COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Monday, January 03, 2011

ஏன் இந்த மாற்றம்? எப்ப இந்த மாற்றம்?

என்னையும் தொடர் எழுத அழைத்ததுக்கு நன்றி:  பலே பாண்டியா


முதல்ல கொஞ்சம் கொசுவத்தி:
சின்ன வயசில பள்ளிக்கோடம் போக மாட்டேன்னு ரொம்ப அழும்பு பண்ணுவேனாம்.  பள்ளிக்குப் போனாலும் அங்கே எல்லோரையும் அடிச்சுத் துவைச்சிடுவேன் (நல்லா நினைவு இருக்கு, விவரம் கேட்டுராதீங்க).  தினமும் ரெண்டாப்பு வரைக்கும் நான் பள்ளிக்கே போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்கேன். எங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் எங்கிட்ட பயம் (ஹிஹி). அவங்க ஒரு போலீஸ் உறவினர் கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணினதிலே, அவர் தான் என்னை "கோணி சாக்குல போட்டு உன்னை ஸ்கூலுக்குக் கொண்டு போகட்டுமா?" என்று கேட்டது இன்னும் நினைவில் இருக்கு.  அன்று தொடங்கியது, இன்னைக்கும், ஸ்கூல் பக்கம் போகும் போதெல்லாம் ஒரு பயம்:-)

மூணாப்புல ஊர் மாறினோம். எனக்கு புது பள்ளிக் கூடத்தில டெஸ்ட் வச்சாங்க.  எனக்கு அப்ப தமிழ் எழுத்துக்கள்ல உயிர்மெய் எழுத்துக்கள் இன்னும் தெரிந்திருக்கலை (ஹிஹி). ரகசியமா விஜயா எனக்கு உயிர்மெய் சொல்லிக் கொடுத்தது! (ஹிஹி).

மூணாப்புல தொடங்கி பள்ளி இறுதி வரை நல்லாப் படிச்சேன் - எப்படின்னு கேட்காதீங்க, அந்த கோணிச் சாக்கைக் காட்டித் தான் எனக்கு "சாக்கு சொல்ல" முடியும்.  கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கறதிலயும் அப்ப தான் ஆர்வம் நிறைய வந்தது. நாடகம் போட்டிருக்கேன். சொந்தமா நாடகம் எழுதி, அதுக்கு மேடை அமைப்புல ரொம்பவே எனக்கு ஆர்வம் இருந்தது... விளையாட்டுகள்ல அவ்வளவு ஆர்வம் இல்லை என்றாலும், கூடைப்பந்து / பூப்பந்துல ஆர்வம் காட்டிய போது என் ஜாதிப் பெயர் சொல்லி "படிக்கப் போடி!"ன்னு சொல்லிடுவாங்க. நிசமா!:-(

கல்லூரி வந்தப்புறம், இன்னவோ தெரியல, ஆம்பளப் பசங்க காலேஜில இருந்ததில, (ஹிஹி) நான் அடக்கி வாசிச்சேன்.... வம்புல மாட்டினேனா இல்லியான்னு யாருக்கும் தெரியாத அளவு அடக்கி வாசிச்சேன்:-) இவ்வளவு நல்ல பெண்ணா வளந்திருக்கேன்!

எனக்கு இன்னிக்கு ரெண்டு புள்ளங்க. சின்னது கொஞ்சம் என்னைப் போல பள்ளிக்குப் போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்குது, ஆனால், பள்ளிக்கூடம் போனவுடனே, எம் புள்ளைங்க‌ நல்லா மத்த புள்ளங்களோட விளையாடிட்டு என்னைய அழ வச்சிடுங்க!

எம் புள்ளைங்க‌ அமெரிக்கப் பள்ளிகளில படிக்கிறதுனால, கல்வி முறை முழுக்கவே மாறியிருக்கு. எல்லா பாடங்களிலும் ஏன் எதுக்குன்னு கேட்கிறாங்க.  நம் கலாசாரத்தை, இதிகாசங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது, வரலாற்று / அறிவியல் பூர்வமா சொல்ல வேண்டியிருக்கு. இராமன் இலங்கைக்குக் கடலைத் தாண்டுவதற்கு முன் "சமுத்திர ராஜனை வற்ற வைத்து விடுவேன்"னு சொன்னதுக்கு ஒரு நாள் முழுக்க "வற்ற வைக்க முடியுமா", "வற்றினா, மிருக, மீன் இனங்களுக்கு என்ன ஆகும்" என்றெல்லாம் எதிர்வாதம்.  எனவே இப்போதைக்கு எம் புள்ளைங்களுக்கு நான் சொல்வது "உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது எது, ஏன்னு சொல்லிடுங்க, அதைப் பற்றி நல்லா கற்றுகிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்" என்பது தான்.

