COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tuesday, March 11, 2008

புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 3

பகுதி 1
பகுதி 2
"நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா ரோ" இது ரோவைத் தடத்தில் நிறுத்தியது. திரும்பி என் கண்ணைப் பார்த்து நின்றாள். குழுக் கூட்ட அறை கட்டாயம் இதே கட்டிடத்தில் தான் இருக்க வேண்டும். அமி எனக்காகக் காத்திருப்பாள். இருந்தாலும், இந்த வம்பில் எனக்கு சுவாரஸ்யம் இருந்தது!

"அம்பாவை. அவருக்கு அப்புறம் யார் புதிய அம்பாவாய் வருகிறார்களோ அவரை".

"என்னையும் காதலிப்பாயா?" சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"நீ புதிய அம்பாவானால் உன்னையும் காதலிப்பேன்" இதைச் சொல்லும் போது ரோபாலிகாவின் கண்ணில் தெரிந்தது வருத்தமா? அறிவியல் பயின்ற எனக்கு, ரோ ஏன் நின்று எனக்குப் பதிலளித்தாள் என்று இன்னும் விளங்கவில்லை. அதனால் தான் இதில் சுவாரஸ்யமா?

"ரோ, காதல் தானா வரும்னு அம்பா சொன்னாங்க. காதல் உணர்வு தானே? நீ உணர்வுகள் அற்றவள் இல்லியா?"

"சிந்தனைத் திறனுடையவர்களுடன் பணிபுரிவது எனக்கு எளிதாக இருக்கிறது. அவர்களின் அருகாமை எனக்குத் தெளிவைத் தருகிறது".

எம்மா, பிடித்திருக்கு என்று சொல்லத் தான் உனக்குத் தெரியாதே! "அது காதல் இல்லை ரோ".

"ஆம், அம்பாவும் அதைத் தான் சொல்கிறார்".

இதற்கு மேல் எனக்கு ரோவிடம் பேசப் பிடிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். "நிர்வாகக்குழுக் கூட்டம் எத்தனை மணிக்கு என்று தெரியுமா?" என்றேன்.

"நீ புதிய அம்பாவாவதற்கு பேச்சுத் திறன் இன்னும் கற்க வேண்டும். பேச்சை மாற்றுகிறாய் அல்லவா? நிர்வாகக் குழுக் கூட்டம் இன்னும் 2 நிமிடங்களில் தொடங்க இருக்கிறது". திரும்பிய ரோபாலிகா இப்போது என் கையைப் பிடித்து இழுத்துச் செல்லாமல் நடந்தாள்.

குழுக் கூட்டம் அம்பாவின் அறைக்குள்ளேயே இருந்தது. தன் பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவோ, அல்லது இது தன் கோட்டை என்ற எண்ணத்திலோ! அறை இன்னும் பெரிதாக்கப் பட்டு பல மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தன. கூட்டத்துக்கு வர வேண்டியவர்கள் எல்லாரும் வந்தாற் போல தெரியவில்லை. ஆறேழு இருக்கைகளில் யாருமில்லை. அமி ஓர் ஓரமாய் நின்றிருந்தாள். என் சமிக்ஞை புரிந்தவள் தன் கையில் இருந்த தாளை என்னிடம் கொடுத்தாள். அவளுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை என்பதற்கான அடையாளத் தாள் அது. என் தோழிகள் சிலர் எழுதிய கவிதைகள் அந்த தாளில் இருந்தன. இன்னும் சில தாள்கள் அதே போல் அமியிடம் இருந்தாலும், இதில் ஒரு பக்கத்தில் அந்த தோழிகளோடு நான் விளையாடிய கட்டங்கள்... என் அழுக்குக் கையின் அடையாளம் சிறிதாய்.

அதை விட அவள் சொன்னது இன்னும் இனித்தது. "திட்டம் வெற்றி, யாம்னி... 2 கட்டிடங்கள் தரைமட்டம். மொத்தம் 7 பேர் நிலம்மேல் இறந்தார்கள். நிர்வாகக் குழுவில் 3 பேர் மரணம். இன்னும் 42 பேர்.." என்றவள், நிறுத்தி நிதானமாக உதட்டைச் சுழித்து "செப்பனிடப்படுகிறார்கள்....! ரிமாவும் லினியும் நம் பக்கத்தில் இறந்தார்கள், அவர்களின் விருப்பத்தின் பேரில், அவர்களைச் செப்பனிட அனுப்பவில்லை".

