COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, November 06, 2008

பண்பாட்டுக் காவலர்கள்

"நீ தாலி இல்லாம வெளியில வந்தே, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" அமெரிக்காவுக்கு வந்த புதிதில் தாலி இல்லாமல் எடுத்த ஒரு படத்தைப் பார்த்து விட்டு அம்மா.

"சீ போடி, தாலியில ஒரு கயிறு கட்டி கூட்டிட்டு போனா, வவ் வவ்னு குரைப்பியா?" அம்மா பேச்சைக் கேட்டு விட்டு என்னிடம் துணைவன் ராஜாமணி.

ஆனாலும், தாலி இல்லாமல் தான் சென்னை விமான நிலையத்தில் இறங்க வேண்டியதாயிற்று. இது எப்படி நடந்தது என்றும் சொல்லி விடுகிறேன். அமெரிக்காவை விட்டு கிளம்பும் போது, கான்சஸ் விமான நிலையத்திற்குள் வரும்போதே நேரம் ஆகிவிட்டிருந்தது. ராஜாமணி வேலை விஷயமாக இந்தியாவிற்கு போன வாரமே போயிருப்பதால், நானும் குழந்தை கண்ணனும் மட்டும் தனியாக இந்தியப் பயணம். கிளம்பும் நாள் வரை எனக்கு அலுவலகத்தில் வேலை இருந்தது. காலையில் போயே தீர வேண்டிய மீட்டிங் சென்று, அடுத்த 3 வாரங்களுக்கான வேலைப் பளு பற்றி விவாதித்து திரும்பி, கண்ணனை காப்பகத்திலிருந்து அழைத்து வந்து, நான் பான்ட் சூட்டிலிருந்து சல்வார் கமீஸ்க்கு மாறி கிளம்பும் போது நேரமாகிவிட்டது. ஊருக்குப் போகணும்னா சல்வார் கமீஸ், புடவை தான். வேறு எது போட்டாலும், நம்மூரில் ஆட்டோ/டாக்ஸிகாரர்களுக்கு கண்ணைப் பார்த்துப் பேச மறந்து விடும்.

கான்சஸிலிருந்து முதலில் சிகாகோ பயணம். விமானப் பயணத்தில் கண்ணன் கூட இருந்ததால், வேண்டிய சாப்பாடு/துணிகளை மட்டும் கொண்டு வர ஒரு பெட்டி, மற்றும் கண்ணனுக்கான டயபர் பை, கைப் பை. கண்ணன் நகர்படிகளில் மட்டுமே சாப்பிடுவேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான். கையில் வைத்திருந்த டோனட்களை (பாதுஷா சுவையிலிருக்கும்) ஊட்டியவாறே ஒரு பக்கம் நகர்படிகளில் ஏறி மறுபக்கம் இறங்கும் நகர்படிகளில் இறங்கி லூட்டி அடித்துக் கொண்டிருந்தான். குழந்தைகளின் ஸ்ட்ரோலர் ஊரில் பயன்படுவது இல்லை என்று தோழிகள் சொல்லிவிட்டார்கள். முதுகில் அவனைத் தூக்கிப் போக காரியர் அவசரத்தில் மறந்தது வேறு என் கோபத்தைக் கிளறிக் கொண்டு இருந்தது.

கான்சஸ் விமான நிலைய செக்யூரிட்டி பாயின்டில், கண்ணன் இழுத்த இழுப்புக்குப் போக முடியாமல், நானும் சாப்பிட நேரமில்லாமல் பசியோடு வந்து கொண்டிருந்த போது, செக்யூரிட்டி பீப்பர் அடித்தது. பொறுமையிழந்த அமெரிக்க‌ காவல் பணியாளர் "நகை ஏதாவது இருந்தால், அந்த டப்பாவில் வச்சு, கன்வேயர் பெல்ட்டில் வைங்க; ஸ்வெட்டரையும்!" என்று அடுத்து ஒரு குடும்பத்தை வரச் சொல்லி விட்டார்.

