COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Monday, July 20, 2009

வழுவல, கால வகை

நாலுகால் மண்டபம் வரப்போவுது. ஆனா, அப்பய்யா அதுக்குள்ளாற என் தோளைப் பிடிச்சு அமுக்குறாரு. அவரு கையில கோல் வச்சிட்டு இருப்பாரு. ஆனாலும் அப்பய்யாவுக்கு பயம் தான். என் தோளைப் பிடிச்சிட்டு தான் நடப்பாரு.

"அப்பய்யா, வலிக்குது, தோள விடுங்க".

"இல்லடி, வுழுந்துடுவேன்னு பயந்தான்". ஒரு நிமிசம் தோளை விட்டாலும், இந்த இளவெடுத்த மண்டபம் வரப்போ, அப்பய்யாவுக்கு கைகாலெல்லாம் ஒதறிடும், என் தோளைப் பிடிச்சிட்டு, கோலை இன்னொரு கையால இழுத்துகிட்டே நடக்குறாரு. அவருக்கு ஒரு காலு வெளங்காது, இழுத்து இழுத்து தான் நடப்பாரு. கூனு விழுந்து, காலு வெளங்காம, சவரஞ் செய்யாத முகம் தான் அப்பய்யாவுக்கு. என் ஸ்கூலு ஃப்ரண்ட்ஸ்க்கு எல்லாம் கிண்டல் தான். "உங்கப்பாரு இம்புட்டு சீக்காளியானப்புறம் ஏன் கல்யாண‌ம் கட்டிகிட்டாரு?"

நான் ஒரே பொண்ணு, மனசில பட்டத பட்பட்னு கேட்டுருவேன்னு அப்பய்யாவுக்கு ஒரே சந்தோசம் தான். அஞ்சு வயசில கைய பிடிச்சிட்டுப் ஊரெல்லாம் போவம்ல! எல்லாருட்டயும் வாயக் கொடுத்து வம்பு வளத்துவேன், எங்க அப்பய்யா சிரிச்சுக்குவாங்க. நேத்து கூட ஸ்கூல்ல என் டீச்சரு ஒருத்தங்க அவங்க புள்ளய விட நான் நல்லா மார்க் வாங்கிட்டேன்னு மனசுல வச்சிட்டு, பளார்னு அறைஞ்சிட்டாங்க. ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போயிட்டேன், இன்னும் அடி வாங்கிட்டு வந்தேன். அதப்பத்தி அப்பய்யா கிட்ட சொன்னதுக்கு, "மனசுல பட்டத கேக்குற ராசாத்தி, ஆனா, அக்குரமம் செய்யுறவங்க‌ கிட்ட‌ சாக்கிரதையா இரும்மா. ஒனக்குத் தெரியாதது இல்ல"ன்னுட்டே நடந்தாரு அப்பய்யா.

ஒரு கெழவி, ஊருக்குப் புதுசு போல, "ஏம்மா, அவரு பாவம் நடக்க முடியல, நீ பறக்கறயே, மெள்ள நட தாயி"ன்னுட்ட்டு போச்சு. அதுக்கு என்னா தெரியும்? அப்பய்யா தோளப் போட்டு அமுக்குறது!

மண்டபம் வந்திருச்சு. அப்பய்யா, "பாருடி, நான் கட்டின பூங்கா இது. காந்தி சிலை பாத்தியா? அதுல எம்புட்டு அளகா அவரைப் பத்தி கல்வெட்டுல எளுதி வச்சிருக்கேன். ஒரு நாள் இந்த இடத்துல பிள்ளங்க விளையாடணும், லைபரி கட்டணுமடி".

அதெல்லாஞ் சரி, இன்னிக்கு சாப்பாட்டுக்கு வழி இல்ல, லைபரி யாரு கட்டுவாங்க? அப்பய்யா சிறிசா எளங்காளையா இருக்கச்சொல்ல‌ கட்டினாராம்ல. பெரிய பூங்கா தான். எப்பனாச்சும் கூலி வேல செஞ்சு வயத்தக் கழுவிட்டு, வேற‌ காசு சேக்காம இருந்துட்டாரு அப்பய்யா. காலு வெளங்காமப் போகக்காட்டியும், எங்க அம்மாவ‌ எங்கிட்டிருந்தோ கூட்டிகிட்டு வந்திட்டாராம். எல்லாம் அப்பய்யாவுக்கு தம்பி மொற ஒரு சேக்காளி - நான் சித்தப்பான்னு கூப்பிடுவேன் - சொல்லித் தான் தெரியும். அம்மா ஒண்ணுஞ் சொல்லாது. சோத்துக்கு இல்லன்னுட்டு அப்பப்ப ஓரமா நின்னுட்டு அழுவும். தல தல யா அடிச்சிட்டு சத்தம் போடாம அழுவும், தனியா ஒக்காந்து தெலுங்கு பேசிட்டிருக்கும். பாவம். ஆனா, எங்கிட்ட‌ ஒண்ணுஞ் சொல்லாது.
***********************************************