எங்கள் பேச்சு அங்கிருந்தவர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை என்று நன்றாகத் தெரிந்தது. ரோபாலிகா என்னிடம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் அது அவள் பணியுமல்ல. அவளுக்கு என்னைக் கண்டால் பிடிக்காததற்கு அதுவும் காரணமாயிருக்கலாம்.

ஒரு சப்பை மூக்கழகியான கிழாத்தி கேட்டாள் "யாம்னி, உன்னை என்னால் குறைவாக எடை போட முடியாது. இதற்கு என்ன அர்த்தம்? அம்பா கூப்பிட்டனுப்பியும் நீ புரட்சியைத் தொடங்கியது ஏன்?"

"நியாயமான முறையில் குழந்தை பெறக் கூடாது என்ற சட்டம் இயற்றி 60 ஆண்டுகள் கழித்து என்னை சட்டத்துக்குப் புறம்பாகப் பெற்றிருக்கிறார் அம்பா. தன்னைப் போல் ஒருத்தி என்ற எண்ணம் ஏன் எல்லாருக்கும் இருக்கக் கூடாதா?" என்றேன்.

இன்னொருத்தி எழுந்து கொண்டாள், அளவு கடந்த கோபத்தில் இரைந்து பேசினாள்: "யாம்னி, அம்பா பல வருடங்களாக எங்களின் தோழி. எங்கள் எல்லாருக்கும் ஒரே குறிக்கோள் உன்னதமான‌ பெண் சமுதாயம்".

"கடவுளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

ச.மூ. கிழாத்தி உடன் சொன்னாள்: "மதங்கள் இறந்து விட்டன. அவை சொல்லிக் கொடுத்த வித விதமான கடவுள்களுக்கும் நம் இன்றைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் கிடையாது. நீ புதிய அம்பாவானால், கடவுளை நம் வாழ்வில் புகுத்தாதே".

"வாழ்வின் பொருள் என்ன?"

"கட்டாயம் ஆண் இல்லை!" பின்னிருந்த யாரோ சொன்னதற்கு எல்லா கிழாத்திகளும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

அம்பாவுக்குத் தான் என் எண்ணம் புரிந்திருக்க வேண்டும். "உன் புரட்சி வென்றது என்று நினைக்காதே. நிலத்தடியில் வாழும் அழுக்குக் கிழவிகளுக்காக உன் தாயைப் பகைக்காதே. உனக்கு வரும் பதவியை மறுக்காதே. இங்கே நீ பேசிப் பேசி நேரம் எடுத்தால் அதனால் உனக்கு எந்த லாபமும் இல்லை. உன் கோரிக்கைகள் என்ன?"

தொடரும்

8 comments:

chummasuman said...

கதை எங்கு நடக்கிறது?
என்ன மொழி பேசுகிறார்கள்?
தமிழ் என்றால், 2225 வரை அதற்கு உயிர் இருக்கிறதா?
இருந்தால் மகிழ்ச்சி.

நிலமேல் வாழ்விடம் பற்றி அடுத்த பகுதியில் வருமா?

/////"நீ புதிய அம்பாவானால் உன்னையும் காதலிப்பேன்" //////
செக்ரட்டரிகளை காதல் வலையில் வீழ்த்தும் பாஸ் -கள் இன்னும் இருக்கிறார்கள?

//////புரட்சியைத் தொடங்கியது ஏன்?"//////
என்ன புரட்சி அது? 40 வயதில் ஆண் மகவைப் பெற்று புரட்சி செய்ய திட்டமா?

பால் பேதமற்ற காதல் சாத்தியமா? அவ்வித உணர்வு குறைபாடுதானே? ஆண்கள் அற்றுப்போன நிலையில் அது இயல்பாகிவிட்டதா? வேறு வழியில்லை என்றால் அந்த பத்து சத ஆண்களையாவது விட்டுவைத்து ஆட்டிப்படைத்திருக்கலாமல்லவா? ஆண்கள் இல்லாத போது, உயர்வான பெண் சமுதாயமென்றால் யாரை விட உயர்வு? ஒருவேளை உன்னதமான பெண் சமுதாயத்தை சொல்கிறீர்களா?

