COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, November 12, 2008

அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தராங்கப்பா!

அமெரிக்கர்கள் யாரையாவது கடுப்படிக்கணுமா?

"நீங்கள் வாங்க விரும்பியது அவ்வளவு தானா? மொத்தம் 7 டாலர் 53 சென்ட்"

"இந்தாங்க 10 டாலர்..." அதை வாங்கி அந்த பெண்மணி கம்ப்யூட்டரில் நம் தொகையை தட்டிய பின், கல்லாவில் போட்டுக் கொண்ட பின், "ஆ, மறந்துட்டேன், 3 சென்ட் இதோ, மிச்ச சில்லறை கொடுங்க‌" என்று சொல்லிப் பார்க்கலாம்.

நகரங்களில் வசிக்கும் அமெரிக்கர்கள் முக்கால்வாசி வாங்குவது இந்த பெரும் மளிகை வியாபாரிகளிடம். சுமாராய் சென்னை ராதாகிருஷ்ணன் சாலை நீல்கிரீஸை விட 5 மடங்கு அளவு பெரியவை இந்த மளிகைக் கடைகள். பால், மோர், பிஸ்கட், அரிசி/பாஸ்தா, பிஸ்ஸா, கோஸ், தக்காளி, ஷாம்பு எதுவும் வாங்கலாம். அந்த மளிகைக் கடையில் செக்கவுட் செய்பவர் 40 வயதுக்குட்பட்டவர் என்றால், அநேகமாக மேலே குறிப்பிட்ட உரையாடலில் மிகப் பாதிக்கப்பட்டு கால்குலேட்டர் தேடுவார்.

பள்ளிப் படிப்பை முடிக்க வியலாத என் தாயாரால் மனக் கணக்கு போட முடியும்; ஏழு வயதில் இருந்து மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் பழனிக்குக் கணக்குப் போடத் தெரியும். அமெரிக்கர்களால் ஏன் முடியவில்லை?

அதைத் தாங்க உலகம் முழுக்க விவாதிச்சுட்டிருக்காங்க. ஏன்னு சொல்றேன். இந்தியாவில் வளர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் சுரேஷ் மூர்த்தி தன் மகள்களுக்கு இந்திய முறையில் கணக்கு சொல்லிக் கொடுக்க விரும்பியிருக்கிறார். அந்த முயற்சி அவரை பாப் காம்ப்டன் என்கிற முதலை/தொழிலதிபர் (இவர் கிட்ட புதிய தொழில்களைத் தொடங்க நிறைய முதல் இருக்குங்க!) கிட்ட கொண்டு சேர்த்திருக்கிறது. இரண்டு பேருமா இந்தியன் மாத் ஆன்லைன் என்ற இணைய தளத்தை தொடங்கியிருக்காங்க. சுரேஷோட குழந்தைகளுக்காகன்னு உருவான இந்த தளத்தில் இப்ப பலரும் (நிறைய சீன / இந்திய வம்சாவளியினராம்) மாதத்துக்கு $12.50 இலிருந்து $25 வரை கொடுத்து பாடம் கத்துக்கிடறாங்க.

இந்தியா, சீனா இரண்டு நாடுகளிலிருந்து வருபவர்கள் கணக்கில் முனைப்பாக இருப்பதைச் சுட்டிக் காட்டும் பாப் காம்ப்டன் குறிப்பா சொல்வது இது தான்: "என் மகள்கள் எந்த வகுப்பில் படிக்கிறார்களோ, அதே வகுப்பில் இந்தியாவில் படிக்கும் மாணவர்களை விட, என் மகள்கள் 3 வருடங்கள் பின்தங்கி இருக்கிறார்கள்" என்று.

அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பிரமாதமான கல்வி நிலையங்கள்னு எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். ("தளையற்ற சிந்தனை" வந்து தட்டுதே!) ஆனால், இதுல, நியூயார்க் டைம்ஸ் சொல்லுறதை விட அதுல வந்து பின்னூட்டம் இட்டிருக்கிற இந்திய/சீன / அமெரிக்கர்களைப் பாருங்கள். ஐஐடி யிலிருந்து வந்தவர்களும் இருக்காங்க, இந்த் ஊர்ல வளர்ந்தவங்களும் இருக்காங்க. பொதுவில் தெரிவது:

1. பெற்றோரின் ஊக்கம் குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணம். (ஒரு சீன வம்சாவளி அமெரிக்கர் சொல்வது: "என் பெற்றோருக்கு ஆங்கிலம் தெரியாதுன்னாலும், நான் மார்க் மட்டும் வாங்கலை, பிச்சு எடுத்துடுவாங்க"). குழந்தைங்க வீட்டுப் பாடத்தில் அமெரிக்கப் பெற்றோர் (நேரமின்மையும் காரணி) ஆர்வங்காட்டுவதில்லை இங்கே. நிறைய வீட்டுப் பாடம் கொடுக்கறாங்கன்னு சில வருடங்கள் முன்னால் ஒரு தாய் புகார் சொல்லிட்டிருந்தாங்க.

