COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, October 31, 2009

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

உடை மாற்றி நிமிர்ந்த போது தான் கவனித்தேன், கண்ணாடியில் என் பின்னால் ஒருவன். அவனை யாரென்று தெரியாது . நான் கத்த வாய் திறந்தால் சத்தமே வரவில்லை. நான் அசையும் திசையெல்லாம் அவன் கண்கள் என்னையே பார்த்தன. அவன் முகத்தில் கண்களில் அது என்ன? கோபமா, வருத்தமா? அவன் கண்களில் ஆழம் அதிகமாயிருந்தது. அவன் ஆடை வினோதமாக இருந்தது. வெளிர்நீல நிறத்தில், அந்தக் கால ராஜாக்களின் உடை போல் உடுத்தியிருந்தாலும், பல இடங்களிலும் கிழிந்து தொங்கிக் கொண்டு இருந்தது, அவன் அதை லட்சியமே செய்யவில்லை....

பயத்தில் என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது இன்னும். "சுமா" என்று ராஜாமணியின் குரல் கேட்டு தலை திருப்பினேன், அந்த வினாடியில் அந்த நீல ராஜகுமாரன் காணாமல் போனான். ராஜாமணி குளியலறை வாசலில் நின்று, "நான் ஆஃபீஸ் கிளம்பிட்டேன், நீ கிளம்பலையா? ம், சாயந்திரம் சேகர் வீட்டுக்கு போறோமா?" என்று இரைந்து கேட்டான். என் ராஜாமணியின் அலுவலகமும் என்னுடையதும் ஒவ்வொரு திசையில். குளியலறைக் கண்ணாடியில் நான் திரும்பிப் பார்த்தபோது யாரும் இல்லை, நடுங்கிக் கொண்டிருந்த நான் "ம்" என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, ராஜாமணி, "சரி, எனக்கு லேட்டாச்சு, பை!" என்றதும் அபார்ட்மென்ட் கதவை அறைந்து சாத்தியதும் கேட்டது.

நடுங்கிக் கொண்டே எனக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே, கிளம்பினேன். செல்பேசியை எடுத்து ராஜாமணியை கூப்பிட்டால், செல்பேசி கர்கர் என்று சத்தம் போட்டது. கைப்பையை எடுத்துக் கொண்டு காருக்கு ஓடினேன். எப்பவும் என்னைப் பார்த்தால் பேசும் கீழ் அபார்ட்மென்ட் ஜான், "ஹேய், ஆர் யூ இன் அ ஹர்ரி?" என்றான். "யப், ஸீ யூ லேடர்" என்றவாறே, காருக்குள் அமர்ந்தேன்.

எனக்கும் ராஜாமணிக்கும் இந்தியாவில் திருமணம் ஆகி இரண்டு வாரங்களே ஆகி இருந்தன. ந்யூயார்க்கில் பல முறை வந்து பணியில் இருந்தமையால், என் வீட்டினர் அமெரிக்க மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்த போது எனக்கு நிம்மதி ஆகவே இருந்தது. இந்தியாவில் என்றால், சும்மா விட்டு விட மாட்டார்கள். 'தலைமுடி இப்படி வளத்துக்கோ,  இதை ஏன் சாப்பிடறே' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொன்று விடுவார்கள்.

ஆனால் என்ன, ந்யூயார்க்கில் என் அத்தையின் ந்யூஜெர்ஸி வீட்டில் இருந்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஏற்கனவே ட்ரைவிங் நன்றாகப் பழகியிருந்தாலும், புதுமண வாழ்க்கை என்பது, உறவினர்கள் இல்லாமல், புதிய ஆணோடு குடும்பம் நடத்துவது என்பது - புதிய அனுபவம் தான். "எப்பிட்ரீ இவ்ளோ ஜோக் அடிச்சிட்டு ஸ்பங்கி மங்கியா இருக்கே" என்று கொஞ்சும் கணவன்...! ராஜாமணி யோசித்துப் பேசுபவன், நான் அப்படி இல்லை. ராஜாமணிக்குக் கோபம் வந்தாற் போலவே தெரியவில்லை. ஆனாலும், இந்தியாவில் என் பெற்றோரை ஃபோனில் கூப்பிடும் போதெல்லாம், ராஜாமணி கூடவே இருந்ததால் என் பெற்றோரிடம் தனியாகப் பேசவே வாய்ப்பு கிடைக்கவில்லை.