ஸ்வெட்டரைக் கழட்டும் போது தாலியில் கோர்த்த அம்மாவின் பவளம் மாட்டி தாலி வெளியில் வந்தது. தன் கோலால் "அதையும்" என்று சுட்டினார் இன்னொரு காவல் பணியாளர். தாலியை டப்பாவில் வைப்பதற்குள், கண்ணனைக் காணோம். மற்ற பிரயாணிகளின் கண் சுழட்டல், கமென்ட் ("தே ஹவ் நோ கன்ட்ரோல் அஃப் தெயர் கிட்ஸ்") எல்லாம் பார்த்து / கேட்டுக் கொண்டே, கண்ணனைத் தேடிக் கண்டுபிடித்து இழுத்துக் கொண்டு வந்தால், "அம்மா, ஸ்னாக்" என்றவனை கைப்பையிலிருந்த ஒரு டோனட் கொடுத்து கிளப்பினேன். இங்கிருந்து சிகாகோ போய் அங்கிருந்து சென்னைக்கு விமானம் பிடிக்க நேரமிருக்குமா என்று தெரியவில்லை.

ஃப்ரான்க்ஃபர்ட் வரை கண்ணனின் அழுகை நிற்கவில்லை. அங்கு வந்தவுடன் ராஜாமணிக்கு ஃபோன் செய்யச் சொல்லியிருந்தான்.

"வியர் ஸின்ந்த் இன் ஃப்ரான்க்ஃபர்ட்".

"ஸிந்து சந்து, போடி. கண்ணன் எப்படி இருக்கான்? அவனைப் படுத்தினியா?"

அடப்பாவி! ஆதியிலிருந்து செக்யூரிட்டியிலிருந்து கண்ணன் என்னைப் படுத்திய கதையைத் தொடங்கிச் சொல்லும் போது தான் தாலியை கான்சஸ் விமான
நிலையத்திலேயே மறந்தது நினைவுக்கு வந்தது. "அய்யய்யோ, என்னடா பண்றது?"

"இதுக்குத் தான் புருஷனை நீ வாடா போடா சொல்லாம இருக்கணும்கறது. என்கிட்டயே மரியாதை இல்லியே? இங்க வா, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்"

"தாலியை தொலைச்சதுக்கு அம்மா என்னை கொன்னு போட்டுடுவாள்"

"அப்ப சரி! அதான் இன்னொரு கல்யாணம்னு சொன்னாலும் சரியாத் தான் சொன்னேன்"

விளையாட்டாக ராஜாமணி பேசினாலும் எனக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. மாமியார் என்ன சொல்வாரோ? கண்ணன் முதுகில் ஓங்கி வைத்தால் கொஞ்சம் கடுப்பு குறையும் போல் இருந்தது. அதனால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்பதால் விமான நிலைய‌ பாத்ரூமில் கண்ணனை டயபர் பெட்டில் பெல்ட் போட்டு படுக்க வைத்து விட்டு, பின் என் கோபத்தைக் காட்ட காலால் ஃப்ளஷ் செய்து விட்டு கதவை ஓங்கி சாத்தினேன். கண்ணனுக்கு டயபர் மாற்றி, நானும் மஸ்காராவால் சிறிய கறுப்புப் பொட்டு வைத்து, லிப்ஸ்டிக் கொஞ்சமாய்ப் போட்டு விட்டு வெளியில் வந்தால் நேரமாகியிருந்தது.

ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருந்து சென்னை பறக்கும் போது கண்ணன் நன்றாகத் தூங்கிப் போனான். சென்னை விமான நிலையம் மாறவேயில்லை. "யூ வான்ட் ஹெல்ப் ப்ளீஸ்?" "ட்வென்டி டாலர் மேடம்" என்று பின்னால் வந்தவர்களை காலால் எத்தி விட்டதாக மனதில் நினைத்துக் கொண்டு நானே பெட்டியைத் தள்ளி வந்தேன்.

