COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tuesday, September 27, 2011

வேப்ப முத்து -

வேப்ப முத்து

தமிழோவியத்தில் வெளி வந்த என் சிறுகதை (முழுக்கப் படிக்க சுட்டியில் தட்டவும்!)


indiangirl1 வேப்ப முத்துஉள்ளேயிருந்து மீன் குழம்பின் வாசனை வந்து கொண்டிருந்தது. நாவூறியது மீனாவுக்கு. ஞாயிறு மதியம் வீட்டுக்கார வசந்தாக்கா அசைவம் சமைத்தால், ஊருக்கும் மணக்கும். ஆனால், சமைத்து முடித்து வீட்டினர் சாப்பிட்டப்புறம் மீனா சாப்பிடும் போது மணி இரண்டாகி விடும். இப்பொழுதிருக்கிற பசிக்கு, யாருக்கும் தெரியாமல் சிறியதாய் தேங்காயிலிருந்து கீறி எடுத்து வந்ததை கைக்குள் வைத்து கொல்லைப்பக்கம் போய், வேப்ப மரத்தின் கீழ், முதுகைக் காட்டி உட்கார்ந்து கொண்டாள். கொல்லைப் பக்கம் முழுக்க வேப்ப மரத்தின் நிழல். பறவைகள் பழுத்த வேப்பம் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் எச்சம் மேலே விழாமல் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டே இருந்தாள் மீனா.
மீனாவுக்கு எட்டு வயது வரை, பெற்றோர் வீட்டில் இருந்த போது மீன் குழம்பு சாப்பிட வழி இருக்கவில்லை. ஆனாலும், இங்கே வந்து இரண்டு வருடங்களில் நல்ல சாப்பாட்டு ருசி கண்டாயிற்று.  வசந்தாக்கா தன் இரட்டைக் குழந்தைகளை கவனிக்க, தன் உறவுக்கார வள்ளியின் மகளான மீனாவைக் கொண்டு வந்து வைத்திருந்தார். எட்டு வயதுத் தன்னம்பிக்கையோடு மீனா தன் தம்பி மணியை கவனிப்பது போலவே இரட்டைக்குழந்தைகள் ராஜேஷ், ராஜஸ்ரீ இருவரையும் கவனித்துக் கொண்டாள். அந்த பாசத்துக்காக, வசந்தாக்காவும் மீனாவிடம் அன்போடு இருப்பாள். யாரும் கவனிக்காத போது எப்போதேனும் மீனாவுக்கு மிட்டாய் வாங்க காசு கிடைக்கும். மாமியாரும் குழந்தைகளும் தூங்கி, வசந்தாக்காவின் கணவர் சுரேஷ் மாமா கடையை கவனிக்கப் போன மதியப் பொழுதுகளில், வசந்தாக்கா மீனாவுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள்.
ஆனாலும், விழித்துக் கொண்டிருந்த போதெல்லாம் வசந்தாக்காவின் மாமியாரின் கண்கள் மீனாவையே கவனித்துக் கொண்டிருக்கும். மாமியார் நடக்க முடியாதென்றாலும், உட்கார்ந்த இடத்திலிருந்தே அதிகாரம் செய்து கொண்டிருப்பார். அது தான், மீனாவுக்குக் கொள்ளைப்பசியாய் இருந்தாலும், சின்ன தேங்காய்க்கீற்றை ரகசியமாய் எடுத்துக் கொண்டு கொல்லைப் பக்கத்தில் மீனா சாப்பிட்டுக் கொண்டிருந்ததன் காரணம்.
தேங்காய்க் கீற்றை கையில் மறைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கொல்லைப் பக்கம் இருந்தவளை, வசந்தாக்கா கூப்பிட்டாள். குழந்தைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தனர். வசந்தாக்காவுக்குக் கூட மாட மீனா உதவி செய்து விட்டு, மாமியாருக்கும் சுரேஷ் மாமாவுக்கும் பரிமாறி, வசந்தாக்கா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, தனக்கும் உணவைத் தட்டில் இட்டுக் கொண்டாள் மீனா.  சாப்பிட்டுக் கொண்டே இருந்த போது, புரை ஏறியது. “அம்மா நினைக்கிறா அக்கா ” என்றாள் மீனா. புரை எறினதற்காக மீனாவின் தலையைத் தடவிக் கொடுத்த வசந்தாக்கா, “உங்க அம்மா வந்து போயி ஒரு மாசமாச்சில்ல, உன்னைப் பாக்க வருவாளாயிருக்கும்!” என்றாள்.


.......................மேலும் படிக்க: http://www.tamiloviam.com/site/?p=1920


Tuesday, June 21, 2011

இந்த வருட கோடை விடுமுறை

எங்க வீட்டு வம்பர்கள் - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற மூத்தோர் சொற்படி, எங்க அம்மாவை நான் படுத்திய பாடு எனக்கு வந்து விடிகிறது - இந்த கோடை விடுமுறையில் செய்யும் சில வம்புகள்:

வெளியில் கடைகளில் மேலே போகிற நகரும்-மாடிப்படிகளில் பொறுமையாக கீழே இறங்கி வருவது - நான் எவ்வளவு கூப்பிட்டாலும் அவர்களுக்கு காதில் விழாத பொறுமை!

வெளியில் போனால், தமிழே புரியாத மாதிரி நடிப்பது - ஹிஹி ஆங்கிலத்தில் திட்ட வேணாமே என்ற நல்ல மனசில் நான் தமிழில் திட்டிக் கொண்டிருப்பேன்...

சுற்றி சுற்றி வந்து அமெரிக்க இந்திய மொழியில் (இவர்களே எதோ உளறிக் கொண்டு) "பலா பலா பலா" என்று கத்தியவாறே ஓடுவது

கடைக்கு வந்து இப்படி மானத்தை வாங்கறியே என்றால், நேரே போய் கடையின் கண்ணாடிச் சுவரில் தலையை முட்டிக் கொண்டு தமிழில் "ஐயோ, முருகா காப்பாத்து" என்று சொல்வது (அம்மாவை கேலி செய்வதாம்)

அப்பா வீட்டுக்கு வந்ததும், அவர் போட்டிருக்கும் சட்டை, உள்சட்டையையும் சேர்த்து தலைக்கு மேலே கொண்டு வந்து அப்பாவை "ஜெயிலில் போட்டு" விட்டு அப்பாவை சுற்றி வந்து அவரை அழ வைத்தல்.


