COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sunday, November 16, 2008

ஆதம் ஸ்மித்தின் பிழை என்ன? மா.சி. க்கு மறுமொழி

ஆதம் ஸ்மித்தின் வரலாற்றுப் பிழை என்றொரு பதிவு நான் விடாமல் படிக்கும் மா. சிவகுமார் அவர்களிடமிருந்து. அதுக்கு என் மறுமொழி (5 பக்கம் இல்லை, 5 பத்தி).

ஆதம் ஸ்மித் சொல்வது இது தான் ‍(ஓரளவு மா.சி. யின் பதிவிலிருந்து வெட்டி எடுத்திருக்கிறேன்): "தனி மனிதர்கள் தத்தமது சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் போது சமூகத்துக்குத் தேவையான பணிகள் நடந்து விடுகின்றன". இனி நான்: ஆதம் ஸ்மித்தின் சான்றுகளாய்ச் சொன்னது இது தான். "கசாப்புக் கடைக்காரர், ரொட்டி செய்பவர், சாராயக் கடைக்காரர் (டாஸ்மாக்!) யாரும் நம்முடைய நன்மைக்காக நமக்கு சோறு (சோத்துல ஏதுய்யா சாராயம்) போட்டு விடப்போவதில்லை; அவுங்களுக்கும் இதுல சுயநலம் இருக்கறதுனால, அவங்கவங்க வேலையப் பாக்கறாங்க". நாமும் தேவையானதை வாங்கி, தேவையானதை சாப்பிடுறோம் என்று புரிஞ்சுக்கணும். பொருளியலில் நோபல் பரிசு பெற்ற மில்டன் ஃப்ரீட்மென், ஆதம் ஸ்மித்தின் கோட்பாட்டைப் பற்றி "அதிகார துஷ்பிரயோகம் இல்லாத சமூக ஒத்துழைப்பு"ன்னு சொல்கிறார். இதுல சுயநலம் மட்டும் இருக்கா? சுயநலம் மட்டும்னு இருந்தால், ரொட்டி செய்பவர் ஒரேயடியா விலை வைக்க முடியாதா? அவர் ஏன் ரொட்டி செய்யணும்? அரசியல்வாதியானாப் போதுமே. ரொட்டி செய்யற கத்தியால ஒரே போடாப் போட்டு:‍) . இல்லீங்க, ஜோக் அடிக்க முடியலை இதப் பத்தி.

தொழில் செய்றோம். நம்மை மாதிரி நாலு பேரு தொழில் செய்ய ரெடியா இருப்பாங்க. பதுக்கல், கள்ளக் கடத்தல் இல்லாத இடத்துல, நேர்மையா போட்டி போட்டு நமக்கான சுயநலம் (நம் குடும்பத்தையும் சார்ந்தது) காட்டுற வழியில் வாழறோம். இதுல, ஆதம் ஸ்மித்தின் கோட்பாடு "சமூக நலத்தின் உருவற்ற கை தான் சுயநலம்"! ஒரு பொருளின் விலை அதற்கான வியர்வையின் விலை தான். என் வயித்தை மட்டும் பாக்கப் போறதில்லை. கொஞ்சம் சம்பந்தமில்லாத மாதிரி ஒரு மேற்கோள்: ஒரு சமயத்தில், அண்ணன் கமலகாசன் (ஸ்மித் சுமித்தானால், ஹா, காவாகும்:-) சொன்னாரு, "நான் சினிமாவில் செலவழிக்கறதுக்கு பதிலாக, வீட்டுக்குள் ஒரு நீச்சல் குளம் கட்டியிருக்கலாம்". இரண்டுமே சுயநலம் தான். இரண்டிலும் மனித உழைப்பு இருக்கப் போகிறது. ஒன்றில் மற்றதை விட நுகர்வோர் அதிகம்.

ஆதம் ஸ்மித் மட்டும் இன்றைக்கு நம்மை இங்கே கொண்டு வரவில்லை. ராபர்ட் அவன் (1771 -1858), போன்ற பலரும் வழி நடத்தினாங்க (அவர் பேரே அவன் தான், அதுக்காக அவர்ன்னு மாத்த முடியாது) - தொழிலாளிகளை "ஓரளவு" மரியாதையுடன் நடத்தி அதாவது, நல்ல உணவு, இருப்பிடம், உடல்நலம் பேணும் வகையில் நடத்தினால், உற்பத்தி அதிகரிக்கும்னு காமிச்சாரு. இது பத்தி ஊரு ஊராப் போயி பிரசாரம் செஞ்சாரு. தொழில் சார்ந்த சுயநலத்தால் சமூகநலம் விளையும்! அத்தோட‌, 1824இல், யு.எஸ் போய் அங்க 30,000 ஏக்கர் இந்தியானா மாநிலத்தில் வாங்கி வீடு குடியிருப்புகள் செய்திருக்காரு. (எனக்கு ஒண்ணு ரெண்டு எழுதிவச்சிருக்கலாம், ஏனா? அவரைப் பத்தி நான் எழுதி வைக்கறதுனால!) "கட்டு. கட்டினா வருவாங்க"ன்னு ஆரமிச்சு வைச்சிருக்காரு. இந்த குடியிருப்பின் தோல்விக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது: "உயர்ந்த கருத்துக்கள் கொண்டிருந்தாலும், எண்ணங்களால் வேறுபட்ட மானுடம் தன் சுயத்தைக் காக்கும் முயற்சிகளால் தோற்கடிக்கப்பட்டது".