இவை எல்லாம் நான் பதில் வேண்டும் கேள்விகளல்ல. கதை ரசிக்கத்தானே, கேள்விக்கேட்க்கவா? அல்லவே!

Unknown said...

கதை வருங்காலத்தில் நடக்கிறது (/ஊர்கிறது எப்படி வேண்ணாலும்).

எழுதத் தொடங்கும் முன் என் விதிகள், அனுமானங்கள் படி, மொழி தமிழோ (ஸாரி) ஆங்கிலமோ அல்ல, அது இன்றைய இணைய உலகிலிருந்து விளைந்த எளிய மொழியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இன்னும் நிறைய ஐடியா இருந்தது அந்தக்கால வாழ்க்கை பற்றி எழுத. ஆனால், ஒரு வரியில் இந்த தொடரில் நான் சொல்ல விரும்புவது, "ஆண் இல்லாத சமுதாயம் சாத்தியம், வெகு விரைவில் நடக்கலாம்". பரிணாம வளர்ச்சி அப்படிப் போகுமோ என்று வாசகர் எண்ணிப் பார்த்தால் போதும்.

/////"நீ புதிய அம்பாவானால் உன்னையும் காதலிப்பேன்" //////
யாம்னிக்கு வளரும் போதே ரோவைப் பற்றி புரிந்திருந்தது;‍) இதைத் தன் தாய் மதிக்கவில்லை, தன் சுயலாபத்துக்குப் பயன்படுத்துகிறார் என்ற எண்ணத்தைத் தான் இப்படி ரோவிடம் பேசி உறுதிப் படுத்திக் கொள்கிறாள் யாம்னி.

பின்னூட்டம் (பெரிசா இருக்கறதுனால) இன்னும் வரும்;)

Unknown said...

//பால் பேதமற்ற காதல் சாத்தியமா? அவ்வித உணர்வு குறைபாடுதானே? // இல்லை, அது குறைபாடு இல்லை. பேதம் (வித்தியாசம்) அவ்வளவே. எப்ப தானாகவே புதிய பரிணாம‌ மாற்றங்களில் ஆண் எண்ணிக்கை குறைந்ததோ, பெண் இனவிருத்திக்கு தேவையில்லாமல் இருக்கிறாளோ, (யப்பா, அப்ப நான் உசிரோட இருக்க மாட்டேம்பா, நல்ல வேளை!) வருங்காலப் பெண்கள் அதையும் செய்யத் தொடங்கலாம்!

ஆண்கள் எண்ணிக்கை தானாகவே குறைந்தது, மருத்துவ நடவடிக்கை எடுக்காவிடில் எப்படியும் குறைந்திருக்கும். இந்த பாயின்டு அடுத்த பகுதில கட்டாயம் வரும்.

அட ஆமாங்க, 'உன்னதமான பெண் சமுதாயத்தை' தான் சொல்கிறேன். மாத்திடறேன். திரும்பிப் படிச்சுக்கூடப் பாக்காம போட்டாச்சு, இப்ப படிச்சா, எவ்வளவோ பிழைகள் தெரியுது:(

சுமன் உங்க ஆர்வத்துக்கு மிக்க நன்றி. இது தான் தெம்பை கொடுக்கிறது.

chummasuman said...

எனது முதல் பின்னூட்டத்திற்கு பதிலளித்து முடித்து விட்டீர்களா? இல்லையென்றால் எனது அடுத்த பின்னூட்டத்தை அதுவரை ஒத்திப்போடுகிறேன்.

Unknown said...

:-)))

ஆமாம்ன்னு சொல்லட்டுமா, இல்லைன்னு சொல்லட்டுமா? இப்பிடி என்னை பயப்பட வச்சுட்டீங்களே....;-)

சரி, கமென்ட் மாடரேஷன் இருக்கிற தைரியத்துல சொல்கிறேன்: இன்னும் ஓரிரண்டு கேள்விகளுக்கான பதில் அடுத்த பகுதில தெரிந்து விடும். உங்க பின்னூட்டத்தைப் போடுங்க!

Unknown said...

அடுத்த பகுதி சனி காலை இந்திய நேரம் வரும்...

