COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, July 31, 2008

யுகப்புரட்சி (அ) அக்னிப் பரீட்சை

"கவுஸ், நீ காந்தியப்பத்தி கேள்விப்பட்டதேயில்லியா?" ஒரு அழகான பெண் ஒரு இளைஞனிடம் கேட்பதால் மட்டும் சுற்றியிருக்கும் சூழ்நிலைக்கு சம்பந்தமில்லாத கேள்வி சரியாய்ப் போய் விடுமா?

"சியா, இது தான் முக்கியமா இப்ப? நாளைக்கு எவ்வளவு முக்கியமான நாள்". என் பதில் கேட்டு சியா சிரித்தாள். இந்த புரட்சி ஓயட்டும், அந்த சிரிப்பை எனக்கே எனக்காக்கிக் கொள்கிறேன். அவளும் புரட்சி ஆன பிறகு தான் எங்கள் திருமணம் என்று உறுதியோடு இருக்கிறாள்...

"புரட்சிக்காரன்னா, உலகத்தில் இருக்கும் கொள்கைகள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு இல்லை" என்றேன். ஒத்துக்கொள்ளாதது போல் புருவத்தைச் சுருக்கினாள். "எனக்கு காந்தி பத்தித் தெரியும். அப்ப அவருடைய நாட்டு மக்கள் சண்டைக்குத் தயாராயில்லை. பட்டினியாயிருக்கும் ஏழைக்கு முன்னால கடவுள் சாப்பாடாத் தான் வருவார்னு சொன்னது அவர் தானே! நாட்டு விடுதலை பத்தி வெறும் கொள்கைகளால் மட்டுமே பேசிக் கொண்டிருந்த அறிவுஜீவிகளையும், நாட்டு விடுதலை பத்தி கவலைப்படக் கூட நேரமில்லாத ஏழைகள¨யும் தன் பக்கம் இழுத்துக்க செஞ்ச ட்ரிக் தான் அஹிம்சை".

"போடா! அஹிம்சையில் எனக்கும் நம்பிக்கையில்லை, அதுக்காக, ட்ரிக்னெல்லாம் சொல்ல மாட்டேன்" கிளம்பிப் போய் மற்ற தோழர்களோடு அமர்ந்தாள். அவர்களின் சிரிப்பும் பேச்சும் எங்கள் இருட்டு பாலிமர் கூடுகளைக் கலக்க, நான் இரவுக்குளிருக்கு இதமாக வைத்திருந்த கதிர்க்கணப்பின் தழலை உற்று நோக்கத் தொடங்கினேன். காந்தியைப் பற்றி அவருடைய கொள்ளுப்பேரனுடைய பேரன் எழுதிய புத்தகங்களைப் படித்திருக்கிறார் என் தாத்தா. என் தாத்தாவின் தாத்தா அப்போதைய இந்தியாவிலிருந்து அப்போதைய அமெரிக்கா வந்தவர்.

இந்தியா, அமெரிக்காவெல்லாம் இப்போது பள்ளிக்கூடங்களில் மட்டும் தான். ஏதோ ஒரு எண்ணெய்ப் போரால் உலகப் பொருளாதாரம் சரிய, ஒவ்வொரு முன்னேறிய நாடாய்க் களைத்து எண்ணெய் வள நாடுகள் சிலகாலம் கொழிக்க, பொருளாதார இடியாப்பச் சிக்கல் அவிழும் போது எண்ணெய் வளம் தேவையில்லாமல் போய் விட்டது. அதற்குள், சூரியனின் சக்தியிலும் காற்றின் சக்தியிலும் அணுசக்தியிலும் தயாரிக்கப்பட்ட மின்சக்தி உலகமெங்கும் பயனாகிவிட்டது. அதைத் தடுக்க எண்ணெய் வள நாடுகள் போட்ட உலக யுத்தத்தில், நாடுகள் அழிந்தன. ஒரு ஒழுங்கில்லாத மனித குல முன்னேற்றத்தில் பிறந்த இரு பெரும் கட்சிகள் தாம் ருபோர், லாதோர். ஒழுங்குள்ள மனித குல முன்னேற்றம் என்று சரித்திரமே இல்லையே!