காரை ரிவர்ஸ் செய்ய கண்ணாடியில் பார்த்த போது தான், ரேயர் வ்யூ மிரர் இல், திரும்பவும் காலையில் வந்த‌ நீல ராஜகுமாரன். நீலப் பல்லைக் காட்டிச் சிரித்தான். ஏதோ சொன்னான். "என்னோடு பேச மாட்டியா" என்று தான் சொன்னான் என்று நினைக்கிறேன், அவன் பேசும் போது தான் அவன் மூச்சு கர்கர் - செல்பேசியில் கேட்ட அதே கர்கர் - என்று கேட்டது. அவன் எந்த மொழியில் பேசினான் என்று நினைவில்லை. தமிழ் போல இருந்தது. சடாரென்று ப்ரேக் போட்டேன். கார் டயர் விர்ரென்றதும் புகை பறந்ததும் தெரிந்த போது, செல்ஃபோன் அடித்தது, ராஜாமணியின் நம்பர். டாக் பட்டனை ப்ரஸ் செய்து, ஸ்பீக்கரில் போட்டேன். ராஜாமணி "ஹாய் ஸ்லீப்பி ஹெட்" என்றதும், பின்னாலிருந்தவன் காணாமல் போனான்.

"கீப் டாகிங்" என்றவாறே காரை ரிவர்ஸ் எடுத்து ட்ரைவினேன். "ஐ, என் குரல் அவ்வளோ இனிக்கிறதா?" என்றான் ராஜாமணி.

"எனக்கு பயமா இருக்கு ராஜ்" காரை ஓட்டியவாறே பேசினேன். குறிப்பாக ரெயர் வ்யூ மிரர் பார்க்காமல் இருக்க தவித்து விட்டேன்.

"என்ன பயம்?" என்றான் ராஜாமணி.

"என்னவோ தெரியல. காலையிலிருந்து அமானுஷ்யமா ஏதோ ஒரு உருவம் பாக்கிறேன். என்னன்னு சொல்லத் தெரியல. பயமா இருக்கு", என்றேன் நான்.

"என்னம்மா சொல்ற? ஸிக் லீவ் போட்டுட்டு வீட்டுக்குப் போ. நானும் வரேன்" - இது ராஜாமணி.

"இல்லப்பா, எனக்குத் திரும்பிப் போக பயமா இருக்கு. அதுவும் புது ப்ராஜக்ட்ங்கிறதால், டக்னு இதுக்கெல்லாம் லீவு போட வேணாம்னு பாக்கிறேன்.... ம், ஜான் யங் நினைவிருக்கா?"

"யாரது புது காதலன்?"

"அட, சீ. கீழ் வீட்டு பார்ட்டி. வெள்ளைக்கார தாத்தா. இந்த அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ் பத்தி பயங்கரக் கதை சொன்னாரு நேத்திக்கு... பேய் கீய்னு.." - இது நான்.

"ஆமா, இதெல்லாம் கேட்டு நடுங்கு. கிறுக்குடி நீ! சரி, நீ எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணு... ஏன் முன்னாலியே ஃபோன் செஞ்சிருக்கலாம்ல?"

செல்பேசி காலையில் தொந்தரவு செய்தது பற்றி ஏதாவது சொன்னால் நம்ப மாட்டான் என்று தோன்றியது. "சரி, எதுனாலும் டெக்ஸ்ட் பண்றேன்", என்றேன். திடீரென் ஒரு யோசனை தோன்றியது, "ஹனி, ஒரு உதவி பண்ணேன்" என்றேன்.

"என்னடி?" டி போட்டால், தலைவர் மசிந்து வழிக்கு வருகிறார் என்று தெரியும்.
"ம், நேத்திக்கு ஒரு கவிதை எழுதினியே என்னைப் பத்தி, அது சொல்லேன்", என்றேன். செல்பேசியின் ரெகார்டரைத் தொடங்கிக் கொண்டேன்.

******************************************************************************************************************************************************************************

அன்று மாலையும் மறு நாள் காலையும் நான் தனித்திருந்த போதெல்லாம் அந்த அழுக்கன், பேயோ என்னவோ, என்னைத் தொடர்ந்தது. மறுநாள் சனிக்கிழமை என்பதால், ராஜாமணியை, காலை10 மணிவாக்கில் "ப்ரஞ்ச்" மாதிரி வெளியே சாப்பிடுவோம் என்று கிளப்பினேன். நடப்பதை எல்லாம் விவரித்தேன்.

ராஜாமணி பயந்து போயிருந்தது அவன் அழகிய கண்களில் தெரிந்தது. எப்பவும் போல், என்ன செய்யலாம் என்ற யோசனையைத் தொடங்கினான். "சுமா, என்னடா சொல்றே? இன்னிக்கு ஹோட்டல் போயிடுவோமா? ஏதாச்சும் டாக்டர் கிட்ட போகணும்னா எமர்ஜன்ஸிக்கு தானே கூட்டிட்டுப் போக முடியும்? இன்னிக்கு சனிக்கிழமை வேற. எனக்குத் தெரிஞ்ச டாக்டர் யாரும் ஆஃபீஸ் திறந்திருக்க மாட்டாங்களே.... உனக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் உங்க ஆஃபீஸ்ல தொடங்கிட்டாங்களா? எனக்கு ஹெச்1 விசா கொடுத்த கம்பெனியில் உனக்கு ஹெல்த் அப்ளை பண்ணியிருக்கேன், ஹெச். ஆர். பிடுங்கி இன்னும் ப்ராசஸ் பண்ணலை...." அவன் பயம், நிதர்சனங்களின் பயம் ஆக இருந்தது.