இடையில் இன்னும் ஒரு சின்ன கொசுவத்தி: என் தந்தை கிரகணங்கள் பற்றி, செடிகொடிகள் பற்றி அறிவுபூர்வமாக விளக்கியவர். என்னிடம், "மது, மாமிசம் வேணுமா வேண்டாமான்னு நீயே தீர்மானிச்சுக்கோ" என்றவர்...
நல்ல வேளையா அவர் கொடுத்த தைரியத்துல இந்த புள்ளங்களை மேய்க்கிறேன்.

அமெரிக்கப் பல்கலையில் படித்திருக்கேன். பல கண்டங்களிலும் படித்தவர்களுடன் பழகியிருக்கேன், நட்பு பாராட்டியிருக்கேன். இந்தியாவில என் உறவினர்களின் குழந்தைகள் படிக்கிறதைப் பார்க்கிறேன்.  கடந்த பத்து வருடங்களில் அந்த குழந்தைகள் கல்லூரிகளில் நுழைவதையும், வேலை பெற்று வாழ்வில் உயர்வதையும் பார்க்கிறதுல எனக்குத் தெரிந்து தெளிந்தது என்னவென்றால் :

அப்பா அம்மாவின் முழு ஆதரவும்.. அது கிடைக்கலீன்னா கூட சொந்தச் செலவில தெளிந்த மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில நல்லாத் தான் இருக்காங்க.  "படி, படி"ன்னு சொல்லாமல், எதுக்குப் படிக்கணும்னு தெளிந்து படிக்கிறவர்கள் வாழ்க்கை முழுக்க ஏதோ ஒரு வகையில வெற்றி பெற்றுக் கொண்டே இருக்காங்க.  அதுக்காக, நானும் இந்த வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் வகையான்னு கேட்டுடாதீங்க‌.  எனக்கு இந்தத் தெளிவு இப்பத் தான் வந்திருக்கு, ஸோ, நான் இந்த வகையில இல்லைப்பா!

அமெரிக்கர்களுக்கு இந்தியக் குழந்தைகளின் படிப்பும், இந்தியக் குடும்பங்களின் கூட்டுறவு/அதீத உழைப்பு இவை கண்ணை உறுத்துகின்றன என்று படிக்கிறேன். அமெரிக்கர்கள் சிலர் வாயை விட்டுச் சொல்றாங்க.  அமெரிக்காவின் எதிர்காலம், இந்தியாவில் வசிக்கும்/படிக்கும் இந்தியர்களால் மாற்றி அமைக்கப்படுமோன்னு ஒரு அச்சம் இருக்கு.

ஆனால், அடிப்படை வசதிகள் (உணவு/நீர், இடம், போன்ற வசதிகள்) இந்தியர்களுக்கு எளிதில் கிடைக்கும் போதும், இந்தியாவில் படித்தவர்களின் விழுக்காடு அதிகமாகும் (அதாவது, மொத்த மக்கள்தொகையில் படிச்சவங்க எம்புட்டு என்கிற விகிதம்) போதும் தான் இந்தியா உலக அளவில் மாற்றம் ஏற்பட வைக்க முடியும்.  படிச்சவங்க / தெளிஞ்சவங்க‌ அதிகமாகும் போது, அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது மனித உரிமைன்னு குடிமக்கள் எல்லோரும் புரிந்து கொள்வாங்க.

அடிப்படை வசதி கிடைக்காத போது போராடக் கொஞ்சமாவது பரந்தறிவு (பட்டறிவு அல்லது படிப்பறிவு) வேணும். இதற்கப்புறமே, ஏழ்மை, சுரண்டல் இவை சமச்சீர் அடைந்து.... ஸ்ஸப்ப்பா, மூச்சு வாங்கிக்கிறேன்.... கவனிங்க, ஏழ்மையும் சுரண்டலும் முழுசா அழியாதவை; சமச்சீர் அடையும் அவ்வளவு தான்!  எனவே, சும்மா வீட்ல படின்னு சொல்றாங்களேன்னு படிக்காமல், தெளிவோடு படிக்கிறவங்க இந்தியாவிலேயே அடிப்படைக் கட்டமைப்பை உயர்வடைய வைக்கும் போது தான் உண்மையான மாற்றம் ஏற்படும்!

