COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, April 10, 2009

புரியாத பெண்கள் - 3

இந்த வாரம் ஒரு சில தோழிகளின் அனுபவ, மற்றும் கருத்துக்களின் கலவைத் தொகுப்பாக ஒரு கற்பனைப் படைப்பு.

புரியாத பெண்கள் - 1
புரியாத பெண்கள் - 2

எங்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பெர்ட் (நாய்) 'ரின்டே'வை அதன் காலைக் கடன்களுக்காக நான் கூட்டிக் கொண்டு வெளியே சென்ற போது, பூஜா ஒரு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்து “ஹாய்” என்று தொடங்கியது எங்கள் அறிமுகம் ('ரின்டே'வை நான் நாய் என்று சொன்னது என் கணவர் ராஜாமணிக்கு தெரிந்தால், அவ்வளவு தான்:-).

பூஜாவுக்கு இரண்டு மகன்கள், 3வயசு & 5வயசில். என் குழந்தைகள் சிறிது பெரியவர்கள் என்றாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எங்க நட்பு கொஞ்சம் மெதுவா வளர்ந்தது.... என் பிள்ளை கண்ணன் அந்த பசங்களைப் பார்த்தாலே நிண்டெண்டோ விளையாட்டு சாமான்களை அவசரமாய் மறைத்து வைப்பான். பூஜாவின் குழந்தைகள் பேப்பரைக் கிழித்து சிறுசிறு துகள்களாய்ப் போடுவது, விளையாட்டுப் பொருட்களை உடைத்து வைப்பதுன்னு நிறைய சேதம் செய்து கொண்டிருந்தார்கள். பூஜா தன் பிள்ளைகளைக் கண்டிக்காமலும், சுத்தம் செய்யாமலும் கூட்டிக் கொண்டு போய் விடுவாள்.

பூஜாவின் கணவன் வேறு, அவ்வப்போ, “உங்க வீடு எங்க வீட்டை விடச் சின்னதோ?”, “உங்க வீட்டு பழைய ஓனர் சுருட்டு பிடிச்சிருப்பாரோ?”, “உங்க வீட்டு சோஃபா மாதிரியே எங்க கிட்ட இருந்தது, அசிங்கமாயிருக்குன்னு போன வருஷம் தான் தூக்கி எறிந்தோம்” என்றெல்லாம் ஊக்கத்தோடு பேசிக் கொண்டிருப்பார்:-)

பூஜா, "செயின்ட் லூயிஸ்" நகரத்துக்கு ஒரு வார இறுதிப் பயணம் போயிட்டு வரலாம்னு சொன்னதால‌, எல்லாருமா போனோம். ஊர்ச் சுற்றி விட்டு சனி இரவு அன்று, சாப்பிட்டு முடித்தபின் நாங்கள் - பூஜா, அவள் கணவர் சூர்யா, நான், ராஜாமணி - வாடகைக்கு எடுத்திருந்த டவுன்ஹவுஸில் வெட்டிப் பேச்சுக்காக அமர்ந்தோம். நாள் முழுக்க போட்ட ஆட்டத்தில், குழந்தைகள் எல்லாருமே தூங்கி விட்டிருந்தனர். அப்போது, கோடிக் கணக்கில் மதிப்புள்ள வீடுகள் அடையாறிலும் தஞ்சையிலும் தங்களுக்கு சொந்தம் என்று பூஜா சொன்னாள். எனக்கு அது புது நியூஸ்.

“கடவுள் நம்பிக்கை இருக்கா?” என்று பூஜாவின் கணவர் சூர்யா தொடங்கினார்.

“இல்லைன்னு சொல்ல மாட்டேன்... நம்மை மீறின சக்திக்கு, அது மக்களின் சக்தியாகவே இருக்கலாம், அதை கடவுள்னு சொல்லுவதில் தப்பு என்ன‌?” என்று சிரித்தேன் நான். மனிதர்களே கடவுள், அதுனால உருவ வழிபாட்டுல தப்பு இல்ல என்பது என் கட்சி. ராஜாமணி தீவிர அனுமான் பக்தர். பேசாமல் சிரித்த ராஜாமணியைப் பார்த்து நான் ஒரு புன்முறுவல் கொடுத்தேன்.

“கடவுள்னா யாரு? நம் உருவகம் தானே? மதம் மக்களைக் கட்டிப் போடத் தானே பிறந்தது?” இது பூஜா.

“கடவுள் நம்பிக்கை நமக்கு ஒத்து வந்தால் அதை பின்பற்றலாம் - மனுசங்க, மிருகங்களுக்கு தொல்லை இல்லாத பட்சத்தில்! கணக்கு, அறிவியல்னு எல்லாத்துக்கும் கட்டமைப்பு இருக்கறதுனால, மதம் இருப்பதில் தப்பு இல்லை - அது யாரையும் ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. எதுவானாலும் ஒரு உயிர் இன்னொரு உயிரை விடத் தாழ்வுன்னு சொல்லவே கூடாது” என்று நான் சொன்னேன்.