அவர்கள் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டதை கவனிக்காமல் வந்தேன். கால்டாக்ஸி பிடித்து நேராய் ஹோட்டலுக்குப் போக வேண்டும். ராஜாமணி மதிய ஃப்ளைட்டில் மும்பையிலிருந்து வருவதாக திட்டம். அப்புறம் அம்மாவை மதுரைக்கு சென்று பின் மாமியாரை ஆந்திராவிலும், பார்க்கலாம் என்று எண்ணியிருந்தோம். நான் ஹோட்டலுக்கு வந்து சேரும் போது பின்னிரவு. லிப்ஸ்டிக் அழிந்தும் அழியாமல் கொஞ்சம் தெரிந்திருந்தது; பொட்டு இருக்கிறதா என்று மட்டும் செக் செய்து கொண்டேன், தமிழ்நாடு ஆயிற்றே! கண்ணன் தூங்கி வழிந்து கொண்டிருந்தான்.

கண்ணனை இடுப்பிலிருந்து இறக்கி விட்டு இழுத்துக் கொண்டு ஹோட்டல் வரவேற்பாளரை நோக்கிப் போனால் இந்த பின்னிரவிலும் ஹோட்டல் முன்னறையில் நான்கைந்து கரை வேட்டிகள் பவ்யமாக நின்று கொண்டிருந்தனர். இந்த ஹோட்டலில் வாலிப வயோதிக அன்பர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் சிலர் தங்குவது உண்டு; கடந்த முறை தங்கிய போது போர்டு போட்டிருந்தது. ராஜாமணி கூடவே அப்போது வந்திருந்ததால், தமிழ் படிக்கத் தெரியாத, பேச‌த்தெரிந்த‌ மனவாடு ராஜாமணிக்கு நான் படித்துச் சொல்லி கிண்டல் அடித்தேன். அந்த வா. வ. கேஸ்களோ என்னவோ! இன்றைக்கு வரவேற்பறையில் நின்றிருந்த கரை வேட்டிகளில் அகலமாய்க் கரை வைத்த‌ வேட்டி கட்டியிருந்தவன் முன்னால் நின்றிருந்தான். பெரிய காலர் வைத்த‌ பச்சை ஜிகினா சட்டைக்கும் மேலே அகலச் செயின், இரண்டு கைகளிலும் தங்கத்தில் கங்கணம், வாட்ச் என்று.

சடாரென்று என்னைத் திரும்பிப் பார்த்தான். என் கழுத்தில் துளைத்த அவன் பார்வையால், என் கழுத்தில் ஒரு ஓட்டை விழுந்திருக்கலாம் . நான் கண்ணனைத் தூக்கி நெஞ்சுக்குக் குறுக்காகக் கிடத்தி தோளில் சார்த்தி கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். என் அருகே சூட்கேஸும் பையும்.

குரலை உயர்த்தியவன், "நல்ல பெரிய டீலக்ஸு ஏசி ரூம் தானே போட்டிருக்கீங்க!" என்று என் மேலிருந்து கண்களை எடுக்காமல் வரவேற்பாளரைக் கேட்டான்.

அவர் கண்களைத் தழைத்து "ஆமா சார்" என்றார். "எது முதல் ஃப்ளோரா?" என்று மீண்டும் கேட்டான். "ஆமா சார்" என்ற பதிலைத் தாண்டி, "ரூம் 125 தானே?" கரைவேட்டியின் கேள்விகள் தனக்கல்ல என்று அவர் மெதுவாய்ப் புரிந்து கொண்டு பேசாமல் நின்றிருந்தார். கரைவேட்டி பக்கத்தில் இருந்த அல்லக்கைகளிடம், "டேய், ரூம் 125. எப்ப வேண்ணாலும் வாடா". அவர்கள் சிரிக்காமல், என்னைப் பார்க்காமல் பயிற்சி பெற்றவர்கள் போல் பவ்யமாக நடந்தார்கள். திரும்பி இரண்டு முறை அவன் பலக்க சொல்லிக் கொண்டே போனான்.