வீட்டுக்கு அருகில் இருக்கும் ஓடையிலிருந்து கண்டதையும் கொண்டு வந்து இலை தழைகளில் சுற்றி வைத்து அம்மாவுக்கு "அன்புப் பரிசு" ஆகக் கொடுத்தல், பல சமயம் அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய "அன்புப் பரிசு" மறந்து போய் படுக்கை/சாப்பிடும் டேபிள் மேலே பத்திரமாக இருக்கும்...

இன்றைய கடற் கொள்ளை விளையாட்டு நன்றாக இருக்கே என்று நான் நினைப்பதற்குள், சண்டை வந்து முந்தா நாள் விளையாடின விளையாட்டு வேறொன்று நடுவில் ஓடும்.

அவர்களின் சண்டையின் போது நான் சமரசம் செய்தால், செய்த இரண்டாம் நிமிடம் என்னை கேலி செய்தல்.

ஏன் இத்தனை லூட்டி என்றால், இந்த குழந்தைப் பருவம் முடிந்து விடப் போகிறதே என்ற கவலை அவர்களுக்கு.

இந்த கோடை விடுமுறை முடிந்து விடப் போகிறதே என்ற கவலை எனக்கு. உங்களையும் இழுத்துட்டு எப்படி தான் இந்தியா பயணம் போவேனோ, ப்ளேன் கதவை திறந்து நான் அண்டார்க்டிக் கடலில் குதிக்கப் போகிறேன் என்று அவர்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன்.

Wednesday, April 27, 2011

இருட்டு நிழல்கள்

போகிற பாதை தெரியாத இருட்டு
தொடர்ந்து வரும் கருப்பு நிழல்கள்
இருளில் கருப்பு இருட்டு உண்டோ?

பாதைகளில் பரமபதம்.
சோழி உருட்டுவதும் நானில்லை.
பாம்புகளின் வழுக்குதலில்
ஏணிகளின் கனவுகள்.

கோர உருவங்கள் கற்பனையில் வருமளவு
விகாரக் குரல்கள்.

எக்களிப்பில்,  ஆங்காரத்தில்,
உமிழ்ந்து வரும் வசைகளில்,
கண்ணீர் இருட்டைச் சுட வைக்கும்.

நான் என்னிடமிருந்து காணாமல் போவதற்குள்
எங்கேனும் வீடு திரும்ப வேண்டும்.
 

Friday, April 15, 2011

பெண் பார்க்கும் நாடகத்தில், பிள்ளைக்கு இவ்வளவு கஷ்டமா? (இயற்கை உலகம்)

பதிவைப் படிக்க வந்தீங்களா, சௌக்கியமா? நல்லா குந்திக்குங்க! கம்பியூட்டர் மானிட்டரு பொட்டி நல்லா தெரியுதா? தெரியலயின்னா சரி பண்ணிக்குங்க. படம் காட்டப் போறேன். படத்தில், இந்திய டிவியில், நேஷனல் ஜியாக்ரஃபி சானலில்   காட்டாத எதுவும் இல்லை, என்றாலும், இந்தப் படத்தை, பெற்றோர் குழந்தைகளுக்குக் காட்ட விருப்பம் இல்லை என்றால் இனி பார்க்க வேண்டாம்.

"இந்த காலத்தில, பொண்ணுங்களுக்கு என்ன சுதந்திரம்பா? அவங்களே பிள்ளைய பாத்துக்குறாங்க,  இஷ்டம் இல்லைனு சொல்றாங்க, எங்க காலத்துல..."னு சொல்றவங்களுக்கான ஸ்பெஷல் படம் இது.

எங்க வீட்டுல, பெற்றோர் தெளிவா இருந்தாங்க, "பிள்ளையோட பேசு, புரிந்து கொள், உனக்குப் பிடிச்சா தான் கல்யாணம்"னு பக்காவா, ஒரு குடம் காவேரி மணலை.. அவ்வ்வ்... தண்ணியை தெளிச்சு விட்டாங்க. (நான் வளர்கிற காலத்தில, தண்ணி இல்லை, மணல் தான் இருந்தது, இப்ப மணலும் காணோம்னு சொல்றாங்க!)

என் மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தது வீட்டுல. (என்கிட்டே அவ்வளவு பயம்னு யாரங்கே சொல்றது?:-)

பறவை / விலங்கு  / பூச்சிகளின் வண்ண உலகத்தில், பெற்றோராவது ஒண்ணாவது! அதுங்களே பாத்துக்கிட்டு போயிட்டே இருப்பாங்க! இந்த வண்ண உலகத்தில் பொய், புரட்டு கிடையாது.

ஆஸ்திரேலிய "மயில் சிலந்தி"களின் "பொண்ணு பார்க்கிற" நாடகம் இங்கே.பொறுமையா ஒவ்வொரு ஆண் சிலந்தியும் பெண்ணைக் கவர "காலைத் தூக்கி" நர்த்தனம் ஆடி, தொகை விரித்து... நீங்களே பாருங்க!



படம் பார்த்தீங்களா? எப்படி இருந்தது? சொல்லிட்டுப் போங்க! நன்றி! (அப்புறம், புது டெம்ப்ளேட் எப்படி இருக்கு, "பதிவு அமர்க்களமா இருக்கு"ன்னு எல்லாம் சொல்லிடுங்க:-)


Friday, April 08, 2011

மக்கள் சக்தி ஆளும் மன்னர்களுக்குத் தெரியட்டும்!

சின்ன வயசில இருந்து 'அரசியல்னா சாக்கடை, அரசியல்வாதி கிட்ட வம்பு வைக்காதே'ன்னு சொல்லி வளர்த்திருப்பாங்க, இல்ல 'தம்பி, ஓங்கினவன் கைய ஒடச்சிட்டு வந்தாத்தானே நாளைக்கு அரசியல்ல பெரிய ஆளா வர முடியும்'னு சொல்லி வளர்த்திருப்பாங்க. ஒரு பக்கம் அடிமாடுகளா வளர்கிறோம், இல்லையென்றால் அடியாள்களாக வளர்க்கப்படுகிறோம்!

எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம். எங்கள் திருமணம் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னால நடந்தது, அதுக்கு சர்டிஃபிகேட் வாங்க நடையா நடந்தார் என் கணவர். இந்த சான்றுப் பத்திரம் வாங்க லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு அவருக்கு ஒரு வீராப்பு. அஞ்சு நாள் அந்த ஆபிசர் முன்னால உட்கார்ந்திட்டு வந்ததால், ஆபீசர் வெறுத்துப் போய் லஞ்சம் வாங்காமல் அந்த பத்திரத்தைக் கொடுத்திட்டார். ஒரு பத்திரத்துல கையெழுத்துப் போடத் தானே அரசாங்கம் அவருக்குச் சம்பளம் கொடுக்குது? எதுக்கு நாம மேல போட்டுக் கொடுக்கணும்?

ரேஷன் கடையில நின்னு சாமான் வாங்கியிருக்கீங்களா? சின்ன வயசில நான் வாங்கியிருக்கேன். நான் பார்த்த போதெல்லாம், நடப்பது இது தான்: ரேஷன் கடை ஊழியருக்கு வேண்டிய ஆள்னா, க்யூவுல நிக்க வேண்டாம். நல்ல அரிசி வந்தா, வேண்டியவங்களுக்குத் தான் போகும். ஏன்?

நேத்தைக்கு ஒருத்தர் நொந்து போய் ட்விட்டர்ல எழுதுறாரு: 'லோ வோல்ட்டேஜ் கரன்ட்டா இருக்கு. யாரச் சொல்லி என்ன பிரயோசனம்? தெரிஞ்ச கவுன்சிலர் கிட்டச் சொல்லணும்' என்று! 'தெரிஞ்ச கவுன்சிலர்' கிட்ட சொன்னா, அவர் நமக்கு உதவி செய்ய அவருக்கு என்ன முகாந்திரம்? கரன்ட் சரியா வர வைக்க எல்லாரும் அவங்க-அவங்க கவுன்சிலர் கிட்ட போனா என்ன ஆவும்? 'யாரு நிறைய எனக்கு லஞ்சம் கொடுக்கிறாங்களோ, யாரு எனக்கு வேண்டப்பட்டவங்களோ அவங்களுக்குத் தான் நான் உதவுவேன்' அப்படின்னு சொல்லப் போகிறார்?

தெரிஞ்ச விஷயம் தானே? பூனைக்கு யார் மணி கட்டப் போறாங்க? படிச்சவங்களாச்சும் அரசியலைத் தூய்மைப் படுத்தி, 5 வருடம் இருந்து, பாலம் கட்டுறது; ரோடு பள்ளம் சரி செய்யிறது; பென்ஷன் வாங்கித் தரதுன்னு முயற்சி செய்து கொடுத்தால் தான், நம் கட்டமைப்பில் இருக்கும் பிரச்னைகள் என்னன்னு தெரியும்; கட்டமைப்பின் ஓட்டைகள் சரியாகும்!

படிச்சவங்க ஏற்படுத்தின அமைப்பு இந்த அரசாங்கம். இதுல ஏன் இத்தனை ஊழல்? அரசாங்கத்துக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் எப்படி வந்தது? 

ராசாவா இருக்க வேண்டிய ஒரு மந்திரி 'மக்களுக்காக அரசாங்கம் புதுக் கடையத் திறந்திருச்சு, ஆனா, அப்படித் திறந்திருச்சுன்னு ஒரு மாசம் கழிச்சுச் சொன்னா, எனக்கு வேண்டிய ஆளுங்க வந்து அந்த ஒரு மாசத்துக்குள்ள வேண்டிய சாமானை எடுத்திட்டுப் போவட்டும்'னு லட்சம் கோடின்னு மாய்மாலம் பண்றாரு. ஆனால், அவருக்குக் கையூட்டாக பணம் வந்ததுன்னு, 'மவனே'ன்னு அந்த சிவனே வந்து தீர்ப்பு சொன்னாலும், வந்த கையூட்டுப் பணத்தை மந்திரி திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை!

இந்தியாவில் மாற்றம் ஏற்படணும்னு, லஞ்சம் ஊழலை எதிர்த்து நல்ல மனுசங்க சேர்ந்து தோற்றுவித்த இயக்கம் இந்த மக்கள் சக்தி இயக்கம்!!  இந்த இயக்கம், நம்மால மாற்றம் ஏற்படுத்த முடியும்னு படிச்ச / படிக்காத நல்லவர்களை வேட்பாளர்களா நிறுத்தியிருக்கு. வேட்பாளர்கள் விவரம் இங்கே இருக்கு. வோட்டுப் போடுங்க! மாற்றத்தை ஏற்படுத்துங்க!

தமிழ்நாட்டில், 15 மாவட்டங்களில் 35 தொகுதிகளில் மக்கள் சக்தி இயக்கம் போட்டியிடுகிறது. லோக்சத்தாவோடு கையிணைத்து மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும்னு நம்புகிறது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவங்க, சட்டசபைக்குப் போயிட்டு வந்தவங்க, நம்ம கட்டமைப்புல இருக்கிற‌ பிரச்னைகளை எடுத்துச் சொல்ல மாட்டேன்றாங்க. மக்கள் சக்தி இயக்கம் சொல்லட்டும். மாற்றம் ஏற்படட்டும்.

மக்கள் சக்தி இயக்கம் போட்டியிடும் இடங்களில் நீங்களோ, உங்கள் உறவினர்களோ வசித்தால், என் மனமார்ந்த பணிவான வேண்டுகோள் இது! நீங்க என்னை விட வயசிலே பெரியவங்கன்னா, உண்மையான பணிவோட, வணங்கிக் கேட்டுக்கிறேன், வயசில் சின்னவங்க - ஓட்டுப் போடும் வயசா இருந்தால், காலரைப் பிடித்துக் கேட்கிறேன் - வோட்டுப் போடுங்க! மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடுங்க!

வோட்டுப் போடும் வயசு வரலைன்னா, முத வேலையா உங்க வீட்டுப் பெரியவங்களை வணங்கி, அதட்டி, கெஞ்சி, மிரட்டி எப்படியாவது வோட்டுப் போட வைங்க. எதிர்காலம் உங்களுதுன்னா, உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய‌ணும்னா, லஞ்ச ஊழலற்ற பெரிய நாடா இந்தியா வரணும்னா, மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடச் சொல்லுங்க.

