COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, March 08, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 1

ரோபாலிகாக்கள் விர் விர்ரென எனைக் கடந்து போனார்கள். காவல் காக்கும் ரோபாலிகாக்கள் முகங்கள் எல்லாம் ஒரே மாதிரி தான் படைக்கப் பட்டிருந்தாலும், சீனியர் ரோபோக்களிடம் தனித்துவம் உண்டு. சப்பை மூக்கு, விரிந்த காது என்று கணிணிகளின் கவிதைகளாய் விரிந்தவர்கள். சீனியர்கள் மட்டும் "யாம்னி" என்று தலை அசைத்து என்னை அடையாளம் கண்டு கொண்டதை காட்டிப் போனார்கள்.

அம்பா என்னை அவசர அவசியமாய் தன் அறையில் சந்திக்க வேண்டுமென அழைத்திருக்கிறார். ஏனென்று எனக்கு ஓரளவுக்குப் புரிந்திருந்தாலும், அம்பாவின் மூலமாகவே அதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். அம்பாவின் அறையில் இன்று ஸ்டெல்த் அளவு அதிதீவிர பாதுகாப்பு இருந்தது. வெளியில் ரோபாலிகா என் கண்களை ஸ்கான் செய்தாள்; டிஎன்ஏ ஸ்கான் என்றவுடன் தலை சாய்த்தேன், லாகவமாய் என் சிக்கெடுத்த வாராத தலை பிடித்து ஸ்கான் செய்தாள். பின் தலையாட்டி உள்ளே விட்டாள்.

ஒரு சிறுமூச்சோடு உள்ளே வந்து அமர்ந்தேன். அம்பாவிடமிருந்து குரலாணை வந்து கொண்டிருந்தது ‍ "வந்துட்டிருக்கேன்".

"அம்பா?"

இரண்டு நிமிடங்களில் அம்பா வந்தார். அம்பாவையும் ரோபாலிகா விரைவு ஸ்கான் செய்த பின் கதவு சாத்திக் கொண்டது. "யாம்னி, முக்கியமாப் பேசணும்".

"..."

"என்னோட வயத்துல பிறந்தவள் நீ, என்கிட்டயே திமிரைக் காமிக்காதே. பதில் பேசு யாம்னி"

பதில் சொல்லாமல் கண்ணால் அறையைச் சுற்றிக் காண்பித்தேன்.

"அதுக்குத் தான் ஸ்டெல்த்ல போட்டேன். அதத் தவிர விஷயம் வெளில தெரிஞ்சாச்சு. மனித குல‌ நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் போட்டுக் கேட்டாங்க... அங்க இருந்து தான் வந்தேன்..."

முகம் சுழித்துச் சொன்னேன் ‍ "அம்பா, உன் வயத்துல நான் பிறக்கணும்னு கேக்கலை...."

"யாம்னி, காலம் காலமா பெண், குறிப்பா தாய் மதிக்கப் படறதுக்குக் காரணம் இருக்கிறது. மரியாதை கொடுப்பதை நீ சில காலமாகக் குறைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். இந்தக் குலத்தைக் காக்கும் பணி எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது, ராணியாக இருப்பது..."

"போதும் அம்பா. குலத்தைக் காக்கும் பணி உனக்குக் கொடுக்கப்பட்டது யாரால? குழு உன்னைத் தேர்ந்தெடுக்கலை. நீ இந்தப் பணிக்கு வருவதற்காகச் செய்த சூழ்ச்சிகள் என்னைப் போல் நிலத்தடிவாழ் விளிம்பு....."

"யாம்னி, நிலத்தடி நீ வாழ வேண்டிய தேவை இல்லை. நிர்வாகக் குழுவில் என்னுடைய கருத்துக்கு உடன்படாதவர்கள் என்று நான் கருதியவர்களுக்குப் பதிலா இப்போ அவரவர் க்ளோன்கள் வந்துட்டாங்க. என் கருத்தோடு உடன் பட்டாச்சு. நான் எனக்காய், என் காதலுக்காய், மிலாவோடு ஓய்வுலகம் போறேன். நீ தான்டி இனி ராணி".

இதுக்குத் தானே யாம்னி ஆசைப்பட்டாய்! "அம்பா, எனக்கு இதில் உடன்பாடு இல்லை. காதலைப் பற்றி எனக்குச் சில ஆசைகள் இருக்கே..".

"காதல் வரும். வாழ்வில் ஒரு நிலை வரட்டும், தானே வரும்."

அம்பா பேசிக் கொண்டே, கண்களால், தன் தனித்திரையை கவனித்துக் கண்களால் ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தார். ரோபாலிகாவும் ஏதோ விர்விரென்றிருந்ததைக் கவனித்தேன். என் தனித்திரையும், மற்ற தகவல் தொடர்பு சாதனங்களும் அலுவலக வாயிலிலேயே பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் எம் இயக்கத்துக்குச் சேதாரம் செய்யக் கூடிய எதுவும் இல்லை.

