COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, March 19, 2008

நட்சத்திரப் போட்டி: வடை பிட் நோட்டிஸ்

வடை செய்வது எப்படி?

1. 1 கப் உளுந்து . கொஞ்சம் துவரை சேர்க்கலாம். இவற்றை நனைத்து வைக்கவும்.
2. எண்ணெய் .
3. என்று இருப்பவரிடம் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து அடுப்பை ஏற்றவும்.
4. அதே என்று இருப்பவரிடம் நனைத்த உளுந்தை அரைத்து (உப்பு, மிளகாய்/மிளகு எது வேணுமோ அவை இட்டு) வைக்கச் சொல்லவும்.
5. வடை லக்ஷ்மி செகலாக வர, எண்ணெய் அடுப்பு மிதமாக எரிய வேண்டும்.
6. அரைத்த மாவை பதமாக எடுத்து ப்ளாஸ்டிக் பேப்பரில்/......லையில் ..இ...ட்டு துளை செய்து தயாராக் வைக்கவும்.
7. அதே யைப் பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கச் சொல்லவும்.
8. ...ன்னும் வடையை டேஸ்ட் செய்து பார்க்கலையா?
9. சாந்தி யோடு சொந்தராஜனும் டேஸ்டு செய்யலாம், பெண்கள் மட்டும் தான் டேஸ்ட் செய்யணும் என்று இல்லை.
10. , என்ன சுவை!

பி.கு.: ஈ என்று இருப்பவர், கணவர் அல்லது அவர் சொந்தக்காரர்கள், இல்லை, இந்த குறிப்பில் தவறு கண்டுபிடிக்கும் ஆண் ப்திவர்கள் யாராயும் இருக்கலாம்.

Friday, March 14, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

அமி திடமாய்ச் சொன்னாள், "அம்பா நிர்வாகக் குழு கலைக்கப் படணும், நீ உன் பதவியை விட்டிறங்கணும். வாழ்க்கை மேல எல்லாருக்கும் நம்பிக்கை வரணும்... ஜனநாயக முறையில் ஆட்சி செய்ய தேர்தல் நடத்துவோம். ஆண்கள் இந்த சமுதாயத்தில திரும்பி வரணும்".

"உனக்கு என்ன பைத்தியமா?" அம்பா கத்தினார். நான் பேசாமல் இருந்ததை எல்லாரும் கவனித்தார்கள். அம்பா என்னை நேராகப் பார்த்துக் கத்தும் போது சில கெட்ட வார்த்தைகள் தாமாய் வந்து விழுந்தன‌. "என்றைக்கு ஆண் தன்னை பெண்ணை விட உயர்வு என்று நினைத்தானோ அன்றிருந்து பெண் வெளியே தனியா போக முடிந்ததா? இது உனக்கு இது எனக்கு என்று இரண்டு பேரும் கடமையை பகிர்ந்துக்கலாம்னு ஆரமிச்ச ஒரு விளையாட்டு, பெண்ணை நாலு சுவர்களுக்குள்ளேயே அடைச்சு வச்சதே? ஆதி நாள் முதலாய் தாழ்த்தப்பட்ட‌ 'சாதி'யாய் உண்மையான வன்முறை பெண் மேல் தானே? இன்றைக்கு பெண் தனக்கு வேணும்னா அலங்காரம் செய்து கொள்ளலாம். தன் உருவத்தை மாற்றிக் கொள்ளலாம், எப்ப எங்க வேணும்னாலும் போகலாம் எதையும் செய்யலாம்...."

சற்றே குரலைத் தழைத்தவர், "குழந்தை, பெண் இன்று தனக்காய் வாழ்கிறாள். பெண் சுற்றத்தோடு கூடி வாழ்பவள். இன்றைக்கு மனித இனத்தின் உயர்வைக் காட்டும் வகையில் சேர்ந்து தோழிகளாய் வாழ்கிறோம், அறிவும் உணர்வும் கலந்த ஜீவிகளாய். அந்த கனவுகளைக் கலைத்து விடாதே..."

அமி பேசத் தொடங்கினாள்: "அம்பாவுக்கான பதில் இது தான். தாழ்த்தி வாழ்ந்த ஆணிடம் போரிட்டோ, விளக்கியோ சொல்வதை விட்டு அவனைக் கொன்று போடு என்கிறாயே? பெண்ணும் ஆணும் நிகர் என்று எல்லாரும் புரிந்து கொண்டால், பெண்ணையே பெண்ணுக்கு எதிராகச் செய்ய ஆணும் துணிய மாட்டான். பெண்ணும் இன்னொரு பெண்ணுக்கு அநியாயம் செய்ய மாட்டாள்... "

நான் சொன்னேன், "அமி, ஒரு சில நிமிடங்கள் நான் பேசலாமா?" அமி சிரித்துத் தலையாட்டினாள். இன்னொரு கிழாத்தி கேட்டார் "அமி யாரு?"

