COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, March 14, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

அமி திடமாய்ச் சொன்னாள், "அம்பா நிர்வாகக் குழு கலைக்கப் படணும், நீ உன் பதவியை விட்டிறங்கணும். வாழ்க்கை மேல எல்லாருக்கும் நம்பிக்கை வரணும்... ஜனநாயக முறையில் ஆட்சி செய்ய தேர்தல் நடத்துவோம். ஆண்கள் இந்த சமுதாயத்தில திரும்பி வரணும்".

"உனக்கு என்ன பைத்தியமா?" அம்பா கத்தினார். நான் பேசாமல் இருந்ததை எல்லாரும் கவனித்தார்கள். அம்பா என்னை நேராகப் பார்த்துக் கத்தும் போது சில கெட்ட வார்த்தைகள் தாமாய் வந்து விழுந்தன‌. "என்றைக்கு ஆண் தன்னை பெண்ணை விட உயர்வு என்று நினைத்தானோ அன்றிருந்து பெண் வெளியே தனியா போக முடிந்ததா? இது உனக்கு இது எனக்கு என்று இரண்டு பேரும் கடமையை பகிர்ந்துக்கலாம்னு ஆரமிச்ச ஒரு விளையாட்டு, பெண்ணை நாலு சுவர்களுக்குள்ளேயே அடைச்சு வச்சதே? ஆதி நாள் முதலாய் தாழ்த்தப்பட்ட‌ 'சாதி'யாய் உண்மையான வன்முறை பெண் மேல் தானே? இன்றைக்கு பெண் தனக்கு வேணும்னா அலங்காரம் செய்து கொள்ளலாம். தன் உருவத்தை மாற்றிக் கொள்ளலாம், எப்ப எங்க வேணும்னாலும் போகலாம் எதையும் செய்யலாம்...."

சற்றே குரலைத் தழைத்தவர், "குழந்தை, பெண் இன்று தனக்காய் வாழ்கிறாள். பெண் சுற்றத்தோடு கூடி வாழ்பவள். இன்றைக்கு மனித இனத்தின் உயர்வைக் காட்டும் வகையில் சேர்ந்து தோழிகளாய் வாழ்கிறோம், அறிவும் உணர்வும் கலந்த ஜீவிகளாய். அந்த கனவுகளைக் கலைத்து விடாதே..."

அமி பேசத் தொடங்கினாள்: "அம்பாவுக்கான பதில் இது தான். தாழ்த்தி வாழ்ந்த ஆணிடம் போரிட்டோ, விளக்கியோ சொல்வதை விட்டு அவனைக் கொன்று போடு என்கிறாயே? பெண்ணும் ஆணும் நிகர் என்று எல்லாரும் புரிந்து கொண்டால், பெண்ணையே பெண்ணுக்கு எதிராகச் செய்ய ஆணும் துணிய மாட்டான். பெண்ணும் இன்னொரு பெண்ணுக்கு அநியாயம் செய்ய மாட்டாள்... "

நான் சொன்னேன், "அமி, ஒரு சில நிமிடங்கள் நான் பேசலாமா?" அமி சிரித்துத் தலையாட்டினாள். இன்னொரு கிழாத்தி கேட்டார் "அமி யாரு?"

"புதிய ஜனநாயகக் குல அமைப்பு ஆலோசகர்களில் அமி ஒருவர்... அது பற்றி அப்புறம் பேசலாம். முதலில், நான் தான் கடவுள். ஏனென்றால், கடவுள் இல்லை என்றால், ஆக்கி அழிக்கக் கூடிய நான் கடவுள். கடவுள் இருக்கிறார் என்றால், எனக்குள்ளும் இருந்தே ஆக வேண்டும். இது மனித குலத்தின் சாபம்! இன்னும் தீர்க்கப் படாத இந்த புதிரை விட்டு 'இல்லை', 'இருக்கிறது' என்று சொல்ல அரசாங்கத்துக்கு உரிமை கிடையாது. எத்தனை மதங்கள், எத்தனை போர்கள்! அப்படி எல்லாம் இருந்த மனித இனம் கடவுள், மதம் என்ற அமைப்பு இல்லாமல் நன்றாகத் தானே 2100 வரை வாழ்ந்தோம்... கட்டமைப்புக்கள் மாறினால் நம்மாலும் மாறி வளர முடியும்.

