COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, February 11, 2012

கடவுள் அமைத்து வைத்த மேடை

[உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் எழுதியது]

நீலிமாவுக்கு வருத்தமாய் இருந்தது. ஆனந்த் இன்றும் வீட்டுக்கு வரப்போவதில்லை. அவனுக்காக நேற்று செய்து வைத்திருந்த இரவு-உணவை யும் காலையில் கொட்டியாயிற்று. வீட்டு நாய் மிஸ்டர்ஸ்பாட்ஸ்க்கு இந்திய உணவு பிடிக்காது. அதற்கு வேண்டிய உணவை எடுத்து வைத்துவிட்டு நீலிமா ஆனந்துக்காகக் காத்திருந்தாள்.

சனிக்கிழமை முழுக்க வீட்டுக்கு வராதவன், ஞாயிறன்று (நேற்று) மாலை வீட்டுக்கு வந்தவன், "எப்போ டிசைட் பண்ணுவ?" என்றான்.

"சாப்பிடலியா, ரொட்டியும் கடியும் சோறும் செய்து வைத்திருக்கிறேன்" என்றாள் நீலிமா.

"சீ. விவாகரத்து வேணும்னு கேட்டேன் வெள்ளிக்கிழமை. ஒரு எமர்ஜென்ஸி ஹாண்டில் செய்வதற்காக மருத்துவமனை போயிட்டு, அப்பிடியே லிசா அபார்ட்மெண்ட் போனேன்... உன்னோடு எனக்கு கணவன்மனைவி உறவு எல்லாம் முடிஞ்சு வருஷக்கணக்கு ஆயிடுச்சி" என்றான் ஆனந்த்.

"எனக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லீங்க" என்றாள்.

அது தானே உண்மையும் கூட. என்ன செய்வது, எங்கே போவது? தோழிகள் என்று யார் இருக்கிறார்கள்? அமெரிக்க உடமைகளில் தேவைப்பட்டதை எடுத்துக் கொண்டு இந்தியா கிளம்பி விடுவது எளிதா? இந்தியாவில் இருக்கும் அண்ணன், அண்ணி வரவேற்பு எப்படி இருக்குமென்று தெரியாதா ஆனந்துக்கு?

"புதன் கிழமைக்குள் காலி பண்ணு. வீடு க்ளீன் செய்ய லிசா யாரையாவது வெள்ளிக்கிழமை அனுப்புவாள்" ஆனந்த் நீலிமாவின் கண்களையே பார்க்காமல் சொன்னான்.

"ஏன் வீடு க்ளீனாத் தானே இருக்கு?" நீலிமாவுக்கு கண்ணீர் பெருகியது.

"சீ. சமையல் நாத்தம். லிசாவுக்கு இந்தியச் சமையலே பிடிக்காது. நீ கிளம்பும்போது பூஜையறை சாமானையும் எடுத்துக்கலாம். வேற என்ன பொருள் வேணும்னு லாயர்கிட்ட சொல்லிடு. ஹோண்டா ஆடிஸி, பர்னிச்சர், பாத்திரம் பண்டம், அலங்காரப்பொருள் எல்லாத்தையும் எடுத்துக்கலாம். ஜீவனாம்சம் மாசம் 3000$, உன் ஒருத்திக்கு இது நல்ல அமவுண்டு. சீக்கிரம் ஏற்றுக் கொண்டு கிளம்பு... மிஸ்டர்ஸ்பாட்ஸை நானே வைத்துக் கொள்வேன்". அவள் பதிலுக்கு காத்திராமல் ஆனந்த் கிளம்பி விட்டான்.