மாற்றத்துக்கு வோட்டுப் போடுங்க! 
மறுமலர்ச்சிக்கு வோட்டுப் போடுங்க!
மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடுங்க!

PhD படித்த, கோவை பல்கலை முன்னாள் துணைவேந்தர், RECT/NITT முன்னாள் முதல்வர் திரு. இளங்கோ, இந்தத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில நிற்கிறார்.

விஜய் ஆனந்த், அமெரிக்க வாழ்க்கையைத் துறந்து, 5th Pillar என்கிற இயக்கத்தைத் தொடங்கிட்டு, இப்ப மக்களுக்காகப் பயனுள்ளதா செய்யணும்னு கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் இந்தத் தேர்தலில் மக்கள் சக்தி இயக்கத்துக்காகப் போட்டியிடுகிறார்.

மக்கள் சக்தி இயக்கத்துக்காக, ஐந்தாம் வகுப்புப் படிச்சவங்களும் தேர்தல்ல நிக்கிறாங்க, MBA/LLB படிச்சவங்களும் தேர்தல்ல நிக்கிறாங்க, மாற்றம் ஏற்படுத்தச் சொல்லி வோட்டுப் போடுங்க!

Thursday, February 10, 2011

“டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொட்டு...

தமிழோவியத்தில் வெளிவந்த என் அலம்பல்: “டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொற்றி

அமெரிக்காவில் எனக்குப் பிடித்த பத்து விஷயங்களை, “டேவிட் லெட்டர்மென்” பார்த்து வான்கோழி நான் ஆடியிருக்கிறேன். “நல்லாயிருக்கு” போன்ற கமெண்டுகள் தமிழோவியம் தளத்தில் போட்டு விடுங்கள்:) நல்லாயில்லை என்றால், இங்கேயே சொல்லிடுங்க! ஏன் என்றால் இந்தப் பதிவு இந்த காரணத்தாலேயே காலம் காலமாக மட்டுறுத்தப்படுகிறது ஹிஹி!!

Monday, February 07, 2011

கரைமேல் பிறந்து விட்டோம்!

மீனவர்களின் நிலை பற்றி நாளும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கோம். நம்ம நண்பர்கள் ட்விட்டரிலும் பதிவுகளிலும் பதிவதையும் பார்க்கிறோம். தோழி சந்தனமுல்லை சோம்பேறியான‌ என்னையும் பதியச் சொல்லிக் கேட்டார், கொஞ்சம் லேட்டாப் பதிகிறேன். பதிவெழுதப் போதுமான‌ நேரமின்மை முதன்மைக் காரணம்; மற்றொன்று, என் முழுமுதற் ஆதரவு மீனவர்களுக்கு என்றாலும், பதியும் போது தவறில்லாமல் பதிய வேண்டுமே என்று கொஞ்சம் படித்துக் கொண்டேன். எனக்கு இன்றைய‌ இந்திய அரசிடம் நம்பிக்கை இல்லை. ஆனால், இந்திய இறையாண்மையில் முழுமுதல் நம்பிக்கை உண்டு. எங்கம்மாவின் இந்திய மடியில் 20வருஷம் வளர்ந்த நன்றியுணர்வு உண்டு. எனவே, அக்கறையோடு பதிகிறேன்,

அ. இந்திய ஸ்ரீலங்கா கரையிடையில் 1980இலிருந்து தமிழக மீனவர்கள் 800பேர வரை இறந்திருக்கிறார்கள். இதற்காக, இந்திய அரசு, நல்ல விசிறிக்கட்டையால இலங்கை அரசின் முதுகைச் சொறிந்து கேட்டிருக்கு. அதைத் தவிர என்னவும் செய்யலை. இது ஏன்?
  1. முதல்ல 2011 ஜனவரி 12ம் தேதி மீனவர் கொலை செய்யப்பட்ட போது, இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் சொல்லியிருக்கு இந்திய அரசு. கழுத்துல கயிறு இட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கார் இந்திய மீனவர் கண்டனம் சொல்லியிருக்காங்க. வெறும் கண்டனம் மட்டுமே. எச்சரிக்கை அல்ல. இலங்கை என்னங்க தம்மாத்தூண்டு நாடு, அவங்க கிட்ட பயப்பட என்ன காரணம்? சீனா இலங்கைக்கு ஆயுதங்கள் சப்ளை செய்கிறது, அதுனால, ஜாக்கிரதையா செயல்படுகிறோம்னா, எப்ப தைரியமா செயல்படுவீங்க? தமிழக மீனவர்கள், அருணாசல பிரதேசத்தில நடக்குறாப் போல, பாஸ்போர்டு விசாவோட தான் தண்ணியில் இறங்கணும் என்கிற காலத்திலாவது எதுனாச்சும் அறிக்கை விடுவீங்களா?
  2. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதியான இந்த நிபந்தனையை (பாருங்க கீழே) மீறிய இலங்கை அரசுக்கு என்னாங்க புண்ணாக்கு மரியாதை? இலங்கை அரசுக்கு ஏன் கடுமையான எச்சரிக்கை விடுக்கலை?
    "இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.'
  3. கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்த காரணம், அணுகுண்டு வெடித்த போது, ஐ.நா. சபையில் நமக்குக் கைக் கொடுத்த இலங்கைக்கு நட்பாய்/நன்றியாய்க் கொடுத்ததுன்னு சொல்றாங்க. வங்க நாட்டுக்கு தீவைக் குத்தகையாகக் கொடுத்த போது போட்ட மாதிரி இங்கியும் செய்திருக்கலாம். செய்யலை. இன்றாவது, நிபந்தனை மீறியது என்று வாலாட்டிய சின்ன நாட்டு அரசிடம் அச்சம் ஏன்?த‌ன் குடிமகன் இன்னொரு நாட்டில் இறந்தார்னா, கோபம் கொள்ளும் வல்ல‌ரசுகள். இத்தனை பேரை இழந்திருக்கோமே, என்ன செய்தோம்? இனி இறப்பைத் தடுக்க நடுவண் அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?
  4. இலங்கை கடல் எல்லை அருகே மீன்வளம் நல்லா இருப்பதால் மீனவர்கள் அங்கே போகிறார்கள் என்று சொல்லும் அரசியல்வாதிகள், கடல் எல்லை தாண்டிப் போய் மீன் பிடிக்க அரசாங்கம் ஏன் ஒப்பந்தம் செய்து கொள்ள உதவவில்லை? கடல் எல்லை தாண்டிப் போகாமல் இருக்க ஏன் அரசாங்கம், மிதவை அல்லது உயர்நுட்ப ஏற்பாடுகள் என்போர்சே செய்வதில் என்ன பிரச்னை? 