2. சமூக எதிர்பார்ப்புகள். இது முதல் பாயின்டோட சம்பந்தப் பட்டதாயிருக்கலாம். புத்திசாலியாகக் காண்பித்துக் கொள்வது என்பது அமெரிக்கச் சமுதாயத்தில் கேலி செய்யபடுவதுங்கிறாங்க சிலர். ஏன், ஓபாமா கீக் (geek) ந்னு கூகிளிட்டுப் பாருங்களேன்! ஓபாமாவும் மெகெயினும் ஒண்டிக்கு ஒண்டி நின்னா, ஓபாமா தான் பெரிய கீக் - அதுல ஒரு கேலி!

நாளைக்கு என் குழந்தைகள் இந்தியாவில் இன்று வளரும் குழந்தைகளோடு தான் தொழிலிலும் வளர்ச்சியிலும் போட்டி போடப் போகிறார்கள். இன்றைக்கு உலகம் முழுக்க வளரும் குழந்தைகளில், 10ல் 3 இந்தியாவிலாம். அவர்களில் எவ்வளவு பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே, மளிகைக் கடை பழனியைப் போல்! அமெரிக்காவில் குடியேறும் இந்தியப் பெற்றோரோ, இந்திய நடுத்தர / மேட்டுக்குடி வகுப்புப் பெற்றோரோ தரும் கல்வியைப் பெறுபவர்கள் எத்தனை பேர்!!

15 comments:

Unknown said...

என் குழந்தைகளை விளையாட்டு கற்றுக் கொள்ளக் கூட்டிப் போனால், "க்ளாஸ் போன வாரமே தொடங்கிட்டோம். ஒரு க்ளாஸுக்கான தொகையைக் குறைச்சுக்கறோம், இதான் வயசுக்கேத்த ஃபீஸ் லிஸ்ட்".

"ரொம்ப தாங்க்ஸ். 2 குழந்தைகள், இந்தந்த வயசு..."

"போன க்ளாஸ் தொகையையும் குறைக்கணும், ஒரு நிமிஷம், கால்குலேட் பண்ணிச் சொல்றேன்... என்ன வயசு சொன்னீங்க?" இரு குழந்தைகளின் வயதையும் எழுதிக் கொண்டார்.

"மொத்தம் 172 டாலர், நான் செக் எழுதறேன், நீங்க கணக்குப் போட்டுக்கங்க". அவர் வாயை மூடாமல் கணக்குப் போட்டுச் சிரித்துக் கொண்டார். ஏன் சிரித்தார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்:-)

துளசி கோபால் said...

மகள் இங்கே அஞ்சாப்புப் படிக்கும்போது,
நாங்க ஊருக்குப் போய்வந்தப்ப அங்கத்து அஞ்சாப்புப் புத்தகம் ஒரு செட் வாங்கியாந்தோம். அந்தக் கணக்குப் புத்தகத்தை டீச்சர் பார்த்துட்டு, இதெல்லாம் ஹைஸ்கூல் சப்ஜெக்ட்ன்னு தள்ளிவச்சுட்டாங்க.

மனக்கணக்கு எல்லாம் இங்கே யாருக்கும் தெரியாது.

2 + 2 என்றதுக்கும் கால்குலேட்டர் வேணும்.

Unknown said...

//இதெல்லாம் ஹைஸ்கூல் சப்ஜெக்ட்ன்னு தள்ளிவச்சுட்டாங்க.//
//2 + 2 என்றதுக்கும் கால்குலேட்டர்//அது! "இந்த மாதிரி கணக்குன்னாலே யாருக்குங்க பயன்?" என்று கேள்வி வேற. பயங்கர சண்டை வரக்கூடிய டாபிக் இது!

இங்கே இந்தியாவிலிருந்து கடந்த 2/3 வருடங்களுக்குள் வந்த பெற்றோருக்கும் இங்கேயே பெற்று வளர்க்கும் இந்தியர்களுக்கும் வித்தியாசம் இது தான்: அங்கிருந்து வந்தவர்கள் எல்லா ட்யூஷன் வகுப்பிலும் (குமோன், அலோஹா, இன்ன பிற) போட்டு விடுகிறார்கள்; குழந்தைகளை சதா வாய்ப்பாடும் மற்றவையும் படிக்கவைப்பது வேறு! இதைப் பற்றியும் எழுத நினைத்தேன், பதிவு பெரிசாப் போயிடும்னு இன்னொரு நாளைக்கு.