லிசாவுக்கு இந்தியச் சமையல் பிடிக்காது என்றால், ஆனந்துக்குப் பிடித்த மெந்திய ரொட்டியும், பருப்பும் யார் செய்து தருவார்கள்? நீலிமா செய்யும் கடி (மோர்க்குழம்பு) நன்றாக இருக்கிறது என்பானே? தான் சமையல்காரியாகவாவது இங்கேயே இருந்து விடலாமா? பூஜை செய்வது பிடிக்கலை என்றால், அதை கீழே அடித்தளமட்டம் (பேஸ்மெண்ட்) அறைக்குள் வைத்து அங்கேயே தானும் இருந்து கொள்ளலாம்.... மிஸ்டர்ஸ்பாட்ஸாவது, நீலிமாவின் பிரிவைத் தாங்காமல் அழாதா? இரவெல்லாம் தூங்காமல் அழுதுகொண்டிருந்தாள் நீலிமா.

காலை விடிந்ததும், பிள்ளை ஷ்ரேயஸுக்கு போன் செய்தாள்.

'மாம், இட்ஸ் செவென். ஐ காட் டு கோ டு வொர்க். ப்ளீஸ் மேக் இட் க்விக்'.

'அதைத்தான் உன் தந்தையும் சொல்கிறார். என்னை சீக்கிரம் வீட்டைக் காலி செய்யச் சொல்லி!' என்று எல்லா விவரங்களும் சொன்னாள் நீலிமா.

அதிர்ந்தானோ என்னவோ, ஷ்ரேயஸ் அதைக் காட்டவில்லை. 'அம்மா, அப்பாவின் ரசனைகள் வேறு. லிசாவுக்கு முன்னால் லிண்டா. லிசாவாவது நர்ஸ், அவரை வளைத்துப் போட்டு விட்டாள். லிண்டா இந்தியப் பெண், உன் தோழி. நீயும் சும்மா இருந்தாய். லிண்டாவுக்கு முன்னால் யாரோ? தெரிந்து கொண்டு சும்மாத் தானே இருந்தாய்? ஏதோ கெட்டது... சனி என்று சொல்வாயே, சனி விட்டது என்று நினைத்து விடு. வீட்டை நீ எடுத்துக் கொள்ளப் போகிறாயா? வீடு நல்ல லொக்கேஷன், பெரிய வீடு என்பதால் 1.5மில்லியன் வரை போகும். ஐ வுட் சே கோ டு அ லாயர்.'

'ரே, என்னடா பேச்சு இது உங்க அப்பாவைப் பத்தி? இந்த வீட்டைத் தாண்டி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அவருக்கு இந்த வீடு வேண்டுமாம். ஹோண்டா ஆடிஸி, வீட்டுல இருக்கிற சாமான் எல்லாத்தையும் எடுத்துக்க சொன்னார். மாசம் $3000 கொடுப்பாராம்.... மிஸ்டர்ஸ்பாட்ஸும் அவருக்கு வேண்டுமாம்'.

'மாம், எனக்கு இப்போ வயசு 24. 10வருஷத்துக்கு முன்னால அப்பா தப்பு பண்ணபோது கேட்கக்கூடாதுன்னு சொன்னே. திரும்பத்திரும்ப தப்பு பண்ணவிட்டுட்டு எதுக்கு இப்படி அடிமையா இருக்கே? சந்தோஷமா இரும்மா. பக்கத்திலே நல்ல அபார்ட்மெண்ட் பார்த்துக்கோ. உன் ஃப்ரெண்ட்ஸ் என்ன சொல்வாங்கன்னு நீ பயந்தாக்க, இந்தியா ட்ரிப் அடி. மனசுக்கு இதமா இருக்கும். இப்போ நான் வேலைக்குப் போகணும், மாலை 5மணிக்குத் வீட்டுக்கு வந்து பேசறேன். லாயர்கிட்ட போகறதைப் பத்திப் பேசறேன். ஸாரிம்மா. அண்ட் ஸாரி அபவுட் மிஸ்டர்ஸ்பாட்ஸ் டூ' போய் விட்டான்.

ஷ்ரேயஸிடம் பேசியதில் இருந்து மனம் இன்னும் கனத்தது. அப்பாவும் பிள்ளையும் 10வருடங்களாக நேருக்கு நேர் பேசுவது கிடையாது. ஆனந்த் செய்கிற பொம்பிளைப்பொறுக்கித்தனத்தை பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று பதின்ம வயதில் வீராப்பாக இருந்த ஷ்ரேயஸ், அப்பா பணத்தை வாரி இறைத்து மேல்படிப்பு படிக்க வைத்ததும் மௌனமாகி விட்டான்.