"நிலத்தடியிலும் நண்பர்கள் உண்டு எனக்கு" அம்மா ‍ என் எண்ணங்களைப் படித்தாற் போல், த‌ன் 137 வயதிலும் மருத்துவ ரோபோக் கரங்கள் செப்பனிட்டிருந்த உதடுகளை விரித்துப் புன்னகைத்தார்.

"அழகும் அன்பும் மற்றவருக்காய் இல்லை கண்ணே..." என் எண்ணங்களை எடை போடும் ஆற்றலைக் காட்டும் விதமாயும் ஓர் இடைவெளி விட்டு சிறிதாய் "ஷடூ
டி‍இகெம் லா வீனஸ்" இனிப்பு-மதுவைப் பருகினார். "தத்தம் வாழ்வின் நீட்சி அவை. இருத்தலியல் என்று 19ம் நூற்றாண்டு உளறல் படித்திருப்பாயே? அவைதாம் தன்னிடத்தே புற அழகாயும், தன்னை விட்டு சிலரிடம் அன்பாயும் விரிகின்றன...".

மது ஊட்டும் விளக்கம் எனக்குத் தேவையில்லாமல் இடைமறித்தேன் "என்னை எதற்காகக் கூப்பிட்டாய்? நான் அடுத்த அம்பா என்று நிலத்தடியில் எல்லாருக்கும் தெரியும்".

"நம் ரகசியங்களையும் பாரம்பரியத்தையும் காக்கப் போகிறாய் என்ற நிச்சயம் எனக்கு வேணுமடி, அப்புறம் நீதான் புதிய அம்பா".

"மாட்டேன் என்றால்..."

"உனக்கு இந்த பதவி மேல் ஆசை இருக்கிறது, நிலத்தடியில் வரும் சண்டைகளுக்கு சமரசம் செய்கிறாய். அவர்களின் எழுச்சியை அவ்வப்போது கட்டுப்படுத்தி நல்ல நாள் வரும் என்று சொல்கிறாய். இதெல்லாம் எனக்கும் தெரியும்...."

இருநூறு ஆண்டுகளுக்கு முன் வரை கூட இந்தியா என்று ஒரு நாடு இருந்ததாகவும் அங்கிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த சதுரங்கம் எனப்படும் செஸ் இன்றைக்கும் எம் இயக்கப் பெண்டிரால் விளையாடப் படுகிறது. அதில் எப்பவும் நான் தான் வெல்வேன். "அம்பா, உன் பயம், இந்தளவு தான் உனக்குத் தெரியும் என்பது தானே?"

அம்பாவின் கண்கள் வெகு வேகமாய்த் தனித்திரையை ஆட்சி செய்தன.

"அம்பா, தகவல் தொடர்புக்கு உன் கம்ப்யூட்டர்களின் ப்ரோகிராமை மட்டும் நம்புவோம் என்று நினைத்தாயா?" வெகு வேகமாக ராணி என் கையில்!

தொடரும்....

3 comments:

Unknown said...

மகளிர் தின ஸ்பெஷல்! ஒரு பகுதியோட விட்டுடுவோமா, நாலைந்து பகுதி போட்டு அறுத்துத் தள்ள ப்ளான்.

chummasuman said...

அறிவியல் தொடரா?, அரசியல் தொடரா? பெண்ணியக் கதையா? அல்லது வெறும் பெண்பெருமை பேசும் கெக்கேபிக்கே -வா?

மகளிர் தினத்தை நினைவு செய்து கொண்டால், பெண்ணியக்கதை போல் இருக்கு. பெண்களின் நிகழ்கால பிரச்சினையை தொடாமல் அது தொடர முடியாது. அறிவியல் கதையா என்றால், கதைக்களமும், காலமும் பொருந்திப்போகின்றன. பட் டூ யேர்லி டு டிசைட் ஆன் இட். அடுத்த பகுதி இப்படியும் தொடங்கலாம், "யாமினி, இரவு தான் கண்ட கனவிலிருந்து இன்னும் மீள முடியாமல் அவஸ்த்தை பட்டாள்". அரசியல் தொடராக இருக்காது என நினைக்கிறேன். ஆனால், "சண்டைகளுக்கு சமரசம் செய்கிறாய்", இந்த வரி யோசிக்க வைக்கிறது. ஒருவேளை நான் மேலே குறிப்பிட்ட அந்த நாலாவது வகையா? அடுத்த பகுதியின் முடிவில் கணித்துவிடலாம்.

அறிவியல் தொடர்: 20% வாய்ப்பு
அரசியல் தொடர்: 5%
பெண்ணியக் கதை: 45%
பெண்பெருமை பேசும் கெக்கேபிக்கே: 35%

Unknown said...

அறிவியல் தொடரில் பெண் பெருமை பேசுவேன்!

//"யாமினி, இரவு தான் கண்ட கனவிலிருந்து இன்னும் மீள முடியாமல் அவஸ்த்தை பட்டாள்"// கறுப்புக் காக்கா சத்தியமா இந்த வரி வராது.

ஆமா, அடுத்த பகுதில கதை இன்னும் விரிந்து புரிந்து விடும்....னு நினைக்கிறேன்!

சுமன், உங்கள் வருகைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.