"புதிய ஜனநாயகக் குல அமைப்பு ஆலோசகர்களில் அமி ஒருவர்... அது பற்றி அப்புறம் பேசலாம். முதலில், நான் தான் கடவுள். ஏனென்றால், கடவுள் இல்லை என்றால், ஆக்கி அழிக்கக் கூடிய நான் கடவுள். கடவுள் இருக்கிறார் என்றால், எனக்குள்ளும் இருந்தே ஆக வேண்டும். இது மனித குலத்தின் சாபம்! இன்னும் தீர்க்கப் படாத இந்த புதிரை விட்டு 'இல்லை', 'இருக்கிறது' என்று சொல்ல அரசாங்கத்துக்கு உரிமை கிடையாது. எத்தனை மதங்கள், எத்தனை போர்கள்! அப்படி எல்லாம் இருந்த மனித இனம் கடவுள், மதம் என்ற அமைப்பு இல்லாமல் நன்றாகத் தானே 2100 வரை வாழ்ந்தோம்... கட்டமைப்புக்கள் மாறினால் நம்மாலும் மாறி வளர முடியும்.

"அம்பா, அப்புறம் நீ தானே உன் தோழிகளுட‌ன் சேர்ந்து சதி செய்து பழைய அம்பாவை கொலை செய்தீர்கள்.. யாருமே ஆண் குழந்தை பெற முடியாமல் சதி செய்து...அப்போ உன்னதமான சமுதாயம் உருவாக்குகிறோம் என்று உதவி செய்த லிகி இன்று நீ செய்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்டதால் அவளைக் கொன்று அவளிடத்தில் ஒரு க்ளோனைப் போட்டாய்.. மிடோகான்ட்ரியல் டிஎன்ஏ ஸ்கானைத் தகிடுதத்தம் செய்தாய்!" இப்போது அம்பாவின் தோழிகளில் பலர் என் பேச்சை ஒரு தீவிரத்தோடு கேட்டார்கள். லிகியின் க்ளோன் தன் நகப் பூச்சைப் பார்த்துக் கொண்டிருந்தது.

"ஆண்களை மீண்டும் இந்த சமுதாயத்துக்குக் கொண்டு வருவோம். உண்மைகளின் பேரில் அன்பின் பேரில் சமுதாயத்தை மாற்றுவோம். மனித இனத்தின் கடமை, சமூகம் பாற்பட்ட தன்னுயர்வு என்று எல்லாருக்கும் சொல்லிக் கொடுப்போம். அம்பா, உன் வயிற்றில் ஏன் நீ என்னைப் பிறப்பித்தாய் என்று நினைத்துப் பார்! லட்சியப் பெண்ணாய் வாழ்ந்த உன்னைப் போல் உன் உயிரின் பொருளாய் உனக்கு ஒரு வாழ்க்கைத் துண்டு தேவையாயிருந்தது. நீயே மறந்து போன லட்சியங்கள் நான்!"

அம்பா முகம் சிவந்து பாய்ந்தெழுந்து சொன்னார் "சும்மா உன்னை ஏமாற்றிக் கொள்ளாதே... ரோவிடமும் என் காதலி மிலாவுடனும் நீ கொண்ட பொறாமையில் நீ என்னை விட்டுப் போனாய். உன் லட்சியங்கள் உன்னதம் என்று கதை விடுகிறாயா? அம்பாவாய் ஆகியிருக்க வேண்டிய நீ இப்போ சாகப் போகிறாய்... முதலில் அமி."

இத்தனை தூரம் புரட்சிக்கு நாளும் நேரமும் பார்த்து, அழிக்க வேண்டிய கட்டிடங்களைத் தேர்ந்தெடுத்தவள் நான்... பாய்ந்து அமியை நோக்கி வந்து கொண்டிருந்த ரோபாலிகாவைச் செயலிழக்க வைத்தேன்... எத்தனை நாள் கனவு? அதற்குள் அமி திரும்பி அம்பாவின் தனித்திரையில் ஏற்கனவே ஏற்பாடாய் வைத்திருந்த ஆணைகளைப் பிறப்பித்தாள். வெளியில் அணைந்து எரியும் சிவப்பு விளக்குகளும், சங்கூதும் சத்தமுமாக... ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. ரோபாலிகாக்கள் வேறு இருவர் உள்ளே வந்து எங்கள் ஆணைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.

==========================================================================

புதிய ஜனநாயக முறையில் உலக முழுதிருந்து அமர்த்தப்பட்ட நீதிக் குழுக்கள் பழைய நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் விசாரித்து ஏற்ற தண்டனை வழங்கினார்கள். சிலருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டது. அம்பா முதலான சிலருக்கு மருத்துவ முறையில் அவர்களை மனரீதியில் மாற்றி அமைக்கும் பெரும் சிகிச்சைகள் நடந்தன. அம்பாவுக்குக் குறிப்பாக அதில் விருப்பமில்லை. இறந்து விடவே விரும்பினார். அதே போல், ஒரு தனித்த இரவில் தற்கொலை செய்து கொண்டார். இதெல்லாம் முடிந்து உலக முழுதும் புதிய ஜனநாயகக் குழுக்கள் அமைந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன.