நீலிமா அழுது கொண்டே இருந்தாள். தோழிகள் எல்லாருக்குமே லிண்டா பற்றி தெரியும். லிண்டா வீடு வரை நட்பு பாராட்டியவள், பின் ஆனந்துக்கு காதல் லைன் போட்டாள். இல்லை, ஆனந்த் தான் அவளுக்கு லைன் போட்டானோ? என்னவோ ஏதோ, லிண்டாவின் கணவன் வந்து அடிதடியாகி லிண்டாவும் கணவனும் ஊரை விட்டுக் கிளம்பினார்கள்... அதற்குப்பிறகு தோழிகள் யாருமே அவளிடம் சரிவரப் பேசுவதில்லை. இப்போது ஆனந்துக்குத் தேவை, கூட வேலை செய்யும் வெள்ளைப்பெண் நர்ஸ் லிசா.

மதியம் இரண்டு மணியாகி பசிமீறிய தலைவலியோடு நீலிமா எழுந்தாள். தனக்கு என்று என்ன இருக்கிறது பாக் செய்ய? வேலைக்குப் போகாமல் இருந்ததால், நீலிமாவிடம் இருந்தவை விலைமலிவான அமெரிக்க ஆயத்த உடைகள்; நான்கு பார்ட்டி உடைகள், அதுவும் திருமணமான புதிதில் ஆனந்தோடு பார்ட்டிக்குச் செல்ல அணிந்தவை. மிச்சம் மீதி, ஆரவாரமான இந்திய நகைகள், அலங்காரம் நிறைந்த இந்திய உடைகள். கல்லூரிக்காலங்களில் எழுதிய பழைய கவிதை நோட்டுப்புத்தகம். "இட் இஸ் அ லூஸர்'ஸ் ஹாபிட்" என்று ஆனந்த் சொன்ன பிறகு கவிதை எழுதுவதும் நின்று போனது.

சமரசங்களில்
முதலில்
கொலையுண்டது
மனம்.

சாப்பிட விருப்பமே இல்லை. நீலிமா எல்லாத்துணிமணிகளையும் எடுத்து பாக் செய்தாள். பார்த்துப் பார்த்து இந்திய முறையில் அலங்கரித்த வீடு. என்ன செய்வது? முன்னறையில் குவித்த பர்னிச்சர், துணிமணி எல்லாவற்றிற்கும் "சால்வேஷன் ஆர்மிக்கு" என்று நோட் எழுதி அவர்களை அழைத்து வெள்ளியன்று வந்து எடுத்துப்போகச் சொன்னாள். நகைகளை ஒரு பெட்டியில் எடுத்து வைத்தாள். பூஜையறை பாக் செய்ய மனமே வரவில்லை. பூஜையறையின் மார்பிள் தரையைத் துடைத்தாள். நடுநாயகமாக இருந்த பூஜை மண்டபத்தைத் துடைத்தாள். வண்டியை எடுத்துப்போய் பெட்ரோல் பம்புக்குப் போய் ப்ளாஸ்டிக்குவளை நிறைய நிரப்பிக்கொண்டாள். மிஸ்டர்ஸ்பாட்ஸுக்குப் பிடித்த உணவையும் வாங்கிக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்து ஸ்பாட்ஸை வண்டியிலேயே விட்டு காரை வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு, உள்ளே வந்த நீலிமா, பூஜை மண்டபத்தின் முன் ஒரு டஜன் விளக்கேற்றினாள். மணி நான்கு நாற்பது, ஷ்ரேயஸ் 20நிமிடங்களில் வந்து விடுவான். நீலிமா நிம்மதியோடு பஜனைப் பாடல் சீடியை ஓட விட்டாள். ப்ளாஸ்டிக்குவளை பெட்ரோல் அத்தனையும் தலையில் கொட்டிக்கொண்டு விளக்குகளை நோக்கிப் பாய்ந்தாள்.