COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, February 14, 2009

புரியாத பெண்கள் - 1

பாயல் மும்பையில் வளர்ந்த தமிழ்ப்பெண். அழகாய் அளவாய் இருப்பாள்; ஏற்ற உடைகள் அணிவாள்; அளந்து பேசுவாள். மறத்தமிழச்சியான எனக்கு, ‘தமிழ் உனக்குத் தாய்மொழின்னா, ஏன் பாய் கடை பாயான்னு பேரு வச்சிருக்காங்க உங்க அப்பா அம்மா?’ன்னு கூட கேக்க எனக்கு ஆசை தான். அவளை என் உயிர்த்தோழின்னு சொல்ல முடியாது - நான் பேசறதை கேட்டு சிரிச்சிட்டே இருக்கும் ஓரிருவர் தான் எனக்கு உயிர்த்தோழிகள்; பாயல் என் அருமைத் தோழிங்க மாலாவோ கீதாவோ மாதிரி இல்லை. (அவங்களைப் பத்தி இன்னொரு நாள் கட்டாயம் எழுதறேன்).

பாயல் ஒரு அமெரிக்க-நதிக்கரையோரம் ஒரு விழாவில தன் மகன், தன் பெற்றோரோட வந்திருந்தாங்க. அவங்க மகனும் என் மகனும் ஒரே வயது, நான் ஊருக்குப் புதிது, என் இரண்டாவது குழந்தைப்பேற்றுக்காக என்னைப் “பாத்துக்க” வந்த என் பெற்றோருக்கு அவங்க பெற்றோர் நண்பர்களாகலாமேனு பல காரணங்களால;-) நானா போய் பாயல் கூட பேசினேன். ஒரு புருவ உயர்த்தலோட அந்த காரணங்களைக் கேட்டுகிட்டு, உடனடியா ஒரு விஷயம் சொன்னாங்க - “நான் என் கணவரை விட்டு தனியாய் வாழறேன். விவாகரத்து கோர்ட்ல நடந்திட்டிருக்கு”னு. ஹலோ சொன்னவுடனே, எனக்கு முதுகுவலின்னு யாராவது சொல்வாங்களா என்ன! இன்னும் அவங்க சொன்னது - பாயலின் கணவன் அசோக் இந்தியாவுக்குத் திரும்பி விட்டான்; அடிக்கடி வந்து பாயலுக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள் பெற்றோர். அந்த சிறுவன் விக்ரம் என் கணவர் ராஜாமணியிடம் ஒட்டிக் கொண்டுவிட்டான்.

பாயல் சொன்ன விவரங்களிலிருந்து நான் புரிந்து கொண்டது: அமெரிக்காவில் பி.ஹெச்.டி. படித்த பெண்; ஒரு பெரும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்; சிலரின் விதியை, பலரின் நோயற்ற வாழ்வை உறுதி செய்யக்கூடிய உயர் ஆராய்ச்சியாளர். பெற்றோர் சொல்படி இங்கேயே பி.ஹெச்.டி. படித்த இந்திய ஒருவனை மணந்து, அவன் இவளைப் போல் திறமைசாலியாக இல்லாத காரணத்தால் அவன் கொடுத்த அத்தனை தொல்லைகளையும் பொறுத்துக் கொண்டிருந்தாள். விவாகரத்து வேணும்னு கேட்டு அவன் அவளிடம் சொன்ன காரணம் - கடல்கடந்து யோகா மூலம் நிம்மதியை விலைகூவி விற்ற ஒரு ‘ஞானி’யிடம் மாணவனானதாலாம்!

இன்னொன்று எனக்குப் புரிந்தது - லேட்டா! அப்பா,அம்மா சொன்ன பையனைப் பார்த்து பொய்யாய் வெட்கப்பட்டு, ‘பெண்பார்க்கும் படலத்தில் எல்லார் முன்னிலையில் அவனிடம் தைரியமா கேள்வி கேட்டேன்’னு தோழிகள்ட சொல்லி, பெண்பார்க்கப்பட்ட இரண்டாம் நாள் ‘அந்த பரிட்சையில்’ பாஸ் செய்துட்டு, மூன்றாம் நாள் கல்யாண ஷாப்பிங், நான்காம் நாள் ரிசப்ஷன், அஞ்சாம் நாள் கல்யாணம்னு நிறைய பெண்கள் அமெரிக்கா வந்துடறாங்க. மக்டனல்ட்ஸ்ல ‘ட்ரைவ் பை’ சாப்பாடு ஆர்டர் கொடுத்தவுடனே, சாப்பாடு வாங்கிட்டும் போகலாம் (கல்யாணம், விவாகரத்து கூட லாஸ் வேகஸ்-இல் ட்ரைவ் பை செய்யலாம்). இந்த ட்ரைவ் பை கலாசாரத்தில் வந்த பெண்களும் சரி, பெற்றோர்கிட்ட நல்ல பேர்வாங்க இப்படி கல்யாணம் செய்யும் பசங்களும் சரி, பொதுவா தனித்து வாழும் (மணமான / மணமாகாத) இந்தியப் பெண்களிடம் சரியாகப் பேசுவதில்லை!