அமி போன்றோர் சிறப்பாகவே உலகளாவிய குழுக்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் ஒரு சிற்றூரில் பள்ளி ஆசிரியையாகவும் பகுதி நேர நூலகராயும் இருக்கிறேன். இப்போது ஒரு சில ஆண் குழந்தைகள் படிக்க வந்திருக்கிறார்கள். நான் பெற்ற என் மகளும் என் பள்ளியில் படிக்கத் தொடங்கியிருக்கிறாள். இந்த புதிய அம்பாக்களின் வருகையில், வாழ்க்கை மீது எனக்கிருந்த நம்பிக்கை இன்னும் பூத்துக் குலுங்குகிறது.

நிறைந்தது

Tuesday, March 11, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 3

பகுதி 1
பகுதி 2
"நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா ரோ" இது ரோவைத் தடத்தில் நிறுத்தியது. திரும்பி என் கண்ணைப் பார்த்து நின்றாள். குழுக் கூட்ட அறை கட்டாயம் இதே கட்டிடத்தில் தான் இருக்க வேண்டும். அமி எனக்காகக் காத்திருப்பாள். இருந்தாலும், இந்த வம்பில் எனக்கு சுவாரஸ்யம் இருந்தது!

"அம்பாவை. அவருக்கு அப்புறம் யார் புதிய அம்பாவாய் வருகிறார்களோ அவரை".

"என்னையும் காதலிப்பாயா?" சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"நீ புதிய அம்பாவானால் உன்னையும் காதலிப்பேன்" இதைச் சொல்லும் போது ரோபாலிகாவின் கண்ணில் தெரிந்தது வருத்தமா? அறிவியல் பயின்ற எனக்கு, ரோ ஏன் நின்று எனக்குப் பதிலளித்தாள் என்று இன்னும் விளங்கவில்லை. அதனால் தான் இதில் சுவாரஸ்யமா?

"ரோ, காதல் தானா வரும்னு அம்பா சொன்னாங்க. காதல் உணர்வு தானே? நீ உணர்வுகள் அற்றவள் இல்லியா?"

"சிந்தனைத் திறனுடையவர்களுடன் பணிபுரிவது எனக்கு எளிதாக இருக்கிறது. அவர்களின் அருகாமை எனக்குத் தெளிவைத் தருகிறது".

எம்மா, பிடித்திருக்கு என்று சொல்லத் தான் உனக்குத் தெரியாதே! "அது காதல் இல்லை ரோ".

"ஆம், அம்பாவும் அதைத் தான் சொல்கிறார்".

இதற்கு மேல் எனக்கு ரோவிடம் பேசப் பிடிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். "நிர்வாகக்குழுக் கூட்டம் எத்தனை மணிக்கு என்று தெரியுமா?" என்றேன்.

"நீ புதிய அம்பாவாவதற்கு பேச்சுத் திறன் இன்னும் கற்க வேண்டும். பேச்சை மாற்றுகிறாய் அல்லவா? நிர்வாகக் குழுக் கூட்டம் இன்னும் 2 நிமிடங்களில் தொடங்க இருக்கிறது". திரும்பிய ரோபாலிகா இப்போது என் கையைப் பிடித்து இழுத்துச் செல்லாமல் நடந்தாள்.

குழுக் கூட்டம் அம்பாவின் அறைக்குள்ளேயே இருந்தது. தன் பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவோ, அல்லது இது தன் கோட்டை என்ற எண்ணத்திலோ! அறை இன்னும் பெரிதாக்கப் பட்டு பல மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தன. கூட்டத்துக்கு வர வேண்டியவர்கள் எல்லாரும் வந்தாற் போல தெரியவில்லை. ஆறேழு இருக்கைகளில் யாருமில்லை. அமி ஓர் ஓரமாய் நின்றிருந்தாள். என் சமிக்ஞை புரிந்தவள் தன் கையில் இருந்த தாளை என்னிடம் கொடுத்தாள். அவளுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை என்பதற்கான அடையாளத் தாள் அது. என் தோழிகள் சிலர் எழுதிய கவிதைகள் அந்த தாளில் இருந்தன. இன்னும் சில தாள்கள் அதே போல் அமியிடம் இருந்தாலும், இதில் ஒரு பக்கத்தில் அந்த தோழிகளோடு நான் விளையாடிய கட்டங்கள்... என் அழுக்குக் கையின் அடையாளம் சிறிதாய்.

அதை விட அவள் சொன்னது இன்னும் இனித்தது. "திட்டம் வெற்றி, யாம்னி... 2 கட்டிடங்கள் தரைமட்டம். மொத்தம் 7 பேர் நிலம்மேல் இறந்தார்கள். நிர்வாகக் குழுவில் 3 பேர் மரணம். இன்னும் 42 பேர்.." என்றவள், நிறுத்தி நிதானமாக உதட்டைச் சுழித்து "செப்பனிடப்படுகிறார்கள்....! ரிமாவும் லினியும் நம் பக்கத்தில் இறந்தார்கள், அவர்களின் விருப்பத்தின் பேரில், அவர்களைச் செப்பனிட அனுப்பவில்லை".