      ஆ. கட்சிப் பதிவர்கள் ஏன் மீனவர்களுக்கு ஆதரவாக ஒன்றும் சொல்லவில்லை? (நான் இதை எழுதும் போது ஃபிப்ரவரி 7!) கடந்த 4ந்தேதி நேராய்ப் போய் ஆதரவு சொன்ன பிஜேபியின் சுஷ்மா சுவராஜை விட லேட்டாய் நான் பதிவு போட்டிருக்கேன். கட்சியைத் தூக்கிக் கொண்டாடும் சில பதிவர்கள் ஏன் இது பற்றிப் பதிவே போடலை? (இந்த வருத்தத்தை நான் பல நாட்கள் முன்னமேயே ட்விட்டிவிட்டேன்:-(.

      இ. இதர கேள்விகள்/எண்ணங்கள் (என் முக்கியத்துவப் படியே இவை எண்ணிடப் பட்டிருக்கின்றன):
      • தொகுதிப் பங்கீட்டுக்கே டெல்லி வரை சென்று வந்த பெருந்தகை, டாய்லட் பேப்பராய்த் துடைத்துத் தூக்கி போட்ட கடிதம் தாண்டி எந்த வகையில் ஆதரவு தெரிவித்திருக்கிறார்?
      • வங்க தேசம், பாகிஸ்தான் இங்கெல்லாம் இப்படி நடந்தால், வட இந்தியர் சும்மா இருப்பாங்களா?
      • இலங்கைப் பதிவர்களின் நிலைப்பாடுகள் வேறுபட்டு இருப்பதைக் காண்கிறேன். ஏன் என்று புரிகிறது, தவறென்று என்றும் சொல்ல மாட்டேன். அது அவர்களின் நாட்டுப் பற்று. அதை மீறி என்னால் எதுவும் சொல்ல முடியாது....

      Monday, January 31, 2011

      சொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை

      ஜனவரி 31, 2011 அன்று வெளியான சொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை:

      தலைப்பு: பிஸ்கட்டு, பழம்! இணைப்பு: http://solvanam.com/?p=12746

      அந்த கதையோட வெளியான படத்தில் இருக்கும் நாற்காலி பத்தியும் எனக்கு ஒண்ணியும் தெரியாது, சொல்லிட்டேன். நீங்க எனக்கு பிஸ்கட்டு பழம் கொடுக்கலைன்னாலும், ஒரு நாலு வார்த்தை (or more) கதை எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டுப் போனா, போகிற காரியம் நல்லபடியாகும்;-)

      Wednesday, January 19, 2011

      புதிய கட்சி தொடக்கம்

      அகில உலக அளவில் தொடங்கப்பட்ட இந்த கட்சியைப் பத்தித் தெரிந்து கொள்ள ஆசையா வந்திருக்கீங்க.  வாங்க! வணக்கம். 

      கொள்கை?
      • கேப்பையில் வடியும் நெய்யை விற்று பெரிய கோடீஸ்வரன் ஆவணும்.
      • நாட்டுக்கு நல்லது செஞ்சி, ஏழ்மையை ஒழிச்சி, பெண்ணடிமை... இப்படியெல்லாம் நடக்கும்னு நம்புறவங்களை கட்சி மெம்பராக்கிக் காசு பாக்கணும்.
      கட்சியில மெம்பராவது எப்படி?
      தமிழ்ச் செய்தி படிப்பீங்களா?  அப்ப நீங்க ஏற்கெனவே மெம்பர் தான்? என்ன, இனிமே ஒழுங்கா மெம்பர்ஃபீ (அடச்சே, உறுப்பினர் உரிமைக்கட்டணம்) ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிச்சிருங்க.

      ஆங்?  கட்சி பெயர் என்ன?
      தேசீய கேனையர் முன்னேற்றக் கட்சி.  (தே.கே.மு.க.)

      எப்படிங்க இது? உலக அளவுன்றீங்க‌, தேசீய கட்சின்றீங்க?
      உலக அளவில் தொடங்கப்பட்ட தேசீய கட்சி.

      என்னாத்துக்கு இந்த கட்சி?
      எம்புட்டு செய்தி பார்க்கிறோம்?  அரசியற்கலைஞர்கள் (அதாவது அரசியல் கலையுலகம்  ரெண்டு சேற்றுலயும் காலை வச்சு காசு பண்றவங்க) அறிக்கை கொடுக்கிறாங்க: 

      ஒருத்தர் முந்தாநேத்தைக்கு: சாதி இல்லை; நேத்தைக்கு: என் சாதிக் கட்சியோட தான் சேருவேன்; இன்னைக்கு: இ.க.பொ.கட்சியில சேந்துட்டேன். நாளைக்கு: சாதி இருக்குங்கிறது இல்லை.

      இன்னொருத்தர் நேத்தைக்கு: நானும் கட்சியும் ஒன்றுக்குள்ள ஒன்று.  இன்னைக்கு: நானே கட்சி. நாளைக்கு: நான் கட்சியிலிருந்து ராஜினாமா செஞ்சி 4 மாசமா ஆச்சே!

      இவங்க மாதிரி நாமும் காசு பண்ண வேண்டாம்?  நாம என்ன ரெண்டு படம் எடுத்தோமா, திருட்டு ரயில் ஏறினோமா? கட்சியாவது தொடங்குவோமே!

      எத்தனை தொகுதில ஜெயிப்பீங்க?
      தோடா! இப்படி கேட்டீங்களே, நீங்களே ஒரு தொகுதிய எடுத்துக்கிடுங்க.  போஃபார்ஸ் பீரங்கிய அனுப்பிச்சி பிரசாரம் செய்திருவோம்.  தேர்தல் செலவு, அய்யாஆ ராசா செஞ்ச ஊழல்நிதியாமில்லே, அதுலேந்து கட்சிச் செலவுகளுக்குக் காசு எடுத்துக்கிடுங்க! உங்க கைக்காசை எங்க ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிருங்க. மறந்துர வேணாம்.