நான் லாதோர் கட்சி. கட்சி என்று சொல்வதா, இல்லை அப்போதைய இந்திய சமுதாயத்தில் சொல்லப்பட்ட சாதி என்று சொல்வதா! பூமியின் முக்கால் வாசி நிலத்தில் குப்பைகள் தேங்கிக் கிடந்தன. மிச்ச இடத்தில், மனிதத் தொகை மிதமிஞ்சிப் போனது. உயர்ந்து போன வெப்ப நிலை காரணமாக உலகின் வட பகுதியில் மக்கள் தொகை வசித்து வந்தது. தென் பகுதி நாடுகளில் மிருகங்கள் மடிந்தன, உயிரோடு வாழ வட பகுதியில் தான் வசிக்க முடியும். அதனால், காற்று மாசும் அங்கே தான் அதிகம். நானும் மிச்ச லாதோரும் ஓங்கி உலகளந்த கட்டிடங்களுக்கிடையே இருந்த சந்துகளில் பாலிமர் கூடுகளில் வசித்தோம். மழையோ பனியோ அது தரை வர வருவதற்கு பூமியின் மாசுபட்ட காற்று மண்டலம் அனுமதிப்பதில்லை. பண சக்தி வாய்ந்த ருபோர் சாதியினர் மாசுவளிக்கும் மேல் சாடிலைட்டுகளிலோ பறக்கும் கூடுகளிலோ வசித்தனர். எங்களில் பலரோ மூப்பினால் இறப்பதை விட மூச்சு சம்பந்தப்பட்ட வியாதிகளால் இறந்தனர்.

இன்றைக்குத் தான் வெள்ளை, கறுப்பு, மஞ்சள் என்று அடையாளம் தெரியவில்லை மனித இனத்தில். ஆனால், அப்படி அடையாளம் தெரிந்த காலத்தில், மார்ட்டின் லூதர் கிங் என்பவர் கறுப்பின மக்களுக்காகப் போரிட்டாராம், அவர் மறைந்தும் பல வருடங்கள் , கறுப்பின மக்கள் துன்பப்பட்டனராம். அது போல் தான், என் சாதியில் பிறந்தவர்களுக்கு படிக்க, முன்னேற வசதி கிடையாது. உணவு நாங்களே பயிரிட்டுக் கொள்கிறோம், அதற்கு உந்துகள், எரிசக்தி என்று என் மூத்த லாதோர் எப்பவோ எங்கிருந்தோ பீராய்ந்து வந்தவற்றையெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறோம்... ருபோர் இருக்கும் இடத்துக்குள் நாங்கள் வாழ முடியாது. வாழச் சரியான இடம் கிடையாது. பிறக்கும் ஒவ்வொரு லாதோர் உயிருக்கும் அடையாள அட்டை வாங்க போராட்டம். அட்டையில்லாமல் உணவு கிடையாது. கள்ள அடையாள அட்டைகள் செய்து எப்பொழுதாவது ருபோர் கட்சியில் எங்கள் மக்கள் போய்ச் சேர்ந்தது உண்டு. ருபோர் அடையாளம் எங்களுக்குத் தேவையில்லை என்றே எங்கள் தலைமுறை நினைக்கிறது. எப்போதோ படித்த கறுப்புக் கவிதை நினைவுக்கு வந்தது: 'பிறப்பின் நாற்றத்திலேயே எங்கள் வாழ்க்கை கழிந்து போகிறது' உரக்கச் சொல்லிப் பார்த்தேன். சிரிப்புச் சத்தம் குறைந்து எல்லாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

துல் அருகில் வந்து, 'பாஸ், இதில் ஜெயிப்போம். கட்டாயம். நாம செய்ய வேண்டியவற்றை ஒருமுறை சொல்லிப் பார்க்கலாமா!' துல் மிக நம்பிக்கையானவன். லாதோர் சாதியிலேயே உபசாதியான பாணாவைச் சேர்ந்தவன். என் ஆணைகளிலும் என் திறமையிலும் ஒரு பக்தியே வைத்திருந்தான். துல், நான், மற்ற பாணாக்கள் எல்லாருமே சேர்ந்து உட்கார்ந்தோம். ரீசா கனைத்துக் கொண்டே, கட்டிட அஸ்திவாரமாயிருந்த கம்பங்களை பிடித்துக் கொண்டே பக்கத்தில் வந்தார். ரீசா எங்கள் லாதோர் இன மூத்தவர். ரீசாவுக்குக் கட்டாயம் அஹிம்சையில் நம்பிக்கை விட்டுப் போயிருந்தது. என் சிறு வயதில், கட்டிட இடுக்குகளில் குப்பைமேடுகளில் கிடக்கும் எலக்ட்ரானிக் பண்டங்களை உடைத்து நான் செய்யும் கருவிகள் அனைத்துக்கும் ஊக்கமூட்டுவார். லாதோர் குழந்தைகள் அனைவரும் அவரிடம் வளர்ந்தன. எங்களுக்கு எல்லோருக்குமே அவர் "ரீசாபா".