எங்கள் பேச்சு அங்கிருந்தவர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை என்று நன்றாகத் தெரிந்தது. ரோபாலிகா என்னிடம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் அது அவள் பணியுமல்ல. அவளுக்கு என்னைக் கண்டால் பிடிக்காததற்கு அதுவும் காரணமாயிருக்கலாம்.

ஒரு சப்பை மூக்கழகியான கிழாத்தி கேட்டாள் "யாம்னி, உன்னை என்னால் குறைவாக எடை போட முடியாது. இதற்கு என்ன அர்த்தம்? அம்பா கூப்பிட்டனுப்பியும் நீ புரட்சியைத் தொடங்கியது ஏன்?"

"நியாயமான முறையில் குழந்தை பெறக் கூடாது என்ற சட்டம் இயற்றி 60 ஆண்டுகள் கழித்து என்னை சட்டத்துக்குப் புறம்பாகப் பெற்றிருக்கிறார் அம்பா. தன்னைப் போல் ஒருத்தி என்ற எண்ணம் ஏன் எல்லாருக்கும் இருக்கக் கூடாதா?" என்றேன்.

இன்னொருத்தி எழுந்து கொண்டாள், அளவு கடந்த கோபத்தில் இரைந்து பேசினாள்: "யாம்னி, அம்பா பல வருடங்களாக எங்களின் தோழி. எங்கள் எல்லாருக்கும் ஒரே குறிக்கோள் உன்னதமான‌ பெண் சமுதாயம்".

"கடவுளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

ச.மூ. கிழாத்தி உடன் சொன்னாள்: "மதங்கள் இறந்து விட்டன. அவை சொல்லிக் கொடுத்த வித விதமான கடவுள்களுக்கும் நம் இன்றைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் கிடையாது. நீ புதிய அம்பாவானால், கடவுளை நம் வாழ்வில் புகுத்தாதே".

"வாழ்வின் பொருள் என்ன?"

"கட்டாயம் ஆண் இல்லை!" பின்னிருந்த யாரோ சொன்னதற்கு எல்லா கிழாத்திகளும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

அம்பாவுக்குத் தான் என் எண்ணம் புரிந்திருக்க வேண்டும். "உன் புரட்சி வென்றது என்று நினைக்காதே. நிலத்தடியில் வாழும் அழுக்குக் கிழவிகளுக்காக உன் தாயைப் பகைக்காதே. உனக்கு வரும் பதவியை மறுக்காதே. இங்கே நீ பேசிப் பேசி நேரம் எடுத்தால் அதனால் உனக்கு எந்த லாபமும் இல்லை. உன் கோரிக்கைகள் என்ன?"

தொடரும்

Sunday, March 09, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 2

உளறுதலே எம் பணி: புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 1

அப்போது அம்பாவின் தனித்திரை சிவப்புவெளிச்சப் புள்ளிகள் காட்டி விர்விரென விரிந்தது. திரும்பி என்னை முறைத்தவர், "புரட்சி என்பது வெறும் புரட்டு. உன்னை இங்கே வரவைத்தால் அவர்களை யார் நடத்துவார்கள்?" என்று வறட்டுச் சிரிப்புச் சிரித்தார். திரையிலேயே இன்னொரு சிவப்புப் புள்ளியை அம்பாவின் பார்வை ஒத்தி எடுப்பதை நான் கவனிக்கும் அதே கணத்தில் ரோபாலிகா உள்ளே வந்து, ஒரு வலிய பிடியில் என்னைப் பிடித்துப் போனாள்.

மிகக் குறுகிய தூரத்திலேயே ஆறடிக்கு மூன்றடிக்கு ஆறடியில் ஒரு குண்டு துளைக்காத கரிப்பொருள் பெட்டியில் ரோபாலிகா என்னைத் தள்ளி அடைத்துப் போனாள். இதில் நுண்ணணுக் கடவு எதுவும் இல்லை. என்னை அம்பா முழுமையாக நம்பத் தயாரில்லை என்று புரிந்தது! ஆனால், கவலையில்லை. அம்பாவின் வார்த்தைகளிலேயே நிலத்தடி எழுச்சி புலப்பட்டது. நிலத்தடிவாழ் மக்களின் காலக்கோட்டை எண்ணலானேன். எதிர்காலத்தை எண்ணினால், எண்ணங்கள் தெரிந்து விடுவதற்கு, கடந்த காலத்தை எண்ணுவது எவ்வளவோ மேல்.