      Wednesday, January 12, 2011

      என் சில ட்வீட்கள் / நான் நல்லவள். நீங்க தான் ஜாக்கிரதையா இருக்கணும்!


      .....சிவப்பில் தலைப்பு வகைகள், என் சில ட்வீட்டுகளின் தொகுப்பு  (வரலாறு முக்கியம்பா!)... கெக்கெபிக்குத்துவம்: 
      பூமியின் காந்த துருவங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அப்போ என் magnetic personality என்ன ஆகும்!? #டவுட்டு

      முட்டையை உடைக்காமல் விட்டால் சிக்கன் செய்யலாம். ஆனால், முட்டையும் சிக்கனும் டேஸ்டு ஒண்ணாயிருக்கறதில்லையாமே! #ரோசனை #டவுட்டு

      (ஏன் சிக்கன் சாப்பிட்டதில்லையான்னு கேட்டவங்களுக்கு) இல்லை, தம் முயற்சியால் நகரக்கூடியவற்றை சாப்பிடாமல் விட்டு விடுவது என் வழக்கம்:)

      இவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அந்த வெளிப்படையான எண்ணங்களால் பூமியின் எடை கூடுமா? #ரோசனை #ட்வுட்டு

      இவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அவர்களின் வெளிப்படையான எண்ணங்களால், அவங்க மூளை காலியாவுதுன்னு தானே அர்த்தம்? #ரோசனை #ட்வுட்டு

      எறுழ்வலி (=Hero): சொல்லி முடிக்கறதுக்குள்ள பல் எயிற்ற்ற்றுவலி. (வாத்திகள் கவனத்துக்கு: வலியில ஒற்று மிக்க்க்கியது)

      அரசியல் கலக்காம தமிழச் சாதியில இருக்க முடியுமா?
      குந்தவை/வந்தியத்தேவன், ராசராசன் அத்தோடு ஆதித்த கரிகாலன், சுந்தர சோழன் என்று என் Spectrumஇல் இன்றைக்கு ஒரே குழப்பக் காட்சிகள்.

      திமுகவும் பாமகவும் ஒன்றுக்கொன்று கூட்டணிக்கான “சமிக்ஞைகள்” தெரிவித்துக்கொண்டன: கலைஞர். எந்த சானல்? சென்சார் செய்யப்படாமல் பாக்கலாமா?

      காய்கறி மாலை, கருப்புச் சட்டை, கருப்பு சால்வையுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் | திராவிடப் பெருமைகாக்க‌ வெங்காயம் கொண்டுவராததால்

      உதய + நிதி = எழு + திரு = எழுந்திரு. எந்திரின்னு செல்லமா மந்திரிகள் கூப்பிடலாம்:-)

      எளக்கியவியாதி
      @writerpayon புத்தகம் வெளிவந்த பின்: வாசகர் கடிதம், புத்தகங்கள் மறுபதிப்பு கவலை பதிவு என்று எழுத்தாளனுக்கும் கடமைகள் உண்டு. @aayilyan

      @iamkarki என்று சாருவின் இரண்டு காதுகளிலும் ”வைரம்” ஜொலிக்கிறதோ அன்றுவரை தமிழ்ச்சமூகம், எழுத்தாளனை மதிக்காத சமூகம் #சாரு_பிழியாதது

      //சீரோ டிகிரி பத்து வருடங்களாக பதிப்பில் இல்லாமல் இருந்தது. அப்போதெல்லாம் இந்த வாசகர்கள் எங்கே போனார்கள்? // நோ கமென்ட்ஸ். #சாரு

      @vNattu அதானே, பசி, நோவுன்னெல்லாம் பணத்தை வேஸ்டு பண்றாங்க சார், பேசாம புக்கு வாங்கலாம்

      ஆஹா, சமகால புத்தகங்களை அரசே வாங்கி இலவசமாகக் கொடுக்க‌ வேண்டும். #மணிக்கு_2000_ரூபாய்_புத்தக_கண்காட்சி_கோல் #சாரு_பிழியாதது

      //ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு புத்தகம் விற்கிறது// சேச்சே, அது எனக்கு ஒரு மணிநேர ஆட்டோ செலவு #சாரு_பிழிந்த‌து

      உலகச் செய்திகள் பத்தி என் உயர்ந்த கருத்துக்கலக்கல்:-)
      நித்யானந்தா அடுத்த இன்னிங்ஸுக்கு தயார் போல! மிகப்பெரிய தொகையிலிருந்து, பெரிய தொகைக்கு செட்டில் செய்திருப்பார்கள்!

      உலகாயதம்: கடோசியில உரிச்சும் ஒண்ணுமில்லாம (அரசு) மாமாவே வச்ச ஆப்புன்னு புரிஞ்சு போகும்னு பேசிக்கிறாங்கப்பா. #விக்கிலீக்ஸ்

      ஏர் இந்தியா: கோ பைலட்டின் அஜாக்கிரதையில் 37000 அடியிலிருந்து ப்ளேன் விழ, பாத்ரூம் சென்ற பைலட் அவசரமாய்.... http://t.co/JVegoop via @cnn

      ஸ்வீடிஷ் பறவைகளைக் கொன்றது அமெரிக்க ராணுவத்தின் "அரூப" பறக்கும் ஊர்திகளா? http://www.bbc.co.uk/news/world-europe-12130940

      இல்லை, அந்த பறவைகள் ஸ்வீடிஷ் வார்த்தைகள் பேச முடியாமல் விக்கித்து மரணித்தனவா?

      தொழில்நுட்பச் செய்திகள் பற்றிய என் குறும் ஆய்வு
      Is this THE hell? :-) | NASA spots tiny Earth-like planet, too hot for life - Yahoo! News http://yhoo.it/hb7ELa

      Possibilities! Whole Mahabharata in small bag in fridge! Hong Kong researchers store data in bacteria - Yahoo! News http://yhoo.it/hUJLkr

      How Stuxnet cyber weapon targeted Iran nuclear plant http://t.co/YTZA5SQ via @AddThis - அரசியல் சைபர் க்ரைம் நாவல் போலிருக்கு!