இதுவரை சுமனின் அடுத்த கேள்விகள் வரவில்லையென்று பொதுஜனத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்!

chummasuman said...

/////"வாழ்வின் பொருள் என்ன?"
"கட்டாயம் ஆண் இல்லை!" //////

எனது உயிரியல் வகுப்பில் முதல் நாள் இந்த கேள்வியை கேட்டுத்தான் பாடத்தை தொடங்கினார் அந்த ஆசிரியை. கேள்வி மிக ஆழமானது என தவறாக புரிந்து கொண்டு அதீதமான சில பதில்களை சொன்னோம். அனைத்தையும் மறுத்த அவர் "உண்டு தன்னை பெருக்குவதும், கிடந்து தன் இனத்தைப் பெருக்குவதும்" தான் வாழ்வின் பொருள் என்றார். மிகச்சரி எனத்தோன்றியது அந்த பதில். "கட்டாயம் ஆண் இல்லை!" என்ற பதில் சரியானதும் இல்லை, ஆண்களை நையாண்டி செய்வதாயும் இல்லை. கீழ்க்கண்டவாறு இருந்திருந்தால் ரசிக்கும்படி இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

ச.மூ. கிழாத்தி உடன் சொன்னாள்: "மதங்கள் இறந்து விட்டன. அவை சொல்லிக் கொடுத்த வித விதமான கடவுள்களுக்கும் நம் இன்றைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் கிடையாது. நீ புதிய அம்பாவானால், கடவுளை நம் வாழ்வில் புகுத்தாதே".

"அப்படியானால் நாம் வாழ்வது யாரால், யாருக்காக?"

"கட்டாயம் ஆண்களுக்காக இல்லை!" பின்னிருந்த யாரோ சொன்னதற்கு எல்லா கிழாத்திகளும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.


இது தற்காலத்தில் உள்ள பெண்களின் நிலைமையை சொல்வதாகவும் இருக்கும், நறுக்குத் தெறிக்கும் நையாண்டியாகவும் இருக்கும்.

நன்றி,
அடுத்த பகுதிக்காக ஆவலுடன்,
சுமன்

Unknown said...

//எல்லா கிழாத்திகளும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்// அவர்களிடம் சரியான மறுமொழி இல்லை. ஆண் இல்லாமல் வாழ்கிறேன் என்கின்ற எண்ணத்தைத் தவிர நிலம்மேல் வாழ்வில் தெளிவு இல்லாமல் வாழ்ந்தார்கள். உண்டு பெருக்குவதையும், இனத்தைப் பெருக்குவதையும் விட‌, மனித இனத்துக்கு (மட்டும்) தன்/சமூக உயர்வும் நோக்கமாக இருக்கலாம். அப்துல் கலாமும் ஆங் சான் சூ சி யும் மழையைப் பெய்வித்துக் கொண்டிருக்கிறார்கள்....

இன்றைக்கு பெரும்பாலும் ஆண்களால் தீர்மானிக்கப்படுகிற அரசியல், சமூக அமைப்பு உள்ள சமூகங்களில் பெண் குறிப்பிட்ட தேவைகளுக்கானவள் மட்டுமே. அந்த சமூகங்களில் ஆண் பெண் இரு பாலாரும் ஒரு தெளிவு இல்லாமல் தான் இருக்கிறார்கள். அதைத் தான் சுட்டிக் காட்ட விரும்பினேன். நீங்கள் சொல்வதும் நன்றாய் இருக்கிறது, ஆனால் வாழ்வின் தெளிவு இல்லாததே ஒரு நிலத்தடி சமுதாயத்தை உருவாக்கியது....

என்னிடம் உலகத்தைப் புரட்டிப் போட்டு மாற்றி அமைக்கும் கனவு இருக்கிறது என்கிற ஒவ்வொரு யாம்னி அல்லது கோர் விடாலின் ஜேம்ஸ் கெல்லி... எல்லாருமே 'ஒரு மார்க்கமாய்த் தான் கிளம்பு'கிறார்கள்....! ஆனால், எது சரி?

BTW, யாம்னி = யாம் + (இ)னி. அம்(மா + அப்) பா..... எல்லா பேருமே அப்படித் தான் வைத்தேன்.

மீண்டும், உங்கள் ஊக்கத்துக்கும் கருத்துக்கும் நன்றி.