'என்னைக் கூப்பிட்டாலும் கண்ணனை என்ன செய்வது?' என்று அப்புறம் ராஜாமணியிடம் கேலியாகச் சிரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த‌ கறை(வேட்டி)ப்பிறவியைப் பார்க்காமல் நான் நின்று கொண்டிருந்தாலும், அவன் சென்று சில மணித்துளிகள் மட்ட சென்டு மற்றும் சிகரெட்டு வாசனை அங்கே இருந்தது.

பி.கு.: அம்மாவை தாஜா செய்து நகைக் கடைக்குக் கூட்டிப் போய் அதே போல் திருமாங்கல்யம், தாலி செயின் செய்து கொண்டேன். மாமியார் பார்ப்பதற்குள்.

பி.கு.2: அப்புறம் நான் சென்னை வருவதற்குள் கான்சஸ் நண்பர்களை அழைத்து விவரம் சொல்லிய‌ ராஜாமணியால், கான்சஸ் லாஸ்ட் அன்ட் ஃபவுன்டில் இருந்து அம்மாவின் பவளத்தோடு முதலாவதும் திரும்பக் கிடைத்தது. 1 அவுன்ஸ் தங்கம்! ராஜாமணியின் தாலி-பாக்கியம்!!

19 comments:

Unknown said...

இரண்டு அனுபவங்களைச் சேர்த்து ஒரு கட்டு..க்கதை.

Sridhar V said...

//அம்மாவின் பவளத்தோடு முதலாவதும் திரும்பக் கிடைத்தது. 1 அவுன்ஸ் தங்கம்! ராஜாமணியின் தாலி-பாக்கியம்!!//

அது சரி :-) அவர் கட்டியதுதானே.

//இரண்டு அனுபவங்களைச் சேர்த்து ஒரு கட்டு..க்கதை.//

நீங்களும் நல்லாவே கட்டியிருக்கீங்க :-)

ramachandranusha(உஷா) said...

ஆஹா, இதுதானா அது :-)

ambi said...

நான் தான் பஷ்ட்டா? உங்க முதல் கமண்ட் எல்லாம் செல்லாது செல்லாது. :))

ம்ம், படிக்க ரொம்ப விறுவிறுப்பா, த்ரில்லர் மாதிரி இருந்தது.

//இரண்டு அனுபவங்களைச் சேர்த்து ஒரு கட்டு..க்கதை.
//

இது அனுபவம் கலந்த கதையா?

மங்களூர் சிவா said...

ரொம்ப கஸ்டம்தான் :(

தாலி திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி

Unknown said...

ஸ்ரீதர், //அது சரி :-) அவர் கட்டியதுதானே.// இந்த செயினெல்லாம் மாட்டி விடுற ஸ்டைலு!

//நீங்களும் நல்லாவே கட்டியிருக்கீங்க :‍)// நன்றி, வசிஷ்டரே!

Unknown said...

உஷா, நீங்க 'கதையைப் படிச்சேன், நல்லா இல்லை'ன்னு எதுவும் சொல்லலை. ஆனால், பதிவுலகக் கலாசாரத்தின்படி, //ஆஹா, //ன்னு சொன்னதுக்கே இன்னொரு பதிவு எழுதணும், "நான் போற்றும் எழுத்தாளர் எனக்குப் பின்னூட்டம் இட்டார்".

தன்யை ஆனேன்:-)

Unknown said...

அம்பி, மன்னிக்கவும், யூ த ஃபோர்த்து:‍-)

//படிக்க ரொம்ப விறுவிறுப்பா, த்ரில்லர் மாதிரி இருந்தது. // நன்றி!