      தென் துருவத்தில் மறைந்திருக்கும், உலகத்தின் நீளமான‌ டெலஸ்கோப்பின் பின்னிருக்கும் சதி http://goo.gl/EO2Lf :-))))

      ஸ்டீஃபன் ஹாகிங் சென்ற சில வருடங்களில் அந்த கருத்தை மாற்றிக் கொண்டார். கரு>கரி என்று மாடர்னா சொல்லிக்கலாம்...

      மற்றவர் கீச்சியதை நான் மறுகீச்சியது (ட்வீட் = கீச்சு!)
      RT @SalmaanTaseer I was under huge pressure sure 2 cow down b4 rightest pressure on blasphemy.Refused. Even if I'm the last man standing

      RT @hellooooonewman @GivThaDrummaSum Do you ever get down on your knees and thank God you know me and have access to my dementia?

      RT @samugam A positive attitude may not solve all your problems, but it will annoy enough people to make it worth the effort.

      RT @YourAuntLola Sweetie, having a man might boost your self-confidence, but so will half a martini & money in the bank

      ட்வீட்டர் பற்றிய என் பழைய அறிமுகம்: http://kekkepikkuni.blogspot.com/2008/03/blog-post.html

      Monday, January 10, 2011

      பதிவர் சீமாச்சுவுக்கு பதில்: ராசா! இந்தியாவுக்கு என்னாபா நட்டம்?

      சுடச்சுட பதிவர் சீமாச்சு "110. முன்னாள் அமைச்சர் ராசாவால் நமக்கு நஷ்டமா?" பதிவுக்கு  பதில் கொடுக்கணும்னு இங்கே:

      இரண்டு துப்பு இருக்கிறது. ஒவ்வொரு விடியோவையும் முழுக்கப் பார்த்து விடுங்கள்.  ஒவ்வொன்றிலும் துப்பு ஒளிந்திருக்கிறது.

      முதல்ல:

      இரண்டாவது:

       



      நான் பதிவர் சீமாச்சு கிட்ட கேட்டது முன்னாள் அமைச்சர் ராசா மட்டுமே நஷ்டம் ஏற்படுத்தலை, உங்க படிப்புக்கு ஏற்றாற்போல் விரிவாக விளக்கமா பதிவு போடக் கூடாதான்னு. அவர் அப்படிப் போட்டேன்னு சொல்லி எழுதிய பதிவுல ஏகப்பட்ட பெண் ஃபோட்டோக்கள்.

      பொம்பளங்க படம் போட்டு பதிவு ஹிட்ஸ் வளர்க்கிற யாரும் விஷால் மாதிரியோ, சூர்யா மாதிரியோ படம் போடறது இல்லீல்ல, அப்புறம் என்ன?  சரி ஒரு பதிவு முழுக்க இவங்க ரெண்டு பேர் விடியோ போட்டுட்டு போறேன்.

      "இந்தியா முன்னேறி விடும், ஊழல் ஒழிய வேண்டும் என்ற சராசரிக்கு மேற்பட்ட குடிமகனின் தாகம், உழைக்காமல் அனைவரும் அறிந்த தகவல் கொடுத்து,  நடிகை படம் போட்டதில் ஈடேறும்".

      சரி, சரி, இந்த விளையாட்டை இன்னும் வளர்த்த விருப்பமில்ல‌, வீட்டுல பிழைப்பைப் பாக்கணும், பிள்ளங்களைப் படிக்க வைக்கணும். அப்புறம் பார்க்கலாம்.

      எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

      Monday, January 03, 2011

      ஏன் இந்த மாற்றம்? எப்ப இந்த மாற்றம்?

      என்னையும் தொடர் எழுத அழைத்ததுக்கு நன்றி:  பலே பாண்டியா


      முதல்ல கொஞ்சம் கொசுவத்தி:
      சின்ன வயசில பள்ளிக்கோடம் போக மாட்டேன்னு ரொம்ப அழும்பு பண்ணுவேனாம்.  பள்ளிக்குப் போனாலும் அங்கே எல்லோரையும் அடிச்சுத் துவைச்சிடுவேன் (நல்லா நினைவு இருக்கு, விவரம் கேட்டுராதீங்க).  தினமும் ரெண்டாப்பு வரைக்கும் நான் பள்ளிக்கே போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்கேன். எங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் எங்கிட்ட பயம் (ஹிஹி). அவங்க ஒரு போலீஸ் உறவினர் கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணினதிலே, அவர் தான் என்னை "கோணி சாக்குல போட்டு உன்னை ஸ்கூலுக்குக் கொண்டு போகட்டுமா?" என்று கேட்டது இன்னும் நினைவில் இருக்கு.  அன்று தொடங்கியது, இன்னைக்கும், ஸ்கூல் பக்கம் போகும் போதெல்லாம் ஒரு பயம்:-)

      மூணாப்புல ஊர் மாறினோம். எனக்கு புது பள்ளிக் கூடத்தில டெஸ்ட் வச்சாங்க.  எனக்கு அப்ப தமிழ் எழுத்துக்கள்ல உயிர்மெய் எழுத்துக்கள் இன்னும் தெரிந்திருக்கலை (ஹிஹி). ரகசியமா விஜயா எனக்கு உயிர்மெய் சொல்லிக் கொடுத்தது! (ஹிஹி).

      மூணாப்புல தொடங்கி பள்ளி இறுதி வரை நல்லாப் படிச்சேன் - எப்படின்னு கேட்காதீங்க, அந்த கோணிச் சாக்கைக் காட்டித் தான் எனக்கு "சாக்கு சொல்ல" முடியும்.  கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கறதிலயும் அப்ப தான் ஆர்வம் நிறைய வந்தது. நாடகம் போட்டிருக்கேன். சொந்தமா நாடகம் எழுதி, அதுக்கு மேடை அமைப்புல ரொம்பவே எனக்கு ஆர்வம் இருந்தது... விளையாட்டுகள்ல அவ்வளவு ஆர்வம் இல்லை என்றாலும், கூடைப்பந்து / பூப்பந்துல ஆர்வம் காட்டிய போது என் ஜாதிப் பெயர் சொல்லி "படிக்கப் போடி!"ன்னு சொல்லிடுவாங்க. நிசமா!:-(

      கல்லூரி வந்தப்புறம், இன்னவோ தெரியல, ஆம்பளப் பசங்க காலேஜில இருந்ததில, (ஹிஹி) நான் அடக்கி வாசிச்சேன்.... வம்புல மாட்டினேனா இல்லியான்னு யாருக்கும் தெரியாத அளவு அடக்கி வாசிச்சேன்:-) இவ்வளவு நல்ல பெண்ணா வளந்திருக்கேன்!