அது கெடக்கு 20 வருச பழய கதை, கழுதை. அமெரிக்காவுல இருந்து ஊருக்கு வ்ந்திருக்கேன். அப்பய்யாவுக்கு கருமாதி. அப்பவும் கூட, என்னோட க்ராப் தலையும், மஞ்சளும் ப்ரவுனுமா டை அடிச்ச தலையும் பாத்துட்டு செல்வியோட ஆயா சிரிச்சு, "ஏன்டி, அப்பன் மொவம் பாக்க‌ வரலியேடி"ன்னுட்டு தான் என்னை வரவேத்தது.

என்னைய, கருமாதிக்கும் வராதேன்னு தானே அப்பய்யா உசிரோட இருக்கப்பவே சொன்னாங்க. ஏன் அப்பய்யா அப்படி சொன்னாங்கன்னு கேக்கறீங்களா? அப்பய்யா உசிரோட இருக்கச் சொல்ல‌, எனக்கு 14 வயசிருக்கும்; நான் அப்பய்யா கிட்ட‌ கேட்டது இது தான்: "உன் வெளங்காத காலுக்கு துணை வேணுமுனு தானே எங்க அம்மாவை கட்டிகிட்டே? என்னைப் பெத்துப் போடாம இருந்திருக்கலாமே? என்னை ஏன் பெத்தே?"

அம்மா கூட அன்னைக்கு ஒண்ணும் பேசலயே. பக்கத்து ஊட்டு செல்வி (அப்ப அது சின்னப் புள்ள), "ஏண்டி, இனும தாவணி போடணும்னு உங்கப்பா சொன்னதுக்கா இந்த கேள்வி கேட்ட?"ன்னு அப்புறமா ரகசியமா கேட்டுச்சு. இல்லியே! செல்விக்கு நான் சொன்னாலும் விளங்காது. நான் சைக்கிள் ஓட்டக்கூடாதுன்னு அப்பய்யா ஒத்தக்கால்ல (அவங்களுக்கு ஒத்தக் கால் தானே!) நின்னாங்க. அதுல வளந்த சண்டைல தான், நான் அப்படி கேட்டேன். ஏன் என்னைய சைக்கிள் ஓட்டக் கூடாதுன்னு அப்பய்யா சொன்னாருன்னு எனக்கு விளங்கிடுச்சி.

தாவணி போட்டாலும், ஸ்கூல்ல பஸ்ட்டு மார்க்கு வாங்கினாலும், எங்க குடும்பத்துல இல்லாத முறையா, 'அமெரிக்கா போவேன் அங்க‌ பான்ட் சட்டை தான் போடுவேன்'னு என் அம்மாகிட்ட ரகசியமா சொன்னாலும், நான் நான் தான். மனசுல பட்டத கேக்கத் தான் கேப்பேன். அப்ப வளந்த சண்டையில‌ சொன்னாரு அப்பய்யா, தன் கருமாதிக்கு வராதேன்னிட்டு.

ம், சொல்ல மறந்துட்டேனே, அப்பையா கையால கட்டின பூங்கா பக்கத்துல இருந்த‌ நாலுகால் மண்டபம் இடிஞ்சுடுச்சி, போன வருசம் அங்க நல்லா கட்டிடம் கட்டி கவர்ன்மென்டு லைப்ரரி தொடங்கியிருக்காங்க.... நான் தான் கலெக்டர் வரைக்கும் போய், தள்ள வேண்டியதைத் தள்ளியிருக்கேனே!

கருமாதி முடிஞ்சிடுச்சி. அம்மா ஒரு வருசம் இங்கயே இருந்துட்டு அப்பால அமெரிக்கா கிளம்பி வரேன்னிடுச்சு. இன்னிக்குக் காலையிலே, நான் முடி சீவிட்டிருந்தேன். அம்மா நைசா வந்து தன் தலையில டை அடிக்கட்டுமான்னுது.