COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sunday, February 22, 2009

புரியாத பெண்கள் - 2

முன் குறிப்பு: இதே பெயர்/ஊர்/தொழில் விவரங்களோடு யாரேனும் அமைந்திருந்தால் அது கட்டாயம் தற்செயலே. தெரியப்படுத்தினால் விவரங்களைக் கட்டாயம் மாற்றி விடுகிறேன். யாரையும் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல. ஆனாலும் என் கேள்வி இது தான்: போராளி குணங்கள் எங்கே போயின இந்த பெண்களுக்கு? உயர் கல்வியோ இந்தியச் சமூக வாழ்வியலோ இந்த பெண்களுக்குச் சொல்லித் தந்ததும் சொல்லித் தராததும் என்ன?
[முந்தைய பதிவு: புரியாத பெண்கள் - 1]

ஹைமாவை எனக்கு ஓரிரண்டு மாதங்களாகத் தெரியும். அமைதியான, அன்பான மருத்துவர் என்று அவருக்கு நல்ல பெயர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கான்சஸின் ஒரு மூலையில் நாங்கள் விரும்பிச் செல்லும் கோயிலுக்கு அவரும் வருவார். அமைதியாய் வேண்டிச் செல்வார். அவருக்கு ஒரே பெண். என் குழந்தைக்கும் அவர் பெண்ணுக்கும் ஒரே வயது. நாங்கள் கோயிலுக்குள் வேண்டும் போது குழந்தைகள் வாயிற்பக்கம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஓரிரு முறை வெளியே விளையாடப் போன குழந்தைகளைப் பிடிக்கப் போன போது எனக்கு ஹைமா பழக்கமானார். ஹைமா தமிழ்ப் பெண்; ஒரிஸ்ஸாவிலேயே வளர்ந்தாலும், நன்றாகத் தமிழ் பேசுவார்.

இரண்டு முறை என்னையும் ராஜாமணியையும் அவர் வீட்டிற்கு அழைத்து உணவருந்தச் சொல்லியிருக்கிறார். முதல் முறை சென்ற போது அவருடன் கட்டாக்கில் கூடப் படித்த இருவர், இருவரும் அவர்தம் கணவர்களுடன் (கணவர்களும் மருத்துவர்கள்) வந்திருந்தனர் - அவர்கள் பேச்சிலிருந்து ஹைமா திருமணமாகி இது தான் முதல் முறை அவர்களை வீட்டுக்கு அழைத்திருக்கிறார் என்று தெரிந்தது. (ஹைமாவின் குழந்தைக்கு ஐந்து வயதாகியிருந்தது...!?) வந்தவர்களில் ஒரு தம்பதி செயிண்ட் லூயிஸிலிருந்தும் மற்ற தம்பதி அயோவாவிலிருந்தும் வண்டி ஓட்டி வந்திருந்தார்கள். மருத்துவம் பற்றி ஒன்றும் தெரியாத எனக்கும் ராஜாமணிக்கும் கூட கம்பெனி கொடுத்தது ஹைமாவின் கணவர் பாலா. பாலாவின் அளப்பறைகளிலிருந்து அவர் பல உள்ளூர் கம்பெனிகளில் பல வருடங்களாக ’பிரமாதமான சேல்ஸ் வேலை’ செய்பவர், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், அவர் ஈட்டிய பெரும் செல்வத்திலிருந்து(!) இந்த 4லட்ச டாலர் மதிப்புள்ள வீட்டை வாங்கியிருக்கிறார் என்பதெல்லாம் தெரிய வந்தது. ஹைமாவின் தீர்க்கம் பாலாவிடம் மிஸ்ஸிங்.

பேச்சு சுவாரஸ்யத்தில், மற்ற மருத்துவர்களெல்லாம் தீவிரமாக, கல்லூரி, வேலை பற்றி பேசத் தொடங்கிவிட்டதை கவனித்தேன். பாலா, ‘ஒரு நிமிஷம் இருங்க, இதோ வரேன்’ என்றார். சுற்றிக் கொண்டு கொல்லைப் பக்கம் பின்னால் சென்று மஞ்சள் இலை வார்த்த காட்டன்வுட் மரங்களுக்குப் பின்னால் மறைந்தார். நான் கையில் இருந்த கப்பிலிருந்து ஜூஸை குடிப்பது போல் அவர் என்ன செய்கிறார் என்று கவனித்தேன். மரங்கள் ஓரிரண்டின் பின்னால் நின்று கவனித்தவர், எங்கள் பக்கம் திரும்பினார். (வம்பு என் ரத்தத்தில் ஊறியதாக்கும்!) யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்தவர், குனிந்து ஒரு மது பாட்டிலை எடுத்து ரசித்துக் குடித்தார்.

