என்னையும் தொடர் எழுத அழைத்ததுக்கு நன்றி:
பலே பாண்டியா
முதல்ல கொஞ்சம் கொசுவத்தி:
சின்ன வயசில பள்ளிக்கோடம் போக மாட்டேன்னு ரொம்ப அழும்பு பண்ணுவேனாம். பள்ளிக்குப் போனாலும் அங்கே எல்லோரையும் அடிச்சுத் துவைச்சிடுவேன் (நல்லா நினைவு இருக்கு, விவரம் கேட்டுராதீங்க). தினமும் ரெண்டாப்பு வரைக்கும் நான் பள்ளிக்கே போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்கேன். எங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் எங்கிட்ட பயம் (ஹிஹி). அவங்க ஒரு போலீஸ் உறவினர் கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணினதிலே, அவர் தான் என்னை "கோணி சாக்குல போட்டு உன்னை ஸ்கூலுக்குக் கொண்டு போகட்டுமா?" என்று கேட்டது இன்னும் நினைவில் இருக்கு. அன்று தொடங்கியது, இன்னைக்கும், ஸ்கூல் பக்கம் போகும் போதெல்லாம் ஒரு பயம்:-)
மூணாப்புல ஊர் மாறினோம். எனக்கு புது பள்ளிக் கூடத்தில டெஸ்ட் வச்சாங்க. எனக்கு அப்ப தமிழ் எழுத்துக்கள்ல உயிர்மெய் எழுத்துக்கள் இன்னும் தெரிந்திருக்கலை (ஹிஹி). ரகசியமா விஜயா எனக்கு உயிர்மெய் சொல்லிக் கொடுத்தது! (ஹிஹி).
மூணாப்புல தொடங்கி பள்ளி இறுதி வரை நல்லாப் படிச்சேன் - எப்படின்னு கேட்காதீங்க, அந்த கோணிச் சாக்கைக் காட்டித் தான் எனக்கு "சாக்கு சொல்ல" முடியும். கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கறதிலயும் அப்ப தான் ஆர்வம் நிறைய வந்தது. நாடகம் போட்டிருக்கேன். சொந்தமா நாடகம் எழுதி, அதுக்கு மேடை அமைப்புல ரொம்பவே எனக்கு ஆர்வம் இருந்தது... விளையாட்டுகள்ல அவ்வளவு ஆர்வம் இல்லை என்றாலும், கூடைப்பந்து / பூப்பந்துல ஆர்வம் காட்டிய போது என் ஜாதிப் பெயர் சொல்லி "படிக்கப் போடி!"ன்னு சொல்லிடுவாங்க. நிசமா!:-(
கல்லூரி வந்தப்புறம், இன்னவோ தெரியல, ஆம்பளப் பசங்க காலேஜில இருந்ததில, (ஹிஹி) நான் அடக்கி வாசிச்சேன்.... வம்புல மாட்டினேனா இல்லியான்னு யாருக்கும் தெரியாத அளவு அடக்கி வாசிச்சேன்:-) இவ்வளவு நல்ல பெண்ணா வளந்திருக்கேன்!
எனக்கு இன்னிக்கு ரெண்டு புள்ளங்க. சின்னது கொஞ்சம் என்னைப் போல பள்ளிக்குப் போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்குது, ஆனால், பள்ளிக்கூடம் போனவுடனே, எம் புள்ளைங்க நல்லா மத்த புள்ளங்களோட விளையாடிட்டு என்னைய அழ வச்சிடுங்க!
எம் புள்ளைங்க அமெரிக்கப் பள்ளிகளில படிக்கிறதுனால, கல்வி முறை முழுக்கவே மாறியிருக்கு. எல்லா பாடங்களிலும் ஏன் எதுக்குன்னு கேட்கிறாங்க. நம் கலாசாரத்தை, இதிகாசங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது, வரலாற்று / அறிவியல் பூர்வமா சொல்ல வேண்டியிருக்கு. இராமன் இலங்கைக்குக் கடலைத் தாண்டுவதற்கு முன் "சமுத்திர ராஜனை வற்ற வைத்து விடுவேன்"னு சொன்னதுக்கு ஒரு நாள் முழுக்க "வற்ற வைக்க முடியுமா", "வற்றினா, மிருக, மீன் இனங்களுக்கு என்ன ஆகும்" என்றெல்லாம் எதிர்வாதம். எனவே இப்போதைக்கு எம் புள்ளைங்களுக்கு நான் சொல்வது "உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது எது, ஏன்னு சொல்லிடுங்க, அதைப் பற்றி நல்லா கற்றுகிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்" என்பது தான்.