ஆமினா, பலே பாண்டியா எழுதிய பதிவுகளின் தாக்கத்தில "எனக்குத் தோணியதை" எழுதினேன். உங்க கருத்து என்னன்னு சொல்லிட்டுப் போங்க.  நானும் தெளிஞ்சிக்கிறேன்!

27 comments:

அப்பாதுரை said...

பிரமாதம்!
இந்தியக் கல்வி கற்றலின் பின்னணியில் அசாதாரண போட்டி (survival instinct) உண்டு; அமெரிக்காவில் போட்டி வேறே விதமாக இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல சைனாவிலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். இங்கே இன்னும் full capacity க்கு கல்லூரிகள் நடைபெறுவதில்லையே? அங்கே பாருங்கள் - தினம் நாற்பது கல்லூரிகள் திறக்கிறார்களாம், இன்னும் சீட் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்!

'மீன் வற்றுவது' ரசித்தேன். 'மாமிசம் மது' பற்றிய உங்கள் அப்பாவின் guidance உண்மையிலேயே வியக்க வைக்கிறது.

யாத்ரீகன் said...

பதிவில, அங்கங்கே bracket-குள்ள comment குறிப்புகள் எழுதுறது பரவாயில்ல.. ஆனா எங்க பார்த்தாலும் அப்படியே எழுதுறது நீங்க என்னதான் சொல்ல வர்றீங்கனு கொழப்புது :-))) [இல்லாட்டி மட்டும் புரியாதுனு அடுத்து கேக்காதீங்க]

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மையான மாற்றம் எப்ப ஏற்படும்ன்னு அழகா சொல்லி இருக்கீங்க.. அந்த நாள் சீக்கிரம் வரட்டும்...கெக்கே

Unknown said...

வருக‌ அப்பாதுரை நட்சத்திரமே:-) ஆமாம், இந்த போட்டி உணர்வு அமெரிக்காவிலும் உண்டுன்னாலும், இந்திய/சீனர்கள் அளவிலே இவ்வளவு வெளிப்படையா கிடையாது இல்லியா? இருந்தாலும், அமெரிக்கர்களுடைய innovation/creativity இந்தியாவிலும் நுழைந்து விடுமோன்னு பயப்படறாங்க. அத்தோடு, இந்தியாவில இவ்வளவு கல்லூரிகள் இருந்தாலும், அவற்றிலிருந்து படித்துவரும் மாணவர்களின் தரம் என்ன?

யாத்திரீகன், இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு மணிநேரத்துல ஒரு பதிவு எழுதினா இப்படி சொல்லிட்டீங்க? :-) எதுக்கும் இருக்கட்டும்னு கொஞ்சம் விளக்கங்களைச் சேர்த்திருக்கேன். முடிந்தா பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க. நன்றி!!

முத்து, நன்றி. சிறுகுழந்தைகள் மாதிரி, அடுப்பில் இருக்கும் சர்க்கரைச்சீரா விலிருந்து விரைவிலேயே இனிப்பு வந்திரும்னு உக்காந்திருக்கோம்! இந்தியா விரைவில் வல்லரசாகும் நாள் வரும்.

middleclassmadhavi said...

வாழ்த்துகள் கெ.பி.! விளக்கமான பதிவு நன்றாக உள்ளது. மூணாப்பு படிச்ச போது கூட இருந்து பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங்! :_)))))

Prabu Krishna said...

//தெளிந்த மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில நல்லாத் தான் இருக்காங்க. "படி, படி"ன்னு சொல்லாமல், எதுக்குப் படிக்கணும்னு தெளிந்து படிக்கிறவர்கள் வாழ்க்கை முழுக்க ஏதோ ஒரு வகையில வெற்றி பெற்றுக் கொண்டே இருக்காங்க. //

ரொம்ப அருமை தோழி!!
இந்தியாவின் பிரச்சினைகளுக்கு ஒரே வழி கல்வி தான். ஆனால் நிறைய பேர் பேருக்கு படிக்கிறார்கள் அவ்வளவுதான். இந்த நிலை மாற வேண்டும்.
(Getting late for college. i will continue my comments later)

ஆமினா said...

//ஒரு போலீஸ் உறவினர் கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணினதிலே, //
அப்பவே போலீஸ் வரைக்கும் போயாச்சா????? ரொம்ப டாப்புங்க நீங்க ;) கூடிய விரைவில் டான் ஆக வாழ்த்துக்கள் ஹி...ஹி...ஹி...