நான் அவர் முழு பாட்டிலையும் குடித்து முடிக்கிறார் என்று கவனித்து, அதிர்ந்து, ராஜாமணிக்குக் கண்ணைக் காட்டினேன் (எங்கே அதெல்லாம் புரியப் போகிறது, வீட்டுக்கு வந்து ‘நான் கண்ணை கண்ணைக் காட்டினேன், நீ என்ன பண்ணிட்டு இருந்தே’, ‘தூக்கமா வந்தது, உனக்கும் தூக்கம்னு நினைச்சேன்’ எல்லாம் ஆச்சு!). இந்த ஊர் பார்ட்டிகளில் பாட்டில் இருப்பது ஒன்றும் தீங்கு இல்லை. ஆனால், ஏன் மறைத்துக் குடிக்க வேண்டும்? (வந்திருப்பவர்கள் பங்கு கேட்கப் போகிறார்கள் என்றா:-) திரும்பி வந்த பாலா அதி வேகமாகப் பேசவும் உளறவும் தொடங்கினார். பார்ட்டி வெகு விரைவில் முடிந்தது.

பார்ட்டி முடிந்து, ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் கோவிலில் சந்திப்பு. இந்த முறை என் தோழி மீராவுடன் ஹைமா பேசிக் கொண்டிருந்தார். இரண்டு பேருமே டாக்டர்கள் என்பதால், அவர்களிருவரும் தோழிகளும் கூடவாம்! மீராவின் கணவரும் என் கணவரும் ஒரே அலுவலகம் என்றதும் ஹைமா ‘ஹேய், எல்லாம் நெருங்கிட்டோம்ல!’ என்று உண்மையான மகிழ்ச்சியோடேயே கேட்டார். மீராவோடு அன்று மாலையே தொலைபேசினேன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து படித்து அமெரிக்கா வந்த பாலாவுக்கு இது மூன்றாவது திருமணம்; முதல் இருவரும் வெள்ளைக்காரப் பெண்கள், இருவருமே பாலாவின் குடிப் பழக்கத்தைக் காரணம் காட்டி விவாகரத்துப் பெற்றார்கள்; ஹைமாவின் தந்தை இளைய வயதில் அவர்கள் குடும்பத்தை விட்டுப் போய் வேறு குடும்பம் அமைத்துக் கொண்டார்; அரசாங்க / தாய்மாமாவின் உதவிப் பணத்தில் மருத்துவம் படித்த ஹைமாவுக்கு இந்த வரன் கல்யாணத் தரகர் மூலம் வந்தது - ஹைமா ஒப்புக் கொண்டதற்கு முக்கியக் காரணம் பாலா குடும்பத்தினர் சொன்ன அமெரிக்கக் குடியுரிமை.

என் தோழி மீராவுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். ‘சுமா, தப்பா நினைக்காதே. ஹைமா எதுக்குக் கோயில் வந்தான்னு தெரியுமா?’

நான் - ‘அவ மாமியார் ஊர்ல இருந்து வந்திருக்காங்கன்னு சொன்னாங்க’ என்றேன்.

மீரா - ‘ப்ரெக்னண்ட்னு சொன்னா. 6 வாரமாவுதாம். அதுக்குத் தான் அவ மாமியார் ஊர்ல இருந்து வந்திருக்காங்க... அனேகமா நம்ம இரண்டு குடும்பத்தையுமே சாப்பிடக் கூப்பிடணும்னு சொன்னா....’. எனக்கு பாலா குடிப்பதை, இப்படி பெண்டாட்டியை தன் செயல்களால் வதைப்பதை அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமா என்று இருந்தது.

ஆனால் என்னவோ ஹைமா எங்களைக் கூப்பிட்டது ஆறு மாதங்கள் கழித்து. அதுவரை பணி மும்முரம், அது இது:-) என்று நானும் ஹைமாவிடம் பேசவில்லை. வீட்டுக்குப் போனால், ஹைமாவின் வயறு மேடிட்டிருக்கவில்லை. என்னைப் பார்த்ததும் அவள், ‘வாவ், கங்க்ராசுலேஷன்ஸ், எத்தனை மாசம்’ என்றாள். ‘ஹாய் ஹைமா, உனக்குக் கம்பெனி கொடுக்கலாம்னு நினைச்சேன், அஞ்சு மாசம்! உனக்கு என்ன ஆச்சுப்பா?’ என்றேன்.

என்னைக் கூர்ந்து பார்த்து விட்டு ‘அபார்ஷன் ஆயிடுச்சும்மா. நீ நல்ல செய்தி கொடுக்கும் இந்த வேளைல அது பத்திப் பேச வேண்டாம், வா, வந்து உள்ளே உட்காரு’ என்று கூப்பிட்டாள். பாலா, ராஜாமணியையும் மீராவின் கணவரையும் அழைத்துப் போய் ஆஃபீஸ் அறையில் உள்ளே பேசிக் கொண்டிருந்தார். ‘இன்டர்நெட் ரெவல்யூஷன் சார்! க்ளிக் மார்க்கெட்டிங்னு இது நான் ஒரு க்ளோபல் மார்க்கெட்டிங் கம்பெனில, வீட்டிலர்ந்தே வொர்க் செஞ்சிட்டிருக்கேன்! ஹைமாவுக்குத் தான் கம்ப்யூட்டர் பத்தி ஒண்ணும் தெரியல... எனக்கு அந்த வேலை போனதும் ஒரே கவலைப் பட்டா. நான் கூட சொன்னேன், ஒன் ஃப்ரண்ட்ஸை எல்லாம் கூப்பிடு, அவங்களே இது எப்படியாப்பட்ட வேலைன்னு கன்ஃபர்ம் செய்வாங்கன்னு! சொல்லுங்க’. இந்த பார்ட்டியும் விரைவிலேயே முடிந்தது - இந்த முறை மீராவின் கணவரும் என் கணவரும் அங்கிருந்து ஓடப் பார்த்தார்கள்.

