COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tuesday, April 15, 2008

காதல் கதை!

இரங்கமணி (இல்லாட்டி அவர் இரங்காவிடில் புகலேது?) மாலை வீட்டுக்கு வந்ததும் நல்லா கேக்கணும்ணு தோணிச்சு.

அமெரிக்காவில் கிறுக்கர்கள் நிறையன்னு தெரியும். அதுவும், காதலிக்குப் புது விதத்தில் "என்னை திருமணம் செய்து கொள்வாயா"ன்னு கேட்பது காதலனுக்குப் பெரிய விஷயம். "இந்த பொண்ணு மேல எனக்கு நிசமாவே காதல் தானா", "அவளுக்கு என் மேல நிசமாவே காதல் தானா" இல்ல, அந்த காதலனுக்குக் கொஞ்சம் தெளிவு இருந்ததுன்னா, "இரண்டு பேரும் ஒருத்தரொருத்தர் கொலை செய்யாமல் போலிஸ்க்குப் போகாமல் சேர்ந்து இருப்போமா" (எவ்வளவு வருடம் என்பது வேறு விஷயம்) அப்படின்னு ஒரு தெளிவு இருந்ததுன்னா பெண் கிட்ட ப்ரபோஸ் செய்வாங்க. சில மாதம்/வருடங்கள் சேர்ந்து இருந்த பின், மோதிரம் (அது தாங்க நிச்சயதார்த்த / கல்யாண மோதிரம்) கிடைக்காத பெண் "ஹ்ம், என் ஃப்ரண்டுக்கு கல்யாணம் ஆகி ரெண்டாம் வருஷத்துக்கு கான்கூன் போறாங்க"ன்னு சொல்லி பெருமூச்சு விட்டு (மூக்கு சிந்தி) காமிக்கலாம். அதுவும் இல்லியா, சரி, "காதல் கிளியே உன்னை நான் காதலிக்கலையே"ன்னு பாடிட்டு மூட்டையை கட்டலாம். இந்த வாழ்க்கை கஷ்டம்னுதான் எனக்குத் தோணுது. காதல் நம் வயதோடு அதுவும் வளரவில்லைன்னா ஒரு கஷ்டம். வாழ்க்கையை (டெம்பரரியாவாவது) பகிரும் இருவரின் எதிர்பார்ப்புக்கள் வேறாய் இருத்தல் இன்னொரு கஷ்டம்.

சரி இப்ப சொல்ல வந்த கதை இது தான். Bejeweled விளையாட்டு விளையாடி இருக்கீங்களா? பழைய விளையாட்டு. மூன்றுக்கு மேற்பட்ட ஒரே மாதிரியான "ரத்தினங்கள்" (பித்தளை பீப்பாசிம்பாங்க எங்க ஊர்ல:) ஒரு வரிசையில் வரவைக்கணும். என் கைபேசியில இருக்கு. எங்கியாவது வரிசையில் மாட்டி முழிக்கும் போது இது விளையாடலாம்.

அந்த விளையாட்டு இந்த பெண்ணு டேமி லீக்குப் பிடிக்குமாம். நியூ ஜெர்ஸியில் இருப்பவங்க. எப்பப் பாத்தாலும் விளையாடிட்டிருக்குமாம். அதோட காதலன் பெர்னி பெங் நிரலிகள் எழுதுபவர், அதுவும் வணிகத் தொடர்பான நிரலிகள். பாத்தாரு, இந்த விளையாட்டை அக்கு வேறு ஆணி வேறாய் பிரிச்சு (தொடக்கத்திலிருந்து எழுதியிருக்காருங்கறாங்க) ஒரு மாதத்தில் அதே விளையாட்டு நிரலியில், ஒரு செய்தியை இணைச்சுட்டாரு. சத்தம் போடாம டேமி லீ விளையாட விட்டுருக்காரு. அந்தம்மா, விளையாடிட்டு இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட ஸ்கோரு வந்தவுடனே, "கல்யாணந்தான் கட்டிகிட்டு"ன்னு செய்தி வந்திருக்கு. (எங்க ஓடிப் போறது!)


அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. இதைக் கேள்விப்பட்ட‌ அந்த விளையாட்டைத் தயாரித்து விற்கும் பாப்கேப் நிறுவனம் அவர்களின் திருமணத்துக்கு வருபவர்களுக்கு அந்த விளையாட்டு தான் பரிசுப் பொருள் (தோடா!); அதோட தேனிலவுக்கு பாப்கேப் இருக்கும் சியாட்டிலுக்கு போக, இருக்க, வர செலவு சத்தம் கொடுக்கறாங்களாம்! (இதுல அந்த நிறுவனர்கள் அவங்க தங்கப் போகிற ஹோட்டல் அறைக்கு கீழ பாட்டு பாட்றேன்னு வேற டீல்)

அது ஏன்னு தெரியல. நான் பார்த்த வரை, ஆசியர்களிடையே, சீன ஆண்கள் (இள வயசுக்காரங்க மட்டும்!), தைவானிய ஆண்கள் தம் மனைவியருக்குப் பெய்யும் மரியாதை இருக்கே!! அன்னிக்கு எல்லாரும் பூ வாங்கிட்டுருக்காங்க, இந்த (சீன) ஆண் (கூட வேலை செய்றவர்) 'என் காதலிக்கு ஏழு பூ'ன்னாரு. ஏம்பா? 'ஏழு மாசமா காதலிக்கிறோமே'ன்னாரு. என்னோட பணிபுரிந்த ஒரு தைவானிய ஆண் தட்சிணை(!) கொடுத்து, புரோக்கர் மூலமாக திருமணம் செய்த பெண்டாட்டி தன்னை விட்டுப் போவதைப் பற்றிச் சொன்னார்...

ஹ்ம்! எப்படியோ, கொடுத்து வச்சவங்கப்பா!

'இப்ப என்ன ரொம்பவா கேட்டுட்டேன்? வைர ஒட்டியாணம் கூட கேட்டதில்ல... இந்த மாதிரி ஒரு நிரலி எழுதிக் கொடேன்!'

(இடிக்க உரல் வேண்ணா கிடைக்கும், நிரலியாவது!)

6 comments:

துளசி கோபால் said...

இந்த வைர விளையாட்டும், cubis, collapse, Zuma இதெல்லாம் தினமும் படிக்கும் பதிவுகளுக்கிடையில் அப்பப்ப விளையாடும் விளையாட்டுதான்.

ஸூமாதான் விறுவிறுப்பா இருக்கு. பூதம் வாய்க்குள்ளே விழாம இருக்கணுமே:-))))

இந்த 'வைர ஒட்டியாணம்' ரொம்பப் பிடிச்சுருச்சு. கோபால்கிட்டே சொல்லணும், ஒரு சுரங்கத்தை விலை பேசச் சொல்லி. கடையில் உதிரியா வாங்கிக் கட்டுப்படியாகாத
இடுப்பு:-)))))))

Radha Sriram said...

சட்டியில் இருந்தா ஆப்பயிலே வரும் தெரியாதோடி நோக்கு??? :):)

அடுத்தாத்து டேமி லீ ய பாத்து இப்படி முகவாய தோள்ல இடிச்சிக்கலாமா கெபி??!!!

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

வாங்க வாங்க துளசி!

ரெண்டாவது வாங்க: ஒட்டியாணத்துக்கு;-) சுரங்கத்துக்கு வாயில்காப்போள் பணிக்கு நான் அப்ளை செஞ்சுக்கறேன். சம்பளம்லாம் கூட வேண்டாம்;-)

நான் டெட்ரிஸ், பிஜெவெல்டு விளையாடுவேன். ஆனா இன்றைய தேதிக்கு சுடோகு பைத்தியம்.

துளசி கோபால் said...

எங்க நண்பர் ஒருத்தர் இப்படித்தான் சுடோகு பைத்தியமா இருக்கார். நல்லது மைண்ட் அலர்ட்டா இருக்குமுன்னு சொன்னேன்.

கார்லேயே தினசரி சுடோகு வச்சுக்கிட்டு போட்டுகிட்டே இருப்பார்.

வயசு 83தான்:-)

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

துளசி,

சுடோகு பைத்தியமாக்கிடுதுங்க! கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு எலக்ட்ரானிக் சுடோகு (ஒட்டியாணத்துக்குப் பதிலாக:-( கிடைத்தது. கம்ப்யூட்டர்லயும் இலவச சுடோகு... போகிற இடத்துல எல்லாம் 9x9 கட்டம் தான் கண்ணுல தெரியுது.

இரங்க‍மணி இனிமேல் நிரல் எழுதினால், சுடோகுல, 'இன்னிக்கு என்ன சமையல் செய்யட்டும்'னு கேட்டு எழுதலாம். நல்ல ஐடியா.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

ராதா,

என் தோளில் தானே இடிக்கிறேன்! அதனால பரவாயில்லை!