ஆமினா said...

//. சொந்தமா நாடகம் எழுதி, அதுக்கு மேடை அமைப்புல ரொம்பவே எனக்கு ஆர்வம் இருந்தது..//

உண்மைக்குமே நீங்க திறமைசாலின்னு நம்புறேன் சகோ.. எனக்குலாம் ஒரு வசனம் கூட மனப்பாடம் பண்ண தெரியாம மேடைல முழுச்சுட்டு இருப்பேன்

//"உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது எது, ஏன்னு சொல்லிடுங்க, அதைப் பற்றி நல்லா கற்றுகிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்" //
பாட்டி வட சுட்ட கதைய சொன்னா என் மகன் "பாட்டிக்கு அறிவே இல்ல மா. சுட்டதும் பாக்ஸ்ல மூடிடலாம்ல"ன்னு மடக்குறான். நீ டாம் அன்ட் செர்ரி பாருன்னு பதில் சொல்ல முடியாம ஓடிட்டேன் ;))

நல்ல பதிவுங்க.... கலக்கிட்டீங்க!!!!

(பாலோவர்ஸ் ஆகலான்னு பாத்தா என் கண்ணுக்கு அந்த பாக்ஸ் தெரியமாட்டேங்குது ;( எங்கேயாவது ஒளிச்சு வச்சுட்டீங்களா? ;))

Unknown said...

மாதவி, கருத்துக்கு நன்றி. ரெண்டாப்புல நீங்க என்னைப் பக்கத்தில் இருந்து பாத்திருந்தீங்கன்னா, உங்களுக்கும் அடி விழுந்திருக்க சான்ஸ் உண்டு:)

பாண்டிய பிரபு:-‍), இறுதியாண்டு பொறியியல் எங்கே படிக்கிறீங்க? கல்லூரில நல்லா தெளிவாப் படிங்க! வாழ்த்துகள். உங்க ஆதரவுக்கும் தொடர்பதிவுக்கு அழைத்த ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. இல்லைன்னா, எழுதாம இருந்திருப்பேன்... (ஆட்டோ இப்ப உங்களைத் தேடி வரப்போகுது பதிவு - எழுதச் சொல்லுவியா, சொல்லுவியான்னு!!)

ஆமினா, முதல் வருகைக்கு நன்றி. பின்ன, நான் ரெண்டாப்பு படிக்கையிலேயே என் பெற்றோருக்கு என் கிட்ட பயம்னா சும்மாவா?!! உங்க வாக்கு பலிக்கட்டும்:-)

Prabu Krishna said...

//படிச்சவங்க / தெளிஞ்சவங்க‌ அதிகமாகும் போது, அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது மனித உரிமைன்னு குடிமக்கள் எல்லோரும் புரிந்து கொள்வாங்க.//
உண்மை தான் இங்கு இலவசம்னா ஒசாமா பின்லேடனுக்கே ஒட்டு போடுவாங்க. படிச்சவங்களே அப்டிதான் பண்றாங்க. ஆனா இப்போ நிலைமை பரவா இல்லை.

நாங்கலாம் கொஞ்சம் இத
மாத்திடுவோம்.எல்லாமே சூப்பர்!!

ஆமா ஏன் இன்ட்லி ஓட்டு பட்டையை நீக்கி விட்டீர்கள்.???

எல்லோரும் followers widget கேக்கும் போது வைங்க.

நான் உங்கள follow பண்றேன். எப்டினா navbar ல. எப்பூடி!!.

இந்த மாதமும் puzzles கேக்க போறேன். இந்த வாரம் பதிவிடுவேன்.உங்கள் பதில்களை எதிர்பார்ப்பேன்.

Prabu Krishna said...

நான் படிப்பது "அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி", எருமபட்டி, நாமக்கல் மாவட்டம்.

எனது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் முசிறி அருகில் தும்பலம்.

Prabu Krishna said...
This comment has been removed by the author.
Prabu Krishna said...

