Err on the side of caution, Better safe than sorryங்கற ரீதியில் பேசுறாங்கன்னு நான் நினைக்கிறேன். பல விடயங்கள் இந்த கல்கோள் பற்றி தெளிவாயில்லை.

நான் இந்த பதிவைத் தொடங்கக் காரணம், ஒரு சிறுவன். ஜெர்மனியைச் சேர்ந்த இந்த பதின்ம வயதுச் சிறுவன் தன் பள்ளிப் பாடத்துக்காக இந்த அபோஃபிஸ் பற்றி ஆராய்ச்சி செய்தான். அப்ப அவன் சொன்னது NASA வின் கணக்கு தவறு, 1/400 வாய்ப்பு இருக்கிறது ந்னு. அவ்வளவு தாங்க, பத்திகிச்சு. யூரோப்பிய ESA வெளியிட்டதுங்கறாங்க, டிக்க் கூட செய்துட்டாங்க... இன்று நாஸா தன் கணக்கு சரின்னு சொல்லிடுச்சு.

நிம்மதியா தூங்கப் போகலாம், 2029க்கு அலாரம் செட் செய்யலாம்னு யோசனை!

பூமி மேல் எதாவது வந்து குறிப்பிட்ட வேகத்தில் மோதினால், என்ன ஆகும்னு கணக்கிட ஒரு கால்குலேட்டர் இருக்கிறது. பாருங்களேன்!

Tuesday, April 15, 2008

காதல் கதை!

இரங்கமணி (இல்லாட்டி அவர் இரங்காவிடில் புகலேது?) மாலை வீட்டுக்கு வந்ததும் நல்லா கேக்கணும்ணு தோணிச்சு.

அமெரிக்காவில் கிறுக்கர்கள் நிறையன்னு தெரியும். அதுவும், காதலிக்குப் புது விதத்தில் "என்னை திருமணம் செய்து கொள்வாயா"ன்னு கேட்பது காதலனுக்குப் பெரிய விஷயம். "இந்த பொண்ணு மேல எனக்கு நிசமாவே காதல் தானா", "அவளுக்கு என் மேல நிசமாவே காதல் தானா" இல்ல, அந்த காதலனுக்குக் கொஞ்சம் தெளிவு இருந்ததுன்னா, "இரண்டு பேரும் ஒருத்தரொருத்தர் கொலை செய்யாமல் போலிஸ்க்குப் போகாமல் சேர்ந்து இருப்போமா" (எவ்வளவு வருடம் என்பது வேறு விஷயம்) அப்படின்னு ஒரு தெளிவு இருந்ததுன்னா பெண் கிட்ட ப்ரபோஸ் செய்வாங்க. சில மாதம்/வருடங்கள் சேர்ந்து இருந்த பின், மோதிரம் (அது தாங்க நிச்சயதார்த்த / கல்யாண மோதிரம்) கிடைக்காத பெண் "ஹ்ம், என் ஃப்ரண்டுக்கு கல்யாணம் ஆகி ரெண்டாம் வருஷத்துக்கு கான்கூன் போறாங்க"ன்னு சொல்லி பெருமூச்சு விட்டு (மூக்கு சிந்தி) காமிக்கலாம். அதுவும் இல்லியா, சரி, "காதல் கிளியே உன்னை நான் காதலிக்கலையே"ன்னு பாடிட்டு மூட்டையை கட்டலாம். இந்த வாழ்க்கை கஷ்டம்னுதான் எனக்குத் தோணுது. காதல் நம் வயதோடு அதுவும் வளரவில்லைன்னா ஒரு கஷ்டம். வாழ்க்கையை (டெம்பரரியாவாவது) பகிரும் இருவரின் எதிர்பார்ப்புக்கள் வேறாய் இருத்தல் இன்னொரு கஷ்டம்.

சரி இப்ப சொல்ல வந்த கதை இது தான். Bejeweled விளையாட்டு விளையாடி இருக்கீங்களா? பழைய விளையாட்டு. மூன்றுக்கு மேற்பட்ட ஒரே மாதிரியான "ரத்தினங்கள்" (பித்தளை பீப்பாசிம்பாங்க எங்க ஊர்ல:) ஒரு வரிசையில் வரவைக்கணும். என் கைபேசியில இருக்கு. எங்கியாவது வரிசையில் மாட்டி முழிக்கும் போது இது விளையாடலாம்.

அந்த விளையாட்டு இந்த பெண்ணு டேமி லீக்குப் பிடிக்குமாம். நியூ ஜெர்ஸியில் இருப்பவங்க. எப்பப் பாத்தாலும் விளையாடிட்டிருக்குமாம். அதோட காதலன் பெர்னி பெங் நிரலிகள் எழுதுபவர், அதுவும் வணிகத் தொடர்பான நிரலிகள். பாத்தாரு, இந்த விளையாட்டை அக்கு வேறு ஆணி வேறாய் பிரிச்சு (தொடக்கத்திலிருந்து எழுதியிருக்காருங்கறாங்க) ஒரு மாதத்தில் அதே விளையாட்டு நிரலியில், ஒரு செய்தியை இணைச்சுட்டாரு. சத்தம் போடாம டேமி லீ விளையாட விட்டுருக்காரு. அந்தம்மா, விளையாடிட்டு இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட ஸ்கோரு வந்தவுடனே, "கல்யாணந்தான் கட்டிகிட்டு"ன்னு செய்தி வந்திருக்கு. (எங்க ஓடிப் போறது!)


அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. இதைக் கேள்விப்பட்ட‌ அந்த விளையாட்டைத் தயாரித்து விற்கும் பாப்கேப் நிறுவனம் அவர்களின் திருமணத்துக்கு வருபவர்களுக்கு அந்த விளையாட்டு தான் பரிசுப் பொருள் (தோடா!); அதோட தேனிலவுக்கு பாப்கேப் இருக்கும் சியாட்டிலுக்கு போக, இருக்க, வர செலவு சத்தம் கொடுக்கறாங்களாம்! (இதுல அந்த நிறுவனர்கள் அவங்க தங்கப் போகிற ஹோட்டல் அறைக்கு கீழ பாட்டு பாட்றேன்னு வேற டீல்)

அது ஏன்னு தெரியல. நான் பார்த்த வரை, ஆசியர்களிடையே, சீன ஆண்கள் (இள வயசுக்காரங்க மட்டும்!), தைவானிய ஆண்கள் தம் மனைவியருக்குப் பெய்யும் மரியாதை இருக்கே!! அன்னிக்கு எல்லாரும் பூ வாங்கிட்டுருக்காங்க, இந்த (சீன) ஆண் (கூட வேலை செய்றவர்) 'என் காதலிக்கு ஏழு பூ'ன்னாரு. ஏம்பா? 'ஏழு மாசமா காதலிக்கிறோமே'ன்னாரு. என்னோட பணிபுரிந்த ஒரு தைவானிய ஆண் தட்சிணை(!) கொடுத்து, புரோக்கர் மூலமாக திருமணம் செய்த பெண்டாட்டி தன்னை விட்டுப் போவதைப் பற்றிச் சொன்னார்...

ஹ்ம்! எப்படியோ, கொடுத்து வச்சவங்கப்பா!

'இப்ப என்ன ரொம்பவா கேட்டுட்டேன்? வைர ஒட்டியாணம் கூட கேட்டதில்ல... இந்த மாதிரி ஒரு நிரலி எழுதிக் கொடேன்!'

(இடிக்க உரல் வேண்ணா கிடைக்கும், நிரலியாவது!)

Tuesday, April 01, 2008

குறும்புக்கார கூகிள்

தமிழ்மணத்தில எல்லாரும் ஏப்ரல் தினத்தை நல்லாவே கொண்டாடுறாங்க போலிருக்கிறது. சின்ன வயசில மிக மகிழ்ச்சியோடு சொந்தங்கள் என்னை ஏய்த்து முடித்தவுடன், பள்ளியில் போய் அலட்டிக் கொண்டதுண்டு. இப்ப, என் பசங்க என்னை ஏய்க்கிறாங்கன்னு கூட விளையாடிட்டிருக்கேன். என் ஜாதக அமைப்பு அப்படி:-)

போன வருடம் ஜிமெயில் ஏப்ரல் முட்டாள் தினக் குறும்பாக, "உங்கள் கண் போகும் தடம் வைத்தே, உங்கள் தேடுதிறனை அறிந்து நாங்களே தேடு சொற்களை உங்களுக்காக எழுதிக் கொடுப்போம்"ங்கற ரீதியிலே அறிவிச்சிருந்தாங்க. அதனால், இன்னிக்கு அவசரமா, காலைச் சாப்பாட்டை முடிச்சு கை ஈரத்தை கால்சட்டையிலே துடைச்சிட்டே(!) ஜிமெயிலுக்குள்ளே வந்தால் "கஸ்டம் டைம்" பத்தி அறிவிச்சிருக்காங்க.

இன்னிக்கு ஜிமெயில் குறும்பு பார்த்தீங்களான்னு பதிவு எழுதலாம்னு ப்ளாகருக்குள்ளே வந்தால் அங்கே இன்னும் குறும்பு.


முதலில் ஜிமெயில் குறும்பு: "கஸ்டம் டைம்" என்றால், எந்த நேரத்துக்கு இந்த இமெயில் அனுப்பப்படுகிறது என்று நீங்களே தீர்மானிக்கலாம்; ஏன், இரண்டு வருடங்களுக்கு முன் கூட அனுப்பலாம்; இதைச் செய்ய ஜிமெயில் ஒரு "இ‍ஃப்ளக்ஸ் கபாசிடர்" (கஷ்டம்டா!) பயன்படுத்துகிறது; இது பற்றீ இன்னும் தெரிந்து கொள்ள, "தாத்தாவை கொன்றால், நான் பிறப்பேனா" ஐயப்பாடு பற்றி விக்கிபீடியாவில் அறியவும்!! படங்களைப் பார்த்தீர்களா?!

கூகிள்காரவுங்க ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா!

ப்ளாக்கர்ல இன்னும் கஷ்டம்! இனிமே என் பதிவுல எது முக்கியம்னு அவங்களே போர்டு போடுவாங்களாம். ஹிஹி, நமக்கு ஐடியா பஞ்சம் வந்தா, கூகிளே பதிவு கூட போட்டுத் தர முடியுமாம்!

யப்பா, இந்த நடிகை ஓடிப் போனாள்னு படிக்கறதுக்கு, இதுமாதிரி என்னிக்கு வேண்ணாலும் படிப்பேன்!

இந்த விடியோ பதிவில நம்மை எல்லாரையும் செவ்வாய்க்கு அழைத்துச் செல்லப் போக அழைக்கிறார்கள், லேரியும் செர்கேயும். நன்றி இ.கொ., காமிச்சு கொடுத்ததுக்கு!