இலவசக்கொத்தனார் said...

இங்கு கற்றுக் கொடுக்கும் முறை நம்ம ஊரில் இருந்து வேறுபட்டு இருந்தாலும் இதிலும் நல்ல விஷயங்கள் பல உண்டு. விரிவாக பின்னொரு நாளில்.

நானானி said...

நீங்கள் சொல்வது கணக்குப் பாடத்துக்கு மட்டும்தான். மற்ற படிப்புகள்..உம்..
மேடைத்தயக்கம், ஒரு டாபிக் கொடுத்து சுயமாக 10 வாக்கியம் பேச வைப்பது, கலந்துரையாடல் போன்றவைகள் எல்லாம் இங்கே மிஸ்ஸிங்.
இங்கிருந்து 5-ம் வகுப்பு முடித்த சிறுவன்(உறவினன்) அங்கு போய் அதே 5-ம் வகுப்பில் சேர்த்துக்கொ ள்ளப்பட்டான். அவனது கணக்கறிவு 8-ம் வகுப்புக்குச் சமமாயிருந்தது.

நானானி said...

டார்கெட் கடையில் ஒரு முறை 80 வயது மூதாட்டி கவுண்டரில் நான் வாங்கிய சாமான்களுக்குப் பில் போட்டு பாக்கியை கொடுத்தார். சரியாகத்தானிருக்கும் என்று நானும் வாங்கி ஹாண்ட்பாக்கில் போட்டுக்கொண்டேன். காரில் திரும்பும் போது எண்ணிப்பார்க்கும் போது 30 டாலர் அதிகமாக கொடுத்திருந்தார். பதறிப் போய்(அவர் சம்பளத்தில்லல்லவா பிடிப்பார்கள்?) திரும்பி கடைக்கு வந்து அவரிடம் விபரம் சொல்லி 30டாலரை திருப்பிக் கொடுத்தபோது. கண்ணீர் வழிய வாங்கிக் கொண்ட்டார்.

Unknown said...

நானானி, நான் //சொல்வது கணக்குப் பாடத்துக்கு மட்டும்தான்// . உண்மை தான். பதிவு நீண்டு போனதால், ரொம்ப அதைப் பற்றி எழுதலை.

மூன்றாம் வகுப்பிலேயே பொருளாதாரம் சொல்லித் தராங்க. பிள்ளைக்கு பப்ளிக்கா ஊட்டி விட்டோம்னா "பார்வை"கள் இலவசம். அடி கொடுத்தோம்னா என்னாகும்னு எல்லாருக்கும் தெரியும். குழந்தைகளுக்கு என்ன வேண்டும்னு அவங்க தீர்மானம் செய்துக்கணும். இதெல்லாம் குழந்தைகளின் தனித்துவத்தை உண்மையிலேயே வளர்க்கிறது. நானும் என் குழந்தைகளை குமோன் போன்றவற்றுக்கு அனுப்பாமல் "இந்தியர்கள் மத்தியில் ஒரு தீவில்":-) இந்த நாலு வார்த்தைகளைப் பத்தியே இன்னும் ரெண்டு பதிவெழுதலாம்:-)

டார்கெட் கடை பாட்டியோட சேர்ந்து நானும் சொல்லிக்கிறேன், நன்றி! இந்த ஊர் ஸ்டைலில் சொல்லணும்னா, Bless your heart!

வல்லிசிம்ஹன் said...

கெ/பி

எங்க பேரனையும் குமொன் வகுப்புக்கெல்லாம் அனுப்புவதில்லை. அவர்கள் வழியில் அவர்கள் படிக்கட்டும்.
ஆனால் வாய்ப்பாடு எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறாதூ.

ஒரு விதத்தில அந்த ஊர் மற்றப் பாடங்கள் கண்டிப்பாகப் பயனுள்ளவையே.

அவர்கள் இன்னும் வகுப்பில் கவனம் செலுத்த வேண்டுமோ என்று தோன்றும்.

பெண் வாரமொருமுறை தன்னார்வத் தொண்டு என்கிற அடிப்படியில் அங்கே குழந்தைகளுக்கு உதவி செய்யப் போய் விட்டு வரும்போதெல்லாம் வருத்தப் படுவாள்.

அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களுடன் செலவழிக்க நேரமில்லை, அது குழந்தைகளின் அசிரத்தையில் தெரிகிறது என்று,.\
நேர்மாறாக நம் ஊர்க்குழந்தைகள் ஃபேர் பெட்டர்.

Unknown said...

வல்லியம்மா, ஊர்ப் பயணம் நல்லபடியாக அமைந்திருக்கும்னு நம்பறேன். ஜெட் லேக் எல்லாம் போயாச்சா?