      எனக்கு இன்னிக்கு ரெண்டு புள்ளங்க. சின்னது கொஞ்சம் என்னைப் போல பள்ளிக்குப் போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்குது, ஆனால், பள்ளிக்கூடம் போனவுடனே, எம் புள்ளைங்க‌ நல்லா மத்த புள்ளங்களோட விளையாடிட்டு என்னைய அழ வச்சிடுங்க!

      எம் புள்ளைங்க‌ அமெரிக்கப் பள்ளிகளில படிக்கிறதுனால, கல்வி முறை முழுக்கவே மாறியிருக்கு. எல்லா பாடங்களிலும் ஏன் எதுக்குன்னு கேட்கிறாங்க.  நம் கலாசாரத்தை, இதிகாசங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது, வரலாற்று / அறிவியல் பூர்வமா சொல்ல வேண்டியிருக்கு. இராமன் இலங்கைக்குக் கடலைத் தாண்டுவதற்கு முன் "சமுத்திர ராஜனை வற்ற வைத்து விடுவேன்"னு சொன்னதுக்கு ஒரு நாள் முழுக்க "வற்ற வைக்க முடியுமா", "வற்றினா, மிருக, மீன் இனங்களுக்கு என்ன ஆகும்" என்றெல்லாம் எதிர்வாதம்.  எனவே இப்போதைக்கு எம் புள்ளைங்களுக்கு நான் சொல்வது "உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது எது, ஏன்னு சொல்லிடுங்க, அதைப் பற்றி நல்லா கற்றுகிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்" என்பது தான்.

      இடையில் இன்னும் ஒரு சின்ன கொசுவத்தி: என் தந்தை கிரகணங்கள் பற்றி, செடிகொடிகள் பற்றி அறிவுபூர்வமாக விளக்கியவர். என்னிடம், "மது, மாமிசம் வேணுமா வேண்டாமான்னு நீயே தீர்மானிச்சுக்கோ" என்றவர்...
      நல்ல வேளையா அவர் கொடுத்த தைரியத்துல இந்த புள்ளங்களை மேய்க்கிறேன்.

      அமெரிக்கப் பல்கலையில் படித்திருக்கேன். பல கண்டங்களிலும் படித்தவர்களுடன் பழகியிருக்கேன், நட்பு பாராட்டியிருக்கேன். இந்தியாவில என் உறவினர்களின் குழந்தைகள் படிக்கிறதைப் பார்க்கிறேன்.  கடந்த பத்து வருடங்களில் அந்த குழந்தைகள் கல்லூரிகளில் நுழைவதையும், வேலை பெற்று வாழ்வில் உயர்வதையும் பார்க்கிறதுல எனக்குத் தெரிந்து தெளிந்தது என்னவென்றால் :

      அப்பா அம்மாவின் முழு ஆதரவும்.. அது கிடைக்கலீன்னா கூட சொந்தச் செலவில தெளிந்த மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில நல்லாத் தான் இருக்காங்க.  "படி, படி"ன்னு சொல்லாமல், எதுக்குப் படிக்கணும்னு தெளிந்து படிக்கிறவர்கள் வாழ்க்கை முழுக்க ஏதோ ஒரு வகையில வெற்றி பெற்றுக் கொண்டே இருக்காங்க.  அதுக்காக, நானும் இந்த வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் வகையான்னு கேட்டுடாதீங்க‌.  எனக்கு இந்தத் தெளிவு இப்பத் தான் வந்திருக்கு, ஸோ, நான் இந்த வகையில இல்லைப்பா!

      அமெரிக்கர்களுக்கு இந்தியக் குழந்தைகளின் படிப்பும், இந்தியக் குடும்பங்களின் கூட்டுறவு/அதீத உழைப்பு இவை கண்ணை உறுத்துகின்றன என்று படிக்கிறேன். அமெரிக்கர்கள் சிலர் வாயை விட்டுச் சொல்றாங்க.  அமெரிக்காவின் எதிர்காலம், இந்தியாவில் வசிக்கும்/படிக்கும் இந்தியர்களால் மாற்றி அமைக்கப்படுமோன்னு ஒரு அச்சம் இருக்கு.

      ஆனால், அடிப்படை வசதிகள் (உணவு/நீர், இடம், போன்ற வசதிகள்) இந்தியர்களுக்கு எளிதில் கிடைக்கும் போதும், இந்தியாவில் படித்தவர்களின் விழுக்காடு அதிகமாகும் (அதாவது, மொத்த மக்கள்தொகையில் படிச்சவங்க எம்புட்டு என்கிற விகிதம்) போதும் தான் இந்தியா உலக அளவில் மாற்றம் ஏற்பட வைக்க முடியும்.  படிச்சவங்க / தெளிஞ்சவங்க‌ அதிகமாகும் போது, அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது மனித உரிமைன்னு குடிமக்கள் எல்லோரும் புரிந்து கொள்வாங்க.

      அடிப்படை வசதி கிடைக்காத போது போராடக் கொஞ்சமாவது பரந்தறிவு (பட்டறிவு அல்லது படிப்பறிவு) வேணும். இதற்கப்புறமே, ஏழ்மை, சுரண்டல் இவை சமச்சீர் அடைந்து.... ஸ்ஸப்ப்பா, மூச்சு வாங்கிக்கிறேன்.... கவனிங்க, ஏழ்மையும் சுரண்டலும் முழுசா அழியாதவை; சமச்சீர் அடையும் அவ்வளவு தான்!  எனவே, சும்மா வீட்ல படின்னு சொல்றாங்களேன்னு படிக்காமல், தெளிவோடு படிக்கிறவங்க இந்தியாவிலேயே அடிப்படைக் கட்டமைப்பை உயர்வடைய வைக்கும் போது தான் உண்மையான மாற்றம் ஏற்படும்!

      ஆமினா, பலே பாண்டியா எழுதிய பதிவுகளின் தாக்கத்தில "எனக்குத் தோணியதை" எழுதினேன். உங்க கருத்து என்னன்னு சொல்லிட்டுப் போங்க.  நானும் தெளிஞ்சிக்கிறேன்!