எனக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. ராஜாமணி, "இரு ரிலையன்ஸ் கார்டு நம்பர் வச்சிருக்கியா, எங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணிக் கேக்கிறேன், ரமணி அத்தை மகன் ஃப்ளோரிடாவில டாக்டரா இருக்கான், அவனை வேண்ணா கூப்பிட்டு கேக்கலாம். அவன் நம்பர் இல்ல... அப்பாவுக்கு தெரியுமோ என்னவோ?"

என் கைப்பையை எடுத்து, ரிலையன்ஸ் நம்பரை எழுதிய ஸ்டிக்கிநோட்டை எடுத்தேன். நிமிர்ந்தால், எதிரில் நீல ராஜகுமாரன். திரும்பவும். ராஜாமணி பக்கத்தில் இருந்த போதும். ராஜாமணி பேசிக்கொண்டிருந்த போதும். என்மேலிருந்த கண் வாங்காமல்.

ராஜாமணி, ஃபோனை மூடியவாறே, "அப்பா எங்கியோ வெளியில போயிருக்காரு போல" என்று என்னைத் திரும்பிப் பார்த்தவன் கண்களில் பயங்கரம் தெரிந்தது. "சுமா, உன் கண் நிலைகுத்துதடி, என்னடி ஆச்சு?"

******************************************************************************************************************************************************************************

நான் கண் திறந்த் போது எமர்ஜென்ஸி அறையில் இருந்தேன். இன்ஷூரன்ஸ் இல்லாமல் எமர்ஜென்ஸி கூட்டி வந்ததற்காக தீட்டப் போகிறார்கள். வெளியே, ராஜாமணி ஃபோனில் கதறுவது தெரிந்தது. அந்த அழுக்கு, நீல ராஜகுமாரப் பேய் டாக்டருக்குப் பின்னால் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். நான் புன்னகைத்துக் கொண்டேன். புன்னகைத்த அந்த நிமிடத்தில், பெரும் அமைதி என்னிடம். அழுக்கன் என்னை நோக்கி வந்தான். 

வெளியே: ராஜாமணி மாமனாருடன் ஃபோனில், "சார்... மாமா, என்ன சொல்றீங்க? ஜான் யங்குங்கிற பேர்ல எங்க அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்ல யாரும் இல்லன்னு சொல்றாரு அபார்ட்மென்ட் மானேஜர், சுமா தனக்குத் தானே பேசிட்டுப் போவா-னு வேற சொல்லிச் சிரிக்கிறாரு... என்னது? மருந்து கொண்டு வர மறந்துட்டாளா? ...... அவளுக்கு பைபோலார் டிஸ் ஆர்டர் வியாதி இருக்குன்னு சொல்லாம மறைச்சிட்டு.....". நச்!

6 comments:

இலவசக்கொத்தனார் said...

என்ன சொல்ல வரீங்க? ராஜாமணியை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிட்டாங்களா? இதில் என்ன புதுமை? வழக்கமா எல்லா கல்யாணத்திலும் நடக்கும் ஏமாற்றுதல்தானே?

அப்புறம் என்ன பை போலார்ன்னு சொல்லறீங்க? எல்லா தங்கமணிகளுக்கும் இருக்கிறது மல்டி போலார் தானே!!

Unknown said...

ஆஹா, கதையப் படிச்சதும், கொத்ஸ் கொசுவத்தி சுத்தறீங்களா? :‍)

கதை எப்படி இருந்தது?

sundar said...

நல்லாத்தான் எழுதுறீய....

இப்படியே மெயிண்டெய்ன் பண்ணலாம்..

நடை நச்!!

Prabhu said...

செம இண்டரெஸ்டிங்!

Unknown said...

சுந்தர், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

பப்பு, உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நச்' கதை நல்லா இருக்கு. கொஞ்சம் திகிலாவும் இருக்கு. எப்படிப்பா இப்படியெல்லாம் எழுதறீங்க:))

நன் எந்த இணையப் பக்கத்திலிருந்து இங்க வந்தேன்னு உங்களால கெஸ் பண்ணவே முடியாது:)

உங்க எழுத்துக்கு ஒரு சல்யூட்.