“திரௌபதிக்கு எத்தனை கணவர்கள்? க்ருஷ்ண அவதாரத்தில் எத்தனை மனைவிகள்? யப்பா! இதெல்லாம் சரியா?” என்றாள் பூஜா. இன்னும் மேலோட்டமாக நிறைய புராண கேள்விகள் சூர்யா கேட்டார். இப்ப யோசித்தால், இதே வரிகளைச் சொல்லித் தான் அவங்க எல்லாரிடமும் மார்க்கட்டிங் தொடங்கியிருப்பாங்கன்னு நல்லா புரியுது.

பேச்சு திசை மாற, மாற, ஒரு வழியாய், பூஜா விஷயத்துக்கு வந்தாள். ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து , “ஸ்ரீஅப்பன் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று ராஜாமணிக்கு அருகில் அமர்ந்தாள்.

“உங்க வீட்டு கெட்-டுகேதர்ல ஸ்ரீஅப்பன் படம் பாத்திருக்கேன். அவரைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே” - இது ராஜாமணி. தமிழ் இணையத்தில் மூழ்கி முத்தெடுத்த எனக்கு ஸ்ரீஅப்பன் பற்றி நன்றாகவே தெரியும். பெயர் பெற்ற “குருஜி”. ஓரிரு கொலை வழக்கில் மாட்டினார், கொலை வழக்குகளும் மாண்டு போயின. இப்ப பக்தி மார்க்கம் பற்றி சிடிக்கள் நிறைய வெளியிடுகிறார், மார்க்கெட் போன பல இந்திய பிரபலங்களுக்கு அருள் பாலிக்கிறார், ஸ்ரீஅப்பன் விடியோக்களில் அவர் தலையைச் சுற்றி ஒரு வெளிச்சம் தானாய் உண்டாகிறது... இப்படி எனக்கு நிறையவே தெரியும், ராஜாமணிக்கு என்னை மாதிரி வம்பு தெரியாது:-)

ஸ்ரீஅப்பன் பற்றி, தலையைச் சாய்த்து கண்கள் படபடக்க தலைமுடியைச் சுருட்டிச் சுருட்டி, பூஜா சொன்னது அதிகம். அவர் பிறந்த அன்றே காக்கை கூவியது, மயில் அகவியது, ஆமை அலறியது. அவர் பள்ளிக்குப் போய் தனக்குப் பாடம் சொல்ல வந்த‌ வாத்தியாருக்கெல்லாம் பாடம் எடுத்தார். இறைவன் அவருடைய கண் முன்னே இரண்டு முறை வந்து ‘உலகை மாற்று’ என்று ஆணை இட்டார். முதல் முறை கேளாமல் இருந்தாலும், ஸ்ரீஅப்பன் இரண்டாம் முறை தம் ஆன்மிகப்பயணம் தொடங்கினார். ‘ஓஹோ அதுனால தான் அவரு ரெண்டு முறை கண்ணாலம் கட்டிகிட்டாரு’ என்று கேட்க நினைத்து, “அவர் கல்யாணம் ஆனவர்ல?” என்றேன் நான்.

திரும்பி என் கண்களைச் சந்தித்த பூஜா, “கல்யாணம் செய்யாத ரிஷிபுங்கவர்கள் கிட்ட பிள்ளைங்களைப் படிக்க யாரும் நம்பி அனுப்புவதில்லை. கல்யாணம் ஒரு சடங்கு தான் சுமா! நீ உன் பார்வையை மாத்திக்கணும்” என்றாள். எனக்கு பயமாய் இருந்தது. ஜூஸில் வேறு ஏதாவது கலந்திருக்குமோ?

நான் பலமுறை “வேண்டாம்” என்று சொல்லியும், பூஜாவும், சூர்யாவும் ராஜாமணியிடம் ஸ்ரீஅப்பனின் உலகளாவிய கோவில்களை வெப்சைட்டில் காட்டி, இரண்டு ஆன்மிக வகுப்புகளுக்கு பணம் வாங்கிக் கொண்டார்கள் - ஆயிரம் டாலர் அநாவசியச் செலவு:-( அடுத்த இந்திய பயணத்தின் போது அவர்களின் இந்திய மையங்களில் வந்து தங்கிப் போனால் $5,000இல் அமைதி கிட்டும் என்றும் சூர்யா சொன்னார். பின்னர், ராஜாமணி சிரித்தவாறே, “எதுக்கு போன ராமநவமிக்கு ராமர் படத்துக்கு சூடம் காட்டி, பானகம் நீர்மோர் செஞ்சீங்க?” என்றான்.

அதன்பின், வேறொரு நாள் என் சின்ன பிள்ளையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த‌ பூஜா, அங்கு வந்திருந்த‌ எல்லாருக்கும் இந்த ஆன்மிக அனுபவங்களை விற்க முனைந்தாள். “இல்லம்மா, நான் இன்னொரு அநாதை ஆசிரமத்துக்கு மாதந்தோறும் கொடுக்கிறேன்” என்ற வெள்ளைத் தோழியிடம் பூஜா சொன்னது டாப்: “அந்த ஆசிரமத்து நம்பர் கொடுங்க. அவங்க எங்க டிக்கட்டுகளை விற்றால், உங்கள் ஆசிரமத்துக்கு ஒரு கட் கொடுக்கிறேன்”. ஸ்ரீஅப்பனின் 'ஸ்ரீமோட்சா' கூட்டத்தில் இந்த கமிஷன் அவரவர் சீனியாரிட்டி பொறுத்ததாம்.