இனி சமூக பதிவுகள் எழுதுவது இல்லை என்ற முடிவில் உள்ளேன் . இருப்பினும் யாரேனும் தொடர் பதிவுக்கு அழைத்தால் என் இன்னொரு வலைப்பூ "கவிதை 80(kavithai80.blogspot.com)" இல் எழுதலாம்(?) . ஆனா உங்க ஆட்டோ அடிக்கடி நம்ம பக்கம் வரட்டும். கொஞ்சம் அடிக்கடி பதிவுலகில் எழுதுங்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது எது, ஏன்னு சொல்லிடுங்க, அதைப் பற்றி நல்லா கற்றுகிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்//
வேற வழி இல்லிங்க... இந்த காலத்து பய புள்ளைக அநியாயத்துக்கு விவரமா இருக்கு... நாம தான் surrender ஆகணும் இப்படி... ஹா ஹா ஹா

super post... இப்ப எப்படி? ஆபீஸ் போக அடம் பிடிக்கரீங்களா?

Unknown said...

ஆமினா, உங்க ரெண்டாவது கமென்டுக்கும் பதில் கொடுத்துடறேன், லேட்டாய்க் கொடுப்பதற்கு மன்னிக்க: சைன் இன் செய்திருந்தீர்கள் என்றால், ப்ளாக் மேல இடது பக்கம், ப்ளாகரின் navbar பாரில் "ஃபாலோ" இருக்கு. எனக்கு சோம்பல் தான் காரணம், பொதுவான ஃபாலோயர் பாக்ஸ் வைக்க. நன்றி!

பிரபு, சோம்பல் தான் காரணம் விட்ஜட் வைக்காததுக்கு. நான் சுமார் 100 பதிவுகளை ரீடரில் படிக்கிறேன்... ஆட்டோ தானே, சர்ர்னு ஓட்டிகிட்டு வந்திர்றேன் உங்க பதிவுக்கு.

அப்பாவி மேடம், நன்றி! //இப்ப எப்படி? ஆபீஸ் போக அடம் பிடிக்கரீங்களா?// பாயின்டு. சிலசமயம் சமையல்லயும் ஒத்துழையாமை காட்டலாம், உங்களுக்குத் தெரியாததா? ஹிஹி.

அரசூரான் said...

கெ.பி... ஏன் எப்ப-ன்னு ஒரே ஆராய்ச்சி பதிவால்ல இருக்கு... இடையில் கொசுவர்த்தியோடா கலக்கல். ஆமாம் கல்லூரியில் அடக்கி வாசிச்சிங்கன்னு சொன்னீங்க... என்னத்தன்னு சொல்லலியே...சரி சரி பின்னூட்டதில் சொல்லுங்க....அவ்வ்வ்

Unknown said...

அரசூரான்,

இலக்கியம் மாதிரி ஆராய்ச்சியும் வியாதி தான்! எனக்கே தெரியுது - "எங்கியோ போயிட்டேன்"!

//கல்லூரியில் அடக்கி வாசிச்சிங்கன்னு சொன்னீங்க... என்னத்தன்னு சொல்லலியே// ஆஹா, அது இன்னுமொரு பதிவுன்னா போடணும்! :-)

priya.r said...

தோழி புவனாவின் பதிவு வாயிலாக உங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி!
சிரிக்கலாம் என்று வந்த இடத்தில் சிந்திக்க வைத்து இருக்கீங்கப்பா
இங்குள்ள கல்வி முறைக்கும் அங்கு உள்ள கல்வி முறைக்கும் உள்ள வேறுபாடு
என்ன ;பிற்காலத்தில் வேலை வாய்ப்புக்கு மேல் நாட்டு கல்வி முறை ரொம்ப உதவுமா !
ரெம்ப சீரிசான கேள்வி எல்லாம் கேட்கலாமா !

எல் கே said...

ஒருமுறை உங்கள் பதிவுக்கு வந்திருக்கிறேன் என்று நினைவு. கல்வி முறை இங்கும் அங்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இங்கு பள்ளிகளில் ஆஸ்ரியரை எதிர்த்து பேச இயலாது.என்ன சொல்றாங்களோ அதுதான் கேட்டுக்கிட்டகனும் :(

உங்கள் அப்பாவின் அறிவுரை அருமை

Prabu Krishna said...

Visit Here


http://balepandiya.blogspot.com/2011/01/blog-post_07.html

அப்பாதுரை said...

இந்தியாவில் படித்து வரும் மாணவர்களின் தரம் comparatively உலகத்தரத்துக்கு இணையானது என்றுதான் தோன்றுகிறது. இல்லைங்கறீங்களா? இந்த ஊர்ல இருக்குற 'B' 'C' தரக்கல்லூரிகள் மற்றும் community collegeகளில் படித்து வெளிவரும் மாணவர்களின் கல்வித்தரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் படித்து வெளிவரும் மாணவர்களின் தன்னம்பிக்கை தான் படு மோசம் என்று நான் நினைக்கிறேன்; அதற்கு overcompensate செய்து இன்னும் சரிகிறார்களோ என்று ஒரு சந்தேகம்.