"அம்பா, அப்புறம் நீ தானே உன் தோழிகளுட‌ன் சேர்ந்து சதி செய்து பழைய அம்பாவை கொலை செய்தீர்கள்.. யாருமே ஆண் குழந்தை பெற முடியாமல் சதி செய்து...அப்போ உன்னதமான சமுதாயம் உருவாக்குகிறோம் என்று உதவி செய்த லிகி இன்று நீ செய்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்டதால் அவளைக் கொன்று அவளிடத்தில் ஒரு க்ளோனைப் போட்டாய்.. மிடோகான்ட்ரியல் டிஎன்ஏ ஸ்கானைத் தகிடுதத்தம் செய்தாய்!" இப்போது அம்பாவின் தோழிகளில் பலர் என் பேச்சை ஒரு தீவிரத்தோடு கேட்டார்கள். லிகியின் க்ளோன் தன் நகப் பூச்சைப் பார்த்துக் கொண்டிருந்தது.

"ஆண்களை மீண்டும் இந்த சமுதாயத்துக்குக் கொண்டு வருவோம். உண்மைகளின் பேரில் அன்பின் பேரில் சமுதாயத்தை மாற்றுவோம். மனித இனத்தின் கடமை, சமூகம் பாற்பட்ட தன்னுயர்வு என்று எல்லாருக்கும் சொல்லிக் கொடுப்போம். அம்பா, உன் வயிற்றில் ஏன் நீ என்னைப் பிறப்பித்தாய் என்று நினைத்துப் பார்! லட்சியப் பெண்ணாய் வாழ்ந்த உன்னைப் போல் உன் உயிரின் பொருளாய் உனக்கு ஒரு வாழ்க்கைத் துண்டு தேவையாயிருந்தது. நீயே மறந்து போன லட்சியங்கள் நான்!"

அம்பா முகம் சிவந்து பாய்ந்தெழுந்து சொன்னார் "சும்மா உன்னை ஏமாற்றிக் கொள்ளாதே... ரோவிடமும் என் காதலி மிலாவுடனும் நீ கொண்ட பொறாமையில் நீ என்னை விட்டுப் போனாய். உன் லட்சியங்கள் உன்னதம் என்று கதை விடுகிறாயா? அம்பாவாய் ஆகியிருக்க வேண்டிய நீ இப்போ சாகப் போகிறாய்... முதலில் அமி."

இத்தனை தூரம் புரட்சிக்கு நாளும் நேரமும் பார்த்து, அழிக்க வேண்டிய கட்டிடங்களைத் தேர்ந்தெடுத்தவள் நான்... பாய்ந்து அமியை நோக்கி வந்து கொண்டிருந்த ரோபாலிகாவைச் செயலிழக்க வைத்தேன்... எத்தனை நாள் கனவு? அதற்குள் அமி திரும்பி அம்பாவின் தனித்திரையில் ஏற்கனவே ஏற்பாடாய் வைத்திருந்த ஆணைகளைப் பிறப்பித்தாள். வெளியில் அணைந்து எரியும் சிவப்பு விளக்குகளும், சங்கூதும் சத்தமுமாக... ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. ரோபாலிகாக்கள் வேறு இருவர் உள்ளே வந்து எங்கள் ஆணைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.

==========================================================================

புதிய ஜனநாயக முறையில் உலக முழுதிருந்து அமர்த்தப்பட்ட நீதிக் குழுக்கள் பழைய நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் விசாரித்து ஏற்ற தண்டனை வழங்கினார்கள். சிலருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டது. அம்பா முதலான சிலருக்கு மருத்துவ முறையில் அவர்களை மனரீதியில் மாற்றி அமைக்கும் பெரும் சிகிச்சைகள் நடந்தன. அம்பாவுக்குக் குறிப்பாக அதில் விருப்பமில்லை. இறந்து விடவே விரும்பினார். அதே போல், ஒரு தனித்த இரவில் தற்கொலை செய்து கொண்டார். இதெல்லாம் முடிந்து உலக முழுதும் புதிய ஜனநாயகக் குழுக்கள் அமைந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன.

அமி போன்றோர் சிறப்பாகவே உலகளாவிய குழுக்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் ஒரு சிற்றூரில் பள்ளி ஆசிரியையாகவும் பகுதி நேர நூலகராயும் இருக்கிறேன். இப்போது ஒரு சில ஆண் குழந்தைகள் படிக்க வந்திருக்கிறார்கள். நான் பெற்ற என் மகளும் என் பள்ளியில் படிக்கத் தொடங்கியிருக்கிறாள். இந்த புதிய அம்பாக்களின் வருகையில், வாழ்க்கை மீது எனக்கிருந்த நம்பிக்கை இன்னும் பூத்துக் குலுங்குகிறது.

நிறைந்தது

1 comment:

chummasuman said...

Hi!,
Happy ending?...mm.great!
What is it going to be the next topic?

--sorry, I'm unable to transliterate into Tamil. Maybe I would see the problem solved next time. Take care.