===========================================================================================

நிலத்தடி வாழ்வு காலம் காலமாய் இருப்பது தான். அராஜகம் நடக்கும் போது, தட்டி வைக்கப்படும் அத்தனை பேரும் குனிந்து கொண்டு இருப்பதில்லை. ஆனால், இருநூறு ஆண்டுகளுக்கு முன், 2025இல் நடந்தது "யுகப் புரட்சி". அப்போது வல்லரசு நாடுகளாய் இருந்த சைனா, இந்தியா, மற்றும் எண்ணை வள ரஷ்யா, இவை இந்த புரட்சியை வளர்த்தன. எல்லா வல்லரசுகளுக்கும் ஏற்படும் விதியே பழைய வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் ஐக்கிய ஐரோப்பியாவுக்கும் நிகழ்ந்தது. பொருளாதாரச் சரிவுக்கேற்றாற் போல் அவர்களின் நுகர்வு குறையவில்லை; நுகர்வுக்கேற்ப எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் வளரவில்லை. அதன் பின் இந்தியாவும் சைனாவும் குலத்தை ஒன்றாய் ஆக்கியது. வெள்ளை, கருப்பு, மஞ்சள் என்று பிரிந்து இருந்த மக்கள் ஒன்றாய்க் கலந்து வாழக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் சனநாயக முறையில் நிர்வாக துணைக்குழுவும், அகில உலக அளவில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டன. வணிகப் பொருளாதார குழுக்கள் மக்கள் இனமின்றி வாழ்வதை துரிதப்படுத்தின‌. ஏற்கனவே இனங்கலந்து வாழ்ந்த பூமியின் மக்கள், 2100க்குள் முக அமைப்பு வேறுபாடுகள் மறைந்து, வண்ணத்தால் அடையாளங் காட்ட இயலாதவராய் ஒரே மண் வண்ணத்தவர் ஆனர். பல முறை விவாதிக்கப் பட்டு ஒரு வழியாக 2104இல் நாட்டு எல்லைகள் அழிக்கப் பட்டன.

மருத்துவ முன்னேற்றம் புதிய பிறப்புக்களை வழிமுறைப்படுத்தி வயதுக்கு அர்த்தமில்லாமல் செய்து விட்டது. குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்கள் மகப் பேறு அலுவலகத்தில் பதிந்த சில மாதங்களில் வாழ்நாள் முழுக்க நோய் நொடி வராத உத்திரவாதத்துடன் பிறந்தார்கள். வாழ்நாள் என்பது மனத்தின் வசப்பட்டது.

ஆனால், அதற்கும் மேலாய் மனித குலத்தின் எதிர்காலத்தை மாற்றும் ஒரு பெரிய நிகழ்வு 2080களிலேயே கண்டுகொள்ளப்பட்டது. அப்போது 100 : 70 என்று இருந்த பெண் : ஆண் விகிதம், நாளடைவில் குறைந்தது. 2100இல் கடைசியாக 100க்கு 10 என்று இருந்த ஆண்கள் பின் என்னாவானார்கள் என்று அப்போது வாழ்ந்த பல பெண்களாலும் சொல்ல முடியவில்லை. 'இதை உடுத்தாதே, இதை மட்டுமே உடுத்து' என்று சொல்ல ஆணில்லை. 'நீ இருப்பதால் மனிதம் வளரும், ஆனால் நீ இருப்பதால் மட்டுமே எனக்கு ஆசை வருகிறது' என்று உள்ளே பூட்டி வைக்க ஆணில்லை. 'எனக்காய் நீ தியாகம் செய்யும் போது உன்னை இன்னும் ஆள ஆசைப்படுகிறேன்' என்று பெண்மையை யாரும் வருத்தவில்லை. வீர விளையாட்டுக்களை பெண்களைப் போலவே ஆண்களும் விரும்பினார்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால், உலக வரலாற்றில் ஆண் தான் எப்பொழுதும் முதலில் போரிட்டது. ஆண்களின் போர்ச் சண்டைகளில் பெண்கள் இன்னும் துன்பப்பட்டார்கள்.

ஆனால், இன்றைக்கோ, 12 வயதில் தனக்கு வேண்டிய துறைகளைத் தேர்ந்தெடுத்த மகளிர் அந்தந்த துறைகளில் தீவிர ஆர்வத்துடன் செயல்பட்டனர். 'ஆணாதிக்கம் இல்லாத சமுதாயத்தில், குழந்தைகளை உங்களுக்காய் நாங்கள் தருகிறோம்' என்ற மருத்துவ முன்னேற்றத்தில், மாத விலக்கு தேவையில்லாமல் போயிற்று. கடைசியாய், 2125இல் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால், கர்ப்பமுற்று பெண் குழந்தை பெறுவது தடை செய்யப்பட்டது. ஆனால் நிலம்மேல் வாழ்ந்த யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அரசாங்கம் 'சட்ட மீறல்கள் 95% குறைந்தது, கொலை கொள்ளைகள் 99% குறைந்தன, கற்பழிப்பு அறவே இல்லை' என்று ஒவ்வொரு நாளும் அறிவித்தது. ஆண்களைப் பற்றிய நினைவுகள் பலருக்கு இன்று இல்லை. அதற்கான தேவைகளும் இல்லை. இன்றைய வணிகப் பொருளாதார வழிகளில், வேண்டியது வேண்டிய நேரத்தில் தனித்திரையில் கண்களால் வாங்கலாம். காதலைக் கூட. இதையே தொழிலாகக் கொண்டவர்களும் இருந்தார்கள்.