Unknown said...

ப்ரியா, அங்க அப்பாவி மேடமை இன்னும் கலாய்ச்சிட்டு இருக்கோம். சும்மா அடிச்சு ஆடுங்க, ஹிஹி. //இங்குள்ள கல்வி முறைக்கும் அங்கு உள்ள கல்வி முறைக்கும் உள்ள வேறுபாடு என்ன ;பிற்காலத்தில் வேலை வாய்ப்புக்கு மேல் நாட்டு கல்வி முறை ரொம்ப உதவுமா !// நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நானே ஒரு பழைய பதிவு எழுதியிருக்கேன்: http://kekkepikkuni.blogspot.com/2008/11/blog-post_12.html (முழுமையான தொகுப்பு இல்லை). வேலை வாய்ப்பை நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்ளும் தைரியத்தை மேல்நாட்டு கல்வி ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன். கேளுங்க, கேளுங்க‌, கலாய்க்கவும் சீரியஸா எழுதவும் தானே வந்திருக்கோம்!!!

எல் கே, "கட்டமைப்பை எதிர்த்து உனக்குள் கேள்வி கேள்" என்கிற எங்க அப்பாவின் அறிவுரைகள் கொடுத்த தைரியத்துல தான் உங்க பதிவுல ஆதிசங்கரரின் குறைகளையும் சேர்த்து எழுத முடியுமான்னு கேட்டேன்.... ஆமாங்க, இந்தியாவுல ஆசிரியர் கிட்ட கேள்வி கேட்டு கிள்ளு, அறை, குட்டு வாங்கிய அனுபவங்கள் உண்டு எனக்கு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

பலே பிரபு, அடிச்சு ஆடியாச்சு உங்க பதிவுல.

அப்பாதுரை சார், அமெரிக்காவுல ஐவிலீக் கல்லூரிகளில் கிடைக்குற கல்வித் தரம், இந்தியாவின் உயர்தரக் கல்லூரிகளில் கிடைக்குற தரத்தை விடத் தாழ்வுன்னு ஒரு விடியோ வலம் வருது (நாராயணமூர்த்தி சார் அதுல பேசுறார், ஏபிசி யோட விடியோன்னு நினைக்கிறேன்). அதுவே என் கருத்தும். ஆனால், "அடிச்சு ஆடுகிற" தைரியம் இந்தியாவில் மறுக்கப் படுகிறது. இரண்டாவது: ; தரம் வாய்ந்த கல்வி சமூகத்தில் 1%க்கும் கீழேயே கிடைக்கிறது. எனவே, எத்தனை மக்கள் இங்கே Community collegesஇல் படித்தாலும், Economies of scaleல், இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் விளையாட்டுப் போட்டிகளில் தரம் வாய்ந்த வீரர்களை நாம் ஏற்படுத்தவில்லை, கண்டுபிடிப்பாளர்களையும், நுட்ப மறுமலர்ச்சியாளர்களையும் இந்தியா இன்னும் நாட்டுக்குள்ளேயே கரையேற்றவில்லை. நிறைய விஷயங்கள் இருக்கு இதுல...

Unknown said...

அப்பாதுரை சார், இதையும் பாருங்க: தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம? - related to NCERT. Especially in the context that TamilNadu is considered one of the forward states in producing many quality professionals (http://www.tamilhindu.com/2011/01/educational-status-of-tamilnadu/)

அப்பாதுரை said...

தமிழ்ஹிந்துவில் வெளியாகியிருப்பது உண்மையானால் that is sad.. இந்த மாதிரி benchmark எல்லாம் சரியான rationaleஓட எடுப்பாங்களானு சந்தேகமா இருக்கு.

அப்பாதுரை said...

இந்தியாவில விளையாட்டு வீரர்கள் வராததற்குக் காரணம் sense of purpose இல்லாததால் என்று நினைக்கிறேன்.

priya.r said...

நன்றி KP உங்கள் பழைய பதிவை படித்து கொஞ்சம் தெரிந்து கொண்டேன்
கொஞ்சம் திகைப்பு ;கொஞ்சம் பிரமிப்பு உங்கள் பதிவுகளை
படிக்கும் போது வருகிறதுபா!
என் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்க ஒரு பொறியியல் வல்லுனராக
இருப்பீர்கள் என்று தோன்றுகிறது .,வாழ்த்துக்கள்