இடையில் இன்னும் ஒரு சின்ன கொசுவத்தி: என் தந்தை கிரகணங்கள் பற்றி, செடிகொடிகள் பற்றி அறிவுபூர்வமாக விளக்கியவர். என்னிடம், "மது, மாமிசம் வேணுமா வேண்டாமான்னு நீயே தீர்மானிச்சுக்கோ" என்றவர்...
நல்ல வேளையா அவர் கொடுத்த தைரியத்துல இந்த புள்ளங்களை மேய்க்கிறேன்.
அமெரிக்கப் பல்கலையில் படித்திருக்கேன். பல கண்டங்களிலும் படித்தவர்களுடன் பழகியிருக்கேன், நட்பு பாராட்டியிருக்கேன். இந்தியாவில என் உறவினர்களின் குழந்தைகள் படிக்கிறதைப் பார்க்கிறேன். கடந்த பத்து வருடங்களில் அந்த குழந்தைகள் கல்லூரிகளில் நுழைவதையும், வேலை பெற்று வாழ்வில் உயர்வதையும் பார்க்கிறதுல
எனக்குத் தெரிந்து தெளிந்தது என்னவென்றால் :
அப்பா அம்மாவின் முழு ஆதரவும்.. அது கிடைக்கலீன்னா கூட சொந்தச் செலவில
தெளிந்த மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில நல்லாத் தான் இருக்காங்க. "படி, படி"ன்னு சொல்லாமல், எதுக்குப் படிக்கணும்னு தெளிந்து படிக்கிறவர்கள் வாழ்க்கை முழுக்க ஏதோ ஒரு வகையில வெற்றி பெற்றுக் கொண்டே இருக்காங்க. அதுக்காக, நானும் இந்த வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் வகையான்னு கேட்டுடாதீங்க. எனக்கு இந்தத் தெளிவு இப்பத் தான் வந்திருக்கு, ஸோ, நான் இந்த வகையில இல்லைப்பா!
அமெரிக்கர்களுக்கு இந்தியக் குழந்தைகளின் படிப்பும், இந்தியக் குடும்பங்களின் கூட்டுறவு/அதீத உழைப்பு இவை கண்ணை உறுத்துகின்றன என்று படிக்கிறேன். அமெரிக்கர்கள் சிலர் வாயை விட்டுச் சொல்றாங்க. அமெரிக்காவின் எதிர்காலம், இந்தியாவில் வசிக்கும்/படிக்கும் இந்தியர்களால் மாற்றி அமைக்கப்படுமோன்னு ஒரு அச்சம் இருக்கு.
ஆனால்,
அடிப்படை வசதிகள் (உணவு/நீர், இடம், போன்ற வசதிகள்) இந்தியர்களுக்கு எளிதில் கிடைக்கும் போதும், இந்தியாவில் படித்தவர்களின் விழுக்காடு அதிகமாகும் (அதாவது, மொத்த மக்கள்தொகையில் படிச்சவங்க எம்புட்டு என்கிற விகிதம்)
போதும் தான் இந்தியா உலக அளவில் மாற்றம் ஏற்பட வைக்க முடியும். படிச்சவங்க / தெளிஞ்சவங்க அதிகமாகும் போது, அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது மனித உரிமைன்னு குடிமக்கள் எல்லோரும் புரிந்து கொள்வாங்க.
அடிப்படை வசதி கிடைக்காத போது போராடக் கொஞ்சமாவது பரந்தறிவு (பட்டறிவு அல்லது படிப்பறிவு) வேணும். இதற்கப்புறமே, ஏழ்மை, சுரண்டல் இவை சமச்சீர் அடைந்து....
ஸ்ஸப்ப்பா, மூச்சு வாங்கிக்கிறேன்.... கவனிங்க, ஏழ்மையும் சுரண்டலும் முழுசா அழியாதவை; சமச்சீர் அடையும் அவ்வளவு தான்! எனவே, சும்மா வீட்ல படின்னு சொல்றாங்களேன்னு படிக்காமல், தெளிவோடு படிக்கிறவங்க இந்தியாவிலேயே அடிப்படைக் கட்டமைப்பை உயர்வடைய வைக்கும் போது தான் உண்மையான மாற்றம் ஏற்படும்!
ஆமினா,
பலே பாண்டியா எழுதிய பதிவுகளின் தாக்கத்தில "எனக்குத் தோணியதை" எழுதினேன். உங்க கருத்து என்னன்னு சொல்லிட்டுப் போங்க. நானும் தெளிஞ்சிக்கிறேன்!