நிலத்தடியில் நான் சந்தித்த பெண்கள் பலர் 150, 200 வயதைத் தாண்டியவர்கள். சிலர் வெறுமே சாவை எதிர்பார்த்தார்கள். நிலம்மேல் வாழ்வில் அவர்களுக்கு
விருப்பமில்லை. பலர் கட்டுப்பாட்டை எதிர்ப்பவர்கள். எல்லோரும் கூடி வாழ்ந்தோம். என் பழம்பெரும் தோழியரில் சிலர் சொன்னது இது தான், 'இயல்பாகவே ஆண்மை குறைந்து வந்து கொண்டிருந்த காலத்தில், மிச்சமிருந்த ஆண்களைக் கொன்று தீர்த்தார்கள்' என்பது. நிலம்மேல் இருப்பவர் போல் இல்லாமல், நிலத்தடியில் பெண்‍களுக்கிடையே உறவு தடை செய்யப்பட்டிருந்தது. இயக்கத்துக்கு எதிராக நினைத்தோம்.

இப்போது ஆளும் அம்பா, உலகின் இரண்டாவது அம்பா. என் தாய். (என்னைப் பெற்றவள் என்று இன்றைக்கு அறிந்து கொண்டேன்). நான் அரசாங்கத்தின் செல்லப் பெண்ணாய் வளர்ந்தாலும், வரலாற்றையும் அறிவியலையும் விரும்பிப் படித்தேன். நிலத்தடித் தோழியரின் நட்பு, அவர்கள் நினைத்ததை வெளிப்படையாகப் பேசுவது எல்லாம் எனக்கு மிகப் பிடித்ததால், 25 வருடங்களுக்கு முன் நிலத்தடி இடம் பெயர்ந்தேன். என் நிலத்தடி நண்பர்கள் வரலாற்றில் நான் படித்த அத்தனை பொய்களையும் எனக்கே காண்பித்துக் கொடுத்தார்கள்.

============================================================================================

கதவைத் தன் மாயக் கரத்தால் திறந்தாள் ரோபாலிகா. அவள் தான் அம்பாவின் நம்பிக்கைக்குரிய ஒரே... என்ன சொல்வேன், கருவி என்றா? என் மதிய உணவாக, என் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கணிக்கப்பட்டு என் பேர் அச்சடித்த சாகலேட் துண்டைக் கொடுத்தாள் ரோபாலிகா. நான் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டேன். தினப்படி உணவுக்கு, நிலத்தடியில் அங்கே கிடைக்கும் கிழங்கு வகைகளும் எலிகளுமாய் எங்கள் வாழ்வு கழிந்து கொண்டிருந்தது. சில சந்தோஷ சமயங்களுக்கு, உணவுகள் நிலம்மேல் விளைவிக்கப் பட்டுக் கடத்தப் பட்டன.

என் எண்ணங்களைக் கலைத்துச் சொன்னாள் ரோபாலிகா "அம்பா இன்னும் 15நிமிடத்தில் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு நிலத்தடி புரட்சியைப் பற்றிப் பேச உன்னை வரச் சொன்னாள். உன் தோழி அமி அங்கே இருப்பாள்".

அமிக்காகவாவது நான் போயே ஆக வேண்டும். அம்பாவால் புரட்சியைக் கட்டுப்படுத்த இயலாததால் தான் இந்த குழுக் கூட்டமே. நன்றாய்ப் புரிந்தது. அவசரமாய் சாகலேட்டை வாயில் போட்டு மென்றேன். "தின்னாச்சு, இப்ப போலாமா?"

என் கிண்டல் புரிந்தாலும் ரோபாலிகா கண்டு கொள்ளாமல் (அவளுக்கு என்ன!) என் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.

"நீ யாரையாவது காதலிச்சிருக்கியா ரோ?" என்றேன்.

தொடரும்....

Saturday, March 08, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 1

ரோபாலிகாக்கள் விர் விர்ரென எனைக் கடந்து போனார்கள். காவல் காக்கும் ரோபாலிகாக்கள் முகங்கள் எல்லாம் ஒரே மாதிரி தான் படைக்கப் பட்டிருந்தாலும், சீனியர் ரோபோக்களிடம் தனித்துவம் உண்டு. சப்பை மூக்கு, விரிந்த காது என்று கணிணிகளின் கவிதைகளாய் விரிந்தவர்கள். சீனியர்கள் மட்டும் "யாம்னி" என்று தலை அசைத்து என்னை அடையாளம் கண்டு கொண்டதை காட்டிப் போனார்கள்.