என் அம்மா முதற்கொண்டு, வயது வந்த, மூப்பில்லாத, உடல் ஊனம் இல்லாத அனைவரும் ருபோர் சாதியின் தொழிற்சாலைகளிலும் வீடுகளிலும் வேலை செய்தார்கள். ரீசாபாவுக்கு ருபோரிடம் அடிமையாய் இருக்க விருப்பமில்லாமல், சண்டை போட்டு ஓரிரு முறை சிறை சென்றிருக்கிறார். சிறை அனுபவங்களைப் பற்றிப் பேசத் தொடங்க்கினால், அந்த காடராக்டு விழிகள் இன்னும் திரை போடும். என்னில் தொடங்கி இளைய தலைமுறையினர் வேலைக்குப் போவதைத் தற்போதைக்கு அதை நிறுத்தி விட்டோம். போராட்டம் தொடங்கி இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இந்த இரண்டு வருடங்களுக்குள் எத்தனை மாற்றங்கள்? என்னைப் போன்றவர்கள் பல தொழிற்சாலைகளின் சூப்பர்-கணிணி செயல்பாடுகளையும் நிறுத்தினோம். பாடப் பாட ராகம் என ஒவ்வொரு முறையும் கணிணி வழிகள் இன்னும் கைகூடி வந்தன.

"ரீசாபா! இது நடக்கும்னு நினைக்கிறீங்களா?"

"கவுஸ், நம்ம மானப் பிரச்னை. நடக்காதுன்னா செத்துடு!" தீர்மானமாகச் சொன்னார். "உங்க போராட்டத்துல விலைவாசி கூடிப் போயிருக்கு. ஆனால், நீங்கள் செய்வதை ரோபோக்கள் செய்ய முடியும் என்பதால் செய்வதைத் திருந்தச் செய்." சியாவும் மற்ற துணைத் தலைவர்களும் தத்தம் வழியே பறக்கும் கூடுகளில் கள்ள டிக்கட்டுகள், கள்ள அடையாள அட்டைகளோடு பல நாடுகளுக்குப் பயணம் செய்து போய் விட்டார்கள். சியாவுக்கு இமாலயத்தில் வேலை, 2 மணி நேரத்தில் பறக்கும் கூட்டில் போய் செய்தி அனுப்பித்தாள். அங்கேயும் பழைய இந்தியாவின் தெற்குப் பகுதி வசிக்கத் தகுந்தது அல்ல; போன முறைக்கு இந்த முறை இன்னமுமே மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது என்றாள். நானும் துல்லும் இங்கே நியூயார்க்கில். இன்னும் பல லாதோர் உலகின் பல பகுதிகளில் நள்ளிரவுக்குள் போய்ச் சேர்ந்தனர்.

================================================

அடுத்த நாள், உலகளாவிய எங்கள் வலை இளைஞர்கள் சொல்லி வைத்தாற் போல் மின்சக்தி நிலையங்களின் கணிணிகளைச் செயலிழக்க வைத்தோம். எங்கும் இருட்டு. அவ்வப்போது கதறல். ஒவ்வொரு மணி நேரமும் ஊடகங்கள் எத்தனை இறப்புக்கள் எத்தனை விபத்துக்கள் என்று செய்தி கொடுத்துக் கொண்டிருந்தன. எங்கள் சிறு கணப்புக்களின் தழலைக் குறைத்து வெளி உலகு தெரியாமல், மின்சக்தி நிலையங்களை இயக்கும் தானியங்கி கணிணிகளின் ஈட்டுக் கணிணிகள் (பாக்-அப்), அவற்றோடு தொடர்புடைய மற்ற தானியங்கிகள் என்று உலகம் ஸ்தம்பித்துப் போனது. ருபோரில் முக்கால் வாசி இறந்தனர். அவ்வப்போது, ருபோர் மக்கள் கட்டிடங்களில் இருந்து, உணவுப் பற்றாக்குறை, உறவுகள் இறப்பு என்று பல காரணிகளால் குதித்துச் செத்துப் போனதும் உண்டு. அவ்வப்போது ஒரு சில ருபோர் எங்களுடன் பேச வந்த போது, துல்லும் மற்ற பாணாக்களும் அவர்களைக் கொன்று விட்டார்கள்.

6 வாரங்களாக நடந்த எங்கள் போராட்டத்தை முடித்தோம். லாதோர் கட்டிடங்கள் வெற்றிடங்களாகியிருந்தன. லாதோர் தம் இறந்து போனவர்களை மின்னடக்கம் செய்ததிலேயே இன்னும் புகை மண்டலம் அதிகரித்திருக்கிறது என்று ஊடகங்கள் அறிவித்தன. அடையாள அட்டை முறைமைகளை மாற்ற வேண்டும். எங்களுக்கு வாழ இடம் வேண்டும் என்பதெல்லாம் இன்றைக்கு நனவாகிக் கொண்டிருக்கிறது.

உலகின் அத்தனை மூலைகளிலிருந்தும் என் ஆட்கள் திரும்பி வந்தார்கள். சியா இமாலயத்தில் தங்கிவிட்டாள். ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு செய்தி அனுப்பித்தாள் : "நான் செத்துப் போயிட்டேன்டா".