நாங்க விலை கொடுத்த ஆன்மிகத்தை வாங்கிக் கொள்ள ஸ்ரீஅப்பன் ஆசிரமத்துக்குப் போகவே இல்லை. "ஸ்ரீஅப்பன் அமெரிக்கா வராரு, 6,000 டாலர் கொடுத்தீங்கன்னா, இரண்டு நாள் அவருடன் தங்கலாம், எல்லாருக்கும் சிடி கொடுப்பாரு"ன்னு ஒருமுறை பூஜா ஃபோன் செய்தப்போ, 'இனி என்னைக் கூப்பிடாதே'ன்னு சொல்லிட்டேன்.

'ஆம்வே' சுட்ட ஆம்லெட்டை கொத்து பரோட்டா ஸ்டைல்ல‌ சுடறாங்கப்பா...!

9 comments:

Unknown said...

50வது பதிவு வரணும்னு ஆறப் போட்டிருந்ததை அவையில் வச்சாச்சு:-)

இது அஃபிஷியலி 49வது பதிவு.

சந்தனமுல்லை said...

:-) வாழ்த்துகள்...

உங்க கடைசி பஞ்ச்...செம! ரசித்தேன்! ஆம்வே-க்கு தத்துக் கொடுக்கப் பட்ட தோழி எனக்கும் உண்டு!

ஆனா, ஆன்மீக மார்க்கெட்டிங் - இது புதுசு கண்ணா புதுசு! கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

49 க்கும் 50 க்கும் வாழ்த்துக்கள்..
:)

நல்ல பதிவு....கூட்டம் சேர்க்கறது காசு கமிசன் இதெல்லாம் கடுப்பாகுது ..

ஊர்சுற்றி said...

50க்கு வாழ்த்துக்கள். நீங்க அனுபவிச்சதை இங்க நிறையபேரு விதவிதமா அனுபவிச்சிட்டு இருக்காங்க.

இதைப் பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி.

Unknown said...

சந்தனமுல்லை, வாழ்த்துகளுக்கு நன்றி. அமெரிக்காவிலும் சரி, இந்தியாவில இருக்கும் ஓரிரு உறவினர்களும் சரி, கல்கி காட், குமுதம் காட்(!)னு எதுனாவது பேசத் தொடங்கிடறாங்க:-( இந்த பதிவுல‌ சொன்ன அனுபவத்தின் போது கொஞ்சம் பயமாவே இருந்தது, இதுலேர்ந்து முழுசா தப்பி வந்துடுவோமான்னு!

Unknown said...

முத்து கயல், ஆமாங்க, 'காசே தான் கடவுளடா'ன்னு சொல்ற கூட்டம் அவங்க. உங்க கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

கூடை ஆணி பிடுங்கிட்டிருந்ததால, மறுமொழி சொல்ல நேரமாச்சு, இரு பெண்டிரும் மன்னிக்கவும்:-)

Unknown said...

ஊர்சுற்றி, உங்க பதிவுஅறிமுகத்தில், ஊர் சென்னைன்னு போட்ருக்கீங்க (ஊர் சுத்தாத போது சென்னையில இருப்பீங்களோ?). கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

ஆமாங்க, சந்தனமுல்லைக்கு சொன்ன மாதிரி, அந்த காட் (God) இந்த காட்னு கிளம்ப்பிட்டாய்ங்க!

துளசி கோபால் said...

இந்தமாதிரி பேசும் நண்பர்களுக்கு(??) நான் முதல்லேயே.......

நாந்தான் சாமின்னு சொல்லும் ஒரு குருவையும் நம்பமாட்டேன்னு ஒரே போடாப் போட்டுருவேன்.

அப்பன் இன்னும் நியூசிப்பக்கம் வரலை:-)

Unknown said...

வாங்க துளசி, ஸ்ரீஅப்பன்ங்கிற பெயர் ரியல் இல்லை, ரீல். ரொம்ப யோசித்து ஒருசில சாமியார்களின் பெயர்களைக் கலவை செய்த பெயர். பெயர் தான் கற்பனை; நிகழ்ச்சிகள் உண்மை.

பொதுவா, நான் 'நினைச்சதைப் பேசறவள்'னு பேர் வாங்கினதால, இந்த தொல்லைகள் அவ்வளவு வந்ததில்லை. இப்ப பசங்க விளையாடற வயசு, பசங்களோட நண்பர் தாய்க் கூட்டத்தை எப்படி சமாளிக்கிறது? அது தான் பிரச்னை. ஒரு வழியா, 'பூஜா'வோட 'நட்பு'ஐ கட் செஞ்சாச்சு...

வாழ்த்துக்கு நன்றி.