கிளம்பும் முன்னர் ஹைமாவின் மாமியார் ‘குங்குமம் எடுத்துக்கோ’ என்றபடியே, மெல்லிய குரலில் ‘பாவம் ஹைமா, அவ திருப்பியும் கர்ப்பமா இருக்கான்னதும் அடுத்ததாவது ஆண்குழந்தையா இருக்கட்டும்னு நான் ரொம்ப சொன்னேன்! பும்சுவனம்லாம் கூட கோயில்ல இருந்து ஆள் கூப்பிட்டு செஞ்சுகிட்டா, அப்படியும் அது பொண்ணாயிருந்தது.... உனக்கு என்ன குழந்தைன்னு தெரியுமோ?’ என்றார். ‘ம், பொண்ணு தான். பாரதின்னு பேர் வைக்கப் போறேன்’.

6 comments:

இலவசக்கொத்தனார் said...

ம்ம்ம். இங்க கூடவா இப்படி. :(

கெக்கே பிக்குணி said...

இ.கொ., வந்ததுக்கும் ஆதரவு தந்ததுக்கும் நன்றி!!!

நான் வேறு நேரத்துக்கு வர்ற மாதிரி ஸ்கெட்யூல் செய்யறேன்னு நினைச்சு, பப்ளிஷே பண்ணியிருந்திருக்கிறேன்:-( இப்ப மறுபார்வை செய்ததில் முக்கியக் கருத்தை விட்டுட்டேன்னு தெரிந்தது. அந்தம்மா ‘பும்சுவனம்’ செய்தது கருவடைந்தபின்:-((( பதிவுல சேர்த்துட்டேன்.

மங்கையராகப் பிறப்பதற்கே என்ன மாதவம் செய்திட வேண்டும்!

சந்தனமுல்லை said...

பும்சுவனம் -ன்னா என்ன?

படிச்சிருந்தாலும் படிக்கலைன்னாலும்
குடும்ப வாழ்க்கைன்னு வரும்போது பெண்கள் அனுசரித்துப் போகவேண்டிய நிலைக்குத்தானே தள்ளப்படுகிறார்கள்..ஏதோவொன்றிற்காக
எதையெல்லாமோ காம்ப்ரமைஸ் செய்துக்கொண்டு!!

கெக்கே பிக்குணி said...

வாங்க சந்தனமுல்லை, முதல் வரவுக்கு நன்றி!

ஆமாங்க, பெரிய படிப்பு படிச்சிருந்தாலும் இல்லைன்னாலும் காம்ப்ரமைஸ் செய்வது பெண்கள் தான். அழகாச் சொன்னீங்க: //ஏதோவொன்றிற்காக
எதையெல்லாமோ காம்ப்ரமைஸ்..// நூற்றுல ஒரு வார்த்தை!

நிறைய ஆண்கள் அனுசரிச்சுப் போறாங்க. ஆனாலும், தன் அறிவு / திறமைக்கான கர்வத்தை பெண்கள் வாயில் மாவிலை தோரணத்தில் தான் மாட்டி விட்டு வரணும்!

கெக்கே பிக்குணி said...

பும்சுவனம் / பும்ஸுவனம் பற்றி எனக்குத் தெரிந்தது: கருவில் ‘இருக்கும்’ குழந்தை ஆணாக வைக்க வேண்டி ஒரு (ஹோமச்) சடங்கு:-( இதை கருவடைவதற்கு முன்னும் கூட செய்யலாமாம்:-((

இந்த கதாநாயகி மருத்துவர்னாலும், மாமியார் சொன்னாங்கன்னு கருவடைந்த ஆறு வாரத்தில் பும்ஸுவனம் செய்ய ஒப்புக்கிறாங்க.

நம்மூர்ல என்றால் கூட ’புருஷன் சரியாயில்லை, கருவை கலைச்சுட்டேன்’ என்பது ஒரு விதம்...:-(

சந்தனமுல்லை said...

//பும்சுவனம் / பும்ஸுவனம் பற்றி எனக்குத் தெரிந்தது: கருவில் ‘இருக்கும்’ குழந்தை ஆணாக வைக்க வேண்டி ஒரு (ஹோமச்) சடங்கு:-( இதை கருவடைவதற்கு முன்னும் கூட செய்யலாமாம்:-((//

ஓ..இது புதிது எனக்கு! நன்றி தெளிவுபடுத்தியமைக்கு!

//
இந்த கதாநாயகி மருத்துவர்னாலும்//

:(

//நம்மூர்ல என்றால் கூட ’புருஷன் சரியாயில்லை, கருவை கலைச்சுட்டேன்’ என்பது ஒரு விதம்...:-(//

உண்மைதான்!!