கார்ல் மார்க்ஸ் சொல்வது என்னா? "இன்றைக்கு தொழிலதிபர்கள் ஊழியருக்குக் கொடுக்கும் சம்பளம் அவருக்கு வெளியில எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு தான். செய்யப்பட்ட பொருளின் மதிப்பு ஊழியர்களின் வேலையால் விளைந்தது". என்னால எளிமையா கார்ல் மார்க்ஸின் தத்துவங்களைச் சொல்ல இப்போ முடியும்னு தோணலை. ஆனால், பொதுவுடைமை கருத்துக்களை முன்வைத்த மார்க்ஸின் கோட்பாடுகளை இன்றும் எந்த கம்யூனிஸ்டு நாடும் முழுமையாக எடுத்துக்கலை. இதுபற்றி நிறைய கட்டற்ற இணையத்தில். இன்றைக்கு நடக்கும் பொருளாதார கஷ்டங்கள், கயிற்றின் மேல் நடக்கும் போது ஆகிற அட்ஜஸ்ட்மென்டு. பொருளாதார தியரிகள் அதைத் தான் சொல்கின்றன.

அதைத் தவிர‌, பலரும் சேர்ந்து ஆக்கியது இன்றைய தொழில்/விஞ்ஞான முன்னேற்றம். சுயநலம் மட்டும் பார்த்து இருந்தால், இன்டர்நெட் ஆராய்ச்சி-இரகசியமாகவே இருந்திருக்கும். நான் மா.சி. பதிவைப் படிச்சிருக்க மாட்டேன், உங்களை ப்ளேடு போட்டிருக்க மாட்டேன் (அப்பா, தப்பு என் மேல இல்லை). யாரையும் அட்லான்டிக் மாகடல் தண்ணீரில் தள்ளிவிட்டா, டைட்டானிக் ஜீரோ மாதிரி ஸ்டைலா பேசிட்டிருக்க மாட்டாங்க. தன்னலம் காத்துக் கொள்வார்கள். இந்த தன்னலத்தில், அவர்களின் குடும்ப நலமும் அடக்கம். இதுக்கு எடுத்துக்காட்டு எதுவும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு நான் கூற வேண்டாம்:‍-) இதுக்காக வறியவரின் துயர் போக்குவது தேவையில்லை என்று கட்டாயம் சொல்ல மாட்டேன். ஓரிருவரின் தாராளத்தில் மட்டும் வறியவர் வாழ முடியாது. கஷ்டப்பட்டு வளர்ந்த என்னைப் போன்ற‌ யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க. எனக்குக் கைநீட்டிக் கொடுத்தவங்க எல்லாரும் என்னால் முடியும்னு தெரிஞ்சப்புறம் மிகுந்த ஊக்கத்தோடு இன்னும் வாழ்த்தினாங்க. அவ்ளோ தான் இப்போதைக்கு.

6 comments:

ambi said...

இப்போதைக்கு ஒரு கும்புடு போட்டு சுண்டல் வாங்கிட்டு உத்தரவு வாங்கிக்கறேன். :)

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

அம்பி,

கோவிந்தா, கோவிந்தான்னு சொல்றீங்க:-) வருகைக்கு நன்றி.

துளசி கோபால் said...

ஆஹா...... இப்படியெல்லாம் யோசிக்கவும் முடியுமா நம்மளாலேன்னு ஒரு பிரமிப்புதான்......

//டைட்டானிக் ஜீரோ மாதிரி//

0 வா? y?

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

டீச்சர், :‍-)

டைட்டானிக் ஜீரோ: டைட்டானிக் படத்துல‌, அந்த லியர்னாடோ காரக்டர், ஹீரோயினுக்காக தான் தண்ணீரில் இருப்பாரு. அது ஹீரோயிஸம் இல்லை (எனக்கு), எனவே ஜீரோ!

நசரேயன் said...

எனக்கே புரியுற மாதிரி எளிமையா நல்லா இருக்கு.
இது பாராட்டுதான் நக்கல் இல்லீங்கோ

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

நசரேயன், புரியற மாதிரி எழுதிருக்கேனா, நன்றி. //இது பாராட்டுதான் நக்கல் இல்லீங்கோ// பரவாயில்லியே, என்னை சட்னு புரிஞ்சுகிட்டீங்க:-) இந்த வார்த்தைகள் இல்லைன்னா, நான் கிண்டல் பண்றீங்கன்னு தான் நினைச்சிருப்பேன்.

இது என் வாதம்/புரிதல். மா.சி. அவர்கள் நேரம் இருக்கும்போது எதிர்வினை அளிப்பார்னு நம்பறேன்.