பின்னர், அந்த ஊரில் எனக்கு அறிய வந்த பல இந்தியப் பெண்கள் பாயலிடமிருந்து விலகியே இருந்தார்கள். எங்க வீட்டு கொலுவுக்கு வந்த அஞ்சு, சித்ரா எல்லாருமே பாயல் கூட பேசலை. பாயல் என்னிடம் “சுமா, உன் பிள்ளை பிறந்தநாளுக்கு எத்தனை பேரை கூப்பிட்டே! என்பிள்ளை விக்ரம் பிறந்தநாளுக்கு ஃப்ரண்ட்ஸ் 2 பேர், உன் பிள்ளைன்னு மொத்தமே மூணுபேர் தான்...” என்று வருந்தினாள். “ஏன்? சிதாரா, ஷீபா பிள்ளைகளையும் கூப்பிடேன்!” என்றேன். “அசோக் அவங்களையெல்லாம் கூப்பிட வேண்டாம்னுட்டாரு... அவங்க ஹிந்து இல்லியே! நீ இங்க வந்தும் விடாது நம்மூர்முறையை பின்பற்றுகிறாய்னு அவருக்கு உன்மேல மரியாதை”. எனக்கு இது சாதி அபிமானம் என்று தான் தோன்றியது.

“அசோக் இங்க வந்திட்டாரா என்ன!?”

“இல்லை, கோர்ட் ரூலிங் படி இதுக்கெல்லாம் அவரிட்ட கேட்கணும்னு இல்லை. ஆனால் தந்தைங்கற முறையில் அவர் எல்லாத்திலியும் இன்வால்வ்ட் ஆக இருக்கணும் இல்லியா!”

இதற்குப் பின், என்னால் முடிந்த வரை நான் பாயலிடம் பேசுவதைத் தவிர்த்தேன். அவளுக்குச் சில கட்டாயங்கள் இருந்தன போலும். என் தாய் ஃபோனில் முதலில் கேட்டுக் கொண்டிருந்தார், “பாயல் எப்படியிருக்காள்? விக்ரம் எப்படியிருக்கான்? பாயல் அவ புருஷன் பத்தி ஏதாவது சொன்னாளா” என்றெல்லாம்... என் குழந்தைக்கு ‘பாரதி’ன்னு பேர் வைக்கிற கேரக்டர் நான், எப்படி பாயல் மாதிரி பெண்ணெல்லாம் பொறுத்துப்பேன்?

போனவாரம் பாயல் கிட்ட இருந்து ஒரு செயின் இமெயில் வந்திருந்தது: ‘இந்த இமெயிலை ஏழுபேருக்கு ஃபார்வர்டு செய்தால், பிள்ளையார் உன் மனதிற்கு இஷ்டமானதை கொடுப்பார்; அப்படிச் செய்யாவிடில், இல்லாத கொடுமையெல்லாம் நடக்கும்’னு. “பாயல், இனி இப்படிப்பட்ட இமெயிலை எனக்கு அனுப்பினால், எனக்கு வரும் மற்ற செயின் இமெயில்களை உனக்கு அனுப்புவேன்”னு ஒரு மெயில் தட்டி விட்டேன். “ஸாரி, எனக்கு இப்ப இருக்கும் மனக்கஷ்டத்தில, இப்படியாவது எனக்கு நல்லது நடக்குமான்னு செஞ்சுட்டேன். அப்புறம் சொல்றேன்”, என்று ஒருவரி மட்டும் ஒரு பதில் அனுப்பினாள். என்ன மனக்கஷ்டமோ, எனக்குத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை.

இந்த கதையை இன்னிக்கு எழுதுவதற்குக் காரணம், பாயலின் இன்னொரு இமெயில்: இரண்டு நாட்கள் முன் பாயலுக்குக் கல்யாணம் ஆச்சாம், அவள் (மாஜி) கணவனோடயே!

5 comments:

கெக்கே பிக்குணி said...

பி.க.: அந்த பெண்களுக்குத் தான் (வாழ்க்கை) புரியலைன்னு நான் நினைக்கிறேன். அதான் தலைப்பு!

இலவசக்கொத்தனார் said...

ஒண்ணுமே புரியலை உலகத்திலே!!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கஷ்டம் தான்.. :(

கெக்கே பிக்குணி said...

இ.கொ., வருகைக்கும் உண்மையை ஒப்புக்கொண்டமைக்கும் நன்றி :-)

கெக்கே பிக்குணி said...

மு.க. (ஹிஹி), உங்க வரவு/கருத்துக்கு நன்றி.