சில மாதங்களுக்கு முன் இங்கியே லோகலாக பயணம் செல்லும் போது, தாலியை அல்மோஸ்ட் மறந்துட்டேன் செக்யூரிட்டில; பத்து தப்படி எடுத்து வச்சு ராஜாமணிக்கு ஃபோன் போட்டு ('ஏர்போர்ட் வந்து சேர்ந்தேன்') பேசுறதுக்குள்ள, யாரோ புண்ணியவதி வந்து 'அம்மா, மறந்துட்டே' என்று சொல்லிப் போனார். தாலியை ஆச்சரியம்/சந்தேகத்தோடு செக்யூரிட்டி மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சில வருடங்களுக்கு முன் சென்னை ஹோட்டலில் அதிகாலையில் கதையின் பின்பாதி எனக்கே நடந்தது, பண்பாட்டு காவலர்கள் தாலி இருக்கான்னு பாக்க மாட்டாங்க‌ன்னே நம்புறேன். இரண்டையும் போட்டு உப்புமா.

இட் இஸ் அஃப்டர் ஆல் அ கோல்டு செயின்:-)

Unknown said...

மங்களூர் சிவா, சமையல், வீட்டை தூய்மையாக வைத்தல் போன்ற புது மாப்பிள்ளை வேலைகளுக்கு நடுவில் தந்த வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அம்பிக்கு சொன்னாற்போல், இது புனைகதை தான். என்ன இப்போ, இந்த மாதிரி நிசமாவே நடந்ததுன்னா, வைரத்துல செஞ்சு போட்டுக்க மாட்டேனா? :-)

யோசிப்பவர் said...

அது என்ன பாதி அனுபவம்?! எது பாதி? எது அனுபவம்?

Unknown said...

யோசிப்பவர், நல்லாத் தான்பா யோச்சிச்சு கேட்கறீங்க? கதையிலே பாதி(த்த) அனுபவம்.

குமரன் (Kumaran) said...

நல்லா அருமையா விவரிச்சிருக்கீங்க. தங்கமணிகிட்ட தாலியை எங்கே பத்திரமா எடுத்து வச்சிருக்கன்னு கேக்கணும். ஊருக்குப் போறப்ப போட்டுக்கணும்ல. :-)

உண்மைத்தமிழன் said...

எது அனுபவம்.. எது புனைவு.. என்பதே தெரியாமல் பின்னிப் பிணைந்திருக்கிறது கதை..

பரவாயில்லையே.. என்னைவிட நீளமாக எழுதும் அளவுக்கு பொறுமைசாலியா இருக்கியேம்மா..

தாலி பாக்கியம் உனக்கு நிரம்ப உண்டு..

வாழ்க வளமுடன்..

Unknown said...

குமரன், நம்மூர் பண்பாட்டை விட்டுக் கொடுக்காமல் நீங்கள் தாலி அணிவது பற்றி மகிழ்ச்சி:-)

Unknown said...

//என்னைவிட நீளமாக எழுதும் அளவுக்கு பொறுமைசாலியா இருக்கியேம்மா..// ஹிஹி, உ.த., உ.கு.?

நன்றி.

விட்டுப் போன விஷயம்: கதையில‌, கான்சஸ்லேயிருந்து சிகாகோ வழியாப் போறதா? போனா, பின்னிரவில் சென்னை போய் சேருமா, ஃப்ராங்க்ஃபர்ட் வழியா..?? இதை யோசித்து ஆராயவே 2 மணி நேரம் ஆச்சு. (இந்தியாவுக்கு அந்த வழி போய் பழக்கமில்லை).

முத்துலெட்சுமி/muthuletchumi said...

;))))

குமரன் (Kumaran) said...

அக்கா. ஊருக்குப் போறப்ப மறக்காம தங்கமணி தான் தாலி செயினை கழுத்துல போட்டுக்குவாங்க. நான் போட்டுக்குறதெல்லாம் இங்கே தான். என்னைப் பாத்து இப்ப என் பையனும் அவன் அக்காகிட்ட சண்டை போட்டு நகையெல்லாம் மாட்டிக்கிறான். :-)

Naga Chokkanathan said...

அழகான கட்டுரை, அல்லது கதை, அல்லது ஏதோ ஒன்று, படிக்கச் சுவாரஸ்யமாகவும் Refreshing-ஆகவும் இருந்தது!

- என். சொக்கன்,
பெங்களூர்.

Boston Bala said...

இப்பதான் படித்தேன். அருமையா சொல்லியிருக்கீங்க!