அம்பா என்னை அவசர அவசியமாய் தன் அறையில் சந்திக்க வேண்டுமென அழைத்திருக்கிறார். ஏனென்று எனக்கு ஓரளவுக்குப் புரிந்திருந்தாலும், அம்பாவின் மூலமாகவே அதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். அம்பாவின் அறையில் இன்று ஸ்டெல்த் அளவு அதிதீவிர பாதுகாப்பு இருந்தது. வெளியில் ரோபாலிகா என் கண்களை ஸ்கான் செய்தாள்; டிஎன்ஏ ஸ்கான் என்றவுடன் தலை சாய்த்தேன், லாகவமாய் என் சிக்கெடுத்த வாராத தலை பிடித்து ஸ்கான் செய்தாள். பின் தலையாட்டி உள்ளே விட்டாள்.

ஒரு சிறுமூச்சோடு உள்ளே வந்து அமர்ந்தேன். அம்பாவிடமிருந்து குரலாணை வந்து கொண்டிருந்தது ‍ "வந்துட்டிருக்கேன்".

"அம்பா?"

இரண்டு நிமிடங்களில் அம்பா வந்தார். அம்பாவையும் ரோபாலிகா விரைவு ஸ்கான் செய்த பின் கதவு சாத்திக் கொண்டது. "யாம்னி, முக்கியமாப் பேசணும்".

"..."

"என்னோட வயத்துல பிறந்தவள் நீ, என்கிட்டயே திமிரைக் காமிக்காதே. பதில் பேசு யாம்னி"

பதில் சொல்லாமல் கண்ணால் அறையைச் சுற்றிக் காண்பித்தேன்.

"அதுக்குத் தான் ஸ்டெல்த்ல போட்டேன். அதத் தவிர விஷயம் வெளில தெரிஞ்சாச்சு. மனித குல‌ நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் போட்டுக் கேட்டாங்க... அங்க இருந்து தான் வந்தேன்..."

முகம் சுழித்துச் சொன்னேன் ‍ "அம்பா, உன் வயத்துல நான் பிறக்கணும்னு கேக்கலை...."

"யாம்னி, காலம் காலமா பெண், குறிப்பா தாய் மதிக்கப் படறதுக்குக் காரணம் இருக்கிறது. மரியாதை கொடுப்பதை நீ சில காலமாகக் குறைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். இந்தக் குலத்தைக் காக்கும் பணி எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது, ராணியாக இருப்பது..."

"போதும் அம்பா. குலத்தைக் காக்கும் பணி உனக்குக் கொடுக்கப்பட்டது யாரால? குழு உன்னைத் தேர்ந்தெடுக்கலை. நீ இந்தப் பணிக்கு வருவதற்காகச் செய்த சூழ்ச்சிகள் என்னைப் போல் நிலத்தடிவாழ் விளிம்பு....."

"யாம்னி, நிலத்தடி நீ வாழ வேண்டிய தேவை இல்லை. நிர்வாகக் குழுவில் என்னுடைய கருத்துக்கு உடன்படாதவர்கள் என்று நான் கருதியவர்களுக்குப் பதிலா இப்போ அவரவர் க்ளோன்கள் வந்துட்டாங்க. என் கருத்தோடு உடன் பட்டாச்சு. நான் எனக்காய், என் காதலுக்காய், மிலாவோடு ஓய்வுலகம் போறேன். நீ தான்டி இனி ராணி".

இதுக்குத் தானே யாம்னி ஆசைப்பட்டாய்! "அம்பா, எனக்கு இதில் உடன்பாடு இல்லை. காதலைப் பற்றி எனக்குச் சில ஆசைகள் இருக்கே..".

"காதல் வரும். வாழ்வில் ஒரு நிலை வரட்டும், தானே வரும்."

அம்பா பேசிக் கொண்டே, கண்களால், தன் தனித்திரையை கவனித்துக் கண்களால் ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தார். ரோபாலிகாவும் ஏதோ விர்விரென்றிருந்ததைக் கவனித்தேன். என் தனித்திரையும், மற்ற தகவல் தொடர்பு சாதனங்களும் அலுவலக வாயிலிலேயே பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் எம் இயக்கத்துக்குச் சேதாரம் செய்யக் கூடிய எதுவும் இல்லை.

"நிலத்தடியிலும் நண்பர்கள் உண்டு எனக்கு" அம்மா ‍ என் எண்ணங்களைப் படித்தாற் போல், த‌ன் 137 வயதிலும் மருத்துவ ரோபோக் கரங்கள் செப்பனிட்டிருந்த உதடுகளை விரித்துப் புன்னகைத்தார்.

"அழகும் அன்பும் மற்றவருக்காய் இல்லை கண்ணே..." என் எண்ணங்களை எடை போடும் ஆற்றலைக் காட்டும் விதமாயும் ஓர் இடைவெளி விட்டு சிறிதாய் "ஷடூ
டி‍இகெம் லா வீனஸ்" இனிப்பு-மதுவைப் பருகினார். "தத்தம் வாழ்வின் நீட்சி அவை. இருத்தலியல் என்று 19ம் நூற்றாண்டு உளறல் படித்திருப்பாயே? அவைதாம் தன்னிடத்தே புற அழகாயும், தன்னை விட்டு சிலரிடம் அன்பாயும் விரிகின்றன...".