//அவர்கள் வழியில் அவர்கள் படிக்கட்டும்.// மிகச் சரி! குறிப்ப்பாக, உங்கள் மகளுக்கு வாழ்த்துகள்!

//அந்த ஊர் மற்றப் பாடங்கள் கண்டிப்பாகப் பயனுள்ளவை// ஆமா, எல்லாப் பாடங்களும் இங்கே அவர்கள் பயன் காணும் பாடங்களை மட்டும் வைச்சிருக்காங்க (இரண்டாம் , மூன்றாம் வகுப்புக்குள் supply vs. demand, scarcity, heat conduction by demonstration). கணிதத்தில் பயன் கண்ணுக்குத் தெரியலை போலிருக்கு.

//நேர்மாறாக நம் ஊர்க்குழந்தைகள் ஃபேர் பெட்டர்.// நம்மூரைப் போல, இங்கேயும் ஆர்வமுள்ள / பணக்கார அமெரிக்கப் பெற்றோர்கள் தனியார்ப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். அவர்களில் தாம் பலபேர் டாக்டர் ஆவது, இன்ன பிற‌. மற்றபடி நம்மைப் போல் சாதாரணர்கள், அடிப்படையில் பார்த்தால், குழந்தையின் தன்னார்வம் அதன் எதிர்காலத்தை வழிவகுக்கும் (விதி விட்ட வழி!)னு தான் யோசிக்கிறாங்க‌.

இதுக்கு மேல, நான் "செலவழிக்க நேரமில்லை"யோட அர்த்தத்தைப் பத்தி பேசினேன்னா, ஆதம் ஸ்மித்துக்கு ஆதாரமாப் போயிடும், எனவே எஸ்:-)

நசரேயன் said...

எனக்கு என்னவோ நம்ம ஊரு கல்வி முறைதான் நல்லதுன்னு தோனுது

Unknown said...

அக்கரை வெர்ஸஸ் இக்கரை. அங்கே மனப்பாடம், இங்கே மனபலம் பாடம். இங்க ரெண்டாப்புலியே, ஜனநாயகம் பத்தி சொல்லிக் கொடுக்கறாங்க; தேர்தல், கட்சி கொடி எல்லாம்! ஒண்ணாப்புலேருந்து சந்தை வச்சிருக்காங்க, அதுல பண்டமாற்று, ஒரு சாமான் குறைவா கிடைச்சா ஏன் விலை சாஸ்தியாவுதுன்னு காட்ட குறிப்பிட்ட சாமான் குறைவு... என்னல்லாமோ! (நீங்க நம்மூர்ல இப்ப இருக்காப்பல ஃப்ரொஃபைல் போட்டுருக்கீங்க, அதுனால, நம்மூர் பத்தி அதிகம் சொல்ல வேண்டாம், உங்களுக்கே தெரியும்!)

கணக்கு தான் மிகவே பிணக்கா இருக்கு இங்கே:-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நசரேயன்!

butterfly Surya said...

16ம் வாய்ப்பாடு வரை முழுவதும் தெரியும். அமெரிக்காவில வேலை கிடைக்குமா..???

குமரன் (Kumaran) said...

என்கிட்ட இந்தக் கணக்கைச் சொல்லியிருந்தாலும் கணியைத் தேடியிருப்பேன். நாங்கள் பொறியியல் படிக்கும் போதே இப்படி எங்களைக் கெடுக்கும் அளவிற்கு கணிகள் வந்துவிட்டன. :-) எங்க தாத்தா அரைக்கால் வாய்ப்பாடு சொல்வார். எனக்குத் தெரியாதே.

Unknown said...

//நாங்கள் பொறியியல் படிக்கும் போதே இப்படி எங்களைக் கெடுக்கும் அளவிற்கு கணிகள் வந்துவிட்டன. :-)// நல்ல கதையா இருக்கே! எப்படி 16ம் வாய்ப்பாடு வரைக்கும் படிச்சவரா இருக்காரு பாருங்க வண்ணத்துப்பூச்சி:-)))‍) நீங்க பொறியியலுக்கு வருமுன் எப்படி வாய்ப்பாடு? இல்லை, கடை கண்ணி போகறதுலேருந்து தப்பிக்க உங்க தங்கமணி கிட்ட சொல்றா மாதிரியா?
:-))))))))))))))))))))))))))

//அரைக்கால் வாய்ப்பாடு//அய்யய்யோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது! அணுவைத் துளைத்தேழ் கடல்னு நம் முன்னோர் சின்னஞ்சிறிய எண்கள்ல மன்னர்களா இருந்திருக்காங்க, இல்லியா?

priya.r said...

நல்ல பதிவுப்பா !
நிறைய சிந்திக்க வைக்கறீங்க !(ஹி ஹீ அது தான் கொஞ்சம் கஷ்டம் !)