மது ஊட்டும் விளக்கம் எனக்குத் தேவையில்லாமல் இடைமறித்தேன் "என்னை எதற்காகக் கூப்பிட்டாய்? நான் அடுத்த அம்பா என்று நிலத்தடியில் எல்லாருக்கும் தெரியும்".

"நம் ரகசியங்களையும் பாரம்பரியத்தையும் காக்கப் போகிறாய் என்ற நிச்சயம் எனக்கு வேணுமடி, அப்புறம் நீதான் புதிய அம்பா".

"மாட்டேன் என்றால்..."

"உனக்கு இந்த பதவி மேல் ஆசை இருக்கிறது, நிலத்தடியில் வரும் சண்டைகளுக்கு சமரசம் செய்கிறாய். அவர்களின் எழுச்சியை அவ்வப்போது கட்டுப்படுத்தி நல்ல நாள் வரும் என்று சொல்கிறாய். இதெல்லாம் எனக்கும் தெரியும்...."

இருநூறு ஆண்டுகளுக்கு முன் வரை கூட இந்தியா என்று ஒரு நாடு இருந்ததாகவும் அங்கிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த சதுரங்கம் எனப்படும் செஸ் இன்றைக்கும் எம் இயக்கப் பெண்டிரால் விளையாடப் படுகிறது. அதில் எப்பவும் நான் தான் வெல்வேன். "அம்பா, உன் பயம், இந்தளவு தான் உனக்குத் தெரியும் என்பது தானே?"

அம்பாவின் கண்கள் வெகு வேகமாய்த் தனித்திரையை ஆட்சி செய்தன.

"அம்பா, தகவல் தொடர்புக்கு உன் கம்ப்யூட்டர்களின் ப்ரோகிராமை மட்டும் நம்புவோம் என்று நினைத்தாயா?" வெகு வேகமாக ராணி என் கையில்!

தொடரும்....

Tuesday, March 04, 2008

நாங்களும் ட்விட்டுவோமே! & இம்பார்டன்டிஸ்.

அய்யா, அம்மா எல்லாருக்கும் வணக்கம் போடு ராசா! ரொம்ப நாளாச்சு பதிவு போட்டு. கொஞ்சம் இம்பார்டன்டிஸ் வியாதி இருந்ததால், இந்த பக்கம் வரலே..

அது என்ன வியாதியா? தெரியுமே, புதிசா ஒரு வியாதி பேரு சொல்லிட்டா, நீங்களூம் காபி/இளநி ரைட்டு வாங்க வந்துடுவீங்களே. நான் இப்ப ரீஜன்டா படிச்சது அதாவது, இம்பார்டன்ட்டாக பேரு எடுத்தவங்க (தோடா!) "வாழ்வின் முக்கிய படைப்பு" என்ற வகையிலே படைக்கும் வரையிலே ஒரு மனத்தடை, படைப்புத்தடை வந்துடுதுன்னு. நான் எப்படி எழுதினாலும் படிக்கறவங்க படிக்கத்தான் போறிங்க. வீக்கென்டு ஜொள்ளப் போறவங்க... எப்படியோ உங்க தலை எழுத்து எதுவோ!

*************************************************************************************

சரி, இன்னிக்கு என் பதிவுக்குப் புதிசா ஒரு ட்விட்டர் கொண்டு வந்திருக்கேன். ட்விட்டர் வந்து ரொம்ப நாளாக இருக்கிறது. தமிழ் மக்கள் பயன் படுத்துவாங்களாயிருக்கும். நான் கொஞ்ச நாள் மட்டம் போட்டதில யாரும் எழுதியிருந்தால், என் அறியாமையை பொறுத்தருள்க.

ட்விட்டரை வச்சுகிட்டு, துளசி டீச்சர் போகிற ஊர்ல என்ன "பரேட் வந்துகிட்டுருக்கு"; "நடந்து போறேன்"; "ஹை, யானை பொம்மை இங்க நல்லா இருக்கு"னு அப்டேட்டு செய்யலாம். இல்லையா, வேற யாராச்சும் "போண்டா சாப்பிட்டேன்", "இங்கன நல்லா இல்ல", "எல்லாரும் படோசன் ;‍) பார்க்குக்கு வராதீங்க, தாத்தா இருக்காரு" ன்னு டக்னு அப்டேட்டும் செய்யலாம்.

எனை ஈன்ற தந்தைக்கு என்னால் தினையளவு நன்றி: என் குருவாய், என் குடும்பத்தில் சில "முதல்" பட்டங்களை நான் பெற துரோணரான "சுஜாதா"வுக்காக இப்ப இந்த குறுங்கதை
மளிகை: அரிசி, துவரம், உளுந்து, பொட்டுக்க.. சர்தான், 4பாக்கட் இட்லி வடை பார்சல். உங்கம்மாக்கு காரம் இல்லாம.